Thursday, November 14, 2013

Krrish 3 சூப்பர் ஹீரோ ஒரு அலசல்

வார்னிங்: ஸ்பாய்லர்ஸ் உண்டு (படம் வந்து எம்புட்டு நாளாச்சி, இதுக்கப்புறம் ஸ்பாய்லர்ஸ் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன)

வலது பக்கமிருந்து மூணாவதா ஒக்காந்து இருக்கதுதான் நம்ம ஹன்சிகா ஆண்டி.

Koi mil gaya (2003), க்ரிஷ் (2006) வரிசையில் ராகேஷ் ரோஷன், ஹ்ரிதிக் ரோஷன் கூட்டணியின் மூன்றாவது சூப்பர் ஹீரோ படம். Marvel, DC  காமிக்ஸ்களின் சூப்பர் ஹீரோக்களுக்கு இணையான இந்திய சூப்பர் ஹீரோ நம்ம இந்த க்ரிஷ். முதல் படத்தில் ஒரு வேற்றுக் கிரக வாசிக்கு உதவி செய்து அதன் மூலமா சில பல அதீத சக்திகள் ரோஹித் மெஹ்ரா (ஹ்ரித்திக் ரோஷன்) என்னும் மூளை வளர்ச்சி குறைந்த இளைஞனுக்கு கிடைக்கிறது. இது அவனுடன் நின்று விடாது அவன் வழித்தோன்றல்களுக்கும் கடத்தப் படுகிறது. இரண்டாவது படத்தில் ரோஹித் மெஹ்ராவின் மகன் கிருஷ்ணா அதீத உடல் பலம், வேகம் போன்ற ஆற்றல்களுடன் இருக்கிறார். ஒரு தீவிபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற க்ரிஷ் அவதாரம் எடுக்கும் கிருஷ்ணா (கிருஷ்ணாவின் சுருக்கம்தான் இந்த க்ரிஷ்) அதன் பின்னர் தனது தந்தையை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார். இந்த இரண்டு படங்கள் அவை வெளியான காலங்களில் சக்கை போடு போட்ட படங்கள். இப்போ 2013, அதிகப்படியான சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவூட் திரையை துளைக்கும் போது, அவற்றுக்கு இணையாக இந்தியாவில் இருந்து ஒரு படமாக க்ரிஷ்  3 களம் இறங்கியிருக்கிறது. இனிமேல் இந்த படம் பற்றிப் பார்ப்போம்.


நம்ம ஹீரோ கிருஷ் இப்போ இந்தியாவுல மக்களால் கொண்டாடப் படும் ஒரு சூப்பர் ஹீரோ. அங்கங்கே சின்னதா நடக்கும் கொள்ளை, தீவிபத்து, விமான விபத்து என எது எங்க நடந்தாலும் அங்க ஆஜராகி மக்களை காப்பத்தறாரு. இது முழு நேர வேலை. பகுதி நேரமா வேறு நிறைய வேல செய்யறாரு, எங்கயுமே நிரந்தரமா தங்கறது கிடையாது, காரணம் வேலையில ஒழுங்கா கவனம் செலுத்தறது கெடயாது (spiderman - your friendly neighbourhood). திடீரென நம்ம 7 ஆம் அறிவு ஸ்டைல்ல உலகத்துல பல இடங்கள்ள மருந்தே கண்டுபிடிக்க முடியாத ஒரு "கொடிய நோய்" பரவுது. இதற்க்கு இடையில நம்ம Mystique அம்மணி தகவலளிக்க வந்த ஒரு சயின்டிஸ்ட போட்டு தள்ளிடறாங்க. அப்படியே கட் பண்ணினா Professor X  ஒரு வில்லன் வடிவத்துல வார்ராரு, இவரு கண்டிப்பா ஒரு telepath தான்னு நினைச்சா இல்ல, இவரு Jean மாதிரி telekinetic, அப்பப்போ Magneto மாதிரி அட்டகாசம் பண்றாரு, அப்புறம்தான் நமக்கு தெரியுது இவருதான் பிரதர் ஹூட் ஆப் ஈவில் மியுடன்ட் தலைவர்ன்னு. அவரு கூட்டத்துல நமக்கு பரிச்சயமான Toad உட்பட பல காரெக்டர்ஸ் இருக்கு. அப்புறம்தான் நம்ம தலைவர் அவரோட சக்தி எங்கிருந்து வந்துச்சி, அவரோட உடலை எப்படி முழுமையா செயல்பட வக்கிறது போன்ற உன்னதமான கேள்விகளுக்கு விடை தேட ஒரு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கறதாவும், அதுக்கு பணம் புரட்டத்தான் இந்த 7 ஆம் அறிவு வேலை செய்யரதாவும் தெரியவருது. அப்புறம் இவுங்க மும்பயில நோயைப் பரப்ப (இதற்க்கு கடவுள் நம்பிக்கையை அழிச்சுட்டு தானே கடவுள் ஆகிடனும்ன்னும் ஒரு வியாக்கியானம் வேற), நம்ம க்ரிஷ் மற்றும் ரோஹித் ஒரு ஆண்டிடோட் கண்டுபிடிச்சு அமேசிங் ஸ்பைடர்மேன் ஸ்டைல்ல ஒரு Dispersion  Device  மூலமா மொத்த மும்பையையும் ஓவர் நைட்ல காப்பாத்திடராங்க (இங்க இவருக்கு சிலை வைப்பு வைபவம்  வேற). அப்புறமா, நம்ம DNAல இருந்து மட்டும்தானே நம்ம வைரசுக்கு மருந்து வரலாம், இது எப்படி வந்திச்சுன்னு வில்லன் ஆராய அப்புறம் என்னவாச்சின்னு avengers, மேன் ஆப் ஸ்டீல் பாணியில விடை சொல்லி முடிச்சிருக்காங்க படத்த. 


ஹாலிவூட் பசங்களுக்கு சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கறதுல ஒரு லாபம் என்னன்னா அவங்க கிட்ட நூறு வருஷத்துக்கு மேல பழமையான பல சூப்பர் ஹீரோ - சூப்பர் வில்லன்கள் இருக்காங்க, இன்னாரு இன்னாரு, இவருக்கு இன்ன இன்ன பவர் இருக்கு, அது இப்படித்தான் வந்திச்சுன்னு யாரும் ஒக்காந்து யோசிக்கவும் தேவையில்ல, எப்படிடா இவனால இதெல்லாம் முடியும்ன்னு ரசிகர்கள் கேள்வி கேக்கப் போறதுமில்ல. மேக் அப்,  காஸ்ட்டியூம்லையே இவரு இன்னருதான்னு சொல்லிடுவாங்க. நம்ம இந்திய சினிமாவுல அப்படி கெடயாது. நமக்கு ஒரே சூப்பர் ஹீரோ தலைவர் ரஜினிகாந்த் தான். இல்லையின்னா புராணங்கள புரட்டனும். அதுதவிர என்னன்னாலும் ஆரம்பம் இருந்து முடிவு வரை பார்வையாளனுக்கு விஞ்ஞானபூர்வமா விளக்கனும். கடந்த ரெண்டு படங்கள்லயும் சூப்பர் ஹீரோவ உருவாக்கற பணியில வெற்றி பெற்ற இந்த கூட்டணி, இந்த முறை சூப்பர் வில்லன்கள உருவாக்குறதுல நிச்சயம் தோல்விதான். ஹாலிவூட்ல ஸ்பைடர் மேன்னா  இவுங்க இவுங்க வில்லன், அயன்மேன்ன்னா இவரு இவரு ன்னு எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் வில்லன் இருக்கு, இங்க ராமருக்கு ராவணன் தவிர, க்ரிஷுக்கு எல்லாம் வில்லன் கெடயாதுங்கறது, நமக்கு சூப்பர் ஹீரோ படம் பண்ணுறதுல எப்பவுமே இருக்கற ஒரு சவால் தான். ஆனா அந்த சவால ஒரு Ra.One - G.One  ரேஞ்சுலயாவது கையாண்டு இருக்கலாம்.  அத விட்டுட்டு படம் முழுவதுமே ஒரு மார்வெல் யூனிவேர்ஸ்ல நொழஞ்சிட்ட பீலிங் வர்ரத தவிர்த்திருக்கலாம். அப்புறம் அடுத்தவனுக்கு உதவி செய்ய நினைக்கற மனம்தான் க்ரிஷ்ன்னு "we are robin hood" ஸ்டைல்ல வலிந்து திணிச்ச தீம் கொஞ்சம் நெருடலா இருக்கு. 


