நமது முன்னோட்ட பதிவுகளில் பார்த்தது போன்று ஃபிட்னஸ் என்பது ஒரு வார உணவுக் கட்டுப்பாட்டினாலோ, சில வகை உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவோ சாத்தியமாகக் கூடிய ஒன்று அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறைக்கு நம்மை தயார்படுத்த அடிப்படையாக சில விடயங்களை நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டியது அவசியமாகிறது. இதில் முதலாவதகா உடல் கொழுப்பினைப் பற்றிப் பாப்போம்.
உடலில் அதிகப்படியாக சேமிக்கப்பட்டுவிட்ட கொழுப்பானது நமக்கு பலதரப்பட்ட சிக்கல்களை தருகிறது. இது அழகியலுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம், அல்லது ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். உடலில் இரு வகையான கொழுப்பு சேமிப்பு இருக்கிறது. முதல் வகை, உடலில் உட்பகுதியில் உள்ளுறுப்புக்களை சூழ இருப்பது (Visceral fat). இவை சற்றே ஆபத்தானது. மாரடைப்பு, சர்க்கரை வியாதி போன்ற பல வகை நோய்களுடனும் இவற்றுக்கு தொடர்பிருப்பதாக அறியப்படுகிறது. இரண்டாவது, தோலின் கீழ்புறம் இருப்பது (Subcutaneous fat). பெரும்பாலும் உங்களது சிக்ஸ் பாக் வெளித்தெரியாமல் இருக்க காரணம் இந்தவகை கொழுப்புத்தான். இது அழகியலை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தொடர்ச்சியான முதுகு வலி போன்ற பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. ஆனால், கொழுப்பு முற்றிலும் ஒரு எதிரியும் அல்ல, உயிர்ச்சத்துக்களை உறிஞ்சவும், வெப்பம், குளிரில் இருந்து உள்ளுறுப்புக்களை பாதுகாக்கவும் கொழுப்பு அவசியம்.
இரண்டாம் வகை கொழுப்பை விட முதல்வகை கொழுப்பை கரைப்பது சற்றே சுலபமானது. அடிவயிற்றுப் பகுதியில் மேல் தோலை அண்டி இருக்கும் கொழுப்பை கரைப்பது ரொம்பவும் கஷ்டமானது, இருப்பினும் அதுவும் நடக்கும். மிகவும் முக்கியமான ஒரு விடயம், குறிப்பிட்ட ஒரு பகுதியை டார்கெட் செய்து கொழுப்பினை குறைக்க முடியாது. கொழுப்பினை குறைப்பதானால் உச்சந்தலை முதல் உள்ளம்கால் வரை குறைத்தாக வேண்டும். தோலுக்கு அண்டிய கொழுப்பு ஆண்களில் வயிறு மற்றும் கீழ் முதுகுப் பகுதியிலும், பெண்களில் பின்பகுதி (Buttox), மேல் முதுகுப்பகுதி மற்றும் தொடையினை சுற்றியுமே அதிகமாக சேமிக்கப்படும். எனவேதான் தொப்பை, பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தபகுதிகளில் முதலில் சேர்க்கபடும் கொழுப்பு, கரைவது இறுதியிலேயே!
