Sunday, October 30, 2011

Ra.One எனது பார்வை (இது விமர்சனம் அல்ல)


ஷாரூக் கான் படம், நமக்கு ரொம்பவே பக்கத்துல இருக்கற தேட்டர் வரைக்கும் வந்திருக்கு, படம் பாக்கலைனா தெய்வகுத்தம் ஆகிடுமேன்னு நேற்று படம் பார்த்தேன். படத்துல நிறைய குறை நிறை இருக்கு, என்கூட படம் பார்க்க வந்த மூனுபேர்ல ஒருத்தருக்கு படம் பிடிக்கல, ஒருத்தர் தேட்டர்ல தூங்கிட்டாரு, இன்னொருத்தர் சிரிப்புசத்தம் இன்னொரு RR ஆ ஒலிச்சிக்கிட்டே இருந்திச்சு.. இதுதான் படம் பத்தி சொல்லக்கூடியது.. எனக்கு படம் பிடிச்சிருந்தது, ஏன்னா அது ஷாரூக் கான் படம், ஷாரூக்கோட மொக்க மொக்க படங்களே சுமார்ன்னு சொல்லுவேன், அப்புடின்னா இந்த படத்த  சூப்பெர்ன்னு தானே சொல்லுவேன், படத்துல இருக்கற குறைகள் ஆறறிவுக்கு பட்டாலும், ஷாரூக்கும், உள்ள இருக்கும் ஷாரூக் ரசிகனும் அத மிகைச்சிடிச்சு, அதனால எனக்கு இந்த படத்துக்கு விமர்சனம் எழுதற தகுதி இல்லன்னு நினைக்கிறேன். விமர்சன தர்மங்களில் முதலாவது நடுநிலைமை, இந்த படத்துல அத பேணமுடியாது என்பது நல்லாவே தெரியுது. அதனால ஜஸ்ட் எனது பார்வை.

கதை: மகனது உலகத்தில் மகனுக்கு சுப்பர் ஹீரோவா இருக்க நினைக்கிற அப்பா, அவனது ஆசைகளுக்காவே மிகவும் பலம் வாய்ந்த ஒரு வில்லனை உருவாக்கி ஒரு வீடியோ கேமை  வடிவமைக்கிறார். அந்த வில்லனுக்கு ஒரு செயற்கை அறிவு ஊட்டப்படுகிறது. அதன் மூலம் வில்லன் தானாக பல விடயங்களை கற்றுக்கொண்டு ஒவ்வொரு தடவையும் வேறுபட்ட சவால்களை இடக்கூடியதாக உருவாகிறது. இந்த வில்லனுக்கு அசைவுகளை கற்றுத்தருவதற்கு மனித அசைவுகளை சின்கரனைஸ் பண்ணும்போது அது அசைவுகள் மட்டுமல்லாது நாம் பேசுபவை முதல்கொண்டு  பலதையும் கற்றுக்கொள்கிறது. ஷாரூக் மகனுக்கு கேமினை அறிமுகப்படுத்தும்போது இந்த வில்லனை யாராலும் தோற்கடிக்க முடியாது என சொல்கிறார், வில்லன் அதையும் தனது மேமொரியில் போட்டுக்கொள்கிறது. முதல்நாள் கேமை லூசிபார் எனும் பெயரில் விளையாடும் ஷாரூக்கின் மகன் இரண்டு லெவல்களில் வில்லனை தோற்கடித்துவிட யாராலும் தோற்கடிக்க முடியாது என பதிவு செய்ததை நினைவில் கொண்டு வில்லன் லூசிபிரை கொல்ல வேண்டும் என அலைகிறது. தொலை தொடர்பு, தொலைக்காட்ச்சி, வானொலி  என பலவகைகளில் நம்மை சுற்றும் மின்காந்த (டிஜிடல் ராய்ஸ் என படம் கூறும்) அலைகளின் உதவியுடன் கேமிலிருந்து வில்லன் வெளியேறி லூசிபாரை கொல்ல அலைகிறது. வில்லன் தோர்கடிக்கப்பட்டானா மகன் காப்பாற்றப்பட்டான என்பதை தொழில்நுட்ப உதவியுடன் கூறி முடிகிறது படம்.


ஷாரூக் இறக்கும் வரை படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை. இடை வேளைக்கு முதலே ஷாரூக் இறந்துவிட மிகுதி நேரத்தை சூப்பர் ஹீரோ ஷாரூக் பார்த்துக் கொள்கிறார். எந்த சூப்பர் ஹீரோவும் இவ்வளவு காமெடி பண்ணியதில்லை என தேட்டரையே சிரிப்பில் ஆழ்த்துகிறது படம். தெரிஞ்சு வந்தாங்களா தெரியாம வந்தாங்களான்னு யோசிக்க வச்ச இரு கறுப்பின அமெரிக்க பெண்கள் படம் முழுவதும் சிரித்தது ஷாரூக்கின் காமெடியை பறை சாற்றியது. ஜானி இங்க்லீஷ் ரீபோர்ன் படம் பார்த்த போது கூட தேட்டரில் இவளவு சிரிப்பொலி கேட்கவில்லை, அந்த படத்துக்கு மொத்தமே பத்துபேர்தான் வந்திருந்தாங்கங்குறது வேற விஷயம். காமெடின்னு சொல்லிட்டேன் அப்புறம் நமக்கு படம் புடிச்சிருந்திச்சின்னுவேற தனியா சொல்லனுமா? கிராபிக்ஸ் சில இடங்களில் அருமை, சில இடங்களில் கமலஹாசனின் விக்ரம் பட ரேஞ்சுக்கு செம சொதப்பல்.

இம்புட்டு செலவு செய்த படத்தை பற்றி சில குறிப்புக்கள் 

1. ரொம்ப தின் லைனா இருந்தாலும் குட் ஓவர் ஈவில் என்பது மிக அழகாக குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் சொல்லப்பட்டது நல்ல விடயம். உதாரணமாக "வில்லன்ஸ் ஆர் ராக்கிங், தே ஹேவ் நோ ரூல்ஸ்" ன்னு பையன் சொல்லும்போது வில்லன் கெட்டவன், நல்லவன்தான் ஜெயிக்கனும்ன்னு ஷாரூக் சொல்லுவது, எவ்வளவு பெரிய, அழிக்கவே முடியாத பலசாலி வில்லனாக இருந்தபோதும், வில்லன் அளவுக்கு பலம் இல்லாத நல்லவனான G.One வில்லனை வெற்றிகொள்ள வேண்டிய தேவையை மிகவும் அழகாக சொன்னது. ஈவில் ட்ராயம்ப்பை சாதரணமாக காட்டக்கூடிய காலகட்டத்தில் (உதாரணம் ஷாரூக்கின் டான்), குழந்தைகளுக்காக படம் எடுக்கும் போது மிகக்கவனமாக இதை கையாண்டது.

2. கேம் உருவாக்கிய எவருமே முழுதாக பரீட்சிக்காது கேம் லான்ச் பண்ணுவது  பெரியவே ஒரு லாஜிக் ஓட்டை, லான்ச் பண்ணுவதற்கு முதல் டெவெலப்மென்ட் ஸ்டேஜ்லையே ஷாரூக்கின் மகன் விளையாடுவது போல் எடுத்திருக்கலாம். செமி பைனல்ல தோத்து, பைனல் ஆடி சாம்பியன் ஆன படத்தையே ஒரு காமேர்சியல் லேண்ட் மார்க் படமா சொல்லிக்கிட்டு இருக்கோம், இது பெரிய விசயமான்னு கேக்கலாம், ஆனாலும் பெரிய விசயம்தான். விஞ்ஞான நம்பகத்தன்மையை மொத்தமா சிதைக்குற இடம் இது. ஒழுங்கா டெஸ்ட் பண்ணினா கேம்ல அப்புடி ஒரு பெரிய பிழை வந்தத தடுத்திருக்கலாம்,  தொழில் நுட்ப வளர்ச்சி முழுதும் ஆபத்தே என சொல்பவர்களுக்கு இந்த டெஸ்டிங் போன்ற சில விடயங்கள்தான் விஞ்ஞானத்த இன்னும் தாக்கு பிடிக்க வச்சிக்கிட்டு இருக்கு. மொத்த படமுமே இந்த லாஜிக் ஓட்டயிலதான் தங்கி இருக்குன்னும் போது பெரிய விசயமா இல்லையா?


