Monday, February 11, 2013

விஸ்வரூபம், கமல், பி ஜே - சர்ச்சைகளும் சில கருத்துக்களும்

பதிவரானதுக்கு அப்புறம்தான் எத்தன எத்தன பிரச்சினை. முன்பெல்லாம் பதிவுகள படிக்கறப்போ ஒரு சந்தோஷம் இருக்கும், இப்போல்லாம் இந்த பக்கம் வந்தாலே ஒரே மன உளைச்சல், தலைவலி, வயிற்ருப் போக்கு, வாந்தி பேதிதான். ஏதாவது ஒரு சின்ன காரணம் கெடைச்சா போதும் அடிச்சிக்கறதுக்குன்னு ஒரு கூட்டமே இருக்கு, இதுக்கு நடுவுல எரியற நெருப்புல எண்ணைய ஊத்திவிட்டு குளிர் காயறதுக்குன்னு ஒரு கூட்டம், நமக்கு சம்பந்தமே இல்லையின்னாலும் ஒரு நாலு பதிவ போட்டு ஹிட்டு வாங்குறதுக்கும் சண்டைய மூட்டி விடுரதுக்கும்ன்னு. இதெயெல்லாம் படிக்கறப்போ இதுல எல்லாம் இருந்து ஒதுங்கியே இருக்கலாம்ன்னு நினைச்சா, நீயும் ஒரு பதிவர், உனக்கும் சில சமுதாய பொறுப்பு இருக்குன்னு நம்மளையும் இழுத்து விடுறதுக்குன்னு நாலு நண்பர்கள். இந்த சின்ன வயசுல இத்தன பிரச்சினைகளையும் நான் எப்படித்தான் சமாளிக்க போறேனோ? என்ன நடந்தாலும் நடக்கட்டும்ன்னு என்னோட கருத்துக்களையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன்.


கமல் எனும் கலைஞருக்கு ஆதரவாளர்களும் எதிரிகளும் ஏராளம். உண்மைய சொல்லப்போனா எதிரிகள்தான் ஏராளம், எதோ ஒரு காரணுத்துக்காக அவர எதிர்கறதுக்கு ஏதாவது ஒரு கூட்டம் எப்பவுமே இருக்கும். அந்த கூட்டத்த எதிர்கறவங்க எல்லாரும் உடனே கமல் ஆதரவாளர்களாக மாறிடுவாங்க. கமல் எதிர்ப்பு தனிப்பட்ட குழு அரசியல விட பெரிதாக இருக்கறப்போ எதிரிக்கு எதிரி நண்பன்னு சில பேர் அந்த கூட்டத்த ஆதரிக்கவும் செய்வாங்க, இன்னும் சிலபேர் சும்மா இருந்த எவனயாவது சீண்டி விட்டு எதிர்ப்ப கிளப்பிவிட்டு அதுல குளிர் காஞ்சிட்டு இருப்பாங்க. இது இன்னிக்கி நேத்து இல்ல கடந்த பத்து பதினச்சு வருசமா நடத்துக்கிட்டுத்தான் இருக்கு. இன்னிக்கி என்னன்னா குழு அரசியல்கள் கமல் எதிர்ப்பையும் தாண்டி வலுப்பெற்றிருக்கு. அதனால எப்பவுமே ஒரு கலைப் படைப்பை "கலை நேர்த்தி/நேர்மை" அடிப்படையில் வைத்து விமர்சிக்கக் கூடியவர்கள் கூட, இந்த குழு அரசியலை மையப்படுத்தியே விமர்சனத்த தொடுக்கறாங்க. இப்படியே போய்க்கிட்டு இருந்தா சீக்கிரமே தமிழ் சினிமா ஹாலிவூட் குப்பைகளை மிஞ்சிவிடும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்லை. இதுதான் நம் முன்னே இருக்கும் நீண்டகால பிரச்சினை. 

இத விட்டுட்டு குறுகிய கால பிரச்சினை என்னன்னு பார்த்தோம்னா விஸ்வரூபமும் அதை சூழ உள்ள சர்ச்சைகளும்.

முதலாவதா விஸ்வரூபம் படத்தை ஒரு சாதாரண வணிக சினிமாங்கற தரத்தை விட உயர்த்திப் பார்க்கவேண்டிய எந்த தேவையும் இல்லை. படம் ஒரு கருத்தையும் போதிக்கவும் இல்லை, எந்த நியாயமான விவாதத்தை கிளப்பவும் இல்லை. தீவிரவாதத்தையும், சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும், உலக அரசியல் குழப்பங்களையும் வணிகமாக்கும் சாதாரண மூன்றாம்தர ஹாலிவூட் உத்தி வணிக முயற்சிதான் இந்த சினிமா. படத்தில் போதிக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுப்புத்தியின் அடிப்படையில் உருவானதே அன்றி எங்கும் ஒரு ஆழமான பார்வை கிடையாது. விஸ்வரூபம் படம் பார்த்தவர்கள் யாரும் இதை மறுக்க முடியாதுங்கறது என்னோட கருத்து. கமல் ஒரு நேர்மையான கலைப் படைப்பை கொடுக்க மறுபடியும் தவறிவிட்டார். இன்னுமொரு வகையில் சொல்லப்போனால் ஆயுத எழுத்துங்கற படத்தை எடுத்து மணிரத்தினம் எப்படி மணிரத்தினம்கற மாயையை உடைத்தாரோ அதே போன்று விஸ்வரூபம் படம் மூலம் கமல் என்கிற மாயையை கமலும் உடைத்திருக்கிறார். இனியும் ஒரு பொறுப்பு வாய்ந்த கலைஞராக கமல் குறைந்தபட்ச கலை நேர்த்தியுடன் செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஒரு தீவிர கமல் ரசிகனான எனக்குக் கூட இல்லை. வணிக வெற்றிக்காக கமல் எதையும் செய்வார் என மீண்டும் அடித்துக் கூறியிருக்கிறார் கமல்.

படத்தோட ஸ்கிரிப்ட் முழுசா எழுதி முடித்ததும் ஆப்ரூவலுக்காக அமேரிக்கா அனுப்பி வைத்ததாகவும், ஸ்கிரிப்ட்டில் எழுதிய பல சம்பவங்கள் அதன் பின்னர் நிஜத்தில் நடந்ததாகவும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் கமல் கூறுகிறார். ஒரு தமிழ் சினிமாவை எடுக்க அமெரிக்க அரசிடம் அனுமதி கோரும் கமல், தமிழ் நாட்டில் எத்தனையோ முஸ்லீம்கள் வாழும் போது, ஒரு முஸ்லீமிடம், தலிபான்கள் குரான் முன்னாடி கொல்றாங்களே இதத்தான் குரான் சொல்லுதான்னு ஒரு கேள்வி கூடவா கேட்க்க முடியாது? அது போகட்டும், இந்த படத்தின் தடையை அனுமத்தித்தால், ஒரு குழுவிடம் காட்டி அனுமதி பெற்றுவிட்டுத்தான் திரையிட வேண்டும்ன்னு எதிர்காலத்துல சட்டம் வரும்ன்னு பயப்படுபவவர்கள், விஸ்வரூபம் போன்ற முன்னுதாரணங்கள் வந்தால் ஒரு தமிழ் படம் எடுக்க கூட அமெரிக்க அரசிடம் அனுமதி கோரவேண்டி இருக்கும் அதனால் விஸ்வரூபம் போன்ற படங்களை எதிர்க்கிரோம்ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு கூட சொல்லாமல் இருப்பதும் இந்த எதிர்ப்பும் ஆதரவும் நேர்மையானதா இல்லை குழு அரசியலா என்கிற சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தவே செய்கிறது.


இப்போ இந்த படத்த எதிர்க்கலாமா? கருத்தியல் ரீதியாக இந்த படத்துக்கு விமர்சனம் முன்வைக்கலாம், அதுதான் நியாயம், ஆனால் படத்தை கண்மூடித்தனமாக எதிர்க்க முடியாது. இந்தப் படம் இஸ்லாத்தை கேலி செய்கிறது என்கிற வாதம் எந்தளவு அபத்தமோ, இந்த படம் தீவிர வாதத்தை எதிர்கிறது எனும் வாதமும் அதே அளவு அபத்தமாகவே எனக்கு படுகிறது. ஒரு கலைஞனுக்கு அவனது எண்ணத்தில் உதித்த ஒன்றை ஒரு படைப்பாக்கி மக்கள் முன் சமர்ப்பிக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. ஒரு படைப்பை உருவாக்கும் வரையில்தான் அது நமக்கு சொந்தம், அதன் பின் அது நுகர்வோன் சொத்து ஆகி விடுகிறது என்பதை படைப்பாளியும் மறக்கக் கூடாது. ஆப்கான் - அமெரிக்கப் போராட்டத்தை ஒரு தமிழ் படமா எடுக்கனுமாங்கறது தேவை அற்ற வாதம். அதை தமிழ் படமா எடுக்கும்போது எப்படி வேணும்னாலும் எடுப்பேன்ங்கறதும் ஒரு பொறுப்புள்ள படைப்பாளி முன்வைக்கக் கூடிய வாதம் அல்ல. முடிவா விஸ்வரூபம் மீது தடை கோரி நடத்தப் பட்ட போராட்டம் நியாம் அற்றது, வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது. அதேபோன்று, ஒரு குழு அந்தப் படத்தை தடை கோரி போராடியது என்கிற ஒரே காரணத்துக்காக, ஹாலிவூட் தரத்தில் ஒரு தமிழ் சினிமா, தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு அற்புதமான படம், இதை எல்லாரும் ஆதரிக்கனும், இதை எதிர்கறவன் எல்லாம் தீவிரவாதின்னு சொல்றதும் நேர்மை அற்ற வாதம்.