குருதியில் குளுகோசின் அளவு அதிகரிக்கும்போது அதிக இன்சுலினும், குறைவாக இருக்கும்போது குறைந்த அளவு இன்சுலினும் சுரக்கிறது. நாம் தொடர்ச்சியாக அதிகமான சக்கரை உட்கொள்வோமானால், ஒரு நிலையில் அதிக இன்சுலின் சுரப்பினால் குருதியில் குளுகோஸ் அளவு குறைவடைகிறது. அது ஹைபோக்ளைசீமியா எனப்படும். இந்த நிலையில் உடல் நமக்கு சக்கரை மீதான நாட்டத்தை அதிகப்படுத்துகிறது. நாம் மேலும் சக்கரை உட்கொள்ளும்போது இந்த சக்கரம் மீண்டும் ஆரம்பிக்கிறது. ஒரு வகையில், நாம் அதிக சக்கரை உண்பதால் பருமனடைவதுபோல், பருமனடைவதால் அதிக சக்கரை உண்கிறோம். அதிக சக்கரை உணவு அல்லது உடனடியாக குளுக்கோசாக மாற்றப்படக்கூடிய உயர் GI அலகுடைய கார்போஹைட்ரேட் உணவு போன்றவை உணவிலுள்ள சக்தியை உடலுக்குப் பயனில்லாமல் செய்து, கொழுப்பாக சேமிக்கப்பட கரணமாக அமைகிறது. எனவே குருதியிலுள்ள சக்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உடல் எடையை கட்டுப் படுத்துவதில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
![]() |
56 Kg எடையுள்ளவர் பருமனாகவும் 62.5 Kg எடையுள்ளவர் ஒல்லியாகவும் தெரிவதை பார்க்கலாம். |
கொழுப்பினை கட்டுப்படுத்த இரண்டு அளவிடத்தக்க (Quantifiable) சுட்டிகள் உள்ளன. அவற்றில் முதலாவது, மொத்த உடல் எடையில், கொழுப்பு எடையின் சதவீதம், பாடி ஃபேட் பர்சன்டேஜ் (Body Fat Percentage) எனப்படும். ஒரு மனிதர் சாதாரண பருமன் உடையவராக கருதப்பட அவரது கொழுப்பு சதவீதம் ஆண்களுக்கு 12-17% உம், பெண்களுக்கு 14%-21% உம் இருக்க வேண்டும். சிக்ஸ் பாக் வேண்டுமானால் ஆண்களுக்கு 10% க்கும் குறைவான கொழுப்பும், பெண்களுக்கு 16% க்கு குறைவான கொழுப்பும் இருக்கவேண்டும். உடல் உறுப்புக்களின் செயல்பாடுகள் பதிக்கப்பாடது இருக்க ஆண்களுக்கு குறைந்தது 5% கொழுப்பும் பெண்களுக்கு 12% கொழுப்பும் இருக்க வேண்டும்.
உடல் பருமனை கட்டுப்படுத்துவதில் இன்னுமொரு அளவீடு BMI ஆகும். இது பாடி மாஸ் இன்டெக்ஸ்(Body Mass Index) எனப்படும். BMI = உயரம் (cm) / (எடை* எடை (Kg *Kg )) ஆகும். எளிய வார்த்தையில் ஒருவரது உயரத்திற்கு இருக்ககூடிய எடையை தீர்மானிப்பது BMI ஆகும். BMI சராசரியாக 18-25 வரை இருக்கலாம்.
உங்கள் BMI என்ன (கீழே அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது), நீங்கள் இருக்கக்கூடிய அதிக பட்ச அல்லது நீங்கள் இருக்க விரும்பும் எடை என்ன, தற்போதைய எடை என்ன, உங்கள் உடல் கொழுப்பு சதவீதம் என்ன (மேலே உள்ள படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து தீர்மானிப்பது போதுமானது), எங்கே இருக்க விரும்புகிறீர்கள், அதற்காக எவ்வளவு எடை குறைக்கவேண்டும் போன்றவற்றை யோசித்து வையுங்கள். எவ்வாறு அதை சாத்தியமாக்குவது என்பதை இனிவரும் பதிவுகளில் பார்ப்போம்.
இத்தொடரின் ஏனைய பதிவுகள்:
- தமிழில் ஒரு ஃபிட்னஸ் தொடர்: முன்னோட்டம்
- ஃபிட்னஸ் அவசியம் தானா? - தமிழில் ஒரு ஃபிட்னஸ் தொடர் 2
- அம்பானியாய் வாழ்வது எப்படி? தமிழில் ஃபிட்னஸ் மோடிவேஷன் கதைகள் 1