பாசிடிவ் சைடுன்னா, VFX எக்ஸ்ட்ரா ஆர்டினரியா இருக்கு. ஹ்ரித்திக் ரோஷன் எப்பவும் போலவே படத்துக்காக ரொம்பவே உழைச்சிருக்காரு, க்ரிஷ்ன்னா இந்தாளுதான்யான்னு கன கச்சிதமா பொருந்திப் போறாரு. ரொம்ப நாளைக்கு அப்புறம் கங்கனா ரேனவாத்,  அப்புறம் தொட்டுக்க பிரியங்கா சோப்பரா. தொழில்நுட்ப ரீதியா படம் பட்டய கெளப்புது. அதே கவனத்த கதையிலும் செலுத்தியிருந்தா படம் சூப்பரா இருந்திருக்கும். நீங்க ஒரு மார்வல் பேனா இருந்தீங்கன்னா இந்த படம் உங்களுக்கு ஒரு வேலாயுதம் மாதிரி இருக்கும், படத்துல புதுசுன்னு சொல்லிக்க எதுவுமே இல்ல, எல்லாமே இதற்க்கு முன்னாடி நீங்க எங்கயாவது பார்த்த ஒன்னாதான் இருக்கும். இல்ல, மார்வல் யுனிவேர்சுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையின்னு வச்சுக்கங்க, அப்பவும் இந்த படம் உங்களுக்கு ஒரு வேலாயுதம் மாதிரிதான்  இருக்கும். இந்திய சினிமாவுக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத கதைக் களம், மியுடன்ட்களின் விதவிதமான சக்தி, கலர் புல்லான ரெண்டு ஹீரோயின், பவர் புல்லான ஹீரோ, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேக்கிங், லார்ஜெர் தான் லைப் ஆக்ஷன் சீக்குவன்ஸ்ன்னு செம இன்டரஸ்டிங்கான படம்.


டிஸ்கி 1: தீபாவளிக்கு மறுநாளே படம் பார்த்திருந்தாலும், படத்துக்கு விமர்சனம் எழுதற ஐடியா கொஞ்சமும் இருக்கல. என்னக்கி இந்த படம் இந்தியாவுல மட்டுமே இருநூறு கோடி வசூல தாண்டி, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தோட சாதனையை முறியடிக்கபோகுதுன்னு தெரிஞ்சிச்சோ, அன்னைக்கே இந்த படத்துக்கு விமர்சனம் எழுதணும்ன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். ஏன்னா வரலாறுல நம்ம பெயரும் வரனுமே.

டிஸ்கி 2: நீங்க ஒரு சூப்பர் ஹீரோ பட விசிறியா இருந்தா தயவு செய்து இந்த படத்த தவிர்த்துட்டு Thor: The Dark World பாருங்க. நம்ம பசங்க என்னதான் பண்ணியிருக்காங்க பார்ப்போமேன்னு க்ரிஷ் 3 பார்த்திங்கன்னா அதனால வார எந்த மன உளைச்சலுக்கும் கம்பெனி பொறுப்பேற்காது. சும்மா தமாசுக்கு ஒரு படம் பார்க்கணும்னா தாராளமா பாருங்க, தீபாவளி தமிழ் ரிலீசுக்கு இது எவ்வளவோ தேவல.  

டிஸ்கி 3: இந்தப் படம் ஒரு குடும்பப்படமான்னு சந்தேகமே வேணாம். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம், தயாரிப்பு அப்பா; ஹீரோ பையன், இசை சித்தப்பு, இதுக்கும் மேல ஒரு குடும்பப் படம் விசுவால கூட எடுக்க முடியாது. (டி ஆர் தவிர) 

Saturday, November 2, 2013

ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா -இந்த தீபாவளிக்கும் இரட்டை விமர்சனம்.

தீபாவளியும் அதுவுமா தமிழ் படம் பார்க்கலைனா தெய்வ குத்தமாகிடுமேங்கற ஒரே காரணுத்துக்காக, பல தடைகளையும் கடந்து, ராசு மாமா பேச்சையும் மீறி, வழக்கம் போலவே மொக்க வாங்கிட்டு, நான் பெற்ற துன்பம் பெறுக  இவ்வையம்ங்கர தாரக மந்திரத்துக்கமைய உங்க உசுரையும் எடுக்கலாம்ன்னு ரொம்ப நாளைக்கு அப்புறமா ப்ளாக்கர் பக்கம் வந்திருக்கேன். இனிமே நம்ம விமர்சனத்த பார்க்கலாம்.

ஆரம்பம். 

ஒவ்வொருத்தர் வாழ்கையிலும் ஒரே ஒரு தடவைதான் தல தீபாவளி வரும், ஆனா தல ரசிகர்களுக்கு மட்டும்தான் ஒன்னுக்கு அதிகமா தல தீபாவளி கொண்டாடுற பாக்கியம் கெடைக்கும். இது அப்படி ஒரு தல தீபாவளி. அஜித்-விஷ்ணு-நயன் கூட்டணி, கூடவே ஆர்யா-தாப்சி-கிஷோர்-அதுல் குல்கர்னி-ராணா டகுபதின்னு ஏகப்பட்ட கூட்டம். மாஸ்க்கு அஜித்தும், காமெடிக்கு ஆர்யாவும், கண்ணுக்கு நயனும், மொக்கைக்கு தாப்சியும்ன்னு பார்ட் பார்டா பிரிச்சு கத எழுதியிருப்பாரு விஷ்ணுன்னு நினைக்கறேன். 

இப்பெல்லாம் தல கால் ஷீட் கெடச்சதும் மொத வேலையா, தல கையில ஒரு பைக், கார், அப்புறம் ஏதாவது இன்னுமொரு வண்டிய குடுத்து வேகமா ஓட்டவச்சு ஷூட்  பண்ணிக்கறாங்க, அப்புறம் அவர கொஞ்சம் தனியா நடக்கவச்சு, படத்துல இருக்கற மத்த ஒவ்வொரு நடிகர் கூடவும் தனித்தனியாகவும் கூட்டமாவும் சேர்த்து நடக்கவச்சி சூட் பண்ணிக்கறாங்க, அப்புறம் படத்துல வர்ர வில்லன் நடிகர், தலையோட தலையில துப்பாக்கி வச்சிருக்கறப்போ, தல ஒரு டயாலாக் பேசுற மாதிரி ஷூட் பண்ணிக்கறாங்க, கடைசியில அந்த ஒவ்வொரு சீனையும் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டு கொஞ்சம் காரம், ஸ்வீட் ஆங்காங்கே போட்டு எடிட் பண்ணி ஒரு படம்ன்னு ரிலீஸ் பண்ணிடறாங்க, இங்கயும் அதுவே நடந்திருக்கு. இருந்தாலும் ஒரு ஆர்டர்ல கரெக்டா அந்த சீன்ஸ் வர்ரதனாலயும், அங்காங்கே கதைன்னு ஒன்னு தல காட்டரதனாலயும், ஆர்யாவோட காமெடி, தலையோட எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் இருக்கறதனாலயும், அங்காங்கே எட்டிப் பார்க்கும் சில நிஜ சம்பவங்களும், அதை படத்துல கோர்திருக்கற விதமும் சேர்த்து, ஒருவேள படம் நல்லாத்தான் இருக்கோன்னு நமக்கே ஒரு டவுட்டு வாறமாதிரி ஒரு படம்.

படத்துல குறைன்னு சொல்றதுக்குன்னா ரெண்டே விஷயம், ஒன்னு நயன் கொஞ்சம் வயசா தெரியறாங்க, நயனுக்கு அழகே சுடிதார்தான், அது இங்க மிஸ்ஸிங். ரெண்டாவது அத்துல் குல்கர்னி போன்ற ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி நடிகரையும், கிருஷ்ணா போன்ற ஒரு ரொம்ப கேப்பபில் நடிகரையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம வேஸ்ட் பண்ணியிருக்கறது. இன்னும் ஒன்னு சொல்லனும்ன்னா தமிழ் சினிமா VFX ஐ கொஞ்சம் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேண்டிய நேரம் வந்திரிச்சு, குண்டு வெடிக்கற காட்ச்சிகள் VFX சுத்த சொதப்பல். மற்றும்படி இது கண்டிப்பாக மொக்கை இல்லை. கொடுத்த காசோ, செலவளிச்ச நேரமோ வேஸ்ட்டுன்னு சொல்லற படமும் இல்லை.  மிஸ் பண்ணிடாம கண்டிப்பா பாருங்கன்னு சொல்லற படமும் இல்லை. இந்த தீபாவளிக்கு தமிழ் படம் பார்க்கணும்னா ஆரம்பம் பாருங்க. அம்புட்டுத்தான் சொல்லலாம்.


ஆல் இன் ஆல்  அழகுராஜா

எல்லா பண்டிகையும் நமக்கு கொண்டாட்டமாவே அமைஞ்சுடுதா என்ன, எப்போவாவது குடும்பத்துல ஒரு பெருசு மண்டயப் போட்டோ, இல்ல நமக்கு ஒடம்பு சரியில்லாம போயோ, பண்டிக பனாலாகிடுறதில்லையா, அந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் தான் இந்த படம். இது நிஜமாவே ராஜேஷ் படமா, இல்ல ராஜேஷ்கிட்ட சரக்கு தீர்ந்திடிச்சான்னு என்ன ரொம்பவே யோசிக்க வச்ச படம் இது. ராஜேஷ் படத்துல இருக்கற எல்லாமே இருக்கு, ஆனாலும் இது ராஜேஷ் படம் மாதிரி இல்லாம இருக்கு, அது ஏன்னு எனக்கு கடைசிவர புரியவே இல்ல. படத்துல இருக்கற ஒவ்வொரு சீனும் நமக்கு போரடிச்சு போதை ஏறி அது தெளிஞ்சதுக்கு அப்புறமும் முடியாம ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே போறதுதான் இந்த படத்தோட முக்கிய குறைன்னு நினைக்கறேன். நெறயவே ஸ்டார் காஸ்ட் இருக்கு படத்துல, எதுவுமே வேர்த்தியா இல்ல, தலைவர் கூட நெறைய இடங்கள்ள நம்மள கவுத்துடுராறு. படம் பார்கறவங்க பாதி நேரத்துக்கு மேல தேட்டர் ஸ்க்ரீன பார்க்காம அவுங்க மொபைல் ஸ்க்ரீனையே பார்த்துக்கிட்டு இருக்காங்க, படத்துல வார ஒவ்வொரு சீனுக்கும், தேட்டர் ஆடியன்ஸ்ல யாராச்சு ஒருத்தர் போதும்யான்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.