3. கிராபிக்ஸ் சில இடங்களில் மொக்கையாக இருந்தாலும், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்தது. வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் மொக்கையா எடுக்கறத (ஹி ஹி ஏழாம் அறிவு) விட நம்ம தொழில் நுட்பத்தில் மொக்கையா எடுக்கறது எவ்வளவோ மேல். (இதுல என்ன இருக்குன்னு புரியாம கேள்வி கேக்கறவங்களுக்கு, கிராபிக்ஸ் அனிமேசன் என்பதன் பயன்பாடு ரொம்ப பெரியது, ஆனால் அதன் வளர்ச்சிக்கு கோடி கோடியாக பணம் தேவை, அந்த பணம் கேமிங்கிலும், பிலிம் மேகிங்கிலும் இருந்துதான் கிடைக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும்பாலான முதலீடு இங்குதான் இருக்கிறது, நமது முதலீட்டில் வேறொருவன் ஆராய்ச்சி செய்வதை விட நம்மவரே ஆராய்ச்சி செய்வது நல்லவிசயம் தானே, என்ன நான் சொல்றது?). ட்ரைன் சீகுவேன்ஸ் எந்திரனின் ட்ரைன் சீகுவேன்ச மிஞ்சும் கிராபிக்ஸ். இந்தியன்னு பெரும பட்டுக்கலாம்.

4. நான் இந்தில தான் படம் பார்த்தேன், அதனால ஷாரூக் கானோட சேகர் சுப்பிரமணியம் காரெக்டர், காமெடி, உள்ளேயே வாழும் கலாசார உணர்வு எல்லாத்தையும் தாண்டி சில இடங்களில் கொஞ்சம் நெருடலா இருந்தது. இம்புட்டு பெரிய படம், உலகம் முழுக்க பல மொழிகள்லயும் பல தேட்டர்கள்ளையும்  வெளியிடப்படும் போது இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம், இந்தியாவின் தலை சிறந்த டெக்னீசியான்ஸ் தமிழ் நாட்டுலதான் இருக்காங்கன்னு பேட்டிகள்ள ஒத்துக்கொண்டதோட மட்டுமில்ல அத படத்துலயும் பதிவு செய்ய நினைத்தது பாராட்டப்பட வேண்டியது. ஆனாலும் அவ்க்வர்ட் பிஹேவியர் உள்ளவரா அவரும் அவரது பக்கத்து வீட்டுக்காறரா வரும் சதீஷ் ஷாவும் மட்டுமே இருப்பது அந்த நோக்கத்தையே மழுங்கடிப்பது.

5. டார்கெட் ஆடியன்ஸ் யார்ன்னு குழம்பிப் போனது போல உருவாக்கி இருக்கும் படம். பெரியவர்களுக்கு படம் கொஞ்சம் சின்னபுள்ள தனமா இருக்கும். குழந்தைகளுக்கு கொஞ்சம் ஓவராவே கவர்ச்சி இருக்கும்.  ஒருவேள மனதளவில் குழந்தைகளாகவும் செயல்பாடுகளில் முத்தல்களாகவும் இருக்கும் நம்ம மொக்கராசு மாமா போல உள்ளவங்களுக்காக இந்த படத்த எடுத்திருப்பாங்களோ?


பாட்டம் லைன்: ஷாரூக் ரசிகராகவும், காமெடி பிரியராகவும் என்டேர்டைன்மண்டுக்காக மட்டுமே படங்கள் எனும் எண்ணத்தில் இருப்பவராகவும் இருந்தால் உங்களுக்கு படம் பிடிக்கும். இதுல ஏதாவது ஒன்னு குறைஞ்சாலும் படம் மொக்கையா தெரியலாம். குழந்தைகளுக்கு படம் பிடிக்கும். (சில காட்சிகளை தவிர) குழந்தைகளுக்கு பரிந்துரைக்கக்கூடிய படம். வேலாயுதம் (ஹன்சிகா காட்சிகள்) குழந்தைகளுக்கு ஓகேன்னு சொன்னீங்கன்னா இது டபுள் ஓகே.

***********************************

சொல்ல மறந்த கதை: அது என்னமோ தெரியல ஷாரூக் கான் படம்னா மொக்க பிகர் கூட சூப்பர் பிகரா தெரியுது. கரீன கபூர் சூப்பரா இருக்காங்க, நல்லா காட்றாங்க திறமையையும் நடிப்பையும். ஷாரூக் கானோட மகனா நடிக்கற பையன் நல்லாவே நடிச்சிருக்காரு, சில காட்சிகளில் கரீனாவை தூக்கி சாப்பிடும் நடிப்பு, சில காட்சிகளில் ஷாரூக்கிற்கே சவால் விடும் நடிப்பு. அர்ஜுன் ரம்பால் ஓகே, ஆனா அந்த கெட்-அப்ல என்ன இருக்குன்னு அம்புட்டு ரகசியமா வச்சிருந்தாங்கன்னு தெரியல. விஷால்-சேகர் பின்னணி இசை நல்லா இருக்கு. மூணு பாட்டுதான் படத்துல (ஏழாம் அறிவு டீம் நோட் திஸ்), அக்கான் பாட்டு இன்ஸ்டன்ட் ஹிட். கேமெரா நன்று.

ஒப்பீடு: இந்த படத்த எந்திரனோட ஒப்பிட தேவையில்லங்குறது என்னோட சொந்த கருத்து. அதையும் தாண்டி கொஞ்சம் சொல்லுடான்னு மொக்கராசு மாமா கேட்டுக்கொண்டதால சொல்றேன். விசுவல் எபக்ட், என்டேர்டைன்மென்ட் ரெண்டுலயும் எந்திரன். பட்ஜெட்டுக்கு தக்கதா என்டேர்டைன்மேண்ட தவிர எதாச்சும்னா Ra.One.  என்னதான் சொல்லுங்க ரஜனி ரஜனிதான், எந்திரன்தான்.


டிஸ்கி: ஆறு மணிக்கு 3D ஷோ. டான்-2  ட்ரெய்லர் மிஸ் பண்ணிட கூடாதேன்னு அஞ்சு மணிக்கே தேட்டேருக்கு போனேன், ப்ரொஜெக்டர் பழுது 8 மணிக்கு நோர்மல் ஷோ போடுவோம் பாருங்கன்னு சொல்லிட்டாங்க, அங்கயும் டான்-2 ட்ரெய்லர் போடுவாங்கன்னு பார்த்தா அதையும் கண்ணுல காட்டல, நமக்கு இந்த ராசி போகாது போலிருக்கே.(நீதி: அமேரிக்காலயும் ப்ரொஜெக்டர் பழுதாகும் மக்களே.)



Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு - திரை விமர்சனம் (செமி போஸ் மார்டம்)




அப்பாடா, பல தடைகளையும் தாண்டி ஒரு பாடா படத்த பார்த்தாச்சு. நம்ம ராசு மாமா படம் பார்க்க முடியாதுன்னு  சொல்லிட்டாரு. நமக்கோ படம் பார்க்கணும்னா மூணு மணிநேரம் வண்டி ஓட்டனும், அதாவது கிட்டத்தட்ட இருநூறு மைல் தூரம் போகணும் தேட்டேருக்கு. அதுக்கு படம் ஒர்த்தா இல்லாயான்னு பார்க்கலாமேன்னு ராத்திரி பூரா ஒக்காந்து மாங்கு மாங்குன்னு பதிவுகள படிச்சா மிக்ஸ்ட் ரிவீவ். கொஞ்சம் பேரு ஆகா அற்புதம்ன்றாங்க, கொஞ்சம் பேரு ஒரு வாட்டி பார்க்கலாம்ங்குறாங்க, இன்னும் கொஞ்சம் பேரு மொக்கயின்னு சொல்றாங்க. எது உண்மையின்னு ஒண்ணுமே புரியல. எதுக்கு வம்பு படத்த பார்த்திடுவோமேன்னு முடிவெடுத்து ஒரு வழியா பார்த்தும் ஆச்சு. இதுவரைக்கும் உங்க எல்லோருக்கும் படத்தோட கதை என்னன்னு அக்குவேறு ஆணிவேரா தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் விமர்சன தர்மத்துக்காக மிகச்சுருக்கமா சொல்லிடறோம்.

