Sunday, January 27, 2013

விஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)


விஸ்வரூபம் திரை விமர்சனத்தை கமல் ஹாசனும் உலகநாயகனும் பதிவின் கடைசி வரிகளில் இருந்து ஆரம்பிப்பதே முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

"விஸ்வரூபம் ட்ரெயிலர் படம் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை, இருப்பினும் வேட்டையாடு விளையாடு போன்ற ஒரு முழு கமெர்சியல் என்டேர்டைனராக அமைந்தால் பெரு மகிழ்ச்சி"

படம் பார்த்து முடிந்ததும் அந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது ஆச்சர்யமாக உள்ளது. விஸ்வரூபம் படத்தை இரு வேறு கோணங்களில் இருந்து விமர்சிக்கலாம். இதில் எதை தெரிவு செய்வது என்கிற தடுமாற்றம் இருக்கிறது. வழக்கம் போல நம்ம பாணியில "கதை, படத்தின் மூலம் உருவான அரசியல்கள்" போன்ற வஸ்துக்களை தள்ளி வைத்துவிட்டு முடிந்தவரை நம்மளவில் நடுநிலையான ஒரு விமர்சனம். 

ஏழு வருடங்களுக்கு (வேட்டையாடு விளையாடுவிற்க்கு) பிறகு  கடைசிவரை பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு கமல் படம். நூறு சதவீத கமெர்சியல் என்டர்டைனர் இந்த படம். "ராஜ் கமல்" நேம் கார்டு போட்டத்துல இருந்து "எண்டு" கார்டு போடுற வரைக்கும் கமல் ஆட்சிதான் படத்துல மேலோங்கி இருக்கு.  படம் முழுதும் "ஒங்கம்மாள ...... (கெட்ட வார்த்தை)...., எப்ப இருந்துடா ஒனக்கு தெரியும்?" அவங்கள பொறந்ததுல இருந்தே எனக்கு தெரியும்" போன்ற கமல் ப்ரேன்ட் காமெடி, வில்லனோட சின்ன பையன கமல் ஊஞ்சல்ல வச்சு ஆட்டுறப்போ பெரிய பையன் வந்து ஒக்காந்து ஆட்ட சொல்றது போன்ற சின்னச்சின்ன இயக்குனர் டச்கள், ஒரு தமிழ் படத்துக்கே உரிய காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன், அப்பப்போ கவர்ச்சி (இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்) எல்லாத்தையும் சரி விகிதத்தில் கலந்த அதே நேரம் சுவாரஷ்யமான திரைக்கதை, கமலோட கலை ஆரவத்துக்கு தீனி போடுற ஒரு கதக் நடனக்காட்சி, அதற்க்கு ஏற்ற நளினம், என் போன்ற கமல் ரசிகர்கள தங்களையும் அறியாமல் விசில் போட வைக்கும் ஒரு சண்டைக்காட்சி, அத்துடன் ஆரம்பிக்கும் ரெண்டாம் அவதாரம். இதைவிட ஒரு கமல் ரசிகனுக்கு என்ன சார் வேணும்? இது நூறு வீத கமல் படம், கமல் ரசிகர்களுக்கும், அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் கமல் ஒரு பெரிய விருந்தே வச்சிருக்கார். அஜித் ரசிகர்களுக்கு மங்காத்தா எப்படியோ, கமல் ரசிகர்களுக்கு விஸ்வரூபம் அப்படி.


படத்தோட பிளஸ்சஸ் மைனஸ்சஸ் பத்தி இனி பார்க்கலாம்.

1. படம் முழுவதும் கமல் கமல் கமல். சில இடங்களில் கமலுக்கு வயசானது தெரிஞ்சாலும், தனது நடிப்பால நம்மள மொத்தமா கட்டிப் போடுறாரு மனுஷன். அப்பாவித் தனமா மூஞ்சிய வச்சிக்கிட்டு பேசுற பல வசனங்கள் செம டைமிங். தசாவதாரம், மன்மதன் அம்புல நொந்து போனவங்களுக்கு பெரிய ரிலீப் விஸ்வரூபத்துல இருக்கு. படத்துல எப்ப எப்ப தேவையோ அப்ப அப்ப  சின்னதா வந்து விழும் காமிக் ரிலீப் இது ஒரு சுப்பர் ஹிட் படம்குறதுக்கான முதல் அறிகுறி.

2.  ஒரு இயக்குனாரா கமல் நிறையவே பாலிஷ் ஆகியிருக்காரு. குட்டிக் குட்டியா நெறைய ஷாட்கள், ஒரே ஷாட்ல பல பக்க வசனங்களால சொல்லமுடியாத பல விஷயங்கள சொல்லிடறார். உலக நாயகன கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு கதைக்கு என்ன தேவையோ அத செஞ்சிருக்கார். கமல் இஸ் பாக் டு போர்ம்.

3. தமிழ் சினிமாவின் சில க்ளீஷேக்களை பயமே இல்லாமல் உடைத்திருக்கறார். குறிப்பா டூயட் பாட்டு கெடயாது, தமிழ் சினிமால வழமையா வரும் காதல்ங்கற கத்தரிக்காய் கெடயாது, ஓவர் சென்டிமென்ட் கெடயாது, எல்லா கதாபாத்திரங்களும் அவுங்க அவுங்க ஸ்பேஸ்  இருக்கு, கதாநாயகனை உயர்த்த மற்றைய கதாபாத்திரங்கள் வலிந்து தாழ்த்தப் படவில்லை (முட்டாள் FBI ஆபிசர் பாத்திரம் தவிர, அதுவும் இல்லன்னா எப்படி?), இதுல பெரிய விஷயம் என்னன்னா படம் முடியற வரைக்கும் இத நீங்க நோட்டிஸ் பண்ணவே மாட்டீங்க. அங்க நிக்கறாரு கமல்.


4. ஸ்ரேயா படங்களை விட அதிக க்ளீவேஜ் இருக்கு படத்துல, ஸ்ரேயா ஓகே, பூஜா குமார்? (என்ன சொல்றதுன்னே தெரியல, ஐ ஆம் வெரி கன்பியுஸ்டு!!)

5. ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி சண்டைக் காட்சி இருக்கு படத்துல, ஆனா எனக்கு என்னமோ அது கொஞ்சம் ஒட்டாத மாதிரி (அதாவது ஒட்டுன மாதிரி) தெரியிது, பல ஹெலிகாப்டர் காட்சிகள், அப்கானிஸ்தான லாங் சாட்ல காட்டுற காட்ச்சிகள், சில ஆக்ஷன் சீக்குவன்ஸ் எல்லா இடத்துலயும் ஒட்டு வேலைப்பாடு ரொம்பவே தெரியுது, கைய வெட்டுறது, கழுத்த வெட்டுறது போன்ற இடங்கள்ள பிளாஸ்டிக் அப்படியே தெரியுது. கிராபிக்ஸ் டிப்பார்ட்மெண்ட் இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கனுமோ?

6. படத்துல நிறையவே ரத்தம், கொலை, நிறைய இடங்கள்ள முகம் சுளிக்க வைக்குது, (தீவிரவாதிய வேற எப்படிக் காட்டுறன்னு யாராவது கேள்வி கேட்டீங்க மூஞ்சில பூரான்  உட்ருவேன் ஆமா, கழுத்த வெட்டி ரத்தம் கொட்டக் கொட்ட கொன்னாத்தான் தீவிரவாதமா? ஒரே துப்பாக்கி குண்டுல, இல்லையின்னா மொத்தமா குண்டு போட்டு தடமே தெரியாம அழிச்சா அது என்ன அகிம்சையா?)


