Monday, October 29, 2012

சின்மயியும் இணைய சுதந்திரமும்


கடந்த சில நாட்களாக வலைப்பூக்களில் எரியும் ஒரு பிரச்சினை இந்த சின்மாயி விவகாரம். இரு தரப்புக்கும் எதிராகவும், ஆதரவாகவும் பல பதிவர்களும், ஜாம்பவான்களும் பல பதிவுகள் இட்டாகிவிட்டது. இந்த பிரச்சினையின் அடிப்படை பற்றிய போதிய புரிந்துணர்வு என்னிடம் இல்லை. எனவே யார் சரி, யார் தவறு, அல்லது எது நியாயமானது போன்ற அதி புத்திசாலித்தனமான கருத்துக்களை நான் சொல்லப்போவதும் இல்லை. ஆயினும் நானும் ஒரு ப்ளாக்கர் என்கிற வகையில் எனக்கும் இது தொடர்பான சில கருத்துக்கள் இருக்கு, அது பற்றிய ஒரு பதிவே இது.

சின்மயி ஒரு சிறு பிள்ளைத் தனமான பிரபலம். சினிமா பிரபலம் என்கிற வகையில் இருப்பவர், பொது வெளியில் தனது குழந்தை தனமான கருத்துக்களை முன்வைக்கிறார். சிலர் அவற்றை கவனிக்காது விட்டு விடுகிறார்கள், சிலர் எதிர்வினை ஆற்றுகிறார்கள். அது அவரவர் எண்ணத்தை பொறுத்தது, அதில் குறை கூற நான் விரும்பவில்லை. சினிமாவுடன் தொடர்புடையவர்கள் சமூக, அரசியல் பிரச்சினைகளில், ஆழ்ந்த ஞானமோ, தெளிவான கருத்துக்களோ அல்லது போதுமான தெளிவோ கொண்டிருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது அல்ல, ஆயினும் அவர்கள் அனைத்து விடயத்திலும் அக்கறை எடுக்கவேண்டும், கருத்து சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமானதும் அல்ல. பிரபலங்களை அவர்கள் துறை சார்ந்து மட்டுமே நோக்க வேண்டும், சின்மயி நல்லா பாடடுறாரா? நல்லா பின்னணி குரல் கொடுக்கறாரா அவ்வளவுதான், அதையும் தாண்டி சென்சிடிவ்வான விடயங்களில் அவரது பங்களிப்பு எவ்வாறு இருக்கறது, நாங்க ட்விட்டரில் ஒரு போராட்டம் நடத்துறோம் ஆதரவு தா எனக் கேட்பது பொருத்தமானதல்ல.


தவறான கருத்தாயினும் தனது சுய கருத்தினை முன்வைக்கும் சுதந்திரம் ஒருவருக்கு இருக்கிறது. ப்ளாக்கர், ட்விட்டர், பேஸ்புக் இன்னும் இதர விதர சமூக வலைத் தளங்கள் நமக்கு அளித்திருக்கும் பெரும் கொடை அது. அதே நேரம், தனக்கு போதிய அறிவு இல்லாத விடயத்தில் கருத்து தெரிவிக்காது இருக்க வேண்டிய பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது, இல்லை அக்கருத்துக்களை குறைந்த பட்ச நாகரீகத்தோடு முன்வைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. சென்சிடிவ்வான விடயங்களில் கருத்துச் சொல்லும் போது வரக்கூடிய எதிர்வினைகளை கையாளும் மனோ பக்குவமும், கருத்து மோதல்கள் எழும்போது நாகரீகத்தை கடைப்பிடிக்கும் அடிப்படை அறிவும் அவசியமாகிறது. இவை இல்லாத விடத்து கருத்துக்களை தவிர்த்துக் கொள்வது கடமையும் ஆகிறது. உனது கருத்து தவறானது, அதை முன்வைக்கும் உரிமை உனக்கு இல்லை என நாம் வாதாட போனால் அது ஒரு வகை பாசிசமே. தவறான கருத்துக்கள் முன்வைக்கப் படாத விடத்து, அவற்றை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் மறுக்கப் படுகிறது. பரந்து பட்ட இந்த இணையவெளியின் அவசியமும் அற்றுப் போகிறது. அந்த அடிப்படையில் யார் வேணுமானாலும், (சில விதி விலக்குகள் தவிர) என்ன வேணுமானாலும் பேசலாம், அதுதான் கருத்துச் சுதந்திரம்.

ஆனால் எப்படி வேணும்னாலும் பேசலாம் என்பது கருத்துச் சுதந்திரம் கிடையாது. அது ரவுடியிசம், அல்லது தாதாயிசம். இதுவே இன்று தமிழ் சமூக வலைத்தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சென்சிடிவ் விடயம் அல்லது ஒரு சமூகம் தொடர்பான கருத்தினை முன்வைக்கும்போது எப்படி முன்வைக்கவேண்டும் என்கிற அடிப்படையை சின்மயி காணத்தவறி விட்டார். அதை எதிர்க்கும் போது அதை எவ்வாறு எதிர்க்கவேண்டும் என்கிற அடிப்படையை எதிர்பவர்களும் காணத் தவறி விட்டார்கள். இருவரும் செய்தது மிகப்பெரிய தவறு. பொது வெளியில் ஒருவர் ஒரு கருத்தினை முன்வைக்கும்போது, ஒருவர் எதிர்வினை ஆற்றுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள், இப்போது முதல் கருத்துப் பரிமாறியவர் எதிர்வினையாளரின் பக்க நியாங்களை உணர்ந்து தனது கருத்தினை திருத்திக் கொள்ளும்போது, அல்லது எதிர்வினையாளருக்கு தன் பங்கு நியாங்களை எடுத்துரைக்கும் போது, அது கருத்து பரிமாற்றமாக அமைகிறது. 
அதே நேரம் ஒருவரது ஈகோ, ஆணவம், அகந்தை, மாற்றுக் கருத்துக்களுக்கு அனுமதியாளிக்காத தன்மை போன்ற தனிப்பட்ட இயல்புகள் தலை தூக்குமிடத்து அது கருத்து மோதலாக மாறுகிறது. இரு சாராரும் இவ்வகையான தனிப்பட்ட இயல்புகளை கொண்டிருக்கும் இடத்து அந்த கருத்து மோதலானது தீவிரம் அடைந்து வசை பாடல்களாகவும், யாருக்கு அதிகம் கெட்ட வார்த்தை தெரியும் என்பதை பொது வெளியில் பரீட்ச்சித்துப் பார்க்கும் குழந்தை சண்டையாகவும் மாறி விடுகிறது. இதில் ஒருவர் பிரபலமாக இருந்துவிட்டால், பொது வெளியில் கெட்ட வார்த்தை பேசிக்கொள்வதர்க்குப் பதில் அடுத்தவர் சார்ந்த சமூகத்தை அல்லது பிற விடயங்களில் அடுத்தவர் கொண்டிருக்கும் கருத்துக்களை தாக்க ஆரம்பிக்கிறார், பிரபலம் இல்லாதவர்களாயின் அடுத்தவர் குடும்பம், பிறப்புறுப்பு முதல் அனைத்தையும் வசை பாட ஆரம்பிக்கிறார். இதுவே சின்மயி, விவகாரத்தில் நடந்தது, சமீப காலமாக இணையத்தில் நடந்து வருவது. 

இங்கு ஏனைய, அரசியல், சமூக, சமய காரணிகள் சேருமிடத்து, அது குளுப்பிரச்சினயாகி, பின்னர் பொதுப்பிரச்சினயாக உருமாறி, சந்திக்கு வந்துவிடுகிறது. சம்பந்தப்பட்டவர்களின், அரசியல் பின்னணி போன்ற காரணிகள் இவ்வாறான பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப் படுகிறது என்பதில் செல்வாக்கு செலுத்துகிறது. அடிப்படையான கருத்தோ, கருத்து பரிமாற்றமோ முழுதாக மறைந்து பிரச்சினை வேறு பரிமாணத்தை பெறுகிறது. ஒவ்வொருவரும் சுய லாபம் தேடும் நோக்கில் பிரச்சினையை திரிப்பதும், நடக்கிறது. இவ்வாறான ஒரு சுதந்திரமே நாம் இன்று கருத்துச் சுதந்திரம் என்னும் போர்வையில் கொண்டிருப்பதும், காப்பாற்ற போராடுவதும். உண்மையில் கருத்துச் சுதந்திரம் என்பது நமக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம். அதை பேணிப் பாதுகாப்பது நாம் ஒவ்வொருவர் மீதும் உள்ள கடமை. பொது வெளியில் நாம் நமது சுதந்திரத்தை எவ்வாறு பயன் படுத்துகிறோம் என்பதே நாம் இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த சுதந்திரத்தை அனுபவிக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும். பின் குறிப்பு: 
இது கருத்துப் போராக மட்டுமே இருக்குமானால் ராஜனை ஆதரிக்க தோன்றிய போதிலும், அவரது ட்வீட்டுக்களின் ஸ்க்ரீன்சாட்டுகள் என சொல்லப்படுனவற்றை படிக்கும் போது அவருக்கு ஆதரவளிக்க மனம் மறுக்கிறது. அதற்காக இந்த விடயத்தில் அவர் மேல் மட்டுமே தவறு இருப்பதாக அர்த்தம் அல்ல, தனது பிரபல்யத்தை துஷ்பிரயோகம் செய்ததது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழர்கள் மனதும் புண்படும்படியான குழந்தை தனமான கருத்துக்களை பொது வெளியில் பரப்பியது சின்மயி செய்த மிகப்பெரிய தவறு. அதிகார பலம் காரணமாக பிரச்சினையின் மையத்தையே திசை திருப்பப்பார்பதும் பெரும் தவறு. 

மேலும் படிக்க: 
சின்மயி கைது செய்யப்படுவாரா? - செங்கோவி 
ராஜனின் கைது ; கற்பிக்கப்படும் இணைய சுதந்திரம்? -ஜீ
ட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன ? - ராஜ்

9 comments:

 1. சின்மயிக்கு ஒரு கடிதம்...!

  http://kaviyulagam.blogspot.com/2012/10/blog-post_29.html

  ReplyDelete
  Replies
  1. செம காமெடியான பதிவுதான் போங்க...

   Delete
 2. சூப்பர் தல... பிரச்சனையை நல்லா ரெண்டு பக்கத்தில் இருந்தும் ரொம்ப நல்லா அலசி இருக்கீங்க..ரொம்ப ஈசியாக எல்லோருக்கும் புரியிற மாதிரி எழுதி இருக்கீங்க... :)
  அப்புறம் கடைசியில உங்களையும் ஆரசியல்வாதியா ஆக்கிட்டாங்களே (முதல்வன் அர்ஜுன் கிளைமாக்ஸ் டயலாக்)

  ReplyDelete
  Replies
  1. அரசியல் வாதி எல்லாம் கெடயாது பாஸ், பிரச்சினையை அலசி ஆராயவும் இல்லை. பிரச்சினை திசை திருப்பப்பட என்ன காரணம் என்பதை மட்டுமே கூற நினைக்கிறேன்.

   Delete
 3. நல்ல பதிவு..சின்மயி சொல்லும் பொய்களைத் தான் தாங்க முடியவில்லை..பிரபலம் என்ன சொன்னாலும் உண்மை என்று எண்ணும் மீடியாக்களை என்ன செய்வது?

  ReplyDelete
  Replies
  1. ஆமாண்ணே, இப்போதான் சிபி அண்ணனோட ப்ளாக்ல வீடியோ பார்த்தேன், என்னென்னமோ சொல்றாங்க, செம கொடும. என்ன நடந்ததுன்னே தெரியாம அந்த ப்ரோக்ராம் பார்க்குறவங்க சின்மாயிக்காக வரிந்து கட்டிக்கொண்டு போனாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை.

   Delete
 4. இரண்டு பக்கமும் பிழைகள் இருக்கு.

  ஆனால் இந்தக் கைதின் பின்னாலிருப்பது அயோக்கியத்தனம், பணபலம், பின்புலம் வெறிபிடித்த பழிவாங்கல் மட்டுமே! சின்மயி தனது விஷமத்தனமான ட்வீட்டுக்களை அழித்து, ராஜனின் டிவீட்களை ஸ்க்ரீன் ஷாட்ஸ் எடுத்து எல்லாமே திட்டமிட்டு!

  //சின்மயி ஒரு சிறு பிள்ளைத் தனமான பிரபலம். சினிமா பிரபலம் என்கிற வகையில் இருப்பவர், பொது வெளியில் தனது குழந்தை தனமான கருத்துக்களை முன்வைக்கிறார்//

  குழந்தைத்தனம் என்று சொல்லுபோது மட்டும் ஒன்றைச்சொல்ல விரும்புகிறேன். தகவலுக்காக மட்டும்! ராஜனுக்கு சின்மயியை விட மூன்று வயது குறைவு!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜீ. இந்த பிரச்சினை ஆரம்பிக்க முதலே சின்மயி ட்வீட்களால எரிச்சலடைந்து அன்பலோ பண்ணிட்டதால, பிரச்சினை பற்றி முழுதாக தெரியாது. "குழந்தை தனமான" என்பது வயதை பொறுத்ததல்ல, அனுபவத்தை, அறிவு மட்டத்தை பொறுத்தது. இந்த பிரச்சினையை சின்மாயி-ராஜன் பிரச்சினையாக பார்க்க விரும்பவில்லை, அதனாலேயே யார் சரி, யார் தவறு போன்ற விவாதங்களை முழுதாக தவிர்க்க நினைக்கிறேன். நான் பேச நினைத்தது கருத்துச் சுதந்திரத்தை காப்பதில் நமக்கு இருக்கும் பங்கு பற்றி மட்டுமே. சின்மயி செய்ததும் செய்தது கொண்டிருப்பாதும் மிகவும் தவறானது, கண்டிக்கப்பட வேண்டியது.

   Delete
 5. நண்பா நடுநிலையா பார்த்து இருக்கீங்க.. ஆரம்பத்தில இருந்தே இப்படி சின்மயி விடயத்தில் ஆர்வம் காட்டவில்லை.. சாதா மணலுக்கு நாமே விலை ஏற்ற கூடாது என்பதற்காக..

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!