ஒன் லைனெர்: "இந்தியாவுல, அதுவும் தமிழர்கிட்ட இருந்து போன மருத்துவமும், தற்காப்பு கலைகளும், நாம மொத்தமாக மறந்துவிட்ட நிலையில் நமக்கே எதிரியா திரும்பினா என்ன ஆகும்?"

பிளாட்: மருத்துவ ரீதியா இந்தியாவ அடிமைப்படுத்த சீனா பயோ-வார் ஆராம்பித்து, அதை செயல்படுத்த ஒரு மார்சியல் ஆர்ட்ஸ் அண்ட் நோக்கு வர்மம் எக்ஸ்பெர்ட இந்தியாவுக்கு அனுப்புது. கூடவே ஸ்ருதி ஹாசன கொல்லச்சொல்லியும் ஆர்டர். இது எதுக்குன்னா போதிதர்மன் பற்றிய அவரது மருத்துவ ஆராய்ச்சி. ஸ்ருதி மருத்துவ ஆராய்ச்சியில் வெற்றி பெற்றாரா? சீனாவின் திட்டம் தோற்கடிக்கப்பட்டதா என்பதை, தமிழர்களின் பாரம்பரியம், நமது அறிவியல் மகிமைகள் என்பவற்றின் பின்னணியில் கூறி முடிகிறது படம்.

ஜானர்: இந்த படம் "செமி ஹிஸ்டோரிகால் சயன்ஸ் பிக்ஷன். கூர்ந்து கவனிக்கவும் "பிக்ஷன்" இது "டிராமா" அல்ல. ஒரு அர்தண்டிக் (?) வரலாற கையில வச்சுக்கிட்டு நிகழ்காலத்த பிக்ஷன் ஆக்கி அதுல டிராமா கலந்து, சயன்ஸ் கலந்து ஒரு கலவையா ஆக்கியிருக்காங்க. இத வச்சுக்கிட்டு எப்புடி ஒரு கதைய பின்னியிருக்காங்க, அத எப்புடி காட்சிப்படுத்தி திரையில கொண்டுவந்திருக்காங்க, அதுல வெற்றி பெற்றிருக்காங்களா இல்லாயான்னு இனி பார்க்கலாம்.


போதிதர்மர் தான் கதையின் அடி நாதம். போதிதர்மன் தற்காப்பு கலை நிபுணர் மட்டுமல்லாமல் சிறந்த மருத்துவரும் கூட என்பது வரலாற்றுக் குறிப்பு. நம்ம யாருக்குமே இவர தெரியாது, எனவே இவர் யார்ன்னு சொல்லாம கதைக்குள்ள போக முடியாது, எனவே படம் ஆரம்பிக்க முதல்ல இருபது நிமிஷம் போதிதர்மர் எபிசோட். படத்தோட பெரிய ஹைலைட் இதுதான், நடிப்பாக இருக்கட்டும், காட்ச்சிப்படுத்தலாக இருக்கட்டும், கிராபிக்ஸாக இருக்கட்டும், சூப்பர். சூப்பர். சூப்பர். ஆனா இதுவேதான் படத்தோட மைனசும். அது எப்புடின்னு பிறகு பார்ப்போம்.

ஸ்ருதியோட மருத்துவ ஆராய்ச்சி DNA சம்பந்தப்பட்டது. இதுதான் படத்தோட பிக்சன் பகுதி. மரபனுக்களுக்குள் ஒரு மெமரி இருக்கு. இதுல உடல் அமைப்பு, உடல் கோளாறுகள், உயரம், தலைமுடி அமைப்பு போன்றவை புதைந்திருக்கும், இது பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும். அவற்றில் ஆட்சியான இயல்புகள், பின்னடைவான இயல்புகள் என இரு வகை இருக்கும், ஆட்சியான இயல்புகள் வெளிப்படும், பின்னடைவான இயல்புகள் புதைந்து போகும். இதுவே உயரமான தந்தைக்கும், குட்டையான தாய்க்கும் பிறக்கும் குழந்தை உயரமானவரா குட்டயானவரா என்பதை தீர்மானிக்கும். இது அறிவியல். ஆனா ஒருவர் உருவாக்கிக்கொண்ட இயல்புகள், ஆற்றல்கள், திறமைகள் என்பனவும் DNAவில்  பதியப்படும், என்பதும்  பின்னடைவான நிலையில் இருக்கும் இந்த இயல்புகளை தூண்டுவதன் மூலம் அந்த ஆற்றல்களை திரும்பக்கொண்டுவரலாம் என்பதும் கற்பனை, இந்த ஆராய்ச்சி பற்றிய குறிப்புகள்தான் போதிதர்மர் நமக்கு வழங்கிச்சென்ற (நாம் தொலைத்து விட்ட) சுவடியில் இருந்து ஸ்ருதிக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. இதுவே நமது கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் உள்ள இணைப்பாக படத்தில் வருகிறது.  போதிதர்மனின் DNA மாதிரி அவரது  வழித்தோன்றலான அரவிந்தனது மாதிரியுடன் 80 சதவீதம் ஒத்துப்போகிறது எனவே அரவிந்தனின் DNA வை தூண்டுவதன் மூலம் போதிதர்மனின் ஆற்றல்களை, மருத்துவத்தை திரும்ப பெறலாம் என்பது ஸ்ருதியின் கணக்கு. அது நடைபெறும் இடத்தில் தனது திட்டம் தவிடு பொடியாகிவிடும் என்பது சீனாவின் கணக்கு. இதற்கிடையில் நடைபெறும் போராட்டமே ஏழாம் அறிவு.


ஆரம்ப இருபது நிமிடங்கள் படத்தின் மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. கதை நிகழ்காலத்துக்கு வரும் போது விரியும் காதல் காட்சிகள் அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதத்தில் இல்லை. இந்த இருபது நிமிட காட்சிகள் படத்தின் ஆரம்பத்தில் வராது, ஸ்ருதி சூர்யாவிடம் நமது பெருமைகளை விளக்கும் அந்த மியுசியம் காட்சியின் போது வந்திருக்குமானால் தொய்வு தவிர்க்கப்பட்டிருக்கும். திரைக்கதையில் இருக்கும் சொதப்பல் இதுவே. ஒரு பிரமாண்டமான மிகவும் கருத்து செறிவான ஒரு விடயத்தை ஆரம்பத்திலேயே காட்டி பார்வையாளனின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்று பின்பு சாதாரணமான காதல்காட்ச்சிகளையும் (ஒப்பிடும்போது) மிகவும் சாதரணமான பாடல்களையும் இட்டு நிரப்பும் போது படத்தில் ஸ்ருதி சொல்லும் "உன்னோட காதல குப்பையில போடு" டயலாக்தான் நமக்கும் வருது. ஒரு வேள அந்த எபக்ட தான் முருகதாஸ் நம்மக்கிட்ட இருந்து எதிர்பார்த்தாரான்னு தெரியல. அப்புடியிருந்தாலும் அந்த முயற்சி இந்த படத்துக்கு கை கொடுக்கல. செமி ஹிஸ்டோரிகள், சை பை மெடிகல் த்ரில்லர்ல டிராமா மிக்ஸ் பண்ணினது வொர்கவுட் ஆகல.

படத்துக்கு தேவையே இல்லாத வலிந்து திணிக்கப்பட்டது போன்ற (சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட) பாடல்கள், குறைந்தது ஒரு பாடலையாவது வெட்டியிருக்கலாம், இந்தமாதிரி ஒரு படத்துக்கு மூன்று நிமிடத்துக்கு மேல ஒலிக்கும் பாடல்களை கம்போஸ் பண்ணினது எந்த மடயன்னு கேக்க தோணுது, பாடல்களின் நீளம் மிகவும் அதிகம். (முதல் இருபது நிமிடம் தவிர்த்து) பின்னணி இசை படு சுமார். ஹாரிஸ் ஜெயராஜ் கவனிக்க வேண்டிய முக்கியமான இடம்.


அறிவியல் பகுதிகளை ரொம்பவே எளிமைப்படுத்தறதா நினைச்சு கன்பியுஸ் பண்ணாம இருந்திருக்கலாம். DNA வில் புதைந்திருக்கும் இயல்புகளை தூண்டுறதுன்னு கான்செப்ட் சொல்லிட்டு, போதிதர்மரோட ஆவிய புகுத்துறது போல உணர்வு தரக்கூடிய, போதிதர்மரையே திரும்ப கொண்டு வருவதான வசனங்களை தவிர்த்து, போதிதர்மரின் இயல்புகளை பெறலாம் என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கலாம். (அறிவாளிகள் கவனத்திற்கு: ஸ்ருதியின் கையில் போதிதர்மர் DNA இல்லை, அவர் இணையத்தில் கிடைத்த DNA மாதிரியின் கட்டமைப்பு விளக்கப்படத்துடன் ஒப்பிட்டே எத்தனை சதவீதம் பொருந்துகிறது என்பதை அறிந்து கொள்கிறார். நம்மாளு சேம்பிள அவுங்க டேட்டா பேசுக்கு அனுப்பி ஒப்பிட்டு கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எனவே போதிதர்மரின் DNA வை "புகுத்தி" என படத்தில் வரவில்லை என்பதனை கவனத்தில் கொள்க). ப்ரீ க்ளைமாக்ஸ் சண்டைக்காட்ச்சியில் வாகனங்கள் பறக்கும் கிராபிக்ஸ்ஸில்  இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

கதையா தேர்வு செய்து நடித்த சூர்யாவுக்கு பாராட்டுக்கள். கதை முழுக்க முழுக்க வில்லனையும், ஸ்ருதியையும் சுற்றி பின்னப்பட்டது. சூரியா ஒரு கருவி, இந்த மாதிரி ஒரு படத்த அதுவும் ஹீரோவ விட அறிவான ஹீரோயின்னும் பலசாலியான வில்லனும் உள்ள கதையில் ஒரு நடிகனாக மட்டுமே நடித்தது பாராட்டுக்குரியது. அதற்க்கான உழைப்பும் மிக அபாரம். போதிதர்மன் வரலாற்று பதிவு, கிளைமாக்ஸ் சண்டை, போஸ்ட் க்ளைமாக்ஸ் டிவி இண்டர்வியு மட்டுமே சூர்யாவுக்கு ஹீரோயிசம் காட்ட சந்தர்ப்பங்கள், மனிதன் பின்னுராறு. அரவிந்தன் கதாபாத்திரம், பாரம்பரியத்தை தொலைத்துவிட்ட சாதாரண நவீன தமிழ் இளைஞன், அதுக்கு என்ன தேவையோ அதையே பண்ணியிருக்காரு, அளவான நடிப்பு. நடனத்துல ராபர்டிக்ஸ் மூமென்ட் இன்னும் கொஞ்சம் குறைச்சுக்கனும். ஜோ தவிர மத்த ஹீரோயின்கள் கூட கூச்சப்பட்டு ஒதுங்காம இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாம்.


ஸ்ருதி, சமீபத்துல சூரியாவுக்கு ஹீரோயின்னா நடிச்சவங்க லிஸ்டிலேயே அழகா தெரிஞ்சது, கதாபாத்திரமா நிலைச்சது இவங்க மட்டுமே, அதுவே முதல் வெற்றி. கொடுக்கப்பட்ட வேலை பெரியது, அதை சொதப்பாம கஷ்டப்பட்டு கேரி பண்ணியிருக்காங்க. தமிழ்ல அறிமுகப்படத்துக்கு இந்த பெர்போமான்ஸ் ஓகே. ஆனா வாயிஸ் மடுலேசன், எக்ஸ்பிரசன்  இன்னும் வரணும். அழகா இருக்காங்க, கமல் பொண்ணுன்னு பாக்காம, ஸ்ருதின்னு பாருங்க ரசிக்கலாம்.

முருகதாஸ், ஒரு நல்ல படம் கொடுக்க முழு முயற்சியாக ஈடுபட்டமைக்கு பாராட்டுக்கள். ஒரு பரீட்சார்த்த முயற்சி, காண்டேன்ட் வைஸ் படம் அபாரம், எக்ஸிகியுசன் கொஞ்சம் சறுக்கல். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், இயக்கம் பெரும்பகுதியான இடங்களில் அபாரம், சில இடங்களில் கோட்டை. போதிதர்மர் பற்றிய வரலாறினை எதிர்பார்ப்பு இல்லாமல் திரையரங்குக்கு வரும் சாதாரண ரசிகனுக்கு சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்.

ஜானி, மனுஷன் குடுத்த காசுக்கு மேலையே வேலை செஞ்சிருக்காரு, தமிழ் சினிமாவின் முதலாவது பலம் வாய்ந்த, இடைவேளைக்கு அப்புறம் ஹீரோக்கு அடங்கிப்போகாத வில்லன். இவர சமாளிக்க முடியாம ஹீரோவே திணறிப்போறது அழகான யதார்த்தம், அவரது கலைகளே ஹீரோவோட மூதாதையர் கத்துக்குடுத்ததுதான்னு தெரியும் போது அதுவே வலியுடன் கூடிய எதார்த்தமும்.


ரவி கே சந்திரனின் கமெரா அற்புதம், விழலுக்கு இறைத்த நீராக பாடல்கள் கொடுமை.  எடிட்டிங், இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். ராஜீவனின் கலை ததுரூபம். குறிப்பாக முதல் இருபது நிமிடமும் யம்மா யம்மா பாடல் காட்ச்சியில் வரும் ரயில்வே ஸ்டேசனும்.

ஒப்பீடு: தமிழில் சில நாட்களுக்கு முன் வந்த இரண்டு பிக்சன் கதைகள், தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன். இரண்டையும் விட ஒப்பீட்டளவில் இதன் பலங்கள் அதிகம், பலவீனகள் குறைவு. தமிழ் சினிமா முன்னோக்கி போகிறது.

பாட்டம் லைன்: நல்ல முயற்சி, ஒரு மிகச்சிறந்த படமாக அமைய சகல தகுதிகளையும் கொண்டுள்ள படம், சிறு சிறு ஓட்டைகளால் மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது நிலையில் இருக்கு. ஆறு மணி நேர வண்டி ஓட்டத்துக்கும், குடுத்த காசுக்கும் படம் வஞ்சனை இல்லை. 

நம்ம ரேடிங்: 7 /10 (பரீட்ச்சார்த்த முயற்சி என்பதால் சில குறைகள் மன்னிக்கப்படுகிறது)


**********************************


பதிவுக் குறிப்பு: நீங்கள் சூர்யா எதிரி இல்லையாயின், ஹாலிவூட் படங்களே உலகப்படங்கள் எனக்கூறும் மொத்த படித்த மேதாவி இல்லையாயின், ஒரு தமிழ் படத்த நல்லம்ன்னு சொன்னா நாம கட்டிக்காத்த இமேஜ் கெட்டுப்போகும்னு அடம்பிடிக்காதவராயின், அதிகப்படியான விளம்பரங்களை சகித்துக்கொள்ளும் பக்குவம் இருப்பின் ஏழாம் அறிவு உங்களுக்கும் பிடிக்கும். கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். ஒரு முறையா பலமுறையா என்பது உங்களை பொறுத்தது.

டிஸ்கி: படத்தின் லாஜிக் மீறல்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. காரணம், ஒன்று, படம் பிக்ஷன் ஜோனர், இரண்டாவது, ஒரு திரைப்படத்தில் எல்லா விடயங்களையும் காட்ட வேண்டும் என்றில்லை. உதாதரனமாக சிஸ்டம் பற்றி விவாதிக்க விருப்பமில்லையாயின், நூறு போலிஸ கொண்னப்புரம் ஏன் போலீஸ் ஒன்னும் செய்யலன்னு கேள்வி கேக்க தேவையில்லை. போலீஸ் எதுவும் செய்ததாக காட்டவும் இல்லை, செய்யாததாக காட்டவும் இல்லை. இது சினிமா விதிகளில் ஒன்று. படத்தின் பிளாஸ் பற்றியும் அதிகம் குறிப்பிடவில்லை. (இன்னொரு பதிவு தேத்தனும்ல).

டிஸ்கி: ஒரு நல்ல முயற்சி தவறான விமர்சனங்களால் வீண் போய் விடக்கூடாது என்பதற்காக சற்று ஆணிகளை ஒதுக்கிவிட்டு விரிவான ஒரு பதிவு. நீண்ட நாள்களுக்கு பின் தமிழர் பாரம்பரியம், போதிதர்மன் வரலாறு, அழிந்துபோன அல்லது அளிக்கப்பட கலைகள் போன்ற பல விடயங்களை விவாதிக்கக் கூடிய ஒரு படம். படம் பார்த்தவர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. சம்பந்தமே இல்லாது அரசியலை இழுப்பதையும், படமே பார்க்காது இது நொட்ட அது நோசக்கு என சொல்வதையும்  தவிர்த்தால் கூடுதல் மகிழ்ச்சி.

டிஸ்கி: சனி அல்லது ஞாயிறு ரா.1 விமர்சனத்துடன் சந்திப்போம்.


Wednesday, October 19, 2011

நாட்டாமை பண்ணுவது எப்படி?


ஊருக்குள்ள ஒவ்வொரு  மனுஷனுக்கும் ஆயிரம் பிரச்சின இருக்கு, இதுல பெரிய பிரச்சின நாட்டாம பண்றது. அடடா நாலு பேரு நம்மகிட்ட வந்திட்டாங்களேன்னு உடனே, "நீ அவனுக்கு ஒரு குட்டு குட்டு, நீ அவனுக்கு ஒரு மிட்டாய் குடுங்குற"  ரீதியில நாமளும் நாட்டாம பண்ணிட முடியாது. இது எப்பவுமே புலி வால புடிச்ச கதைதான். அதனால இன்னிக்கு நாட்டாம பண்றது எப்புடின்னு பாப்போம். 

முதலாவதா எந்தெந்த பிரச்சினைகள்ள நாட்டாம பண்ணலாம் எதேதுல பண்ணக்கூடாதுன்னு தெளிவா புரிஞ்சிக்கணும்.

  1. காதல் பிரச்சினையில நாட்டாம பண்ணவே கூடாது: இதுல கைய வச்சோம்னா நம்ம பாடு திண்டாட்டம்தான். ரெண்டு பேர சேர்த்து வச்சோம்னு வைங்க, சந்தோசமா இருந்தாங்கன்னா நம்மள கண்டுக்கவே மாட்டாங்க, எதாச்சி பிரச்சினைன்னு வந்திச்சு, நம்ம தலைதான் உருளும். சிலபேர் வலிய வந்து அத்து விடுங்கம்பாங்க, நாமளும் போராடி அத்து விடுவோம், அப்புறம் எப்போ ஒட்டிக்குவாங்கன்னு தெரியாது, ஒட்டிக்கிட்டாங்க நம்மள வாரு வாருன்னு வாரிடுவாங்க, அப்போ அவன் உன்னப்பத்தி அப்புடி சொன்னான், இப்புடிச்சொன்னான்னு போட்டுகுடுத்து நம்ம தாலிய அத்திடுவாங்க, நாம பொது எதிரி ஆயிடுவோம். இந்த சட்டம், நட்புக்குள்ள வாற பிரச்சினையில இருந்து கணவன் மனைவிக்கிடயில இருக்கறது வரை பொருந்தும்.  
  2. திருமண வரன் பாக்கிறப்போ: அந்த பய்யன் உன்னோட பிரெண்டுதானே, ஆளு எப்புடின்னு கேள்வி கேட்டாங்கன்னா உசாராகிடுங்க, இதுல வீணா கருத்து சொல்லபோய் செம்ப நெளிச்சுக்காதீங்க. ஒருத்தங்க திருமணத்துக்கு முன்பு எப்புடி, பின்பு எப்புடின்னு யாராலையும் கணிக்க முடியாது. உங்க கருத்த நாசூக்கா சொல்லிட்டு எஸ்கேப் ஆகிக்காங்க, அதுதான் சேப்டி. (நம்ம காட்டுப்பூச்சிக்கு பொண்ணு பாக்குறப்போ சர்டிபிகேட் குடுத்தா நம்ம நிலைமை என்னாகும்னு யோசிச்சு பாருங்க, புரிஞ்சிடும்)
  3. ஒருவரது நம்பிக்கை சார்ந்த கருத்துக்களில்: இத தெளிவா சொன்னா என்னோட செம்பு நெளிஞ்சிடும், அதனால நாசூக்கா ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க, தலைவர் சந்தானம்தான் டாப் காமெடியங்குறது எல்லாருக்கும் தெரியும், இதுல யாராச்சி வந்து இல்ல இன்னாருதான்னு சொல்றாங்கன்னு வைங்க, அந்த பஞ்சாயத்த தீர்த்து வைக்க வந்தவர புழல்லையோ இல்லன்னா ஜி.ஹெச்  லயோதான் பார்க்கணும்.  
  4. நம்ம அறிவுக்கு எட்டாத விசயத்துல அல்லது நமக்கு சம்பந்தமில்லாத விசயத்துல: உதாரணமா நீங்க ஒரு கண் டாக்டர்ன்னு வைங்க, நானும் விண்டோஸ் கம்பூட்டர் பாவிக்கறேன்னு சொல்லிக்கிட்டு சாப்ட்வேர் இன்ஜினியருக்கு  ப்ரோக்ராமிங்க்ல விளக்கம் குடுக்க போயிடாதீங்க, மண்ட காஞ்ச்சிடும். இந்த விசயத்துல தேவையில்லாம நாட்டாம பண்ணி நம்ம சவக்குழிய நாமளே தோண்டிக்கக்கூடாது. பெரிய விசயமா இருந்தா பெரியவங்க கையில ஒப்படைச்சிட்டு ஒதுங்கிடனும். ஜட்டியே போடாவதவன் ஜட்டி விளம்பரத்த பத்தி பேசக்கூடாது. 
  5. அழையாதவிடத்துல சம்பந்தமே இல்லாம ஆஜராகி நாட்டாம பண்ண கூடாது: இது ரொம்ப முக்கியமானது எல்லாருமே மறந்து போயிடுறது, நம்மள யாருமே கூப்பிடாதவரை எந்த விசயத்துக்கும் நாட்டாம பண்ண போக கூடாது. அது வேலில போற ஓனான வேட்டிக்குள்ள விட்ட கதையாயிடும்.


இதையும் மீறி ஒரு விசயத்துல நாட்டாம பண்றதுன்னு இறங்கிட்டோம்னு வைங்க, முக்கியமா கவனிக்க சில விஷயங்கள் இருக்கு. 

  1. பிரச்சினை என்னன்னு தெளிவா புரிஞ்சிக்கணும், இல்லனா தலைவலின்னு வந்தவனுக்கு கால்ல ஆப்ரேசன் பண்ணின கதையா போயிடும். ஒரு நாணயம்னா ரெண்டு பக்கம் இருக்கும்னு சொல்வாங்க, ரெண்டு பக்கத்தையும் முதல்ல நல்லா அலசி ஆராஞ்சிக்கணும்.  முடிஞ்ச வரைக்கும் நுனிப்புல் மேயுற பழக்கத்த விட்டுட்டு பிரச்சினையின் அடிப்படை வரை போய் ஒரு தெளிவ ஏற்படுத்திக்கணும். 
  2. பிரச்சினை என்னன்னு புரிஞ்சுக்கிட்டோமா, அடுத்த கட்டமா நம்ம நிலைப்பாடு என்னன்னு ஒருவாட்டி மறு விசாரண செஞ்சிக்கனும், ஒன்னுக்கு நாலுதரம் யோசிச்சி உறுதிப்படுத்திக்கிட்டு பிரச்சினையின் தீவிரத்தோட ஒப்பிட்டு நாட்டாம பண்ணலாமா வேணாமான்னு முடிவெடுக்கணும். நம்ம தலைவர்  ரசிகர்தான்னு வந்ததுக்கப்புறம், சிறந்த காமெடியன் யார்ன்னு நாட்டாம பண்ணக்கூடாது. 
  3. இப்போ பிரச்சினயோட நடுநிலைமை பார்வை என்னன்னு பார்க்கணும். இருபத்தஞ்சி வருசத்துக்கு மேல வாழ்ந்த எந்த ஒரு மனுசனும், ஒரு பிரச்சினைய அலசி ஆராயுரப்போ, தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில, தனது சொந்த நிலைப்பாட்டதான் எடுக்கறான். நடுநிலைமை பார்வை வரணும்னா அந்த நாணயத்தோட ரெண்டுபக்கத்துலயும் நம்மள வச்சிக்கிட்டு யோசிக்கணும். உதாரணமா தலைவர் காமெடிதான் சிறந்ததுங்குறது மறுக்கமுடியாத உண்மை, ஆனா பிரேம்ஜி ரசிகர்களுக்கும் தலைவர் ரசிகர்களுக்குமிடையில் நாட்டாம பண்ணுமிடத்து, அது இல்ல நடுநிலைமை பார்வை, பிரேம்ஜி ரசிகர்களுக்கு அவரோட காமெடி, தலைவர் காமெடியவிட சிறந்ததா தெரியும், நாம தலைவர எப்புடி விட்டுக்குடுக்க மாட்டோமோ அவங்க பிரேம்ஜிய விட்டுக்குடுக்க மாட்டாங்கங்குரதுதான் நடுநிலம பார்வை. "இல்ல நல்லா யோசிச்சு பாரு, தலைவருக்குத்தான் ரசிகர்கள் அதிகம், அவரு காமெடிக்குத்தான் நிறையபேர் சிரிக்கறாங்க, அவருக்கிட்ட கேளு, இவருக்கிட்ட கேளு, நடுநிலமயா யோசிக்கரவனுக்கு இது புரியும்ன்னு" நாட்டாம பண்ண போனமுன்னா நமக்கு ஜி ஹெச் தான்.
இந்த மூணு விஷயத்தையும் கவனிச்சீங்கன்னா, நாட்டாம பண்ண வாற கேசுல பத்துல ரெண்டுக்குத்தான் நாட்டாம பண்ண முடியும்கறது உங்களுக்கே தெளிவா தெரியும். அதுக்கப்புறம் என்ன உங்க தீர்ப்ப சொல்ல வேண்டியதுதான். அத விட்டுட்டு அம்மா வாங்க அய்யா வாங்கங்க நானும் தீர்ப்பு சொல்றேன்னு தொடங்கினீங்க, செம்பு நெளியறது நிச்சயம். 

அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, சின்ன வயசுல இருந்து நாங்க ரொம்ப நல்லவங்கங்களாவே வளர்ந்துட்டோம்.

கருத்துச்சொல்லும் போதும் நாட்டாமை பண்ணும் போதும் கவனத்திலிருத்த வேண்டியது: "யாகாவாராயினும் நாகாக்க"


டிஸ்கி: ஒரு காதல் விவகாரத்தில் நாட்டாமை பண்ணப்போய் நொந்து போன அன்பு நண்பன் விமலஹாசனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் வண்ணம் பின்னூட்டம் இடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


Thursday, October 6, 2011

ஸ்டீவ் ஜொப்ஸ், ஐபோன், கிண்டில் பாயர், முப்பொழுதும் உன் கற்பனைகள் - கும்பளிங் கும்பளிங் 06/10/2011

ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஒரு ஆளுமைக்கு பிரியாவிடை: 
ஸ்டீவ் ஜொப்ஸ் அதுதாங்க ஆப்பில் காம்பெனியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியும் (CEO)ஆ இருந்து சில நாட்களுக்கு முன்னாடி ஓய்வு பெற்றாரே, அவுரு நேற்று (புதன்கிழமை)  இறைவனடி எய்தினார். ஆப்பில் காம்பெனியின் தயாரிப்புகள் பற்றியும் அவற்றுக்கு உள்ள மவுசு பற்றியும் உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும், அத்தனைக்கும் காரணமான ஒரு மிகப்பெரும் ஆளுமை.  நவீன உலகின் லியனாடோ டாவின்சி என வர்ணிக்கப்பட்ட ஒருவர். இனிமேல் அவரது சேவையும் ஆற்றலும் நமக்கு என்றைக்குமே கிடைக்கபெறாவிட்டாலும், தொழில்நுட்ப உலகின் ஒரு மிகப்பெரும் ஆளுமைக்கு நமது மரியாதையும் செலுத்திக்கொள்வோம். 2005 ஆம் ஆண்டு உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஸ்டான்பெர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரையினை நேரமிருந்தால் கேட்டுப்பாருங்கள்.     


iPhone 4S

என்னதான் இருந்தாலும் இந்தவாரம் ரொம்பவே எதிர்பார்த்து ஏமாந்து போனது இந்த ஆப்பில் காறங்ககிட்டதான். ஐபோன் 5 அறிவிப்பாங்கன்னு நெனச்சி பார்த்திட்டு இருந்தா அவங்க ஐபோன் 4S அப்புடின்னு போட்டு நெறயப்பேர ஏமாத்திட்டாங்க, ஆனா இனிமே ஐபோன் வாங்குற பசங்களுக்கு செம கொண்டாட்டம், அதாவது ஐபோன் வாங்கினா ஒரு என்றும் பதினாறு பெர்சனல் செக்ரட்டரி இலவசமாம். "சிரி"ன்னு பேரு, உங்களுக்கு போரடிச்சா அந்த பொண்ணுகூட ஹாயா பேசிக்கிட்டு இருக்கலாம். நீங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும், இனிமே நிரூபன் சாருக்கு எத்தன வயசின்னு நாம மண்டைய பிச்சுக்க தேவையில்ல, சிறிகிட்ட கேட்டா சொல்லிடுவா. அத விடுங்கங்க, நான் இன்னிக்கி குடை கொண்டுபோகனுமா? அப்புடின்னு கேட்டா காலநிலைய சரி பார்த்து மழை பெய்யுமா பெய்யாதான்னு சொல்லிடுவான்னா பாத்துக்கங்களேன். விக்கிபீடியா மற்றும் வூல்பார்ம் அல்பா துணையோட உங்களுக்கு வாற பொது அறிவு சந்தேகங்கள்ள இருந்து விஞ்ஞானம், கணிதம் வரைக்கும் எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வைப்பா. இனிமே எந்த பொண்ணுங்களும் நீ ஐபோனையே கட்டிக்க அப்புடின்னு திட்ட முடியாது, அடுத்த பதிப்புல அந்த அப்சனும் வந்திடும்னுதான் தோணுது.


ஆப்பில் நம்மள ஏமாத்தினாலும் அமேசான் நம்மள கைவிடல, அவங்களோட கிண்டில்  ஈ-ரீடர், புதிய வரிசய அறிவிச்சிருக்காங்க. இலத்திரனியல் மை தொழில்நுட்பத்துல வெளிவந்து சக்க போடு போட்ட ஈ-ரீடர் இப்போ டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பத்தோட மின்னுது. அது இல்ல இப்ப மேட்டர், அவங்க வரிசையில   கிண்டில் பாயர் அப்புடின்னு ஒரு கலர் ஸ்க்ரீன் மல்டி டச் அன்ட்றாய்ட்  டேப்லெட்  இருக்கு. இது நெறைய டேப்லெட் கம்பனிகளுக்கு பீதிய கெளப்பி விட்டிருக்கு. கிண்டில் புத்தகங்கள் மட்டுமல்ல, pdf, doc முதலிய வற்றையும் வாசிக்கலாம், இசை, வீடியோ உள்பட சில்க் வெப் பிரௌசெர்,  அன்ட்றாய்ட் ஆப்ளிகேசன்ஸ், கேம்ஸ் என பல வசதி இருக்கு. ஈ-ரீடர் எங்குரத தாண்டி இது ஒரு முழு டேப்லெட். விலையும் ரொம்ப கம்மியா இருக்கறதால டேப்லெட் சந்தைய ஒரு கலக்கு கலக்கும்னு நிபுணர்கள் எதிர்பார்குறாங்களாம். என்ன ஒரு குற, மெமெரி கொஞ்சம் போதாது, 8GB. என்னதான் சொல்லுங்க ஐபாடுக்கு ஒரு போட்டி ரெடி.      


கடந்த ரெண்டு வாரமா, ஒளியைவிட வேகமா பயணிக்கற துணிக்கைகள் அப்புடின்னு முகப்புத்தகத்த நாறடிச்சுட்டாங்க, அப்புறமாதான் அது என்னன்னு பாக்கலாமேன்னு ஐன்ஸ்டைன் சார்புத்தத்துவத்த கூகிள் கிட்ட கேட்டோம். அதுவும் கான்செப்ட் அப் சைமல்ட்டேனிட்டி அப்புடின்னு என்னமோ காட்டிச்சு. அது என்னன்னா நேரம்ங்குறது நிலையானது இல்ல, பாக்குறவன் கண்ண பொறுத்து வேறுபாடும் அப்புடிங்குரதுதான். அதாவது, ஒரு ஓடுற ட்ரைன்ல முனாடியும் பின்னாடியும் ஒரே நேரத்துல ஒரு மின்னல் தாக்குதுன்னு வைங்க, ட்ரைன்ல இருக்கறவங்களுக்கு  முன்னாடி தாக்கினது முதல்ல தாக்கினதாவும் பின்னாடிதாக்கினது சற்று நேரம் கழிச்சு தாக்கினதாவும் தோணுமாம். வெளில இருந்து பாக்குறவங்களுக்கு ரெண்டுமே ஒரே நேரத்துல தாக்கினதா தோணுமாம். இது ரெண்டுல எது உண்மைன்னு கேட்டா, ஐன்ஸ்டைன் ரெண்டுமே உண்மைன்னு சொல்றாரு. ஏன்னா பூமி கூட சுத்திக்கிட்டுதான் இருக்கு, அப்போ பூமிக்கு வெளில இருந்து பாக்குற ஒருவருக்கு அது வேற மாதிரி தெரியும், ட்ரைனுக்கு எதிர்த்திசையில ஓடுறவருக்கு அது வேற மாதிரி தெரியும், பாக்குறவங்க பார்வைய பொறுத்து சம்பவம் வேறுபாடும். இதுதான் சரியானதுன்னு ஒன்னு இல்ல, அவரவர் பார்வை கோணத்த பொறுத்துதான் இருக்கு அப்புடிங்குரதுதான் அந்த "கான்செப்ட் அப் சைமல்டைனிட்டி". அட இதைத்தானே நம்ம மகாபாரதமும் சொல்லுது. "கர்ணன் நகர்வலம் போனப்போ பாக்குறவனெல்லாம் நல்லவனா தெரிஞ்சான், துர்யோதனனுக்கு எல்லாருமே கெட்டவனா தெரிஞ்சான்" அப்புடின்னு. மகாபாரத காலத்துலேயே இந்தியர்கள் சார்புத்தத்துவம் தெரிஞ்ச்சு வச்சிருந்திருக்காங்கப்பா.

இன்னிக்கி எல்லாமே ரொம்பவே சீரியஸ் மொக்கையா இருக்கேன்னு கடுப்பாகிடாதீங்க, இருக்கவே இருக்காரு நம்ம ஜீவீ பிரகாஷ். முப்பொழுதும் உன் கற்பனை படத்துல இருக்கற "ஒரு முறை" பாடல் கேட்டுட்டீங்களா? இல்லன்னா கேட்டுக்கங்கோ இதோ.. உங்களுக்காக முதல் முறையா.. Akkon குரலில்.


தமிழில் கேட்க விரும்புபவர்களுக்கு : முப்பொழுதும் உன் கற்பனை : ஒரு முறை

மின்னல்கள்  கூத்தாடும் மழைக்காலம் பாடலுக்கு அப்புறம் மறுபடியும் akkon தயவில் இன்னொரு பாட்டு. இதுக்கும் மேல இந்த ஆள நம்புறதுக்கு நாம என்ன மாங்காயா இல்ல மடையனா. ஆமா நமக்கு ஒரு டவுட்டு, இதுக்கு காபி பேஸ்ட் பாட்டுன்னு சொல்லலாமா?


டிஸ்கி: ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றிய தகவல் கடைசி நேர இணைப்பு, அவரது சேவைகள் பற்றி பின்னர் ஒரு பதிவில் பார்போம். 


டிஸ்கி: வேல கொஞ்சம் ஓவரானா இப்புடியும் உங்க உசிர எடுக்க தோணும்.. அடுத்த வாரம் ஜாலியான மொக்கைகளோட சந்திப்போம். 






         

Monday, October 3, 2011

தமிழ் சினிமாவின் தடைகளும் சந்தானத்தின் பங்களிப்பும்


வர்றேண்டா, இனிமேதான் ஆட்டமே கள கட்டபோகுது..
சினிமா என்பது நம் மக்களிடையே ஊறிப்போன ஒன்று. அந்தவகையில் இந்த சினிமா கலாசாரம் ஆரோக்கியமானதாக உள்ளதா என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. தற்போதுள்ள சினிமா கலாசாரம் கண்டிப்பாக ஆரோக்கியமானதல்ல என்கிற பதிலையே வருத்தத்துடன் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தமிழ் சினிமா பெரும்பாலும் பொழுது போக்கு வட்டத்துக்குள்ளேயே அடைக்கப்படுகிறது. மாஸ் என்டேர்டைனர்ஸ் என்பதே தமிழ் சினிமாவின் உச்சகட்டம். இது நாயகன் விம்பத்தின்பால் கட்டமைக்கப்பட்டது. ஒரு கதாநாயகனை சுற்றி பின்னப்படும் கதை, அவனது வீர தீர சாகசங்களை சொல்லி முடிக்கும், அல்லது அவனது வாழ்க்கைப் போராட்டத்தை சொல்லி முடிக்கும். தமிழ் சினிமாவின் முதல் எதிரி நம் முன்னோர்கள் கட்டமைத்த இந்த கதாநாயகன் விம்பமும் அதை அரசியலுக்கான அடித்தளமாக எண்ணி நம் கதாநாயகர்கள் செய்த தகிடு தத்தம்களுமே.

நமது தமிழ் சினிமாவின் கதைக் களத்தை  உற்று நோக்கினால் அது ஒரு குறுகிய வட்டத்துக்கு உள்ளேயே அடைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கதாநாயகன் கதாநாயகி. இவர்களுக்கிடையே உள்ள காதல், அல்லது குடும்ப செண்டிமெண்ட், அல்லது ஒரு வில்லனை கதாநாயகன் எதிர்ப்பது. தமிழ் சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை உள்ள வழிமுறை இதுவே. நாயகன், நாயகி, வில்லன் தவிர வரும் அனைத்து பாத்திரங்களும் பலவீனமானதாகவே இருக்கும். இது கமெர்ஷியல் திரைப்படங்களில் இருந்து யதார்த்த திரைப்படங்கள் என அழைக்கப்படும் திரைப்படங்கள் வரை காணப்படும். கதாநாயகன் அதி புத்திசாலியாக இருப்பார், அல்லது மகா நல்லவராக இருப்பார், அல்லது உருப்படாத கழுதையாக இருப்பார், அதில் எந்த குறையும் இல்லை, ஆயினும் அவர் சார்ந்த அனைத்து கதாபாத்திரங்களும் மழுங்கடிக்கப்பட்டதாகவே இருக்கும். இதுதான் தமிழ் சினிமாவின் முதல் வரையறை.

இந்த எளவு எங்க போய் முடியப்போகுதோ.. நாமதான் ஏதாச்சும் பண்ணனும் போலிருக்கு.
காலா காலமாக திரையில் தோன்றும் கதாநாயகர்கள் நம்மை காக்க வந்த கடவுளாகவே சித்தரிக்கப் பட்டு வருகிறார்கள். சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் ஒருவர் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வருக்கான தகுதியை கொண்டிருக்கவேண்டும் எனவே ரசிகனும் எதிர்பார்க்கிறான், அதனையே நாயகர்களும் உருவாக்க நினைக்கிறார்கள். இதனால் தான் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தாலும் நம் நாயகர்கள் கருத்துச்சொல்ல வேண்டும், காவிரி நீர் பிரச்சினையாக இருந்தாலும் இவர்கள் தீர்த்து வைக்க வேண்டும், ஈழப் பிரச்சினையாக இருந்தாலும் இவர்கள் தலையிட வேண்டும். நம் நாயகர்களோ ரசிகர் மன்றங்களாக ஆரம்பித்து பின்னாளில் அதனை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி, அரசியல் வாதிகளாகும் நோக்கத்துடனேயே தந்திரமாக செயற்படுகின்றனர், அல்லது அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என உள்ளே வெளியே ஆட்டம் ஆடுவார்கள். ஒரு சினிமாவுக்கான பட்ஜெட் தொழில்நுட்ப குழு, கதை அனைத்தும் நாயக நடிகரையும், அவரது இமேஜ், அவருக்கு உள்ள வெறித்தனமான ரசிகர்கள்  அதனால் உள்ள வியாபார மட்டம் போன்றவற்றை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. 

இந்த வட்டத்துக்குள் கதை சொல்ல ஆரம்பிக்கும் இயக்குனருக்கு நிச்சயமாக படைப்பு சுதந்திரம் இல்லை. யதார்த்தமாக படம் எடுக்க முடியாது. இந்த எழுதப்படாத விதியை மீற பலபேருக்கு துணிவில்லை, சில இயக்குனர்கள் இதில் சற்று மாறுபட்டு "கதாநாயகன்" அல்ல "கதையின் நாயகன்" என்கிற விம்பத்தை பதிக்கிறார்கள். இங்கும் ஒருவர், அவரை சுற்றிய கதையே திரைப்படம் ஆகிறது. படம் பார்கச்செல்லும் ரசிகனும், படத்தில் ஒரு நாயகனையே காண்கிறான். நாயகனை உயர்த்துவதற்காக அவன் சார்ந்த ஏனைய கதாபாத்திரங்கள் மழுங்கடிக்கப்படுகிறது. உதாரணமாக நாயகனின் நண்பர்கள். பெரும்பாலும் இவர்கள் காமெடி செய்யவே பயன்படுவார்கள். சில வேளைகளில் கதையின் ஓட்டத்துக்கு உதவுகிறேன் பேர்வழி என நம்மை வறுத்து எடுப்பார்கள். இந்த கதாபாத்திரங்கள் நாயகனை மிகைத்திடாதவண்ணம் மிகக் கவனமாக கையாளப்படும். பிற கதாபாத்திரங்கள் நாயகனை மிகைக்க முடியும் என்கிற நிலை தோன்றும் வரை படைப்பு சினிமா என்பது நமக்கு எட்டாக்கனி. அதுவரை இந்த நடிகர்கள் கொடுமையை நாம் அனுபவித்தே ஆகவேண்டும். இதற்கு தீர்வு இருக்கிறதா? ஆம், இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மன்மதன் என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானது அந்த தீர்வு. எங்கள் தலைவர், நகைச்சுவை அரசர் சந்தானம் தான் அந்த தீர்வு.

என்னா அக்கப்போரு பண்ணினீங்க, இனி வேடிக்க மட்டும் பாருங்க..
என்ன நல்லாதானே போய்கிட்டு இருந்திச்சு ஏன் இப்ப தீடீர்னு மொக்க ஸ்டார்ட் பண்ணிட்டங்கன்னு பாக்கிறீங்களா, இது மொக்க இல்லீங்க, நிஜம். வழக்கமாக நாயகனிடம் அடங்கிப்போகும் மக்கு நண்பன் போலல்லாமல், நாயகனை சீண்டும், அறிவுரை வழங்கும், உதவிசெய்யும், நாயகனை வழிநடத்தும் நண்பராகவும் ஒரு காமெடி நடிகன் இருந்து ஜெயிக்க முடியும் என்பதை சாதித்துக்க் காட்டியவர். பாஸ், sms, சிறுத்தை, தெய்வத்திருமகள் போன்ற படங்கள் இதற்க்கு எடுத்துக்காட்டு. இயல்பான நட்பு வட்டத்தை திரையில் தோற்றுவிக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டியவர். எதர்க்கெடுத்தாலும் நாயகனுக்கு ஜால்ரா தட்டும் நண்பராக அல்லாமல், நாயகனது குறை நிறைகளை உணர்த்தக்கூடிய, அந்த கதாபாத்திரத்துக்கு முழுமை சேர்க்கக்கூடிய (காம்ப்ளிமென்ட்) நிஜ வாழ்க்கை நட்பை திரையில் கொண்டுவருவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறார். மிகை நடிப்பு, அங்க சேஷ்டைகள், உதைப்பது அல்லது உதை வாங்குவது, கருத்து சொல்லி வறுத்தெடுப்பது அல்லாமல், இயல்பாக, நிஜ வாழ்கையில் நடக்கக்கூடிய விடயங்களை திரையில் செய்து கைதட்டல் வாங்கியவர். நாயகனை மிகைக்கும் அல்லது நாயகனுக்கு சமனான கதா பாத்திரங்களையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என எடுத்துக்காட்டியிருக்கிறார். நாயகனுக்கு இணையான புட்டேஜ் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் வழங்கலாம் என்பதை தெளிவு படுத்தியிருக்கிறார். 

தலைவர் பல இயக்குனர்களுக்கு தைரியம் அளித்திருக்கிறார், கதாநாயகனை வைத்து மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களை வைத்து கதை பின்னும் சுதந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பல பெரிய நடிகர்களின் படங்களே சந்தானத்தை நம்பித்தான் இருக்கு, எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத ஆன்லைன் ரசிகர் வட்டம், சில சமயங்களில் சில கதாநாயகர்களை மிஞ்சும் ரசிகர் வட்டம் தலைவருக்கு  இருக்கு. இது தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரும் வெற்றி. நிஜமான சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரும் வெற்றி. நாங்க சந்தானம் ரசிகர்களா இருக்கிறதும், தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.


டிஸ்கி 00: இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

டிஸ்கி 01: தமிழ் சினிமாவுக்கு தலைவரின் முக்கியத்துவத்தை இந்த முக்கியமான பதிவில் எடுத்துக்கூறியிருக்கிறோம். பதிவுலக வராற்றிலேயே ஒரு முக்கியமான பதிவு, அட எங்களுக்கு முக்கியமான பதிவு சார். அதாவது எங்களது ஐம்பதாவது பதிவு.


சந்தானம் 50 அல்ல,  பதிவு எண் 50.