7. படத்துல, ஆடு இருக்கு, மாடு இருக்கு, ஆண்ட்ரியாவும் இருக்கு. (ஆண்ட்ரியா இருக்கறதே பிளஸ்ஸா, இல்ல ஆண்ட்ரியாவும் கூட  இருக்கறது மைனஸான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க)

8. ஷங்கர்-எஹ்ஷான்-லாய் இந்தியில எனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் வரிசையில் உள்ளவர்கள். "கல் ஹோ நா ஹோ" படத்துக்காக தேசிய விருது வேற இருக்கு. ஆளவந்தான்ல இருந்து இதையும் சேர்த்து மூணு நாலு தமிழ் படம் இசை அமைத்திருந்தும் இதுவரை சரியான படம் எதுவும் அமையல. அது ஏன்னுதான் எனக்கும் புரியல.

9. படத்துல காரேக்டரைசேஷன் கொஞ்சம் சொதப்பல், எல்லா கதாபாத்திரத்துக்கும் மல்டிப்பிள் ஷேட் இருக்கே தவிர எந்த கதாபாத்திரத்துக்கும் ஒழுங்கான பேஸ் கெடயாது, எல்லாமே பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் வகையறாதான். உதாரணமா ஹீரோ, வில்லன் ரெண்டுபேருமே முஸ்லிம், ஒருத்தர் தீவிரவாதி, இன்னொருத்தர் மதிப்புக்குரிய இந்திய  RAW ஏஜென்ட். தீவிரவாதிகளும் குண்டு வைக்கிறதுக்கு முன்னாடி நமாஸ் பண்றாங்க, ஹீரோவும் குண்டு வைக்கிறவன புடிக்கறதுக்கு முன்னாடி நமாஸ் பண்ணுறார். ரெண்டுபேருக்கும் கொள்கை அளவுல என்ன வித்தியாசம், ஏன் எதிர் எதிர் அணியில இருக்காங்கன்னு ஒரு சிங்கிள் ஷாட் கூட படத்துல இல்ல. முஸ்லிம் தீவிரவாதிகள வில்லனா காட்டிட்டு சைடுல ஹீரோ பிரெண்டா ஒரு ஜமாலையோ, இல்ல ஹீரோவுக்கு உதவுபவரா அப்துல் காதரையோ வைக்கிற  சாதாரண தமிழ் சினிமா டெக்னிக் தான் இங்கயுமா?


10. ராகுல் போஸ், நாசர், ஷரீனா வஹாப் போன்ற பல தேர்ந்த நடிகர்கள் இருக்கிறார்கள் படத்தில். முன்னவர் விஜயகாந்த் படங்களில் பார்த்த வாசிம்கான்களுக்கு மாற்றமாக ஒரு தீவிரவாதி, மஜ்னு சோனு சூடுக்கு அப்புறமா தமிழ்ல கத்திக்கத்தி கூப்பாடு போடாத தீவிரவாதி இவருதான்னு நினைக்கிறேன். மற்றைய ரெண்டுபேரும் வேஸ்ட்டட்.

11. கதை, படம் பேசும்/உருவாக்கும் அரசியல் போன்ற வஸ்த்துக்களை கவனிக்காம, ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம, ரெண்டர மணி நேரம் வெறும் என்டேர்டைன்மன்ட்ட மட்டுமே மனசுல வச்சி பார்த்தா ஒரு முழுத் திருப்தி தரக்கூடிய படம்.  (இதுக்கும் மேல ஒரு படத்துக்கு ஏதும் பிளஸ் தேவையா?)

ஐ ஆம்  வெய்ட்டிங்  பார் விஸ்வரூபம் பார்ட் II இன் இந்தியா....

நம்ம ரேட்டிங் : 7.5/10

****************************************

பதிவுக் குறிப்பு:
விஸ்வரூபம் படத்துக்கு நேர்மையான விமர்சனம்ன்னு எதுவும் வருமான்னு எனக்கு தெரியல, அதுக்கு என்ன காரணம்ன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.

முதலாவதா ஒரு விஷயத்த சொல்லிக்கனும். "ஒரே மதத்தை சேர்ந்த, ஆனா இரு வேறுபட்ட புரிதல் அல்லது கொள்கை உடைய இரண்டு தனி நபர்களினதும் அவர்களை சூழ உள்ளவர்ககளினதும் போராட்டம்" தான் படத்தோட கதைன்னு எனக்கு தோணுது. படம் எந்த ஒரு இடத்திலும் இஸ்லாம் மதத்தை அவமதிக்க வில்லை, முஸ்லீம்களை அவமதிக்கிறதா, இல்லையான்னு என்னை கேட்டால் இல்லன்னுதான் சொல்லுவேன், ஆனா அவமதிக்குதுன்னு யாராவது எடுத்துக்க இடம் இருக்கான்னு கேட்டா இருக்கு. இங்கதான் படத்தோட பிரச்சினையே இருக்கு.  அதுக்காக தடை செய்யப்பட வேண்டிய படமான்னு கேட்டால் கண்டிப்பா இல்ல. ஹிந்தில "நியூ யோர்க்", "மை நேம் இஸ்  கான்", "குர்பான்", "மிஷன் இஸ்தான்புல்", ஹாலிவூட்ல "Traitor" போன்ற படங்கள் ஆரம்பித்து வைத்த விவாதத்தை தமிழில் விஸ்வரூபம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. அந்த படங்கள் எப்படி ரெண்டும் கெட்டானாக அலசியதோ, விஸ்வரூபமும் அப்படியே, அதை தவிர இஸ்லாத்தை அவமதித்து விட்டது, சிறுபான்மை மக்களை கமல் தாக்குகிறார்ன்னு கூச்சல் போடுற அளவுக்கு கேவலமான படம் ஒன்னும் கெடயாது. அதுக்காக கமல் தவறே செய்யலைன்னு சொல்லவும் முடியாது. படம் ஆரம்பித்து வைத்த விவாதத்தை ஆக்கபூர்வமான முறையில் தொடர வேண்டியவர்கள் கண்மூடித் தனமாக படத்தை எதிர்த்து ஒரு வரலாற்று தவறை செய்துவிடாமல் இருக்கனும்ங்கிறதே ஒரே ஆசை.


டிஸ்கி: அங்க படத்துக்கு தடைன்னு என்னிக்கி அறிவிச்சாங்களோ, அன்னில இருந்தே நம்ம ராசு மாமா, "படத்தப் பாரு படத்த பாரு"ன்னு ஒரே வற்புறுத்தல். வெள்ளிக்கிழமை இங்க "கான்"ன்னு பனிப் புயல் வந்ததால பாதை எல்லாம் மூடி படம் பார்க்க போக முடியல. இன்னிக்கி காலையில பாதை சீராக இல்லாதபோதும், ரிஸ்க் எடுத்து நூறு மைல் வண்டி ஓட்டி, மூணு மணிக்கே தியேட்டர் வாசலுக்கு போயி, டிக்கெட் கிடைக்காததால அடுத்த காட்சிக்காக ராத்திரி பத்து மணி வரைக்கும் குளிர்ல தியேட்டர் வாசல்ல காத்திருந்து பார்த்ததுக்கு படம் "ஒர்த்துதான்".

டிஸ்கி: தமிழ் நாட்டிலும் படம் வெளியாகி அனைவரும் பார்த்தபின் கருத்தியல் ரீதியாக படத்தை விமர்சிக்கலாம்ன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு சொல்லக்கூடியது, குறைவில்லாத என்டேர்டைன்மென்ட், ஒரு அக்மார்க் கலப்படமற்ற "கமல்" சினிமா. ஒரு கமல் சினிமாவில் என்ன நிறை இருக்குமோ அனைத்தும் இருக்கு, என்ன குறை இருக்குமோ அவையும் அனைத்தும் இருக்கு. அதுதான் விஸ்வரூபம். மற்றும் படி ஹாலிவூட் தரத்துல ஒரு தமிழ் சினிமான்னு சொல்ற அளவுக்கு தமிழ் சினிமா ஒன்னும் கேவலமும் கெடயாது, விஸ்வரூபம் ஒன்னும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேக்கிங்கும் கெடயாது.