Wednesday, November 21, 2012

துப்பாக்கி, ஜப் தக் ஹேய் ஜான் : இரட்டை பார்வை

பதிவர்னா ஒரு படம், அது தமிழோ, இந்தியோ, தெலுங்கோ, இங்கிலீஷோ இல்ல கொரியன், இந்தோநேஷியனோ, உடனே பார்த்து விமர்சனம் எழுதனும்கறது ஒரு சட்டம், அத மீறி படம் பார்த்துட்டும் விமர்சனம் எழுதலயின்னா சங்கத்துல இருந்து தள்ளி வச்சிடுவாங்கன்னு மொக்கராசு மாமா மிரட்டுனதால, இந்த தீபாவளி ரிலீஸ்ல நான் பார்த்த ரெண்டு படத்துக்கும் ஒரே பதிவுல விமர்சனம் எழுதி சங்க மெம்பர்ஷிப்ப காப்பாத்திக்கலாம்ன்னு இறங்கிட்டேன்.

முதல்ல ஷார்ட்டா துப்பாக்கி. துப்பாக்கிய பத்தி பலபேர் பல பதிவு போட்டு பல விமர்சனம் போட்டு படம் மெகா ஹிட்டுன்னு ஊரறிய அறிவிப்பும் குடுத்தாச்சு. இதுக்கு மேல இந்த படத்த பத்தி நான் என்ன சொல்றது? ரொம்ப நாளைக்கு அப்புறமா முழு திருப்தியோட ஒரு விஜய் படம் பார்த்தது இந்த தீபாவளிக்குத்தான். அண்ணன் பின்றாரு, நடிப்புல செம முதிர்ச்சி தெரியுது, ஆனா தோற்றதுல செம இளமை தெரியுது. முருகதாஸ் மொத்தமா நாலே நாலு சீன யோசிச்சிட்டு, அத விஜயோட உதவியால ஒரு முழுப்படமா குடுத்திருக்காரு, வழக்கம் போல ஹரிஷ் ஜெயராஜ் செமையா சொதப்பியிருக்காரு. படத்துல வில்லன காட்டறப்போ அந்த ஊ ஊ ஊ  BGM பழைய விஜயகாந்த் பட "பயங்கர வில்லன" ஞாபகப்படுத்தி தொலைக்குது. நாலு சீன விட்டா படத்துல சொல்லிக்கொள்ளும்படியா எதுவுமே இல்ல, ஆனா விஜய் நம்மள சீட்டோட கட்டிப் போட்டு வைக்கிறதால, படம் முடிஞ்சு வெளிய வாரப்போ, ஒரு முழுத் திருப்தி கெடைக்குது, நீண்ட நாளைக்கு அப்புறமா ஒரு செம மாஸ் என்டேர்டைனர் பார்த்த மாதிரி நமக்கு ஒரு பீலிங் வருது. துப்பாக்கி, இட்ஸ் ஆல் அபவுட் விஜய். கிங் ஆப் மாஸ்.


ஜப் தக்  ஹேய் ஜான்:


எட்டு வருஷங்களுக்கு பிறகு யாஷ் சோப்ரா படம் இயக்க வர்றாருன்னு சொன்னதுமே இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு தொத்திக்கிருச்சி.  "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்" எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சவங்களுக்கு படத்தோட கதைய பத்தி எதுவுமே சொல்ல தேவையில்ல, கதைய விட பெர்போர்மான்ஸ் தான் எப்பவுமே அவரோட படத்துல USP.  வழக்கமான யாஷ் சோப்ரா ரொமான்ஸ் தான் படம். ஆனா ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்க்குறதால ரொம்ப ரீஃப்ரெஷிங்கா இருக்கு படம்.  ஷாருக்க  விட்டா ரொமாண்டிக் பிலிம்ல பெர்ஃபோம் பண்ணறதுக்கு வேற யார தேடுறது? ரொம்ப நாளைக்கு அப்புறமா ஷாரூக் ரொமாண்டிக் ஹீரோவா நடிக்கற படம்,  ரஹ்மான் சார் மியூசிக், முதல் முறையா ஷாரூக்கும் கத்ரீனா கய்ப்பும் ஜோடி சேரும் படம், ஆதித்யா சோப்ரா கதை வசனம்ன்னு சொன்னதுமே எதிர்பார்ப்பு பல மடங்காயிருச்சி. படம் முடிஞ்சு ஃபைனல் பிரிண்ட் வர்ரதுக்கு முன்னாடியே யாஷ்ஜீ திடீரென இறக்க, யாஷ் சோப்ராவோட கடைசி படம்ங்குற டைட்டில் வேற சேர்ந்துடுச்சு. இங்க படம் ரிலீஸ் முதல் நாள் முதல் ஷோவுக்கு முதல் ஆளா போய் நின்னுட்டேன். இனிமே படம் எப்பிடின்னு பார்க்கலாம்.

காதலை பிரிஞ்சு வாழ்றதும், தினம் தினம் செத்து பொழைக்கறதும் ஒண்ணுதான். நம்ம காதலிக்கறவங்க நல்லா இருக்கனும்கறதுக்காக பிரிஞ்சு வாழறதுக்கு பதிலா பேசாமா பினாயில வாயில ஊத்தி கொன்னுடலாம். இவ்வளவுதான் படத்தோட கதை. இந்த கதையை வச்சிக்கிட்டு ஆதித்யா சோப்ரா எழுதியிருக்கற திரைக்கதை முன் பாதி அற்புதம், "கடவுளுக்கு சத்தியம் பண்ணி பிரியற ஒரு காதல்" ன்னு ஒரு சின்ன லைன வச்சி ரொம்ப கன்வின்சிங்கா ஒரு திரைக்கதை எழுதியிருக்காரு, ரெண்டாவது பாதி, தொண்ணூறுகளின் மனம் சார்ந்த காதலுக்கும், ரெண்டாயிரங்களின் உடல் சார்ந்த காதலுக்கும் இடையிலான வித்தியாசம், முக்கோண காதல், காதல் தோல்வி, பெர்போர்மான்ஸ் ஸ்கோப்ன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் அம்னீசியா, நினைவு திரும்பி வரவழைக்கும் நாடகம்ன்னு 1980 சமாச்சாரத்த தொட்டு திரைக்கதை அமைச்சது படத்தோட நாம ஒன்றிப்போறத கொஞ்சம் கஷ்டமானதா ஆக்கிடுது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, வீர்-சாரா, ரப் னே பனாதி ஜோடி, போன்ற படங்களை எழுதிய ஆதித்யா சோப்ரா இந்த அதர பழைய நாடகத்த தொட்டது கொஞ்சம் வருத்தம் தான், ஆனாலும் பெர்போர்மன்சும், யாஷ் சோப்ராவின் இயக்கமும், ஆதித்யா சோப்ராவின் வசனங்களும் பெருமளவு அதை ஈடு செஞ்சுடுது.


ஷாரூக் கான் ரொம்ப இளமையா இருக்காரு, ஒரு பணக்கார பொண்ணு தினக்கூலிய லவ் பண்ணுவாளான்னு யாருக்காவது டவுட்டு வந்தா அந்த தினக்கூலி இந்தாளு மாதிரி இருந்தா பணக்கார பொண்ணு என்ன தேவலோக ராணியா இருந்தாலும் லவ் பண்ணுவான்னு சொல்ற அளவுக்கு, அவருதான் தி கிங் அப் ரொமான்ஸ்ன்னு மறுபடியும் நிரூபிச்சிருக்காரு. ஆர்மி ஆபிசர் சமர் ஆனந்தா இருக்கட்டும், லண்டன்ல பஞ்சாபி பாட்டு பாடி ஆடுற தெருப்பாட்டு கலைஞரா இருக்கட்டும், ஹோட்டல்ல கொச்சை இங்கிலீஷ்ல பேசி சிரிக்க வைக்கற வெயிட்டரா இருக்கட்டும், குறிப்பா அனுஷ்கா ஷர்மா பந்தயம் கட்டிட்டு ஆத்துல எறங்கி குளிர்ல நடுங்கரப்போ காப்பாத்துற காட்சியிலா இருக்கட்டும், ஷாருக் கான் King Khan தான். ரொம்ப ஜாலியான ஒரு முகம், ரொம்ப இறுக்கமான போரிங்கான ஒரு முகம், ரெண்டயுமே செமயா வெளிப்படுத்தியிருக்காரூ, (ரப் னே பனாதி ஜோடி படத்துல ரெண்டு பாத்திரமும் ரெண்டு எக்ஸ்ட்ரீமா இருக்கும், அதையே சூப்பரா பண்ணியிருப்பாரு, இதுல ரெண்டும் ரொம்ப சட்டிலா இருக்கும், இத ரொம்பவே அற்புதமா தூள் பண்ணியிருக்காரு)

கத்ரீனா கைப், முதல் முறையா முழு நீள ரொமாண்டிக் படத்துல நடிச்சிருக்காங்க, லண்டன்ல வாழ்ற, தம் அடிக்கற, எனக்கு இந்திய மாப்ள வேணாம், அவங்க எல்லாம் கருப்பா இருக்காங்கன்னு ஜீஸஸ் கிட்ட வேண்டிக்கற, ஆனா அதே நேரம் இந்திய பண்பாடு விட்டுப்போகாத பொண்ணா கன கச்சிதமா பொருந்தி இருக்காங்க, இது வரைக்கும் ஒரு கிளாமர் டோலா மட்டுமே படத்துல வந்திட்டு போனவங்க, முதல் முறையா தன்னாலும் நடிக்க முடியும்ன்னு காட்டி இருக்காங்க, அந்த வகையில சுப்பர்.

ராப் னே பனாதி ஜோடி படத்துல பார்த்த அனுஷ்காவுக்கும்,  இதுக்கும் நூறு வீத வித்தியாசம். அந்த பாத்திரத்துக்கு அப்படியே நேர் எதிரா, மேக் அப் - பிரேக் அப் கலாசார இன்ஸ்டன்ட் காதல் உலகத்துல வாழுற, அடிக்கடி இங்கிலீசுல கெட்ட வார்த்த பேசிக்கற நவ நாகரிக பொண்ணா ரொம்ப கான்வின்சிங்கா இருக்காங்க. ப்ரீதி-ராணி, கரீனா-பிரியங்கா வுக்கு அப்புறமா தீபிகா-அனுஷ்கா தான் அடுத்த பாலிவுட் கிளாமர் கம் அக்டிங் ஹீரோயின்ஸ் ஜோடின்னு அடிச்சு சொல்றாங்க.

ரஹ்மான் சாரோட பின்னணி இசை ஒரு ரொமாண்டிக் படத்துக்கு உரிய விதத்துல இருக்கு. திரையில தெரியற காட்சி கண்ணுல தெரியுதா, காதுல தெரியுதான்னு புரியாத அளவுக்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் போட்டி போட்டுக்கிட்டு இருக்கு படம் முழுவதும். பாடல்கள் கேட்டதும் பிடிக்கும் ரகம் கெடயாது. ஆனா படம் பார்த்ததுக்கு அப்புறம் இருந்து இந்த ஒரு வாரமா ஜப் தக் ஹேய் ஜான் பாடல்கள்தான் கேட்டுக்கிட்டே இருக்கேன். சல்லா, சான்ஸ், ஹீரு, இஷ்க் சாவா, ஜியாரே எல்லாமே அற்புதம்.

இயக்குனர் யாஷ் சோப்ரா, தனக்கே உரிய பாணியில, ஒரு காதல் கதைய, ஆனா இன்றைய இளைஞர்களையும் கவரும் வகையில இயக்கி இருப்பது, அதுவும் தனது என்பதாவது வயசுல இவ்வளவு இளமையா ஒரு படத்த இயக்கியிருப்பது வியந்து பார்க்க வைக்குது. சமீபத்திய இந்தி படங்கள் எல்லாமே கொஞ்சம் மேற்கத்தைய கலாசாரத்தையும், முறை தவறிய காதல்களையும் மையப்படுத்தி வரும்போது, 90 களின் அதே பழைய காதல் கதையா கொஞ்சமும் சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்திருப்பது யாஷ் சோப்ராவின் அனுபவத்தை சொல்கிறது. இனிமேல் "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்" பார்க்க முடியாமல் போகுமே என்கிற ஏக்கம் எழுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

ஜப் தக் ஹேய் ஜான் - A Yash Chopra Romance Dressed in Modern Outfits.

டிஸ்கி: என்னங்க இது? பதிவ எழுதி பப்ளிஷ் பண்ண பிறகு , திடீர் திடீர்ன்னு காணமா போகுது? "An error occurred while trying to save or publish your post. Please try again. Ignore warning"  ன்னு வருதே? 

Sunday, November 11, 2012

இந்திய சினிமாவின் நடன ஜாம்பவான்கள் : வீடியோ பதிவு/பகிர்வு

ஆடலும் பாடலும் இந்திய சினிமாவின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. நாட்டிய பேரொளியில் தொடங்கி சாந்தனு, அதர்வா வரையில் நம்மை நடனத்தால் கட்டிப்போட்டவர்கள் பலர். கமல் ஹாசன், சிம்ரன், மாதுரி தீக்ஷித், கோவிந்தா, பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற பல காலத்தால் அழியாத நடனக் கலைஞர்களை கண்டது இந்த இந்திய சினிமா. இன்றைய காலகட்டத்தில் சிறந்த சினிமா நடனக் கலைஞர் யார் என்பது பல இடங்களில் ஒரு போட்டியாகவே நடந்து கொண்டிருக்கிறது. என்னை கவர்ந்த சிலரது நடனங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

இளைய தளபதி:

ஷஹீத் கபூர்: 


ஹ்ரித்திக் ரோஷன்:


அல்லு அர்ஜுன்:


ஜூனியர் NTR:

ஸ்ரேயா சரண்:


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:
டிஸ்கி 1: சிம்பு, தனுஷ், பரத், ஜெயம் ரவி, வினீத், ரஹ்மான், பிரசாந்த், அர்ஜுன்,  நிதின், ராம், அனுஷ்கா ஷர்மா (இந்தி), இலியானா இன்னும் பல பேர் பட்டியலில் விடுபட்டிருக்கலாம். எல்லாரோட வீடியோவும் போட்டா அப்புறம் யூடியூப் எதுக்கு இருக்கு?

டிஸ்கி 2:  நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன் ரஹ்மான் பின்றாருப்பா....


விஷ் யூ ஆல் ஹாப்பி தீபாவளி!!