அப்போ இந்த படத்துல பிளாஸ் பாயிண்டே இல்லையான்னு கேக்காதீங்க, இருக்கு. அதுல முக்கியமா ரெண்டு பாயிண்ட மட்டும் உங்களுக்கு சொல்றேன். ஒன்னு இந்தப் படத்த பார்க்கற ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட பள்ளி நாட்கள் கண்டிப்பா ஞாபகம் வரும், அதாவது "எப்படா கிளாஸ் முடியும், எப்படா வீட்டுக்கு போவோம்" ன்னு நாம தவிச்ச தவிப்பு இருக்கே, படம் ஓடுற மூணு மணிநேரமும் உங்க கண்ணு முன்னாடியே நிக்கும். ரெண்டாவது, திரை விமர்சனம்ங்கற  பேர்ல படத்தோட கதைய விலாவாரியா எழுதி ஒப்பேத்துற விமர்சகர்களுக்கு ராஜேஷ் சரியான சவால் விடுத்திருக்காரு, முடிஞ்சா படத்துல என்ன நடத்துச்சுன்னு சொல்லுங்கடா பார்க்கலாம்ன்னு நம்ம விமர்சகர்கள பார்த்து கேக்கற கேள்வி இருக்கே, சார் இந்த திமிரு, உங்கள எங்கயோ கொண்டு போகப்போகுது.

ஆன் ஏ சீரியஸ் நாட், படத்தோட ஒன் லைனர் என்னன்னா, அப்பன் செஞ்ச தப்புனால பிரிஞ்சு போன ரெண்டு குடும்பத்த மகன் எப்படி சேர்த்து வைச்சி அப்பன் செஞ்ச தப்ப திருத்திக்கறாருங்கறதுதான். இந்த ஒன் லைனருக்கு வழக்கம் போலவே செம இண்டரஸ்டிங்கான காரக்டர்ஸ் புடிச்ச ராஜேஷ், வழக்கம் போல இண்டரஸ்டிங்கான ஸ்க்ரீன் ப்ளே எழுதறத்துக்கு பதிலா, வெறும் மொக்க சீன்கள் மட்டுமே எழுதி அத தொகுப்பாக்கி ஒரு படமா குடுக்க ட்ரை பண்ணியிருக்காரு. இந்த பருப்பு உள்நாட்டுல மட்டுமில்ல, வெளிநாட்டுல கூட வேகாது பாஸ், சீக்கிரமே முழிச்சுக்கோங்க, இல்லையின்னா S.J சூர்யா நிலைமைதான் உங்களுக்கும். சொல்றத சொல்லிட்டோம், த சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.

Sunday, August 11, 2013

Chennai Express : ஜாலி ரைடு


ஒரு ஜாலியான சினிமாவை உருவாக்க கதை அவசியமில்லை என்பதை மறுபடியும் நிரூபிக்கும் ஒரு படம் சென்னை எக்ஸ்பிரஸ். மீண்டும் ராகுலாக ஷாரூக் கான். தென்னிந்தியாவை கதைக்களமாக கொண்டு பெரும்பாலான தமிழ் நடிகர்களை வைத்து உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு வழக்கமான ரோஹித் ஷெட்டி இஷ்டைல் படம். முதல் நாள் கலக்சன் 33 கோடியாம். இனிமேல் படம் பற்றிய சிறு விமர்சனம் நம்ம பங்குக்கு.

படத்தின் கதை என்பதற்கு புதுசா ஒண்ணுமே இல்ல. 1980ல இருந்து நமக்கு தெரிஞ்ச அதே கில்லி/ரன்/பையா கதைதான் படம். திரைக்கதை சுவாரஷ்யமாக இருப்பதுதான் படத்தின் பலம். வழக்கமா கிளாஸ் கமெடியில பொளந்து கட்டும் ஷாரூக் இந்த படத்துல மாஸ் கமெடியில தூள் கெளப்புறாரு. கூடவே தீபிகா படுகோனே, கண்ணுக்கு இதமான இயற்க்கை காட்ச்சிகள், ஒளிப்பதிவு, மாஸ் மசாலா இசை அதுக்கு ஏற்ற நடனம் கொஞ்சூண்டு சண்டை காட்சி என சாதாரண சினிமா ரசிகனை முழுசா திருப்திப் படுத்தக் கூடிய படம். ஒரு சாதாரண 40 வயது பிரம்மச்சாரி, தானுண்டு தன் தாத்தா உண்டுன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கறவரு ஒரு ஆந்திரா அக்ஷன் மசாலா படத்துக்கு நடுவில மாட்டிக்கிட்டா எப்படியிருக்கும்கற அனுபவம்தான் படம். படத்தில் மருந்துக்கும் ரியலிசமோ லாஜிக்கோ கெடயாது. இந்த படத்துல நாம அதை எதிர்பார்க்கப் போறதும் கெடயாது, சோ நோ ப்ராப்ளம். 


படத்தில் ஷாரூக்கின் பெயர் ராகுல் என்பதிலேயே படத்தின் டோன் தெரிந்துவிடுகிறது (ஷாரூக் நடித்ததில் 80% கதாபாத்திரத்தின் பெயர் ராகுல் அல்லது ராஜ்). ஷாரூக் ரயில் ஏறும் வரை ஏனோ தானோ என போய்க்கொண்டிருக்கும் படம் தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே படத்தின் புகழ் பெற்ற ரயில் காட்ச்சியை ஸ்பூப் செய்வதுடன் கழை கட்ட ஆரம்பிக்கறது. அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு காட்ச்சிகளும் காமெடி விருந்து. போகிற போக்கில் மை நேம் இஸ் கான், மெயின் ஹூன் னா, தில்  சே போன்ற ஷாருக் படங்கள் 3 இடியட்ஸ் மற்றுமல்லாது முத்து, கில்லி, அலெக்ஸ் பாண்டியன் என நிறையவே படங்களில் இருந்து பல பிரபலமான காட்ச்சிகளை உல்டா பண்ணியும் நேரடியாக பயன்படுத்தியும் திரை கதையின் சுவாரஷ்யத்தை கூட்டி இருக்கிறார்கள். பிரபலமான பல இந்திப் பாடல்களையும் விட்டு வைக்கவில்லை. இந்திய சினிமாவுக்கே உரித்தான மாஸ் மசாலா அக்ஷன் படங்களை கொண்டாடுவதுதான் இந்தப் படத்தின் முழு முக்கிய நோக்கம். அதில் பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதற்க்கு ஏற்றாற்போல் கோட் பாதர் ஒப் இந்தியன் மசாலா மூவி, நம்ம தலைவருக்கு கடைசியில் ஒரு ட்ற்றிபியூட் படத்துடன் கன கச்சிதமாக பொருந்திப் போகிறது. மொத்தத்தில் இந்திய சினிமா பிரியர்களுக்கான படம். 

ஷாரூக் கான் பற்றி  சொல்லத் தேவையில்லை. மனிதருக்கென்றே உருவாக்கப்பட்ட பாத்திரம், தூக்கி சாப்பிட்டு போய் விடுகிறார். 40 வயசுன்னு சொல்லும் போதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது, ஷாரூக்கா அல்லது பாத்திர படைப்பான்னு தெரியல, 30 வயசுக்கு மேல சொல்ல முடியல. இடுப்பு வலி, தோள்பட்டை முறிவு எல்லாத்தும் பிறகு தீபிக்காவ தூக்கிட்டு 300 படி  ஏறுவதற்கும் (குறைந்தது 50 படியாவது நிஜமாக ஏறி இருப்பார்), அக்ஷன் பண்ணுவதற்கும் ஒரு தனி தைரியம் வேண்டும். தீபிகா தமிழ் பேசும்போது சற்று சிரத்தை எடுத்திருப்பது தெரிகிறது. 80% உச்சரிப்பு ஓகே. பார்க்கவும் அழகாக இருக்கிறார், ஓம் ஷாந்தி ஓம் படத்து அப்புறமாக அம்மணி ஆடை அணிந்து நடிச்ச படம் இதுதான்னு நினைக்கிறேன். கீப் இட் அப். சத்யராஜ் ட்ரேட் மார்க் என்னம்மா கண்ணுவுடன் வருகிறார். டெல்லிகணேஷில் இருந்து பல தமிழ் முகங்கள், பாதி நேரம் தமிழ் படம் பார்ப்பது போன்ற பீலிங். மசாலா படம் என்றதுமே கருத்து சொல்ல வேண்டுமே, பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கவேண்டும் என்பதும், ஒரு பிரச்சினையை சமாளிக்க இலகுவான வழி பிரச்சினையில் இருந்து ஓடுவது அல்ல, அதை எதிர்கொள்வது என்றும் மிக மிக சட்டிலாகவும் அழகாவும் பொருத்தமாகவும் கருத்து சொல்லியும் இருக்கிறார்கள்.  