இதை நான் நேர்படவே கூறவேண்டும், திரு பீ. ஜே அவர்களின் ஒருமணிநேர விஸ்வரூப உரையை பார்க்கும் துர்பாக்கிய நிலைமை எனக்கும் ஏற்பட்டது. அந்த உரையை முற்றும் முழுதாக நான் கண்டிக்கறேன். மாற்றுக் கருத்தை நாகரீகமான முறையில் முன்வைக்க வேண்டும். மானுஷ்ய புத்திரனை வேறு பெயர் சொல்லி அழைப்பதையோ, பாரதிராஜாவை மோசமான முறையில் கேலி செய்வதையோ யாரும் அனுமத்திக்க முடியாது. எந்த ஒரு கருத்து மோதலிலும் தனி மனித தாக்குதல் இருக்கக் கூடாது. இஸ்லாத்தின் மீது சேறை வாரி இறப்பது விஸ்வரூபம் போன்ற படங்கள் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது மிகவும் தவறு, இது போன்ற உங்கள் நடவடிக்கைகளும் தான். இஸ்லாம் அதிகளவில் தவறாக புரிந்துகொள்ளப் பட்ட ஒரு மார்க்கம் என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லீம் நண்பர்களுடன் பழகிய எவரும் மறுக்க மாட்டார்கள். முஸ்லீம் அல்லாதவர்கள் மட்டும் அல்ல முஸ்லீம்களில் கூட பெரும் பகுதியானவர்கள் இஸ்லாத்தை தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது இது சம்பந்தமாக வெளிவந்த சில பதிவுகளையும் அதற்க்கான பின்னூட்டங்களும் படிக்கும் ஒருவருக்கு தெளிவாகத் தெரியும். திரு கமல் ஹாசன் அவர்களுக்கு ஒரு படைப்பாளியாக எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதைவிட நூறு மடங்கு அதிக பொறுப்பு பீ ஜே போன்ற தலைவர்களுக்கு இருக்கிறது. இஸ்லாத்தை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள். விஸ்வரூபம் படத்தை நேர்மையான முறையில் விமர்சிக்கும் பொறுப்பு ஒரு கலை விமர்சகருக்கு இருப்பது போல, பீ ஜே அவர்களின் செயல்களை கண்டிக்கும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இருக்கிறது. 


தாலிபான் என்பது ஒரே அமைப்பாக இருந்தபோதும், தாலிபான்களில் அடிப்படை நோக்கம் சம்பந்தமாக மூன்று பிரிவு இருக்கிறது. ஒன்று ஆப்கானிஸ்தானை முன்னேற்ற வேண்டும் என்கிற நோக்கில் ஆப்கான் மக்களால் உருவாக்கப் பட்டது, ரெண்டு ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியிலும் கல்வி, கலாசார ரீதியிலும் பாகிஸ்தானுக்கு அடிமையாக வைத்திருக்கவேண்டும் என்கிற நோக்கில் பாகிஸ்தானினால் உருவாக்கப் பட்டது, மூன்று இஸ்லாத்தை பயங்கரவாத மதமாகவும், உலகின் பொது எதிரியாகவும் சித்தரிக்க வேண்டும், அதன் மூலமாக தனது எண்ணை வழியை அமைத்துக்கொள்ள ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் அடிமைப்படுத்த அமெரிக்காவால் உருவாக்கப் பட்டது. இதில், இஸ்லாத்துக்கான போராட்டம், ஜிஹாத் இதர விதரங்கள் எங்கும் இல்லை. சுய நிர்ணய உரிமைக்காக போராடும் தலிபான்களை எதிர்க்க வேண்டிய எந்த அவசியமும் அமெரிக்க அடிவருடிகளை தவிர யாருக்கும் இல்லை, அதே போன்று இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த பெண்கள் உரிமையயை, சிறுவர் உரிமையை மறுக்கும் தலிபான் பிரிவினரதும், பொருளாதார ரீதியில் ஆப்கானை வீழ்த்த புத்தர் சிலையை தகர்த்த பிரிவினரையும் மதத்தின் பெயரால் ஆதரிக்கும் எந்த தேவையும் உலகில் எந்த மூலையில் உள்ள எந்த முஸ்லீமுக்கும் இல்லை. இதையும் மீறி ஆப்கான் போரும், அல்கயிதா, தலிபான் தரப்பும் இஸ்லாம் வளர்க்க ஜிஹாத் நடத்துவதாகவும், புனிதப் போராளிகளாகவும், அமேரிக்கா தீவிரவாதத்துக்க்கு எதிரான போர் நிகழ்த்துவதாகவும் இன்னும் யாரும் கற்பனை பண்ணிக்கிட்டு இருந்தா, விஸ்வரூபம் கூறும் "அமெரிக்கன் எண்ணைக்காக போராடுறான் (உண்மை), நாம அல்லாஹ்வுக்காக போராடுறோம் (சுத்தப் பொய்)" டயலாகை நம்பிக்கிட்டு இருந்தா அதைவிட முட்டாள் தனம் எதுவுமே இருக்காது. 

இனி விஸ்வரூபம் படத்தின் கருத்தியல் சம்பந்தமாக சில கருத்துக்கள். 

1. தமிழ் சினிமாவுல இஸ்லாமியர்களை சித்தரிக்கும் போது காலா காலமாக இருந்துவரும் டைப் காஸ்டிங் கமலுக்கு தெரியாது ஒன்றும் இல்லை, அதை உடைக்க நினைக்கும்போது மதத்தையும், மதத்தை பின்பற்றுவோரையும் பிரித்து நோக்கக்கூடிய நிலைக்கு பார்வையாளனை தயார் படுத்த கமல் தவறிவிட்டார். அதற்க்கான சந்தர்ப்பங்கள் திரைக் கதையில் இல்லாமலும் இல்லை எனும்போது சற்று கவலை ஏற்படவே செய்கிறது. எந்த ஒரு மதத்திலும் மதத்தை சரிவர புரிந்துகொள்ளாத ஒரு கூட்டம் இருக்கவே செய்யும், அது மதத்தின் பெயரால் செய்யும் பல காரியங்கள் மதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துவிடும். சரியான புரிதல் இல்லாதபோது, மூன்றாம் தரப்பு அந்த மக்களை இலகுவில் ஆட்டி வைக்க முடிகிறது. தலிபான்கள் எது செய்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஒரு கூட்டம் இருப்பதும் சரியான புரிந்து கொள்ளல் இல்லாததனாலேயே.


2. அமரிக்கர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள்ன்னு தீவிரவாதி வாயாலேயே வாறமாதிரி வசனம் அமைக்கும் போது (அடுத்த காட்சியிலேயே பெண்கள், சிறுவர்கள் தங்கியிருக்கும் இடத்தின் மீது அமெரிக்க வானூர்திகள் கூண்டு வீசுவதாக காட்சி அமைத்த போதும்), அமெரிக்க வீரன் சுட்ட குண்டு தவறுதலாக ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அவன் முகம் சுழிப்பதாக காட்சி அமைக்கும் போது , தீவிரவாதிகள் கொலைசெய்யும்போது பாவிக்கும் குரான் வாசகங்கள், அல்லாஹு அக்பர் கோஷங்கள் தீவிரவாதமும் ஜிஹாதும் ஒண்ணுன்னு சொல்லற ஒற்றைப்படை பார்வயத்தான் உறுதி செய்யுது. மனிதர்களை கொலை செய்வது எவ்வளவு பெரிய தவறுன்னு இஸ்லாம் சொல்லக்கூடிய எந்த ஒரு விடயமும் படத்தில் காட்டப்படாமல் விடுபட்டது கவலை தருவது. ஒரு பொறுப்புள்ள கலைஞராக, ஒன்று கமல் இந்த விடயங்களை தவிர்த்து இருக்கலாம், இல்லை அது தவறு என்பதை சொல்லி இருக்கலாம், தீவிரவாதத்திற்கு எதிரான குரான் வசனங்களை மேற்கோள் காட்டி இருக்கலாம். அல்லது நமது முஸ்லீம்சகோதரர்களாவது கமலையும் கலைஞர்களையும் ஒருமையில் திட்டாமல், குரானின் பெயரால் நடக்கும் கொலைகளை நியாயப் படுத்தாமல், குரான் போதிக்கும் அகிம்சையை எடுத்துக் காட்டியிருக்கலாம்.   

3.FBI அதிகாரியாக வரும் கறுப்பின பெண் முட்டாளாகவும், நாகரீகம் அற்றவளாகவும் சித்தரிக்கப்பட்டும் வெள்ளை அமெரிக்கர்கள் நாகரிக காவலர்களாக சித்தரிக்கப்பட்டும் இருப்பது. வெள்ளைக்கார FBI ஆபீசர் முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக காட்சி இருந்தாலும், அதற்க்கு காரணமாக கமலின் பையிலிருந்து அவர் கண்டெடுத்த துப்பாக்கியை காட்டி அவரது நடத்தையை நியாயப் படுத்தும்போது, இது கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. ஆப்மார்க் ஹாலிவூட் திரைப்பட கறுப்பின குண்டுப் பெண் தான் இவர். இந்த அளவு உலகத் தரத்துக்கு கமல் போயிருக்கத் தேவையில்லை. 

4. தலிபான்கள் பெண்களின் மீது அடக்குமுறையை கையாள்வதாகவும், சிறார்களின் குழந்தைப் பருவம் முற்றிலும் பறிக்கப்பட்டுவிடதாகவும் மிகவும் நுணுக்கமான காட்சிகள் அமைக்கப்பட்டபோதும், நாயகன் பாத்திரம் அதைக் கண்டு பச்சாதாப படுவதாக வந்தபோதும் இஸ்லாம் பெண்களின் உரிமையை, சிறுவர் உரிமையை எவ்வளவு காக்குறது என்பதை காட்ட மறுத்தது அமெரிக்கர்களின் பிரச்சாரத்தை வலிமைப் படுத்துவதாகே உள்ளது. ஒரு ஆப்கான் பெண் மருத்துவரை காட்டுகிறார், என்ஜினீரிங் படிக்க இங்கிலாந்து போக ஆசைப்படும் குழந்தையை காட்டுகிறார், வீட்டில் ஆங்கிலம் பேசும் பெண்ணை காட்டுகிறார், மனைவியின் ஆஸ்துமாவுக்கு வைத்தியம் செய்ய வரும் பெண்ணை வில்லன் கதாபாத்திரம் கேவலமாக திட்டுவதை காட்டுகிறார், அதற்க்கு அந்த பெண் அமெரிக்க கைதிகள் இருக்கும் இடத்தை அமெரிக்கர்களுக்கு தெரியப்படுத்திவிடக் கூடும் என காரண வசனம் வைக்கிறார், இருப்பினும் பெண்ணுரிமை, சிறார்கள் உரிமை மீறப்பட்டதாக மட்டுமே பார்வையாளன் எடுத்துக்கொள்ளக் கூடியாதாக அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. கமலின் நேர்மைக்கும் வணிகத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டமோ? 

5. தலிபான்கள் பாவிக்கும் தொப்பி, தாடி, அலங்காரங்கள், அமெரிக்க உலங்கு வாநூர்த்திகளின் நிறம் அமைப்பு போன்ற பல நுணுக்கமான விடயங்களில் கமலின் ஆராய்ச்சியும், கவனமும் மெய் சிலிர்க்க வைக்கும் அதே வேளை, ஆப்கான்-அமெரிக்க போர் சம்பந்தமான அரசியலில் கொஞ்சமும் அக்கறை அற்று பொதுப் புத்தியை மட்டுமே மையமாக கொண்டு கதையையும், கதைக்கான கழத்தையும் அமைத்திருப்பது ரொம்பவுமே வேதனை தருகிறது. படத்தில் பலவாறான காட்சிகளும் இருக்கின்றன, ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட விதம், கொஞ்சம் அமெரிக்க பக்கச்சார்ப்பு அதிகம் இருப்பதான, ஒரு வித சமநிலை பேணப்படாததான உணர்வை தருகிறது. ஒருத்தனுக்கு தீவிரவாதி இன்னொருத்தனுக்கு போராளின்னு சொல்வாங்க, அமெரிக்க ராணுவம் நடத்தும் கொடுமைகளையோ, குண்டு வீசி கொல்லப்பட்ட குழந்தைகள் பெண்களையோ, பொருளாதார ரீதியாக அந்த மக்கள் மீது தொடுக்கப்படும் யுத்தங்களையோ பற்றிப் பேசுவதை மிகக் கவனமாக தவிர்த்திருக்கிறார் கமல். தீவிரவாதி தலைவன் தனது குடும்பத்தை பறிகொடுத்துவிட்டு அழும் காட்சியும் அதற்க்கான அழுத்தமும், அவன் பெண் மருத்துவரை திட்டும் காட்சிக்கான அழுத்தத்தின் பாதி கூட இல்லை. விஜயகாந்த், அர்ஜுன் படங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல இந்த படம், என்ன ஒரு வித்தியாசம் அவை இந்திய தேசப்பற்றை வலியுறுத்தும், இது அமெரிக்க தேசப்பற்றை வலியுறுத்துகிறது.

6. படம் தொடுக்கும் கருத்தியல் அரசியலை தள்ளிவிட்டுப் பார்த்தல் ஒரு ரசிக்கக் கூடிய என்டேர்டைன்மென்ட் சினிமாதான் இது. ஆயினும் விஸ்வரூபம் படம் எடுப்பதற்கு கமல் ஹாசன் தேவையில்லை, முருகதாஸ் போதும். கமல் ஹாசன் எனும் படைப்பாளியால் எல்லா விதத்திலும் இதை விட சிறந்த சினிமாவை வழங்க முடியும். இனிவரும் காலங்களிலாவது செய்வாரா கமல்? (விஜய் ரசிகர்களுக்கு வரிசையாக குருவி, வில்லு, சுறா போன்ற படங்களை பார்த்துவிட்டு காவலன் பார்த்ததான அனுபவம், கமல் ரசிகர்களுக்கு விஸ்வரூபம். அழுறதா சிரிக்கறதான்னு தெரியல)


டிஸ்கி: இன்னும் படம் சம்பந்தமான பல கருத்துக்கள் இருப்பினும் பதிவின் நீளம் கருதி(யும், பார்த்து ரொம்ப நாள் அனதால மறந்துவிட்ட காரணத்தினாலும்), இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 

டிஸ்கி: இஸ்லாத்தின் மீது அமேரிக்கா நிகழ்த்தும் மீடியா பயங்கரவாதமும், முஸ்லீம்கள், முஸ்லீம் நாடுகள் என பெயர் போட்டுக்கொண்டு சிலர்/அல்லது பலர் செய்யும் கலாசார பயங்கரவாதங்களும், அதற்க்கு தெரிந்தோ தெரியாமலோ இலக்காகிவிட்ட தமிழ்நாட்டு முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நண்பர்களும் தங்கள் பக்க நியாங்களையும், உண்மைகளையும் பரிமாறிக் கொள்ளவும், ஆரோக்கியமான விவாதங்களை நிகழ்த்தவும் தெரிந்தோ தெரியாமலோ கமல் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறார். பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அறிவாளிகளின் கடமை. இதை விட்டு நம்ம குழாயடி சண்டைகளில்தான் நிலைத்திருக்க விரும்பினால் எந்த சுப்பனாலயும் நம்ம சமூகத்த காப்பாத்த முடியாது.

டிஸ்கி: நானும் எத்தன நாளைக்குத்தான் மொக்க பதிவாவே போட்டுக்கிட்டு இருக்கறது. சமுகப் பிரச்சினைகள்ள கருத்து சொல்லன்னும்கற ஆர்வம் எல்லாம் எனக்கும் வராதா? என்ன விடுங்கங்க, நான் எல்லாம் மொக்கப் பதிவர்ன்னு தெரிஞ்சே வாழ்ந்துக்கிட்டிருக்கேன், அவனவன் ஒளிவட்டப் பதிவர்ன்னு நெனச்சிக்கிட்டு மொக்க போட்டுக்கிட்டிருக்கான். 

Sunday, January 27, 2013

விஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)


விஸ்வரூபம் திரை விமர்சனத்தை கமல் ஹாசனும் உலகநாயகனும் பதிவின் கடைசி வரிகளில் இருந்து ஆரம்பிப்பதே முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

"விஸ்வரூபம் ட்ரெயிலர் படம் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை, இருப்பினும் வேட்டையாடு விளையாடு போன்ற ஒரு முழு கமெர்சியல் என்டேர்டைனராக அமைந்தால் பெரு மகிழ்ச்சி"

படம் பார்த்து முடிந்ததும் அந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது ஆச்சர்யமாக உள்ளது. விஸ்வரூபம் படத்தை இரு வேறு கோணங்களில் இருந்து விமர்சிக்கலாம். இதில் எதை தெரிவு செய்வது என்கிற தடுமாற்றம் இருக்கிறது. வழக்கம் போல நம்ம பாணியில "கதை, படத்தின் மூலம் உருவான அரசியல்கள்" போன்ற வஸ்துக்களை தள்ளி வைத்துவிட்டு முடிந்தவரை நம்மளவில் நடுநிலையான ஒரு விமர்சனம். 

ஏழு வருடங்களுக்கு (வேட்டையாடு விளையாடுவிற்க்கு) பிறகு  கடைசிவரை பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு கமல் படம். நூறு சதவீத கமெர்சியல் என்டர்டைனர் இந்த படம். "ராஜ் கமல்" நேம் கார்டு போட்டத்துல இருந்து "எண்டு" கார்டு போடுற வரைக்கும் கமல் ஆட்சிதான் படத்துல மேலோங்கி இருக்கு.  படம் முழுதும் "ஒங்கம்மாள ...... (கெட்ட வார்த்தை)...., எப்ப இருந்துடா ஒனக்கு தெரியும்?" அவங்கள பொறந்ததுல இருந்தே எனக்கு தெரியும்" போன்ற கமல் ப்ரேன்ட் காமெடி, வில்லனோட சின்ன பையன கமல் ஊஞ்சல்ல வச்சு ஆட்டுறப்போ பெரிய பையன் வந்து ஒக்காந்து ஆட்ட சொல்றது போன்ற சின்னச்சின்ன இயக்குனர் டச்கள், ஒரு தமிழ் படத்துக்கே உரிய காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன், அப்பப்போ கவர்ச்சி (இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்) எல்லாத்தையும் சரி விகிதத்தில் கலந்த அதே நேரம் சுவாரஷ்யமான திரைக்கதை, கமலோட கலை ஆரவத்துக்கு தீனி போடுற ஒரு கதக் நடனக்காட்சி, அதற்க்கு ஏற்ற நளினம், என் போன்ற கமல் ரசிகர்கள தங்களையும் அறியாமல் விசில் போட வைக்கும் ஒரு சண்டைக்காட்சி, அத்துடன் ஆரம்பிக்கும் ரெண்டாம் அவதாரம். இதைவிட ஒரு கமல் ரசிகனுக்கு என்ன சார் வேணும்? இது நூறு வீத கமல் படம், கமல் ரசிகர்களுக்கும், அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் கமல் ஒரு பெரிய விருந்தே வச்சிருக்கார். அஜித் ரசிகர்களுக்கு மங்காத்தா எப்படியோ, கமல் ரசிகர்களுக்கு விஸ்வரூபம் அப்படி.


படத்தோட பிளஸ்சஸ் மைனஸ்சஸ் பத்தி இனி பார்க்கலாம்.

1. படம் முழுவதும் கமல் கமல் கமல். சில இடங்களில் கமலுக்கு வயசானது தெரிஞ்சாலும், தனது நடிப்பால நம்மள மொத்தமா கட்டிப் போடுறாரு மனுஷன். அப்பாவித் தனமா மூஞ்சிய வச்சிக்கிட்டு பேசுற பல வசனங்கள் செம டைமிங். தசாவதாரம், மன்மதன் அம்புல நொந்து போனவங்களுக்கு பெரிய ரிலீப் விஸ்வரூபத்துல இருக்கு. படத்துல எப்ப எப்ப தேவையோ அப்ப அப்ப  சின்னதா வந்து விழும் காமிக் ரிலீப் இது ஒரு சுப்பர் ஹிட் படம்குறதுக்கான முதல் அறிகுறி.

2.  ஒரு இயக்குனாரா கமல் நிறையவே பாலிஷ் ஆகியிருக்காரு. குட்டிக் குட்டியா நெறைய ஷாட்கள், ஒரே ஷாட்ல பல பக்க வசனங்களால சொல்லமுடியாத பல விஷயங்கள சொல்லிடறார். உலக நாயகன கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு கதைக்கு என்ன தேவையோ அத செஞ்சிருக்கார். கமல் இஸ் பாக் டு போர்ம்.

3. தமிழ் சினிமாவின் சில க்ளீஷேக்களை பயமே இல்லாமல் உடைத்திருக்கறார். குறிப்பா டூயட் பாட்டு கெடயாது, தமிழ் சினிமால வழமையா வரும் காதல்ங்கற கத்தரிக்காய் கெடயாது, ஓவர் சென்டிமென்ட் கெடயாது, எல்லா கதாபாத்திரங்களும் அவுங்க அவுங்க ஸ்பேஸ்  இருக்கு, கதாநாயகனை உயர்த்த மற்றைய கதாபாத்திரங்கள் வலிந்து தாழ்த்தப் படவில்லை (முட்டாள் FBI ஆபிசர் பாத்திரம் தவிர, அதுவும் இல்லன்னா எப்படி?), இதுல பெரிய விஷயம் என்னன்னா படம் முடியற வரைக்கும் இத நீங்க நோட்டிஸ் பண்ணவே மாட்டீங்க. அங்க நிக்கறாரு கமல்.


4. ஸ்ரேயா படங்களை விட அதிக க்ளீவேஜ் இருக்கு படத்துல, ஸ்ரேயா ஓகே, பூஜா குமார்? (என்ன சொல்றதுன்னே தெரியல, ஐ ஆம் வெரி கன்பியுஸ்டு!!)

5. ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி சண்டைக் காட்சி இருக்கு படத்துல, ஆனா எனக்கு என்னமோ அது கொஞ்சம் ஒட்டாத மாதிரி (அதாவது ஒட்டுன மாதிரி) தெரியிது, பல ஹெலிகாப்டர் காட்சிகள், அப்கானிஸ்தான லாங் சாட்ல காட்டுற காட்ச்சிகள், சில ஆக்ஷன் சீக்குவன்ஸ் எல்லா இடத்துலயும் ஒட்டு வேலைப்பாடு ரொம்பவே தெரியுது, கைய வெட்டுறது, கழுத்த வெட்டுறது போன்ற இடங்கள்ள பிளாஸ்டிக் அப்படியே தெரியுது. கிராபிக்ஸ் டிப்பார்ட்மெண்ட் இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கனுமோ?

6. படத்துல நிறையவே ரத்தம், கொலை, நிறைய இடங்கள்ள முகம் சுளிக்க வைக்குது, (தீவிரவாதிய வேற எப்படிக் காட்டுறன்னு யாராவது கேள்வி கேட்டீங்க மூஞ்சில பூரான்  உட்ருவேன் ஆமா, கழுத்த வெட்டி ரத்தம் கொட்டக் கொட்ட கொன்னாத்தான் தீவிரவாதமா? ஒரே துப்பாக்கி குண்டுல, இல்லையின்னா மொத்தமா குண்டு போட்டு தடமே தெரியாம அழிச்சா அது என்ன அகிம்சையா?)


7. படத்துல, ஆடு இருக்கு, மாடு இருக்கு, ஆண்ட்ரியாவும் இருக்கு. (ஆண்ட்ரியா இருக்கறதே பிளஸ்ஸா, இல்ல ஆண்ட்ரியாவும் கூட  இருக்கறது மைனஸான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க)

8. ஷங்கர்-எஹ்ஷான்-லாய் இந்தியில எனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் வரிசையில் உள்ளவர்கள். "கல் ஹோ நா ஹோ" படத்துக்காக தேசிய விருது வேற இருக்கு. ஆளவந்தான்ல இருந்து இதையும் சேர்த்து மூணு நாலு தமிழ் படம் இசை அமைத்திருந்தும் இதுவரை சரியான படம் எதுவும் அமையல. அது ஏன்னுதான் எனக்கும் புரியல.

9. படத்துல காரேக்டரைசேஷன் கொஞ்சம் சொதப்பல், எல்லா கதாபாத்திரத்துக்கும் மல்டிப்பிள் ஷேட் இருக்கே தவிர எந்த கதாபாத்திரத்துக்கும் ஒழுங்கான பேஸ் கெடயாது, எல்லாமே பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் வகையறாதான். உதாரணமா ஹீரோ, வில்லன் ரெண்டுபேருமே முஸ்லிம், ஒருத்தர் தீவிரவாதி, இன்னொருத்தர் மதிப்புக்குரிய இந்திய  RAW ஏஜென்ட். தீவிரவாதிகளும் குண்டு வைக்கிறதுக்கு முன்னாடி நமாஸ் பண்றாங்க, ஹீரோவும் குண்டு வைக்கிறவன புடிக்கறதுக்கு முன்னாடி நமாஸ் பண்ணுறார். ரெண்டுபேருக்கும் கொள்கை அளவுல என்ன வித்தியாசம், ஏன் எதிர் எதிர் அணியில இருக்காங்கன்னு ஒரு சிங்கிள் ஷாட் கூட படத்துல இல்ல. முஸ்லிம் தீவிரவாதிகள வில்லனா காட்டிட்டு சைடுல ஹீரோ பிரெண்டா ஒரு ஜமாலையோ, இல்ல ஹீரோவுக்கு உதவுபவரா அப்துல் காதரையோ வைக்கிற  சாதாரண தமிழ் சினிமா டெக்னிக் தான் இங்கயுமா?


10. ராகுல் போஸ், நாசர், ஷரீனா வஹாப் போன்ற பல தேர்ந்த நடிகர்கள் இருக்கிறார்கள் படத்தில். முன்னவர் விஜயகாந்த் படங்களில் பார்த்த வாசிம்கான்களுக்கு மாற்றமாக ஒரு தீவிரவாதி, மஜ்னு சோனு சூடுக்கு அப்புறமா தமிழ்ல கத்திக்கத்தி கூப்பாடு போடாத தீவிரவாதி இவருதான்னு நினைக்கிறேன். மற்றைய ரெண்டுபேரும் வேஸ்ட்டட்.

11. கதை, படம் பேசும்/உருவாக்கும் அரசியல் போன்ற வஸ்த்துக்களை கவனிக்காம, ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம, ரெண்டர மணி நேரம் வெறும் என்டேர்டைன்மன்ட்ட மட்டுமே மனசுல வச்சி பார்த்தா ஒரு முழுத் திருப்தி தரக்கூடிய படம்.  (இதுக்கும் மேல ஒரு படத்துக்கு ஏதும் பிளஸ் தேவையா?)

ஐ ஆம்  வெய்ட்டிங்  பார் விஸ்வரூபம் பார்ட் II இன் இந்தியா....

நம்ம ரேட்டிங் : 7.5/10

****************************************

பதிவுக் குறிப்பு:
விஸ்வரூபம் படத்துக்கு நேர்மையான விமர்சனம்ன்னு எதுவும் வருமான்னு எனக்கு தெரியல, அதுக்கு என்ன காரணம்ன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.

முதலாவதா ஒரு விஷயத்த சொல்லிக்கனும். "ஒரே மதத்தை சேர்ந்த, ஆனா இரு வேறுபட்ட புரிதல் அல்லது கொள்கை உடைய இரண்டு தனி நபர்களினதும் அவர்களை சூழ உள்ளவர்ககளினதும் போராட்டம்" தான் படத்தோட கதைன்னு எனக்கு தோணுது. படம் எந்த ஒரு இடத்திலும் இஸ்லாம் மதத்தை அவமதிக்க வில்லை, முஸ்லீம்களை அவமதிக்கிறதா, இல்லையான்னு என்னை கேட்டால் இல்லன்னுதான் சொல்லுவேன், ஆனா அவமதிக்குதுன்னு யாராவது எடுத்துக்க இடம் இருக்கான்னு கேட்டா இருக்கு. இங்கதான் படத்தோட பிரச்சினையே இருக்கு.  அதுக்காக தடை செய்யப்பட வேண்டிய படமான்னு கேட்டால் கண்டிப்பா இல்ல. ஹிந்தில "நியூ யோர்க்", "மை நேம் இஸ்  கான்", "குர்பான்", "மிஷன் இஸ்தான்புல்", ஹாலிவூட்ல "Traitor" போன்ற படங்கள் ஆரம்பித்து வைத்த விவாதத்தை தமிழில் விஸ்வரூபம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. அந்த படங்கள் எப்படி ரெண்டும் கெட்டானாக அலசியதோ, விஸ்வரூபமும் அப்படியே, அதை தவிர இஸ்லாத்தை அவமதித்து விட்டது, சிறுபான்மை மக்களை கமல் தாக்குகிறார்ன்னு கூச்சல் போடுற அளவுக்கு கேவலமான படம் ஒன்னும் கெடயாது. அதுக்காக கமல் தவறே செய்யலைன்னு சொல்லவும் முடியாது. படம் ஆரம்பித்து வைத்த விவாதத்தை ஆக்கபூர்வமான முறையில் தொடர வேண்டியவர்கள் கண்மூடித் தனமாக படத்தை எதிர்த்து ஒரு வரலாற்று தவறை செய்துவிடாமல் இருக்கனும்ங்கிறதே ஒரே ஆசை.


டிஸ்கி: அங்க படத்துக்கு தடைன்னு என்னிக்கி அறிவிச்சாங்களோ, அன்னில இருந்தே நம்ம ராசு மாமா, "படத்தப் பாரு படத்த பாரு"ன்னு ஒரே வற்புறுத்தல். வெள்ளிக்கிழமை இங்க "கான்"ன்னு பனிப் புயல் வந்ததால பாதை எல்லாம் மூடி படம் பார்க்க போக முடியல. இன்னிக்கி காலையில பாதை சீராக இல்லாதபோதும், ரிஸ்க் எடுத்து நூறு மைல் வண்டி ஓட்டி, மூணு மணிக்கே தியேட்டர் வாசலுக்கு போயி, டிக்கெட் கிடைக்காததால அடுத்த காட்சிக்காக ராத்திரி பத்து மணி வரைக்கும் குளிர்ல தியேட்டர் வாசல்ல காத்திருந்து பார்த்ததுக்கு படம் "ஒர்த்துதான்".

டிஸ்கி: தமிழ் நாட்டிலும் படம் வெளியாகி அனைவரும் பார்த்தபின் கருத்தியல் ரீதியாக படத்தை விமர்சிக்கலாம்ன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு சொல்லக்கூடியது, குறைவில்லாத என்டேர்டைன்மென்ட், ஒரு அக்மார்க் கலப்படமற்ற "கமல்" சினிமா. ஒரு கமல் சினிமாவில் என்ன நிறை இருக்குமோ அனைத்தும் இருக்கு, என்ன குறை இருக்குமோ அவையும் அனைத்தும் இருக்கு. அதுதான் விஸ்வரூபம். மற்றும் படி ஹாலிவூட் தரத்துல ஒரு தமிழ் சினிமான்னு சொல்ற அளவுக்கு தமிழ் சினிமா ஒன்னும் கேவலமும் கெடயாது, விஸ்வரூபம் ஒன்னும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேக்கிங்கும் கெடயாது. 

Friday, December 28, 2012

2012 டாப் 10: தமிழ் காமெடி படங்கள்

வருஷம் பூரா பதிவு போடுறோமோ இல்லையோ, ஆனா  வருஷ கடைசில "டாப் 10"கள் போட வேண்டியது ஒரு பதிவரோட முக்கிய கடமைகளில் ஒன்னு. இந்த பிளாக்ல ஒன்னுக்கு ரெண்டாவே பதிவர்கள் இருக்கோம், அப்புறம் இது கூட போடலான்னா வருங்காலத்துல நம்ம பழைய போஸ்ட்ஸ தேடி படிக்க போற(!)  சின்னஞ்சிறுசுக நம்மள பத்தி எவ்வளவு கேவலமா  நினைக்குங்க. ஆனா வெளிவர்ற எல்லா படத்தையும் பார்க்குற மக்கு பசங்க இல்ல நாங்க, கொஞ்சமாவது படத்துல என்டர்டேய்ன்மென்ட் இருக்குன்னு தெரிஞ்சா மட்டும்தான் அந்த படத்த கொஞ்சம் லேட்டானாலும் பார்போம். என்டர்டேய்ன்மென்ட்ங்குற கேட்டகரில மாஸ், ஆக்ஷன், யாரு ஹீரோ, யாரு ஹீரோயின் ப்லா ப்லான்னு நிறைய இருந்தாலும் எப்பவுமே காமெடிக்குதான் முதலிடம்.

எதுக்காக இவ்வளவு மொக்க போடுற? மேட்டர சீக்கிரமா சொல்லுங்குறீங்களா!!! ஓகே பாஸ். 2012ல வந்த படங்கள்ல, நாங்க பார்த்த படங்கள்ல காமெடி நல்லா இருக்குன்னு நமக்கு தோணுன சில படங்கள டாப் 10 ரேன்க் பண்ணுறோம். அம்புட்டுத்தேன்.(டாப் 10 காமெடி படங்கள்ன்னு லிஸ்ட் எடுத்தா, ரெண்டு மூணுதான் தேறும், அதுனால காமெடி காட்சிகள் டாப்பா இருந்த படங்களின் தரவரிசை). அப்புறம், ஜஸ்ட் காமெடி மட்டும்னதுனால, செம மாஸ் ஹீரோக்களின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள படவில்லை.


10.நீதானே என் பொன் வசந்தம்/ மிரட்டல்
ரெண்டு படமுமே பெருசா ஒன்னும் சொல்றதுகில்ல. ஆனா சந்தானத்தின் கவுன்டர்ஸ் பல இடங்கள்ல ரசிக்கிற மாதிரியும், சிரிக்கிற மாதிரியும், போரிங்கான படத்துக்கு கொஞ்சம் பூஸ்ட்டாவும் இருந்துச்சு. சந்தானமும் இல்லன்னா மிரட்டல் பார்க்குறது  கொஞ்சம் கஷ்டம்தான். நீ.எ.பொ.வல சந்தானம் காமெடியும் சமந்தாவும்....

9.அட்டகத்தி/காதலில் சொதப்புவது எப்புடி
ரெண்டுமே புது டைரக்டர்ஸ் படம். ரெண்டுக்குமே காதலில் சொதப்புறதுதான் களம். காமெடியான களம். அட்டகத்தி சென்னை புறநகர் பேஸ்ட் இளைஞர்களின் அடாவடிகளுடன் கூடிய காமெடி, கொஞ்சம் சீரியஸா பார்த்தா சிரிக்கலாம். ஆனால், கா.சொ.எ எல்லாருக்கும் பொதுவான காமெடி. கா.சொ.எக்கு இன்னும் கொஞ்சம் அதிக ரேன்க் கொடுக்கலாம்ன்னாலும், இங்க ஜஸ்ட் காமெடிய வச்சி மட்டும் ரேன்க் பண்ணுறதால 9.

8.சுந்தரபாண்டியன்
சூப்பர்  ஹிட்டு படம். எல்லா மேட்டரையும் சரியா மிக்ஸ் பண்ணிருந்தாங்க. சூரியோட கவுன்டர்ஸ் மட்டுமில்லாம, முக்காவாசி படம் பூராவே காமெடி டோன் இருந்துச்சு.

7. 3/சகுனி
ரெண்டுமே  ரொம்பவும் பில்ட்அப் கொடுத்து மொக்க வாங்குன படங்கள். 3ல சைக்கோ, தற்கொலைன்னு பயம் காட்டுனாங்க. சகுனில ஸ்க்ரீன்பிளே  சறுக்கிடுச்சு. ஆனா ரெண்டு படத்துலயும் காமெடி போர்ஷன் சூப்பர். மெரீனால டைரக்டர் சொன்னத மட்டும் செஞ்ச சிவகார்த்திகேயன், 3ல டைமிங் காமெடில  கலக்கிருந்தாரு. அதே மாதிரி, சகுனி படத்துல ஆட்டோ சவாரில சந்தானமும்-கார்த்தியும் அடிக்கிற லூட்டிகள் ஆதித்தியால பார்க்கும்போது நல்லாவே இருக்கு. யூரின் பாஸ் பண்ணி பைன் கட்டுற சீக்வென்ஸ் செம காமெடி!

6.நான் ஈ
 மக்கள என்டர்டேய்ன் பண்ணுறதுக்காகவே அளவெடுத்து செஞ்ச படம். "ஈ"பண்ணுற காமெடிகள் அட்டகாசம். போனஸ்ஸா நட்புக்காக(!) சந்தானம்.. கிளைமேக்ஸ்க்கு அப்புறம் வர்ற காமெடி சீன்ஸ்க்காக ரெண்டு மூணு வாட்டி ரிப்பீட் பார்த்த படம்.

5.மனம் கொத்தி பறவை
 சிவகார்த்திகேயனோட முழுநீள ஹீரோ அவதார படம்.  மிச்ச சொச்ச, சொச்ச மிச்ச காமெடி நடிகர்கள் பலபேர கூட்டணி சேர்த்துகிட்டு படம் பூரா எதோ ஒரு விதத்துல சிரிப்பு வர்ற மாதிரி சீன்ஸ் இருந்துச்சு. பட்,  சிவகார்த்திகேயன் கிட்ட இருந்து நாங்க இன்னும் நிறைய எதிரபார்குறோம் பாஸ்.

4.நண்பன்
 ஷங்கர் படம்னா எப்பவுமே காமெடி அளவா இருக்கும். ஹிந்தில ஹிட்டான அந்த படிப்ஸ் ஸ்டுடண்ட் கேரக்டருக்கு சத்தியன் செமையா பொருந்தினாரு. சத்தியனின் பாடி லேங்க்வேஜ், டயலாக் டெலிவரி எல்லாமே சூப்பர். கூடவே மாஸ் ஹீரோக்கள்ள காமெடி சரியா வர்க்அவுட் ஆகுற விஜய், அப்கமிங்ல ஜீவான்னு எல்லாரும் இருந்ததுனால, என்ஜாய் பண்ணி பார்த்த படம். 

3. கலகலப்பு
உள்ளதை  அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக போன்ற படங்கள்ல கவுண்டமணி எனும் லெஜன்ட், அப்புறம் வின்னர், கிரி பீரியட்ல வடிவேலுன்னு கூட்டணி வச்சி காமேடில கலக்குன சுந்தர்.சி அப்பால காணமல் போயிட்டாரு. அப்புறம் சுந்தர்.சி இயக்கி, நடிச்சி வெளிவந்த சில படங்கள பார்த்தப்புறம், இந்த மனுஷனுக்குன்னு பெருசா காமடி நாலெட்ஜ் இல்ல, அந்தந்த பீரியட்ஸ்ல அசிஸ்டென்ட்ஸ்ஸா இருந்த சுராஜ், பூபதி பாண்டியன் மாதிரி ஆட்கள் தான் எடுத்து கொடுத்துருக்காங்கன்னு ஒருமுடிவுல இருந்தப்ப, சுந்தர்.சியின் கம் பேக் பிலிம். பர்ஸ்ட் ஆப் "அகில உலக சூப்பர்ஸ்டார்" சிவா, செகன்ட் ஆப் "காமெடி சூப்பர்ஸ்டார்" சந்தானம், அப்புறம்  இளவரசு மாதிரி துணை கேரக்டர்ஸ்ன்னு நிஜமாவே கலகலப்புதான். 
ஒரு வேளை, இப்போ வசன அசிஸ்டென்ட்டா இருந்த கேபிள்சங்கர் அண்ணன்தான் இந்தவாட்டி கலகலப்புக்கு காரணமா இருந்துருப்பாரோ?

2. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
"என்னாச்சி?" சந்தானம் ஃபேன்ஸ்ன்னு சொல்லிட்டு சந்தானம் இல்லாத ஒரு படத்துக்கு  லீட் பொசிஷன் கொடுத்துருகீங்க?ன்னு கேட்டிங்கன்னா, அதுதான் பாஸ், இந்த படத்தோட வெற்றியே. செமையா என்ஜாய் பண்ணி பார்த்த படம். பிரேம், சரஸ், பக்ஸ், பஜ்ஜி ஆக்டிங், சான்ஸ்லெஸ்!! டயலாக் டெலிவரி, பாடி மாடுலேஷன் எல்லாத்தையும் விட்டுருங்க, ஒவ்வொரு சீனுக்கும் அந்த மூணு பிரெண்ட்ஸ்மூஞ்சில கொடுக்குற எக்ஸ்பிரெஷன்ஸ் இருக்கே.. செம செம!!  டைரக்டர் வேலைக்காரர்ன்னு தோணுது, இவருகிட்ட இருந்தும், இவரு மாதிரி புதுசா வர்ற டைரக்டர்ஸ் கிட்ட இருந்தும், நாங்க இன்னும் நிறைய எதிர் பார்க்கலாம்ன்னு தோணுது!

1. ஒரு கல் ஒரு கண்ணாடி
 குறிப்பிட்ட ஒரு வருசத்துல, ராஜேஷ்-சந்தானம் கூட்டணில ஒரு படம் வந்துருக்குன்னா, அந்த வருசத்துல அத தாண்டி இன்னொரு படம் எப்புடிங்க பர்ஸ்ட் ப்ளேஸ்ல வரும்? சோ, நீங்க எதிர்பார்த்த மாதிரியே ஓகே ஓகே பர்ஸ்ட்டு. ஒவ்வொரு ராஜேஷ் படமும் சந்தானத்துக்கு ஒவ்வொரு டர்னிங் பாயிண்ட்ஸ். இந்த படத்த பத்தி நாங்க பலவாட்டி எழுதியாச்சி.. பல வாட்டி பார்த்தும் இன்னும் அலுக்கல! இனிமேலும் அலுக்காது! அடிச்சி சொல்லுறோங்க, "ஆல் இன் அழகுராஜா" மட்டுமில்ல, அதுக்கு பிறகும் ராஜேஷ்-சந்தானம் கூட்டணில வரபோற படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர்ஸ்தான்.
***************************************


ஆக, கடந்த சில வருஷங்கள விட இந்த  2012 வருஷம் காமெடி ரசிகர்களுக்கு  சிறப்பாவே இருந்துச்சு. இது 2013ல யும் தொடரும்னு தெரியுது! 2013 வருட ஆரம்பத்துலையே  சந்தானம், பவர்ஸ்டார் காம்பினேஷன்ல லட்டு தின்ன ரெடியா  இருங்க காமெடி ரசிகர்களே!!

Wednesday, December 12, 2012

உங்களுக்கெல்லாம் நட்புன்னா என்னன்னு தெரியுமா?

உங்களுக்கெல்லாம் நட்புன்னா என்னன்னு தெரியுமா? நண்பன்னா என்னன்னு தெரியுமா? மொக்கராசு மாமான்னா என்னன்னு தெரியுமா? கடமைன்னா என்னன்னு தெரியுமா? இதோ இப்போ தெரிஞ்சுக்கங்க.

உங்களுக்கெல்லாம் நம்ம சந்தானம் பான்ஸ் ப்ளாகும் அதுல ரெண்டுபேர் ப்ளாகுறதும் மட்டும் தெரிஞ்சிருக்கும், இதுக்கு பின்னால முன்னால எத்தன ரகசியங்கள், கொள்கைகள் இருக்குன்னு தெரியுமா? எவ்வளவு அழகான ஒரு நட்பு இருக்குன்னு தெரியுமா? அதையெல்லாம் விளக்கவே இந்த பதிவு.

எனக்கு ரெண்டு வயசு இருக்கும் போது....
உங்க கற்பனைய கொஞ்சம் நிறுத்துங்க. அப்பல்லாம் எனக்கு ஒன்னுக்கு வருதுன்னு சொல்லவே தெரியாது, மொக்க ராசு மாமாவ எப்படி தெரியப்போகுது. நாங்க சந்திச்சிக்கிட்டது பத்தாம்பு படிக்கறப்போதான், அதுக்காக பள்ளி சிநேகிதம்ன்னு நெனச்சிக்காதீங்க, எப்பவுமே எட்டு மணிக்கு பள்ளி ஆரம்பிக்கும்னா நான் எட்டர மணிக்குத்தான் பஸ்ல ஏறுவேன், அதே பஸ் எட்டே முக்கா மணிக்கு நம்ம மொக்க ராசு மாமா ஸ்டாப்புக்கு வரும், தவறாம அவரும் அந்த பஸ்ல ஏறிக்குவாறு. இப்படி ஆரம்பிச்சதுதான் எங்க சிநேகிதம்.
அவரு பள்ளியும் எங்க பள்ளியும் பரம எதிரிக, அவரு தல ரசிகன், நான் தளபதி ரசிகன், அவரு சூப்பர் ஸ்டார், நான் உலக நாயகன். அவரு சிம்பு, நான் தனுஷ். அவுரு கேபிள் சினிமா, நான் பிலாசபி சினிமா. அவுரு சல்மான், நான் ஷாரூக். சினிமாவுல தொடங்கி வாழ்கையில எல்லாத்துலயுமே நானும் ராசு மாமாவும் எதிரும் புதிரும்தான். அவரு கூட எப்பவுமே ஒரு கூட்டம் இருக்கும், அது அவரா கஷ்டப்பட்டு சேர்த்த கூட்டம், என் கூடவும் ஒரு கூட்டம் இருக்கும், அது தானா சேர்ந்த கூட்டம். ரெண்டுமே வேற வேற கூட்டம். நாங்க ரெண்டுபேரும் போன யூனிவர்சிட்டி வேணும்னா ஒண்ணா இருக்கலாம், ஆனா அவுரு வேற படிப்பு நான் வேற படிப்பு. அவுரு விண்டோஸ், நான் மேக். அவுரு சாம்சுங் ஆன்ட்ராய்ட் நான் ஆப்பில் ஐ.ஓஎஸ். தலைவரு சந்தானம் தவிர எனக்கும் ராசு மாமாவுக்கும் எந்த விஷயத்துலயும் ஒத்துப்போறதே கெடயாது. இப்படி ரெண்டுபேர் ஒண்ணா சேர்ந்து ஒரு ப்ளாக் நடத்துறோம்னா அது எப்படி சாத்தியமாச்சி? இதுக்கெல்லாம் என்ன காரணம்னா எங்க ரெண்டுபேர் நட்பும் இந்த வேற்றுமைகள் எல்லாம் தாண்டிய புனிதமான நடப்பு. 
இங்கதான் நம்ம கதையில ஒரு ட்விஸ்ட்டு. இந்த புனிதமான நட்பு, மூழ்காத ஷிப்பு  ப்ளா ப்ளா ப்ளா... இதெல்லாம் லாரிக்கு பின்னாடி வேணும்னா எழுதலாம், ஆனா லைப்க்கு செட் ஆகாது. நான் என்ன பண்ணினாலும் ராசு மாமா என்ன தாறு மாறா கலாய்ப்பாரு, அதே மாதிரி நானும். இப்படியே எங்க வண்டி ஓடிக்கிட்டு இருந்திச்சு, ஒரு நாள் நாடு ராத்திரி, நான் கழிவறையில் ஒக்காந்திருந்தப்போ கணப்பொழுதில் ஒரு யோசனை உதிச்சது. அதுதான் எத்தன நாளைக்குத்தான் நாமளும் நம்மளையே மாறி மாறி கலாய்ச்சுக்கிட்டிருக்கறது, நாம ஏன் நம்ம வட்டத்துல இருந்து வெளிய வந்து இந்த உலகத்துல இருக்கற ஒருத்தனையும் விடாம கலாய்க்கக்கூடது? இத நான் ராசு மாமாக்கிட்ட சொன்னதும் அவரும் செம குஷி ஆயிட்டாரு, நாம நாளைக்கே ஒரு ப்ளாக் ஆரம்பிக்கறோம், ஆரம்பிச்சு "எவனா இருந்தாலும் கலாய்ப்போம்" ன்னு சொல்லிட்டாரு, அப்புடி ஆரம்பிச்சதுதான் எங்க ப்ளாக்கர் பயணம். அப்புறம் தலைவர் சந்தானம் மேல உள்ள அதீத பிரியத்தினால அவருக்காக ஒரு டிவிட்டர் ஃபேன்ஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ணோம், அது சக்சஸ் ஆகுனாப்புறம் அதன் தொடர்ச்சியா ஒரு சந்தானம் பிளாக் உருவாக்கனும்ன்னு சொல்லி அந்த பழைய ப்ளாக்க(!) மூடிட்டு ஆரம்பிச்சதுதான் நீங்க இப்போ படிச்சிக்கிட்டு இருக்கற இந்த "அகாதுகா அப்பாடக்கர்ஸ், ரியல் சந்தானம் ஃபேன்ஸ்" ப்ளாக்.

அதுசரி நட்பு, நண்பன், மொக்கராசு மாமா எல்லாம் சொல்லியாச்சு, கடமைன்னு எதோ சொன்னியே அது எங்கன்னு தேடறீங்களா? அதாவது, நம்ம ராசு மாமா ரொம்ப நாளா டாக்டர் ஆகணும்ன்னு படிச்சிக்கிட்டு இருக்காரு. ப்ளாக்கர் ட்விட்டர்ன்னு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கறதால அந்த வேல ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு கெடக்கு. இப்போ என்னன்னா சீகிரமாவே படிப்ப முடிச்சுடனும்ன்னு விடா பிடியா இருக்கார். முதல் வேலையா ப்ளாக்கர் அக்கவுன்ட் டெம்பரரி டீஆக்ட்டிவேட் பண்ணிட்டார். இதுனால உங்க எல்லாருக்கும் தெரியப்படுத்துவது யாதெனில் இன்னும் கொஞ்ச நாளைக்கு  மொக்கராசு தொல்ல இந்த ப்ளாக்கருக்கு இல்ல. அதுனால, அவரு திரும்ப வர்ற  வரைக்கும், நானு மட்டும் (சில பல ஆணி புடுங்கல்கள் எனக்கும் இருந்தாலும்) தனியாளா பதிவுலகத்துல நடமாடலாம்ன்னு இருக்கேன். இதெல்லாம் என்ன பெருமையா, இல்ல...., உன்னதமான நட்புக்கு செய்யுற கடமை!!

டிஸ்கி 1: இம்புட்டு நேரமா பொறுமையா ஒக்காந்து இந்த பதிவ படிச்ச உங்களுக்கு நம்ம மனமார்ந்த நன்றிகள். பதிவு எழுதி ரொம்ப நாளாச்சா, சங்கம் நம்மள மறந்துட கூடாதுன்னதான் சின்னதா ஒரு சுய பதிவு. வழமையா, இது மாதிரி பதிவு எல்லாம் நூறாவது பதிவு மாதிரி எதாவது ஸ்பெஷல் பதிவாதான் போடுவாங்க, ஆனா நாங்க போற ஸ்பீட்க்கு நூறாவது பதிவு எல்லாம்?? அட போங்க சார்!! 

டிஸ்கி 2: எவ்வளவு உயரத்துக்கு போனாலும், நட்புக்கு மரியாத செஞ்சு, நட்பு மாறாமா இருக்குற சூப்பர் ஸ்டாருக்கு இந்த பதிவு சமர்ப்பணம். எங்க ரெண்டு பேர் சார்புலையும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கறோம்.

Wednesday, November 21, 2012

துப்பாக்கி, ஜப் தக் ஹேய் ஜான் : இரட்டை பார்வை

பதிவர்னா ஒரு படம், அது தமிழோ, இந்தியோ, தெலுங்கோ, இங்கிலீஷோ இல்ல கொரியன், இந்தோநேஷியனோ, உடனே பார்த்து விமர்சனம் எழுதனும்கறது ஒரு சட்டம், அத மீறி படம் பார்த்துட்டும் விமர்சனம் எழுதலயின்னா சங்கத்துல இருந்து தள்ளி வச்சிடுவாங்கன்னு மொக்கராசு மாமா மிரட்டுனதால, இந்த தீபாவளி ரிலீஸ்ல நான் பார்த்த ரெண்டு படத்துக்கும் ஒரே பதிவுல விமர்சனம் எழுதி சங்க மெம்பர்ஷிப்ப காப்பாத்திக்கலாம்ன்னு இறங்கிட்டேன்.

முதல்ல ஷார்ட்டா துப்பாக்கி. துப்பாக்கிய பத்தி பலபேர் பல பதிவு போட்டு பல விமர்சனம் போட்டு படம் மெகா ஹிட்டுன்னு ஊரறிய அறிவிப்பும் குடுத்தாச்சு. இதுக்கு மேல இந்த படத்த பத்தி நான் என்ன சொல்றது? ரொம்ப நாளைக்கு அப்புறமா முழு திருப்தியோட ஒரு விஜய் படம் பார்த்தது இந்த தீபாவளிக்குத்தான். அண்ணன் பின்றாரு, நடிப்புல செம முதிர்ச்சி தெரியுது, ஆனா தோற்றதுல செம இளமை தெரியுது. முருகதாஸ் மொத்தமா நாலே நாலு சீன யோசிச்சிட்டு, அத விஜயோட உதவியால ஒரு முழுப்படமா குடுத்திருக்காரு, வழக்கம் போல ஹரிஷ் ஜெயராஜ் செமையா சொதப்பியிருக்காரு. படத்துல வில்லன காட்டறப்போ அந்த ஊ ஊ ஊ  BGM பழைய விஜயகாந்த் பட "பயங்கர வில்லன" ஞாபகப்படுத்தி தொலைக்குது. நாலு சீன விட்டா படத்துல சொல்லிக்கொள்ளும்படியா எதுவுமே இல்ல, ஆனா விஜய் நம்மள சீட்டோட கட்டிப் போட்டு வைக்கிறதால, படம் முடிஞ்சு வெளிய வாரப்போ, ஒரு முழுத் திருப்தி கெடைக்குது, நீண்ட நாளைக்கு அப்புறமா ஒரு செம மாஸ் என்டேர்டைனர் பார்த்த மாதிரி நமக்கு ஒரு பீலிங் வருது. துப்பாக்கி, இட்ஸ் ஆல் அபவுட் விஜய். கிங் ஆப் மாஸ்.


ஜப் தக்  ஹேய் ஜான்:


எட்டு வருஷங்களுக்கு பிறகு யாஷ் சோப்ரா படம் இயக்க வர்றாருன்னு சொன்னதுமே இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு தொத்திக்கிருச்சி.  "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்" எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சவங்களுக்கு படத்தோட கதைய பத்தி எதுவுமே சொல்ல தேவையில்ல, கதைய விட பெர்போர்மான்ஸ் தான் எப்பவுமே அவரோட படத்துல USP.  வழக்கமான யாஷ் சோப்ரா ரொமான்ஸ் தான் படம். ஆனா ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்க்குறதால ரொம்ப ரீஃப்ரெஷிங்கா இருக்கு படம்.  ஷாருக்க  விட்டா ரொமாண்டிக் பிலிம்ல பெர்ஃபோம் பண்ணறதுக்கு வேற யார தேடுறது? ரொம்ப நாளைக்கு அப்புறமா ஷாரூக் ரொமாண்டிக் ஹீரோவா நடிக்கற படம்,  ரஹ்மான் சார் மியூசிக், முதல் முறையா ஷாரூக்கும் கத்ரீனா கய்ப்பும் ஜோடி சேரும் படம், ஆதித்யா சோப்ரா கதை வசனம்ன்னு சொன்னதுமே எதிர்பார்ப்பு பல மடங்காயிருச்சி. படம் முடிஞ்சு ஃபைனல் பிரிண்ட் வர்ரதுக்கு முன்னாடியே யாஷ்ஜீ திடீரென இறக்க, யாஷ் சோப்ராவோட கடைசி படம்ங்குற டைட்டில் வேற சேர்ந்துடுச்சு. இங்க படம் ரிலீஸ் முதல் நாள் முதல் ஷோவுக்கு முதல் ஆளா போய் நின்னுட்டேன். இனிமே படம் எப்பிடின்னு பார்க்கலாம்.

காதலை பிரிஞ்சு வாழ்றதும், தினம் தினம் செத்து பொழைக்கறதும் ஒண்ணுதான். நம்ம காதலிக்கறவங்க நல்லா இருக்கனும்கறதுக்காக பிரிஞ்சு வாழறதுக்கு பதிலா பேசாமா பினாயில வாயில ஊத்தி கொன்னுடலாம். இவ்வளவுதான் படத்தோட கதை. இந்த கதையை வச்சிக்கிட்டு ஆதித்யா சோப்ரா எழுதியிருக்கற திரைக்கதை முன் பாதி அற்புதம், "கடவுளுக்கு சத்தியம் பண்ணி பிரியற ஒரு காதல்" ன்னு ஒரு சின்ன லைன வச்சி ரொம்ப கன்வின்சிங்கா ஒரு திரைக்கதை எழுதியிருக்காரு, ரெண்டாவது பாதி, தொண்ணூறுகளின் மனம் சார்ந்த காதலுக்கும், ரெண்டாயிரங்களின் உடல் சார்ந்த காதலுக்கும் இடையிலான வித்தியாசம், முக்கோண காதல், காதல் தோல்வி, பெர்போர்மான்ஸ் ஸ்கோப்ன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் அம்னீசியா, நினைவு திரும்பி வரவழைக்கும் நாடகம்ன்னு 1980 சமாச்சாரத்த தொட்டு திரைக்கதை அமைச்சது படத்தோட நாம ஒன்றிப்போறத கொஞ்சம் கஷ்டமானதா ஆக்கிடுது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, வீர்-சாரா, ரப் னே பனாதி ஜோடி, போன்ற படங்களை எழுதிய ஆதித்யா சோப்ரா இந்த அதர பழைய நாடகத்த தொட்டது கொஞ்சம் வருத்தம் தான், ஆனாலும் பெர்போர்மன்சும், யாஷ் சோப்ராவின் இயக்கமும், ஆதித்யா சோப்ராவின் வசனங்களும் பெருமளவு அதை ஈடு செஞ்சுடுது.


ஷாரூக் கான் ரொம்ப இளமையா இருக்காரு, ஒரு பணக்கார பொண்ணு தினக்கூலிய லவ் பண்ணுவாளான்னு யாருக்காவது டவுட்டு வந்தா அந்த தினக்கூலி இந்தாளு மாதிரி இருந்தா பணக்கார பொண்ணு என்ன தேவலோக ராணியா இருந்தாலும் லவ் பண்ணுவான்னு சொல்ற அளவுக்கு, அவருதான் தி கிங் அப் ரொமான்ஸ்ன்னு மறுபடியும் நிரூபிச்சிருக்காரு. ஆர்மி ஆபிசர் சமர் ஆனந்தா இருக்கட்டும், லண்டன்ல பஞ்சாபி பாட்டு பாடி ஆடுற தெருப்பாட்டு கலைஞரா இருக்கட்டும், ஹோட்டல்ல கொச்சை இங்கிலீஷ்ல பேசி சிரிக்க வைக்கற வெயிட்டரா இருக்கட்டும், குறிப்பா அனுஷ்கா ஷர்மா பந்தயம் கட்டிட்டு ஆத்துல எறங்கி குளிர்ல நடுங்கரப்போ காப்பாத்துற காட்சியிலா இருக்கட்டும், ஷாருக் கான் King Khan தான். ரொம்ப ஜாலியான ