Monday, October 29, 2012

சின்மயியும் இணைய சுதந்திரமும்


கடந்த சில நாட்களாக வலைப்பூக்களில் எரியும் ஒரு பிரச்சினை இந்த சின்மாயி விவகாரம். இரு தரப்புக்கும் எதிராகவும், ஆதரவாகவும் பல பதிவர்களும், ஜாம்பவான்களும் பல பதிவுகள் இட்டாகிவிட்டது. இந்த பிரச்சினையின் அடிப்படை பற்றிய போதிய புரிந்துணர்வு என்னிடம் இல்லை. எனவே யார் சரி, யார் தவறு, அல்லது எது நியாயமானது போன்ற அதி புத்திசாலித்தனமான கருத்துக்களை நான் சொல்லப்போவதும் இல்லை. ஆயினும் நானும் ஒரு ப்ளாக்கர் என்கிற வகையில் எனக்கும் இது தொடர்பான சில கருத்துக்கள் இருக்கு, அது பற்றிய ஒரு பதிவே இது.

சின்மயி ஒரு சிறு பிள்ளைத் தனமான பிரபலம். சினிமா பிரபலம் என்கிற வகையில் இருப்பவர், பொது வெளியில் தனது குழந்தை தனமான கருத்துக்களை முன்வைக்கிறார். சிலர் அவற்றை கவனிக்காது விட்டு விடுகிறார்கள், சிலர் எதிர்வினை ஆற்றுகிறார்கள். அது அவரவர் எண்ணத்தை பொறுத்தது, அதில் குறை கூற நான் விரும்பவில்லை. சினிமாவுடன் தொடர்புடையவர்கள் சமூக, அரசியல் பிரச்சினைகளில், ஆழ்ந்த ஞானமோ, தெளிவான கருத்துக்களோ அல்லது போதுமான தெளிவோ கொண்டிருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது அல்ல, ஆயினும் அவர்கள் அனைத்து விடயத்திலும் அக்கறை எடுக்கவேண்டும், கருத்து சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமானதும் அல்ல. பிரபலங்களை அவர்கள் துறை சார்ந்து மட்டுமே நோக்க வேண்டும், சின்மயி நல்லா பாடடுறாரா? நல்லா பின்னணி குரல் கொடுக்கறாரா அவ்வளவுதான், அதையும் தாண்டி சென்சிடிவ்வான விடயங்களில் அவரது பங்களிப்பு எவ்வாறு இருக்கறது, நாங்க ட்விட்டரில் ஒரு போராட்டம் நடத்துறோம் ஆதரவு தா எனக் கேட்பது பொருத்தமானதல்ல.


தவறான கருத்தாயினும் தனது சுய கருத்தினை முன்வைக்கும் சுதந்திரம் ஒருவருக்கு இருக்கிறது. ப்ளாக்கர், ட்விட்டர், பேஸ்புக் இன்னும் இதர விதர சமூக வலைத் தளங்கள் நமக்கு அளித்திருக்கும் பெரும் கொடை அது. அதே நேரம், தனக்கு போதிய அறிவு இல்லாத விடயத்தில் கருத்து தெரிவிக்காது இருக்க வேண்டிய பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது, இல்லை அக்கருத்துக்களை குறைந்த பட்ச நாகரீகத்தோடு முன்வைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. சென்சிடிவ்வான விடயங்களில் கருத்துச் சொல்லும் போது வரக்கூடிய எதிர்வினைகளை கையாளும் மனோ பக்குவமும், கருத்து மோதல்கள் எழும்போது நாகரீகத்தை கடைப்பிடிக்கும் அடிப்படை அறிவும் அவசியமாகிறது. இவை இல்லாத விடத்து கருத்துக்களை தவிர்த்துக் கொள்வது கடமையும் ஆகிறது. உனது கருத்து தவறானது, அதை முன்வைக்கும் உரிமை உனக்கு இல்லை என நாம் வாதாட போனால் அது ஒரு வகை பாசிசமே. தவறான கருத்துக்கள் முன்வைக்கப் படாத விடத்து, அவற்றை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் மறுக்கப் படுகிறது. பரந்து பட்ட இந்த இணையவெளியின் அவசியமும் அற்றுப் போகிறது. அந்த அடிப்படையில் யார் வேணுமானாலும், (சில விதி விலக்குகள் தவிர) என்ன வேணுமானாலும் பேசலாம், அதுதான் கருத்துச் சுதந்திரம்.

ஆனால் எப்படி வேணும்னாலும் பேசலாம் என்பது கருத்துச் சுதந்திரம் கிடையாது. அது ரவுடியிசம், அல்லது தாதாயிசம். இதுவே இன்று தமிழ் சமூக வலைத்தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சென்சிடிவ் விடயம் அல்லது ஒரு சமூகம் தொடர்பான கருத்தினை முன்வைக்கும்போது எப்படி முன்வைக்கவேண்டும் என்கிற அடிப்படையை சின்மயி காணத்தவறி விட்டார். அதை எதிர்க்கும் போது அதை எவ்வாறு எதிர்க்கவேண்டும் என்கிற அடிப்படையை எதிர்பவர்களும் காணத் தவறி விட்டார்கள். இருவரும் செய்தது மிகப்பெரிய தவறு. பொது வெளியில் ஒருவர் ஒரு கருத்தினை முன்வைக்கும்போது, ஒருவர் எதிர்வினை ஆற்றுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள், இப்போது முதல் கருத்துப் பரிமாறியவர் எதிர்வினையாளரின் பக்க நியாங்களை உணர்ந்து தனது கருத்தினை திருத்திக் கொள்ளும்போது, அல்லது எதிர்வினையாளருக்கு தன் பங்கு நியாங்களை எடுத்துரைக்கும் போது, அது கருத்து பரிமாற்றமாக அமைகிறது. 
அதே நேரம் ஒருவரது ஈகோ, ஆணவம், அகந்தை, மாற்றுக் கருத்துக்களுக்கு அனுமதியாளிக்காத தன்மை போன்ற தனிப்பட்ட இயல்புகள் தலை தூக்குமிடத்து அது கருத்து மோதலாக மாறுகிறது. இரு சாராரும் இவ்வகையான தனிப்பட்ட இயல்புகளை கொண்டிருக்கும் இடத்து அந்த கருத்து மோதலானது தீவிரம் அடைந்து வசை பாடல்களாகவும், யாருக்கு அதிகம் கெட்ட வார்த்தை தெரியும் என்பதை பொது வெளியில் பரீட்ச்சித்துப் பார்க்கும் குழந்தை சண்டையாகவும் மாறி விடுகிறது. இதில் ஒருவர் பிரபலமாக இருந்துவிட்டால், பொது வெளியில் கெட்ட வார்த்தை பேசிக்கொள்வதர்க்குப் பதில் அடுத்தவர் சார்ந்த சமூகத்தை அல்லது பிற விடயங்களில் அடுத்தவர் கொண்டிருக்கும் கருத்துக்களை தாக்க ஆரம்பிக்கிறார், பிரபலம் இல்லாதவர்களாயின் அடுத்தவர் குடும்பம், பிறப்புறுப்பு முதல் அனைத்தையும் வசை பாட ஆரம்பிக்கிறார். இதுவே சின்மயி, விவகாரத்தில் நடந்தது, சமீப காலமாக இணையத்தில் நடந்து வருவது. 

இங்கு ஏனைய, அரசியல், சமூக, சமய காரணிகள் சேருமிடத்து, அது குளுப்பிரச்சினயாகி, பின்னர் பொதுப்பிரச்சினயாக உருமாறி, சந்திக்கு வந்துவிடுகிறது. சம்பந்தப்பட்டவர்களின், அரசியல் பின்னணி போன்ற காரணிகள் இவ்வாறான பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப் படுகிறது என்பதில் செல்வாக்கு செலுத்துகிறது. அடிப்படையான கருத்தோ, கருத்து பரிமாற்றமோ முழுதாக மறைந்து பிரச்சினை வேறு பரிமாணத்தை பெறுகிறது. ஒவ்வொருவரும் சுய லாபம் தேடும் நோக்கில் பிரச்சினையை திரிப்பதும், நடக்கிறது. இவ்வாறான ஒரு சுதந்திரமே நாம் இன்று கருத்துச் சுதந்திரம் என்னும் போர்வையில் கொண்டிருப்பதும், காப்பாற்ற போராடுவதும். உண்மையில் கருத்துச் சுதந்திரம் என்பது நமக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம். அதை பேணிப் பாதுகாப்பது நாம் ஒவ்வொருவர் மீதும் உள்ள கடமை. பொது வெளியில் நாம் நமது சுதந்திரத்தை எவ்வாறு பயன் படுத்துகிறோம் என்பதே நாம் இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த சுதந்திரத்தை அனுபவிக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும். பின் குறிப்பு: 
இது கருத்துப் போராக மட்டுமே இருக்குமானால் ராஜனை ஆதரிக்க தோன்றிய போதிலும், அவரது ட்வீட்டுக்களின் ஸ்க்ரீன்சாட்டுகள் என சொல்லப்படுனவற்றை படிக்கும் போது அவருக்கு ஆதரவளிக்க மனம் மறுக்கிறது. அதற்காக இந்த விடயத்தில் அவர் மேல் மட்டுமே தவறு இருப்பதாக அர்த்தம் அல்ல, தனது பிரபல்யத்தை துஷ்பிரயோகம் செய்ததது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழர்கள் மனதும் புண்படும்படியான குழந்தை தனமான கருத்துக்களை பொது வெளியில் பரப்பியது சின்மயி செய்த மிகப்பெரிய தவறு. அதிகார பலம் காரணமாக பிரச்சினையின் மையத்தையே திசை திருப்பப்பார்பதும் பெரும் தவறு. 

மேலும் படிக்க: 
சின்மயி கைது செய்யப்படுவாரா? - செங்கோவி 
ராஜனின் கைது ; கற்பிக்கப்படும் இணைய சுதந்திரம்? -ஜீ
ட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன ? - ராஜ்

Monday, October 22, 2012

மாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]


ஒரு வாரமா எஸ்கேப் ஆகிட்டு இருந்த நான் போன வெள்ளிக்கிழமை நண்பர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக மாற்றான் படம் பார்க்கவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளானேன். நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்னும் நல் எண்ணத்தில் கொஞ்சம் லேட்டா மாற்றான் பற்றிய எனது பார்வை இதோ உங்களுக்காக (சாவுடா...)

மாற்றான் படம் பற்றி ஒரு வரியில் சொல்லனும்னா.....

முதல் பாதி முற்று முழுதாக சூர்யா ரசிகர்களுக்கான விருந்து. இன்டர்வலுக்கு 10 நிமிடம் முதல் இருந்து இண்டர்வலுக்கு அப்புறம் வரும் 10 நிமிடங்கள் பேமிலி ஆடியன்சுக்காக. அதுக்கப்புறம் வருவது எல்லாம், இனிமேலும் இதுமாதிரியெல்லாம் படம் பார்க்க வருவீங்காளான்னு,  வந்த எல்லாருக்கும் சேர்த்து எலிக்கடி ட்ரீட்மென்ட். 

சூர்யா நல்லா நடிக்கறாரு, எந்த ரோல் குடுத்தாலும் நடிக்கரான்டான்னு தெரியாமா அசால்டா நடிக்கறாரு. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக பாடல் காட்சி, சண்டை காட்ச்சி அவுங்களுக்குள்ளேயே கட்டிப் புரண்டு சண்ட போடுறதுன்னு எதைக் குடுத்தாலும் கான்வின்சிங்கா பண்னறாரு, ஆனா அந்த ஒரே காரணுத்துக்காக அவர வச்சு இந்த இயக்குனர்கள் பண்ணற பரிசோதனையில செத்த எலி மாதிரி ஆகுறது அவரு மட்டுமில்ல, படம் பார்க்க போற நாமளும்தான்.

ஜெனெடிக் இன்ஜினியரிங், GM foods, விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பாவிக்கறது, முடிக்கப்படாத விஞ்ஞான ஆராய்ச்சிகள பணம் சம்பாதிக்கரதுக்காக பாவிக்கறது, ரெட்டை சகோதரர்கள் போட்டி, பாசம் அது இது என ஒரு ஆயிரம் விசயத்த படத்துல சேர்த்து "என்னங்கடா உங்க கத?" ன்னு நம்மள மண்ணடைய பிச்சுக்க விட்டிருக்காரு இயக்குனர். எப்பவுமே இந்த "சராசரிகளுக்கான சராசரி சினிமாவுல" (உபயம் பிலாசபி) லாஜிக்கோ, விவாத கருவோ, கொள்கையோ பார்க்காத நமக்கு இந்த மசாலாவ எப்படி பரிமாறி இருக்காங்கன்னு பார்த்தா, கொஞ்சம் குழப்பம்தான் மிஞ்சுது. எது பிரதான கதைங்கற குழப்பம் நம்மள விட ஆனந்துக்கு அதிகமா இருந்திருக்கும்ன்னு தோணுது. ரெண்டாம் பாதி எனக்கு என்னமோ அயன் படத்த மறுபடியும் (ரீவைண்ட் காட்சிகள் இல்லாம) பார்குற பீலிங் தான். என்ன ஒரு வித்தியாசம் அது போர் அடிக்க முதல் முடிஞ்சிடுது, இது போர் அடிச்சு, போதை ஏறி, அப்புறம் அது தெளிஞ்சதுக்கப்புரமும் ஓடிக்கிட்டு இருக்கு. 

விசுவல் எபெக்ட், கிராபிக்ஸ் டிப்பார்ட்மென்ட் நல்லாவே வேலை செஞ்சி இருக்காங்க, ஒரு ரெண்டு காட்சிகள் தவிர ஒட்டு வேலைப்பாடு வெளியில தெரியல. (தசாவதாரம் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி எடுத்தவங்க கிட்ட கொஞ்சம் அட்வைஸ் கேட்டிருக்கலாம்). கஷ்டமான முதல் பாதி பாஸ் மார்க் வாங்குறதுக்கு முழுக்காரணமும் இந்த டீமும் சூர்யாவும்தான். ஹாரிஸ் ஜெயராஜ் கொஞ்சம் மெருகேறி இருக்காரு, வேகத்தடையா பாட்டுக்கள் இல்லை, பின்னணி இசை ஓகே. அந்த க்ளைமாக்ஸ் டங்கு டப்பா மியூசிக் தவிர. (அண்ணே ரஹ்மான் சிவாஜி படத்துக்கு அந்த இன்கம் டாக்ஸ் சீனுக்கு அந்த ம்யூசிக் போட்டாருன்னு நீங்க அயன்ல போட்டீங்க ஓகே, இன்னும் விடாம கண்டினியு பண்றீங்களே ஏன்?). மற்றும் படி ஹாரிஸ் படத்துக்கு ஒரு பிளஸ் தான். ஒளிப்பதிவாளர் திறமையானவர்தான், இரட்டையர் காட்சிகள், தீயே தீயே பாடல் இன்னும் பல கஷ்டமான இடங்களில் லைட் மாட்ச்சிங், கலர் மாட்சிங், இன்னும் இதர விதரங்கள் எல்லாம் பக்காவா இருக்கு, அவரால முடிந்த அளவு கேரி பண்ணி இருக்காரு, ஆனா பல இடங்களில் குருவி தலையில பனங்காய வச்சது தெளிவா தெரியுது. கஷ்டமான இடங்களில் ஸ்கோர் பண்ணறவரு லேசான இடங்களில், குறிப்பாக ஒத்த சூர்யா வரும் லாங் ஷாட்களில் (கால் முளைத்த பூவே பாடல்) கோட்டை விட்டிருக்கார். எல்லாமே அவுட் ஆப்  போகஸ். 


இயக்குனர் பல இடங்களில் ப்ரீ பிளானிங்ல அசத்தி இருக்காரு, நிறைய கஷ்டமான ஷாட் எல்லாம் யோசிச்சது மட்டுமில்லாம அத எப்படி திரையில கொண்டுவரலாம்ன்னு ரொம்பவே மெனக்கெட்டு இருக்காரு. அதுக்கு கண்டிப்பா பாராட்டுக்கள். ஆனா போஸ்ட் ப்ரோடக்ஷன்ல கோட்டை விட்டுட்டாரு. படம் ரப்பர் மாதிரி இழுவையா இருக்கறது கொஞ்சம் கூடவா உங்க கண்ணுக்கு படல சார்? (படம் திரைக்கு வரும் முன் ஒரு முழு படமா தேவையான காட்சி எது தேவையில்லாத காட்சி எதுன்னு பார்க்காம படம் ரிலீஸ் பண்ணி விமர்சனம் பார்த்துட்டு ட்ரிம் பண்றதுன்னா நீங்க எதுக்கு, எடிட்டர் ஒருத்தரே போதுமே). சூர்யா இல்லாம படத்துல வரும் காட்சிகளில் சச்சின் கடேக்கார் காட்சிகள் தவிர வேறு எதுவுமே கான்வின்சிங்கா இல்லை, எல்லாமே ரெண்டாம்பு பசங்க ஸ்டேஜ் டிராமா போட்ட கணக்கா செயற்கையா ஒட்டாம இருக்கு. இதனால்தான் சூர்யா நோ சொல்லியிருந்தா இந்த படத்த பண்ணி இருக்கமாட்டேன்னு சொன்னீங்களா? (நானும் எதோ இப்போ அதுதான் பாஷன், அதனாலதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்).

காஜல் அகர்வால், ரொம்ப குண்டாகி, வயசாகி ஆன்டி மாதிரி இருக்கா. டிரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சம் கூட சரி இல்ல, இன்னும் ஸ்டாண்டர்ட் எக்ஸ்பிரஷன்ஸ் எதையுமே மாத்தல. செம பிகரா இருக்கப்போ தெலுங்கு படமா நடிச்சிட்டு மொக்க ஆன்டியா ஆனதுக்கப்புறம் மட்டும் ஏந்தான் தமிழ் படம் நடிக்க வாராங்கன்னு தெரியல. (இந்த பொண்ணுக்காக நான் டார்லிங், பிருந்தாவனம், சாந்தமாமா, ஆர்யா 2 ன்னு பல தெலுங்குப்படம் பார்த்தேன்னு வெளியில சொன்னா என்ன கேவலமா பார்க்க மாட்டாங்களா?)

சூர்யா, எத்தன நாளைக்குத்தான் இவரு நல்லா நடிகாராருன்னு மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்கறது. அகிலன் கரெக்டர் செம, முன்பாதியில ரொம்ப கான்வின்சிங்கா அகிலன், விமலன்னு வித்தியாசம் காட்டின நீங்க ஏன் ரெண்டாவது பாதியில கோட்ட விட்டுட்டீங்க? அகிலன் மட்டும் உசிரோட இருந்தா படம் முழுக்க நீங்க அகிலன தானே கொன்டினியு பண்ணியிருக்கணும் அது ஏன் பாதியில விமலனா மாறி, அப்புறம் சூர்யாவா மாறிடுது? ஒரே ஆள்தான் மிச்சமிருக்கான் எப்படி பண்ணினாலும் ஒண்ணுதான்னு நினைச்சிட்டீங்களா? 

திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி, படத்துல இருக்கற படு மொக்க காட்சிகள் இல்லாம பண்ணியிருந்தா ஒரு ஜாலியான சினிமா கெடச்சிருக்கும். படத்தோட மெயின் கதை என்னாதுங்குற குழப்பத்துனால பல நல்ல காட்சிகள் இருந்தும் வீரியம் இல்லாம இருக்கு. தேவையே இல்லாத பல மொக்க காட்சிகளுக்கு அதிக நேரம் செலவழிக்கப்பட்டு இருக்கு. அதெல்லாம் தவிர்த்து விட்டு பார்பதா இருந்தா படம் ஓகே. (ஒரு வேளை அந்த 23 நிமிஷம் ட்ரிம் பண்ணின புதிய படம் ஓகே வா இருக்கலாம்).
மற்றும் படி மொக்க படம் கெடயாது, சூப்பர் படமும் கெடயாது.

நம்ம ரேட்டிங்: 6/10.
டிஸ்கி: மெயின் ஸ்ட்ரீம் படங்கள்ல கதை என்கிற வஸ்துவ தேடுற கெட்ட பழக்கம் இல்லாததனால அத பத்தி எதுவும் பேச தேவையில்லைன்னு நினைக்கிறேன். படம் ரொம்ப நீளமா இருக்கறது எடிட்டர் தவறா, இயக்குனர் தவறான்னு தெரியல அதனால எடிட்டிங் பத்தியும் பேசல.


டிஸ்கி: கொடுத்த காசுக்கு படம் நஷ்டமில்ல. சூர்யா, டெக்னாலஜி, விசுவலைஷேஷனுக்காக ஒரு வாட்டி பார்க்க வேண்டிய படம், DVDல பார்க்குறது பெட்டர், போர்வார்ட் பட்டன் கைல இருக்கும்ல.தொடர்புடைய பதிவுகள்

சூர்யா என்கிற சரவணன்: பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு
ஏழாம் அறிவு - திரை விமர்சனம் (செமி போஸ் மார்டம்)
குள்ளப்பயலும் அவனது குள்ள நரித்தனமும்: ஒரு குட்டி கதை  
சூர்யாவின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: ஒரு பார்வை