மொத்தத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் ஒரு செம ஜாலி ரைடு. 


 *************************************** 
இனி சீரியஸாக சில கருத்துக்கள். 

திரைப்படங்கள் பற்றி எப்போதுமே இரு வேறுப்பட்ட பார்வை இருக்கிறது. சினிமா என்பதை சக்தி வாய்ந்த ஒரு கட்புல ஊடகமாக கொண்டு கதைகள் சொல்வதும் அதன் மூலமாக ஆக்கபூர்வமான பல விடயங்கள் செய்ய முற்படுவதும் ஒரு வகை. சினிமாவை ஒரு பொழுது போக்கு ஊடகமாக மட்டுமே கொண்டு அன்றாட வாழ்கையில் பிரச்சனைகளை மறந்து இரண்டு அல்லது இரண்டரை மணிநேரம் ஜாலியாக டைம் பாஸ் பண்ண வருபவர்களுக்கு குறைவில்லாத பொழுது போக்கை கொடுப்பது இரண்டாவது வகை. இந்த சினிமா இரண்டாவது வகை. எனவே இங்கே தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் கேவலப் படுத்துகிறார்கள் அது இதுன்னு வம்பு பண்ணத் தேவையில்லை. தமிழரின் விருந்தோம்பலையும், வீரத்தையும், நம் பெண்களின் தைரியத்தையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். நமக்கு வட இந்தியா என்பது எப்படி ஒற்றையாக தெரிகிறதோ அப்படியே அவர்களுக்கு தென் இந்தியா என்பது, மொழியாக தமிழ் மாத்திரமே இருந்தபோதும் சகல தென்னிந்திய கலாசாரங்களையும் ஒன்றாக போட்டு குழப்பியிருப்பதில் தெரிகிறது. இந்த படத்தை பொறுத்தவரை அது அவர்களது குற்றமும் இல்லை, அதை பெரிது படுத்த தேவையும் இல்லை. அதையும் தாண்டி பழிவாங்கியே தீரவேண்டும் என்று யாராவது நினைத்தால் கீழே உள்ள வீடியோ பார்க்கவும்


படத்தின் வியாபாரத்துக்காக ஷாரூக் தலைவரை பயன்படுத்திகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஷாரூக்கின் பேட்டிகளை நேரில் பார்த்தவர்களுக்கு தெரியும் தலைவர் மீது அவருக்கு இருக்கும் மரியாதை. ரா.ஒன் படத்தில் ஏற்பட்ட குறையை இந்த படத்தில் சரி செய்து இருக்கிறார். இங்கே எங்களுடன் இருக்கும் இலங்கை சிங்கள நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தலைவரை சக் நோரிசுடன் ஒப்பிட்டு சில ரஜினி ஜோக்குகள் சொல்லி கிண்டல் செய்தார். அதே நண்பர், நேற்று சென்னை எக்ஸ்பிரஸ் "லுங்கி டான்ஸ்"  பார்த்தன் பின்னர் "I really didn't know rajni is such a big phenomenon in india, I'm really sorry for what I said before" ன்னு சொன்னாரு. அதைக் கேட்டதற்கு பிறகு ஷாரூக் மீது இருந்த மத்திப்பு இன்னும் கூடிவிட்டது. 

Monday, February 11, 2013

விஸ்வரூபம், கமல், பி ஜே - சர்ச்சைகளும் சில கருத்துக்களும்

பதிவரானதுக்கு அப்புறம்தான் எத்தன எத்தன பிரச்சினை. முன்பெல்லாம் பதிவுகள படிக்கறப்போ ஒரு சந்தோஷம் இருக்கும், இப்போல்லாம் இந்த பக்கம் வந்தாலே ஒரே மன உளைச்சல், தலைவலி, வயிற்ருப் போக்கு, வாந்தி பேதிதான். ஏதாவது ஒரு சின்ன காரணம் கெடைச்சா போதும் அடிச்சிக்கறதுக்குன்னு ஒரு கூட்டமே இருக்கு, இதுக்கு நடுவுல எரியற நெருப்புல எண்ணைய ஊத்திவிட்டு குளிர் காயறதுக்குன்னு ஒரு கூட்டம், நமக்கு சம்பந்தமே இல்லையின்னாலும் ஒரு நாலு பதிவ போட்டு ஹிட்டு வாங்குறதுக்கும் சண்டைய மூட்டி விடுரதுக்கும்ன்னு. இதெயெல்லாம் படிக்கறப்போ இதுல எல்லாம் இருந்து ஒதுங்கியே இருக்கலாம்ன்னு நினைச்சா, நீயும் ஒரு பதிவர், உனக்கும் சில சமுதாய பொறுப்பு இருக்குன்னு நம்மளையும் இழுத்து விடுறதுக்குன்னு நாலு நண்பர்கள். இந்த சின்ன வயசுல இத்தன பிரச்சினைகளையும் நான் எப்படித்தான் சமாளிக்க போறேனோ? என்ன நடந்தாலும் நடக்கட்டும்ன்னு என்னோட கருத்துக்களையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன்.


கமல் எனும் கலைஞருக்கு ஆதரவாளர்களும் எதிரிகளும் ஏராளம். உண்மைய சொல்லப்போனா எதிரிகள்தான் ஏராளம், எதோ ஒரு காரணுத்துக்காக அவர எதிர்கறதுக்கு ஏதாவது ஒரு கூட்டம் எப்பவுமே இருக்கும். அந்த கூட்டத்த எதிர்கறவங்க எல்லாரும் உடனே கமல் ஆதரவாளர்களாக மாறிடுவாங்க. கமல் எதிர்ப்பு தனிப்பட்ட குழு அரசியல விட பெரிதாக இருக்கறப்போ எதிரிக்கு எதிரி நண்பன்னு சில பேர் அந்த கூட்டத்த ஆதரிக்கவும் செய்வாங்க, இன்னும் சிலபேர் சும்மா இருந்த எவனயாவது சீண்டி விட்டு எதிர்ப்ப கிளப்பிவிட்டு அதுல குளிர் காஞ்சிட்டு இருப்பாங்க. இது இன்னிக்கி நேத்து இல்ல கடந்த பத்து பதினச்சு வருசமா நடத்துக்கிட்டுத்தான் இருக்கு. இன்னிக்கி என்னன்னா குழு அரசியல்கள் கமல் எதிர்ப்பையும் தாண்டி வலுப்பெற்றிருக்கு. அதனால எப்பவுமே ஒரு கலைப் படைப்பை "கலை நேர்த்தி/நேர்மை" அடிப்படையில் வைத்து விமர்சிக்கக் கூடியவர்கள் கூட, இந்த குழு அரசியலை மையப்படுத்தியே விமர்சனத்த தொடுக்கறாங்க. இப்படியே போய்க்கிட்டு இருந்தா சீக்கிரமே தமிழ் சினிமா ஹாலிவூட் குப்பைகளை மிஞ்சிவிடும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்லை. இதுதான் நம் முன்னே இருக்கும் நீண்டகால பிரச்சினை. 

இத விட்டுட்டு குறுகிய கால பிரச்சினை என்னன்னு பார்த்தோம்னா விஸ்வரூபமும் அதை சூழ உள்ள சர்ச்சைகளும்.

முதலாவதா விஸ்வரூபம் படத்தை ஒரு சாதாரண வணிக சினிமாங்கற தரத்தை விட உயர்த்திப் பார்க்கவேண்டிய எந்த தேவையும் இல்லை. படம் ஒரு கருத்தையும் போதிக்கவும் இல்லை, எந்த நியாயமான விவாதத்தை கிளப்பவும் இல்லை. தீவிரவாதத்தையும், சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும், உலக அரசியல் குழப்பங்களையும் வணிகமாக்கும் சாதாரண மூன்றாம்தர ஹாலிவூட் உத்தி வணிக முயற்சிதான் இந்த சினிமா. படத்தில் போதிக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுப்புத்தியின் அடிப்படையில் உருவானதே அன்றி எங்கும் ஒரு ஆழமான பார்வை கிடையாது. விஸ்வரூபம் படம் பார்த்தவர்கள் யாரும் இதை மறுக்க முடியாதுங்கறது என்னோட கருத்து. கமல் ஒரு நேர்மையான கலைப் படைப்பை கொடுக்க மறுபடியும் தவறிவிட்டார். இன்னுமொரு வகையில் சொல்லப்போனால் ஆயுத எழுத்துங்கற படத்தை எடுத்து மணிரத்தினம் எப்படி மணிரத்தினம்கற மாயையை உடைத்தாரோ அதே போன்று விஸ்வரூபம் படம் மூலம் கமல் என்கிற மாயையை கமலும் உடைத்திருக்கிறார். இனியும் ஒரு பொறுப்பு வாய்ந்த கலைஞராக கமல் குறைந்தபட்ச கலை நேர்த்தியுடன் செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஒரு தீவிர கமல் ரசிகனான எனக்குக் கூட இல்லை. வணிக வெற்றிக்காக கமல் எதையும் செய்வார் என மீண்டும் அடித்துக் கூறியிருக்கிறார் கமல்.

படத்தோட ஸ்கிரிப்ட் முழுசா எழுதி முடித்ததும் ஆப்ரூவலுக்காக அமேரிக்கா அனுப்பி வைத்ததாகவும், ஸ்கிரிப்ட்டில் எழுதிய பல சம்பவங்கள் அதன் பின்னர் நிஜத்தில் நடந்ததாகவும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் கமல் கூறுகிறார். ஒரு தமிழ் சினிமாவை எடுக்க அமெரிக்க அரசிடம் அனுமதி கோரும் கமல், தமிழ் நாட்டில் எத்தனையோ முஸ்லீம்கள் வாழும் போது, ஒரு முஸ்லீமிடம், தலிபான்கள் குரான் முன்னாடி கொல்றாங்களே இதத்தான் குரான் சொல்லுதான்னு ஒரு கேள்வி கூடவா கேட்க்க முடியாது? அது போகட்டும், இந்த படத்தின் தடையை அனுமத்தித்தால், ஒரு குழுவிடம் காட்டி அனுமதி பெற்றுவிட்டுத்தான் திரையிட வேண்டும்ன்னு எதிர்காலத்துல சட்டம் வரும்ன்னு பயப்படுபவவர்கள், விஸ்வரூபம் போன்ற முன்னுதாரணங்கள் வந்தால் ஒரு தமிழ் படம் எடுக்க கூட அமெரிக்க அரசிடம் அனுமதி கோரவேண்டி இருக்கும் அதனால் விஸ்வரூபம் போன்ற படங்களை எதிர்க்கிரோம்ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு கூட சொல்லாமல் இருப்பதும் இந்த எதிர்ப்பும் ஆதரவும் நேர்மையானதா இல்லை குழு அரசியலா என்கிற சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தவே செய்கிறது.


இப்போ இந்த படத்த எதிர்க்கலாமா? கருத்தியல் ரீதியாக இந்த படத்துக்கு விமர்சனம் முன்வைக்கலாம், அதுதான் நியாயம், ஆனால் படத்தை கண்மூடித்தனமாக எதிர்க்க முடியாது. இந்தப் படம் இஸ்லாத்தை கேலி செய்கிறது என்கிற வாதம் எந்தளவு அபத்தமோ, இந்த படம் தீவிர வாதத்தை எதிர்கிறது எனும் வாதமும் அதே அளவு அபத்தமாகவே எனக்கு படுகிறது. ஒரு கலைஞனுக்கு அவனது எண்ணத்தில் உதித்த ஒன்றை ஒரு படைப்பாக்கி மக்கள் முன் சமர்ப்பிக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. ஒரு படைப்பை உருவாக்கும் வரையில்தான் அது நமக்கு சொந்தம், அதன் பின் அது நுகர்வோன் சொத்து ஆகி விடுகிறது என்பதை படைப்பாளியும் மறக்கக் கூடாது. ஆப்கான் - அமெரிக்கப் போராட்டத்தை ஒரு தமிழ் படமா எடுக்கனுமாங்கறது தேவை அற்ற வாதம். அதை தமிழ் படமா எடுக்கும்போது எப்படி வேணும்னாலும் எடுப்பேன்ங்கறதும் ஒரு பொறுப்புள்ள படைப்பாளி முன்வைக்கக் கூடிய வாதம் அல்ல. முடிவா விஸ்வரூபம் மீது தடை கோரி நடத்தப் பட்ட போராட்டம் நியாம் அற்றது, வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது. அதேபோன்று, ஒரு குழு அந்தப் படத்தை தடை கோரி போராடியது என்கிற ஒரே காரணத்துக்காக, ஹாலிவூட் தரத்தில் ஒரு தமிழ் சினிமா, தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு அற்புதமான படம், இதை எல்லாரும் ஆதரிக்கனும், இதை எதிர்கறவன் எல்லாம் தீவிரவாதின்னு சொல்றதும் நேர்மை அற்ற வாதம்.

இதை நான் நேர்படவே கூறவேண்டும், திரு பீ. ஜே அவர்களின் ஒருமணிநேர விஸ்வரூப உரையை பார்க்கும் துர்பாக்கிய நிலைமை எனக்கும் ஏற்பட்டது. அந்த உரையை முற்றும் முழுதாக நான் கண்டிக்கறேன். மாற்றுக் கருத்தை நாகரீகமான முறையில் முன்வைக்க வேண்டும். மானுஷ்ய புத்திரனை வேறு பெயர் சொல்லி அழைப்பதையோ, பாரதிராஜாவை மோசமான முறையில் கேலி செய்வதையோ யாரும் அனுமத்திக்க முடியாது. எந்த ஒரு கருத்து மோதலிலும் தனி மனித தாக்குதல் இருக்கக் கூடாது. இஸ்லாத்தின் மீது சேறை வாரி இறப்பது விஸ்வரூபம் போன்ற படங்கள் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது மிகவும் தவறு, இது போன்ற உங்கள் நடவடிக்கைகளும் தான். இஸ்லாம் அதிகளவில் தவறாக புரிந்துகொள்ளப் பட்ட ஒரு மார்க்கம் என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லீம் நண்பர்களுடன் பழகிய எவரும் மறுக்க மாட்டார்கள். முஸ்லீம் அல்லாதவர்கள் மட்டும் அல்ல முஸ்லீம்களில் கூட பெரும் பகுதியானவர்கள் இஸ்லாத்தை தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது இது சம்பந்தமாக வெளிவந்த சில பதிவுகளையும் அதற்க்கான பின்னூட்டங்களும் படிக்கும் ஒருவருக்கு தெளிவாகத் தெரியும். திரு கமல் ஹாசன் அவர்களுக்கு ஒரு படைப்பாளியாக எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதைவிட நூறு மடங்கு அதிக பொறுப்பு பீ ஜே போன்ற தலைவர்களுக்கு இருக்கிறது. இஸ்லாத்தை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள். விஸ்வரூபம் படத்தை நேர்மையான முறையில் விமர்சிக்கும் பொறுப்பு ஒரு கலை விமர்சகருக்கு இருப்பது போல, பீ ஜே அவர்களின் செயல்களை கண்டிக்கும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இருக்கிறது. 


தாலிபான் என்பது ஒரே அமைப்பாக இருந்தபோதும், தாலிபான்களில் அடிப்படை நோக்கம் சம்பந்தமாக மூன்று பிரிவு இருக்கிறது. ஒன்று ஆப்கானிஸ்தானை முன்னேற்ற வேண்டும் என்கிற நோக்கில் ஆப்கான் மக்களால் உருவாக்கப் பட்டது, ரெண்டு ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியிலும் கல்வி, கலாசார ரீதியிலும் பாகிஸ்தானுக்கு அடிமையாக வைத்திருக்கவேண்டும் என்கிற நோக்கில் பாகிஸ்தானினால் உருவாக்கப் பட்டது, மூன்று இஸ்லாத்தை பயங்கரவாத மதமாகவும், உலகின் பொது எதிரியாகவும் சித்தரிக்க வேண்டும், அதன் மூலமாக தனது எண்ணை வழியை அமைத்துக்கொள்ள ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் அடிமைப்படுத்த அமெரிக்காவால் உருவாக்கப் பட்டது. இதில், இஸ்லாத்துக்கான போராட்டம், ஜிஹாத் இதர விதரங்கள் எங்கும் இல்லை. சுய நிர்ணய உரிமைக்காக போராடும் தலிபான்களை எதிர்க்க வேண்டிய எந்த அவசியமும் அமெரிக்க அடிவருடிகளை தவிர யாருக்கும் இல்லை, அதே போன்று இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த பெண்கள் உரிமையயை, சிறுவர் உரிமையை மறுக்கும் தலிபான் பிரிவினரதும், பொருளாதார ரீதியில் ஆப்கானை வீழ்த்த புத்தர் சிலையை தகர்த்த பிரிவினரையும் மதத்தின் பெயரால் ஆதரிக்கும் எந்த தேவையும் உலகில் எந்த மூலையில் உள்ள எந்த முஸ்லீமுக்கும் இல்லை. இதையும் மீறி ஆப்கான் போரும், அல்கயிதா, தலிபான் தரப்பும் இஸ்லாம் வளர்க்க ஜிஹாத் நடத்துவதாகவும், புனிதப் போராளிகளாகவும், அமேரிக்கா தீவிரவாதத்துக்க்கு எதிரான போர் நிகழ்த்துவதாகவும் இன்னும் யாரும் கற்பனை பண்ணிக்கிட்டு இருந்தா, விஸ்வரூபம் கூறும் "அமெரிக்கன் எண்ணைக்காக போராடுறான் (உண்மை), நாம அல்லாஹ்வுக்காக போராடுறோம் (சுத்தப் பொய்)" டயலாகை நம்பிக்கிட்டு இருந்தா அதைவிட முட்டாள் தனம் எதுவுமே இருக்காது. 

இனி விஸ்வரூபம் படத்தின் கருத்தியல் சம்பந்தமாக சில கருத்துக்கள். 

1. தமிழ் சினிமாவுல இஸ்லாமியர்களை சித்தரிக்கும் போது காலா காலமாக இருந்துவரும் டைப் காஸ்டிங் கமலுக்கு தெரியாது ஒன்றும் இல்லை, அதை உடைக்க நினைக்கும்போது மதத்தையும், மதத்தை பின்பற்றுவோரையும் பிரித்து நோக்கக்கூடிய நிலைக்கு பார்வையாளனை தயார் படுத்த கமல் தவறிவிட்டார். அதற்க்கான சந்தர்ப்பங்கள் திரைக் கதையில் இல்லாமலும் இல்லை எனும்போது சற்று கவலை ஏற்படவே செய்கிறது. எந்த ஒரு மதத்திலும் மதத்தை சரிவர புரிந்துகொள்ளாத ஒரு கூட்டம் இருக்கவே செய்யும், அது மதத்தின் பெயரால் செய்யும் பல காரியங்கள் மதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துவிடும். சரியான புரிதல் இல்லாதபோது, மூன்றாம் தரப்பு அந்த மக்களை இலகுவில் ஆட்டி வைக்க முடிகிறது. தலிபான்கள் எது செய்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஒரு கூட்டம் இருப்பதும் சரியான புரிந்து கொள்ளல் இல்லாததனாலேயே.


2. அமரிக்கர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள்ன்னு தீவிரவாதி வாயாலேயே வாறமாதிரி வசனம் அமைக்கும் போது (அடுத்த காட்சியிலேயே பெண்கள், சிறுவர்கள் தங்கியிருக்கும் இடத்தின் மீது அமெரிக்க வானூர்திகள் கூண்டு வீசுவதாக காட்சி அமைத்த போதும்), அமெரிக்க வீரன் சுட்ட குண்டு தவறுதலாக ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அவன் முகம் சுழிப்பதாக காட்சி அமைக்கும் போது , தீவிரவாதிகள் கொலைசெய்யும்போது பாவிக்கும் குரான் வாசகங்கள், அல்லாஹு அக்பர் கோஷங்கள் தீவிரவாதமும் ஜிஹாதும் ஒண்ணுன்னு சொல்லற ஒற்றைப்படை பார்வயத்தான் உறுதி செய்யுது. மனிதர்களை கொலை செய்வது எவ்வளவு பெரிய தவறுன்னு இஸ்லாம் சொல்லக்கூடிய எந்த ஒரு விடயமும் படத்தில் காட்டப்படாமல் விடுபட்டது கவலை தருவது. ஒரு பொறுப்புள்ள கலைஞராக, ஒன்று கமல் இந்த விடயங்களை தவிர்த்து இருக்கலாம், இல்லை அது தவறு என்பதை சொல்லி இருக்கலாம், தீவிரவாதத்திற்கு எதிரான குரான் வசனங்களை மேற்கோள் காட்டி இருக்கலாம். அல்லது நமது முஸ்லீம்சகோதரர்களாவது கமலையும் கலைஞர்களையும் ஒருமையில் திட்டாமல், குரானின் பெயரால் நடக்கும் கொலைகளை நியாயப் படுத்தாமல், குரான் போதிக்கும் அகிம்சையை எடுத்துக் காட்டியிருக்கலாம்.   

3.FBI அதிகாரியாக வரும் கறுப்பின பெண் முட்டாளாகவும், நாகரீகம் அற்றவளாகவும் சித்தரிக்கப்பட்டும் வெள்ளை அமெரிக்கர்கள் நாகரிக காவலர்களாக சித்தரிக்கப்பட்டும் இருப்பது. வெள்ளைக்கார FBI ஆபீசர் முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக காட்சி இருந்தாலும், அதற்க்கு காரணமாக கமலின் பையிலிருந்து அவர் கண்டெடுத்த துப்பாக்கியை காட்டி அவரது நடத்தையை நியாயப் படுத்தும்போது, இது கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. ஆப்மார்க் ஹாலிவூட் திரைப்பட கறுப்பின குண்டுப் பெண் தான் இவர். இந்த அளவு உலகத் தரத்துக்கு கமல் போயிருக்கத் தேவையில்லை. 

4. தலிபான்கள் பெண்களின் மீது அடக்குமுறையை கையாள்வதாகவும், சிறார்களின் குழந்தைப் பருவம் முற்றிலும் பறிக்கப்பட்டுவிடதாகவும் மிகவும் நுணுக்கமான காட்சிகள் அமைக்கப்பட்டபோதும், நாயகன் பாத்திரம் அதைக் கண்டு பச்சாதாப படுவதாக வந்தபோதும் இஸ்லாம் பெண்களின் உரிமையை, சிறுவர் உரிமையை எவ்வளவு காக்குறது என்பதை காட்ட மறுத்தது அமெரிக்கர்களின் பிரச்சாரத்தை வலிமைப் படுத்துவதாகே உள்ளது. ஒரு ஆப்கான் பெண் மருத்துவரை காட்டுகிறார், என்ஜினீரிங் படிக்க இங்கிலாந்து போக ஆசைப்படும் குழந்தையை காட்டுகிறார், வீட்டில் ஆங்கிலம் பேசும் பெண்ணை காட்டுகிறார், மனைவியின் ஆஸ்துமாவுக்கு வைத்தியம் செய்ய வரும் பெண்ணை வில்லன் கதாபாத்திரம் கேவலமாக திட்டுவதை காட்டுகிறார், அதற்க்கு அந்த பெண் அமெரிக்க கைதிகள் இருக்கும் இடத்தை அமெரிக்கர்களுக்கு தெரியப்படுத்திவிடக் கூடும் என காரண வசனம் வைக்கிறார், இருப்பினும் பெண்ணுரிமை, சிறார்கள் உரிமை மீறப்பட்டதாக மட்டுமே பார்வையாளன் எடுத்துக்கொள்ளக் கூடியாதாக அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. கமலின் நேர்மைக்கும் வணிகத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டமோ? 

5. தலிபான்கள் பாவிக்கும் தொப்பி, தாடி, அலங்காரங்கள், அமெரிக்க உலங்கு வாநூர்த்திகளின் நிறம் அமைப்பு போன்ற பல நுணுக்கமான விடயங்களில் கமலின் ஆராய்ச்சியும், கவனமும் மெய் சிலிர்க்க வைக்கும் அதே வேளை, ஆப்கான்-அமெரிக்க போர் சம்பந்தமான அரசியலில் கொஞ்சமும் அக்கறை அற்று பொதுப் புத்தியை மட்டுமே மையமாக கொண்டு கதையையும், கதைக்கான கழத்தையும் அமைத்திருப்பது ரொம்பவுமே வேதனை தருகிறது. படத்தில் பலவாறான காட்சிகளும் இருக்கின்றன, ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட விதம், கொஞ்சம் அமெரிக்க பக்கச்சார்ப்பு அதிகம் இருப்பதான, ஒரு வித சமநிலை பேணப்படாததான உணர்வை தருகிறது. ஒருத்தனுக்கு தீவிரவாதி இன்னொருத்தனுக்கு போராளின்னு சொல்வாங்க, அமெரிக்க ராணுவம் நடத்தும் கொடுமைகளையோ, குண்டு வீசி கொல்லப்பட்ட குழந்தைகள் பெண்களையோ, பொருளாதார ரீதியாக அந்த மக்கள் மீது தொடுக்கப்படும் யுத்தங்களையோ பற்றிப் பேசுவதை மிகக் கவனமாக தவிர்த்திருக்கிறார் கமல். தீவிரவாதி தலைவன் தனது குடும்பத்தை பறிகொடுத்துவிட்டு அழும் காட்சியும் அதற்க்கான அழுத்தமும், அவன் பெண் மருத்துவரை திட்டும் காட்சிக்கான அழுத்தத்தின் பாதி கூட இல்லை. விஜயகாந்த், அர்ஜுன் படங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல இந்த படம், என்ன ஒரு வித்தியாசம் அவை இந்திய தேசப்பற்றை வலியுறுத்தும், இது அமெரிக்க தேசப்பற்றை வலியுறுத்துகிறது.

6. படம் தொடுக்கும் கருத்தியல் அரசியலை தள்ளிவிட்டுப் பார்த்தல் ஒரு ரசிக்கக் கூடிய என்டேர்டைன்மென்ட் சினிமாதான் இது. ஆயினும் விஸ்வரூபம் படம் எடுப்பதற்கு கமல் ஹாசன் தேவையில்லை, முருகதாஸ் போதும். கமல் ஹாசன் எனும் படைப்பாளியால் எல்லா விதத்திலும் இதை விட சிறந்த சினிமாவை வழங்க முடியும். இனிவரும் காலங்களிலாவது செய்வாரா கமல்? (விஜய் ரசிகர்களுக்கு வரிசையாக குருவி, வில்லு, சுறா போன்ற படங்களை பார்த்துவிட்டு காவலன் பார்த்ததான அனுபவம், கமல் ரசிகர்களுக்கு விஸ்வரூபம். அழுறதா சிரிக்கறதான்னு தெரியல)


டிஸ்கி: இன்னும் படம் சம்பந்தமான பல கருத்துக்கள் இருப்பினும் பதிவின் நீளம் கருதி(யும், பார்த்து ரொம்ப நாள் அனதால மறந்துவிட்ட காரணத்தினாலும்), இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 

டிஸ்கி: இஸ்லாத்தின் மீது அமேரிக்கா நிகழ்த்தும் மீடியா பயங்கரவாதமும், முஸ்லீம்கள், முஸ்லீம் நாடுகள் என பெயர் போட்டுக்கொண்டு சிலர்/அல்லது பலர் செய்யும் கலாசார பயங்கரவாதங்களும், அதற்க்கு தெரிந்தோ தெரியாமலோ இலக்காகிவிட்ட தமிழ்நாட்டு முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நண்பர்களும் தங்கள் பக்க நியாங்களையும், உண்மைகளையும் பரிமாறிக் கொள்ளவும், ஆரோக்கியமான விவாதங்களை நிகழ்த்தவும் தெரிந்தோ தெரியாமலோ கமல் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறார். பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அறிவாளிகளின் கடமை. இதை விட்டு நம்ம குழாயடி சண்டைகளில்தான் நிலைத்திருக்க விரும்பினால் எந்த சுப்பனாலயும் நம்ம சமூகத்த காப்பாத்த முடியாது.

டிஸ்கி: நானும் எத்தன நாளைக்குத்தான் மொக்க பதிவாவே போட்டுக்கிட்டு இருக்கறது. சமுகப் பிரச்சினைகள்ள கருத்து சொல்லன்னும்கற ஆர்வம் எல்லாம் எனக்கும் வராதா? என்ன விடுங்கங்க, நான் எல்லாம் மொக்கப் பதிவர்ன்னு தெரிஞ்சே வாழ்ந்துக்கிட்டிருக்கேன், அவனவன் ஒளிவட்டப் பதிவர்ன்னு நெனச்சிக்கிட்டு மொக்க போட்டுக்கிட்டிருக்கான். 

Sunday, January 27, 2013

விஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)


விஸ்வரூபம் திரை விமர்சனத்தை கமல் ஹாசனும் உலகநாயகனும் பதிவின் கடைசி வரிகளில் இருந்து ஆரம்பிப்பதே முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

"விஸ்வரூபம் ட்ரெயிலர் படம் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை, இருப்பினும் வேட்டையாடு விளையாடு போன்ற ஒரு முழு கமெர்சியல் என்டேர்டைனராக அமைந்தால் பெரு மகிழ்ச்சி"

படம் பார்த்து முடிந்ததும் அந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது ஆச்சர்யமாக உள்ளது. விஸ்வரூபம் படத்தை இரு வேறு கோணங்களில் இருந்து விமர்சிக்கலாம். இதில் எதை தெரிவு செய்வது என்கிற தடுமாற்றம் இருக்கிறது. வழக்கம் போல நம்ம பாணியில "கதை, படத்தின் மூலம் உருவான அரசியல்கள்" போன்ற வஸ்துக்களை தள்ளி வைத்துவிட்டு முடிந்தவரை நம்மளவில் நடுநிலையான ஒரு விமர்சனம். 

ஏழு வருடங்களுக்கு (வேட்டையாடு விளையாடுவிற்க்கு) பிறகு  கடைசிவரை பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு கமல் படம். நூறு சதவீத கமெர்சியல் என்டர்டைனர் இந்த படம். "ராஜ் கமல்" நேம் கார்டு போட்டத்துல இருந்து "எண்டு" கார்டு போடுற வரைக்கும் கமல் ஆட்சிதான் படத்துல மேலோங்கி இருக்கு.  படம் முழுதும் "ஒங்கம்மாள ...... (கெட்ட வார்த்தை)...., எப்ப இருந்துடா ஒனக்கு தெரியும்?" அவங்கள பொறந்ததுல இருந்தே எனக்கு தெரியும்" போன்ற கமல் ப்ரேன்ட் காமெடி, வில்லனோட சின்ன பையன கமல் ஊஞ்சல்ல வச்சு ஆட்டுறப்போ பெரிய பையன் வந்து ஒக்காந்து ஆட்ட சொல்றது போன்ற சின்னச்சின்ன இயக்குனர் டச்கள், ஒரு தமிழ் படத்துக்கே உரிய காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன், அப்பப்போ கவர்ச்சி (இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்) எல்லாத்தையும் சரி விகிதத்தில் கலந்த அதே நேரம் சுவாரஷ்யமான திரைக்கதை, கமலோட கலை ஆரவத்துக்கு தீனி போடுற ஒரு கதக் நடனக்காட்சி, அதற்க்கு ஏற்ற நளினம், என் போன்ற கமல் ரசிகர்கள தங்களையும் அறியாமல் விசில் போட வைக்கும் ஒரு சண்டைக்காட்சி, அத்துடன் ஆரம்பிக்கும் ரெண்டாம் அவதாரம். இதைவிட ஒரு கமல் ரசிகனுக்கு என்ன சார் வேணும்? இது நூறு வீத கமல் படம், கமல் ரசிகர்களுக்கும், அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் கமல் ஒரு பெரிய விருந்தே வச்சிருக்கார். அஜித் ரசிகர்களுக்கு மங்காத்தா எப்படியோ, கமல் ரசிகர்களுக்கு விஸ்வரூபம் அப்படி.


படத்தோட பிளஸ்சஸ் மைனஸ்சஸ் பத்தி இனி பார்க்கலாம்.

1. படம் முழுவதும் கமல் கமல் கமல். சில இடங்களில் கமலுக்கு வயசானது தெரிஞ்சாலும், தனது நடிப்பால நம்மள மொத்தமா கட்டிப் போடுறாரு மனுஷன். அப்பாவித் தனமா மூஞ்சிய வச்சிக்கிட்டு பேசுற பல வசனங்கள் செம டைமிங். தசாவதாரம், மன்மதன் அம்புல நொந்து போனவங்களுக்கு பெரிய ரிலீப் விஸ்வரூபத்துல இருக்கு. படத்துல எப்ப எப்ப தேவையோ அப்ப அப்ப  சின்னதா வந்து விழும் காமிக் ரிலீப் இது ஒரு சுப்பர் ஹிட் படம்குறதுக்கான முதல் அறிகுறி.

2.  ஒரு இயக்குனாரா கமல் நிறையவே பாலிஷ் ஆகியிருக்காரு. குட்டிக் குட்டியா நெறைய ஷாட்கள், ஒரே ஷாட்ல பல பக்க வசனங்களால சொல்லமுடியாத பல விஷயங்கள சொல்லிடறார். உலக நாயகன கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு கதைக்கு என்ன தேவையோ அத செஞ்சிருக்கார். கமல் இஸ் பாக் டு போர்ம்.

3. தமிழ் சினிமாவின் சில க்ளீஷேக்களை பயமே இல்லாமல் உடைத்திருக்கறார். குறிப்பா டூயட் பாட்டு கெடயாது, தமிழ் சினிமால வழமையா வரும் காதல்ங்கற கத்தரிக்காய் கெடயாது, ஓவர் சென்டிமென்ட் கெடயாது, எல்லா கதாபாத்திரங்களும் அவுங்க அவுங்க ஸ்பேஸ்  இருக்கு, கதாநாயகனை உயர்த்த மற்றைய கதாபாத்திரங்கள் வலிந்து தாழ்த்தப் படவில்லை (முட்டாள் FBI ஆபிசர் பாத்திரம் தவிர, அதுவும் இல்லன்னா எப்படி?), இதுல பெரிய விஷயம் என்னன்னா படம் முடியற வரைக்கும் இத நீங்க நோட்டிஸ் பண்ணவே மாட்டீங்க. அங்க நிக்கறாரு கமல்.


4. ஸ்ரேயா படங்களை விட அதிக க்ளீவேஜ் இருக்கு படத்துல, ஸ்ரேயா ஓகே, பூஜா குமார்? (என்ன சொல்றதுன்னே தெரியல, ஐ ஆம் வெரி கன்பியுஸ்டு!!)

5. ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி சண்டைக் காட்சி இருக்கு படத்துல, ஆனா எனக்கு என்னமோ அது கொஞ்சம் ஒட்டாத மாதிரி (அதாவது ஒட்டுன மாதிரி) தெரியிது, பல ஹெலிகாப்டர் காட்சிகள், அப்கானிஸ்தான லாங் சாட்ல காட்டுற காட்ச்சிகள், சில ஆக்ஷன் சீக்குவன்ஸ் எல்லா இடத்துலயும் ஒட்டு வேலைப்பாடு ரொம்பவே தெரியுது, கைய வெட்டுறது, கழுத்த வெட்டுறது போன்ற இடங்கள்ள பிளாஸ்டிக் அப்படியே தெரியுது. கிராபிக்ஸ் டிப்பார்ட்மெண்ட் இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கனுமோ?

6. படத்துல நிறையவே ரத்தம், கொலை, நிறைய இடங்கள்ள முகம் சுளிக்க வைக்குது, (தீவிரவாதிய வேற எப்படிக் காட்டுறன்னு யாராவது கேள்வி கேட்டீங்க மூஞ்சில பூரான்  உட்ருவேன் ஆமா, கழுத்த வெட்டி ரத்தம் கொட்டக் கொட்ட கொன்னாத்தான் தீவிரவாதமா? ஒரே துப்பாக்கி குண்டுல, இல்லையின்னா மொத்தமா குண்டு போட்டு தடமே தெரியாம அழிச்சா அது என்ன அகிம்சையா?)


7. படத்துல, ஆடு இருக்கு, மாடு இருக்கு, ஆண்ட்ரியாவும் இருக்கு. (ஆண்ட்ரியா இருக்கறதே பிளஸ்ஸா, இல்ல ஆண்ட்ரியாவும் கூட  இருக்கறது மைனஸான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க)

8. ஷங்கர்-எஹ்ஷான்-லாய் இந்தியில எனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் வரிசையில் உள்ளவர்கள். "கல் ஹோ நா ஹோ" படத்துக்காக தேசிய விருது வேற இருக்கு. ஆளவந்தான்ல இருந்து இதையும் சேர்த்து மூணு நாலு தமிழ் படம் இசை அமைத்திருந்தும் இதுவரை சரியான படம் எதுவும் அமையல. அது ஏன்னுதான் எனக்கும் புரியல.

9. படத்துல காரேக்டரைசேஷன் கொஞ்சம் சொதப்பல், எல்லா கதாபாத்திரத்துக்கும் மல்டிப்பிள் ஷேட் இருக்கே தவிர எந்த கதாபாத்திரத்துக்கும் ஒழுங்கான பேஸ் கெடயாது, எல்லாமே பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் வகையறாதான். உதாரணமா ஹீரோ, வில்லன் ரெண்டுபேருமே முஸ்லிம், ஒருத்தர் தீவிரவாதி, இன்னொருத்தர் மதிப்புக்குரிய இந்திய  RAW ஏஜென்ட். தீவிரவாதிகளும் குண்டு வைக்கிறதுக்கு முன்னாடி நமாஸ் பண்றாங்க, ஹீரோவும் குண்டு வைக்கிறவன புடிக்கறதுக்கு முன்னாடி நமாஸ் பண்ணுறார். ரெண்டுபேருக்கும் கொள்கை அளவுல என்ன வித்தியாசம், ஏன் எதிர் எதிர் அணியில இருக்காங்கன்னு ஒரு சிங்கிள் ஷாட் கூட படத்துல இல்ல. முஸ்லிம் தீவிரவாதிகள வில்லனா காட்டிட்டு சைடுல ஹீரோ பிரெண்டா ஒரு ஜமாலையோ, இல்ல ஹீரோவுக்கு உதவுபவரா அப்துல் காதரையோ வைக்கிற  சாதாரண தமிழ் சினிமா டெக்னிக் தான் இங்கயுமா?


10. ராகுல் போஸ், நாசர், ஷரீனா வஹாப் போன்ற பல தேர்ந்த நடிகர்கள் இருக்கிறார்கள் படத்தில். முன்னவர் விஜயகாந்த் படங்களில் பார்த்த வாசிம்கான்களுக்கு மாற்றமாக ஒரு தீவிரவாதி, மஜ்னு சோனு சூடுக்கு அப்புறமா தமிழ்ல கத்திக்கத்தி கூப்பாடு போடாத தீவிரவாதி இவருதான்னு நினைக்கிறேன். மற்றைய ரெண்டுபேரும் வேஸ்ட்டட்.

11. கதை, படம் பேசும்/உருவாக்கும் அரசியல் போன்ற வஸ்த்துக்களை கவனிக்காம, ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம, ரெண்டர மணி நேரம் வெறும் என்டேர்டைன்மன்ட்ட மட்டுமே மனசுல வச்சி பார்த்தா ஒரு முழுத் திருப்தி தரக்கூடிய படம்.  (இதுக்கும் மேல ஒரு படத்துக்கு ஏதும் பிளஸ் தேவையா?)

ஐ ஆம்  வெய்ட்டிங்  பார் விஸ்வரூபம் பார்ட் II இன் இந்தியா....

நம்ம ரேட்டிங் : 7.5/10

****************************************

பதிவுக் குறிப்பு:
விஸ்வரூபம் படத்துக்கு நேர்மையான விமர்சனம்ன்னு எதுவும் வருமான்னு எனக்கு தெரியல, அதுக்கு என்ன காரணம்ன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.

முதலாவதா ஒரு விஷயத்த சொல்லிக்கனும். "ஒரே மதத்தை சேர்ந்த, ஆனா இரு வேறுபட்ட புரிதல் அல்லது கொள்கை உடைய இரண்டு தனி நபர்களினதும் அவர்களை சூழ உள்ளவர்ககளினதும் போராட்டம்" தான் படத்தோட கதைன்னு எனக்கு தோணுது. படம் எந்த ஒரு இடத்திலும் இஸ்லாம் மதத்தை அவமதிக்க வில்லை, முஸ்லீம்களை அவமதிக்கிறதா, இல்லையான்னு என்னை கேட்டால் இல்லன்னுதான் சொல்லுவேன், ஆனா அவமதிக்குதுன்னு யாராவது எடுத்துக்க இடம் இருக்கான்னு கேட்டா இருக்கு. இங்கதான் படத்தோட பிரச்சினையே இருக்கு.  அதுக்காக தடை செய்யப்பட வேண்டிய படமான்னு கேட்டால் கண்டிப்பா இல்ல. ஹிந்தில "நியூ யோர்க்", "மை நேம் இஸ்  கான்", "குர்பான்", "மிஷன் இஸ்தான்புல்", ஹாலிவூட்ல "Traitor" போன்ற படங்கள் ஆரம்பித்து வைத்த விவாதத்தை தமிழில் விஸ்வரூபம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. அந்த படங்கள் எப்படி ரெண்டும் கெட்டானாக அலசியதோ, விஸ்வரூபமும் அப்படியே, அதை தவிர இஸ்லாத்தை அவமதித்து விட்டது, சிறுபான்மை மக்களை கமல் தாக்குகிறார்ன்னு கூச்சல் போடுற அளவுக்கு கேவலமான படம் ஒன்னும் கெடயாது. அதுக்காக கமல் தவறே செய்யலைன்னு சொல்லவும் முடியாது. படம் ஆரம்பித்து வைத்த விவாதத்தை ஆக்கபூர்வமான முறையில் தொடர வேண்டியவர்கள் கண்மூடித் தனமாக படத்தை எதிர்த்து ஒரு வரலாற்று தவறை செய்துவிடாமல் இருக்கனும்ங்கிறதே ஒரே ஆசை.


டிஸ்கி: அங்க படத்துக்கு தடைன்னு என்னிக்கி அறிவிச்சாங்களோ, அன்னில இருந்தே நம்ம ராசு மாமா, "படத்தப் பாரு படத்த பாரு"ன்னு ஒரே வற்புறுத்தல். வெள்ளிக்கிழமை இங்க "கான்"ன்னு பனிப் புயல் வந்ததால பாதை எல்லாம் மூடி படம் பார்க்க போக முடியல. இன்னிக்கி காலையில பாதை சீராக இல்லாதபோதும், ரிஸ்க் எடுத்து நூறு மைல் வண்டி ஓட்டி, மூணு மணிக்கே தியேட்டர் வாசலுக்கு போயி, டிக்கெட் கிடைக்காததால அடுத்த காட்சிக்காக ராத்திரி பத்து மணி வரைக்கும் குளிர்ல தியேட்டர் வாசல்ல காத்திருந்து பார்த்ததுக்கு படம் "ஒர்த்துதான்".

டிஸ்கி: தமிழ் நாட்டிலும் படம் வெளியாகி அனைவரும் பார்த்தபின் கருத்தியல் ரீதியாக படத்தை விமர்சிக்கலாம்ன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு சொல்லக்கூடியது, குறைவில்லாத என்டேர்டைன்மென்ட், ஒரு அக்மார்க் கலப்படமற்ற "கமல்" சினிமா. ஒரு கமல் சினிமாவில் என்ன நிறை இருக்குமோ அனைத்தும் இருக்கு, என்ன குறை இருக்குமோ அவையும் அனைத்தும் இருக்கு. அதுதான் விஸ்வரூபம். மற்றும் படி ஹாலிவூட் தரத்துல ஒரு தமிழ் சினிமான்னு சொல்ற அளவுக்கு தமிழ் சினிமா ஒன்னும் கேவலமும் கெடயாது, விஸ்வரூபம் ஒன்னும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேக்கிங்கும் கெடயாது.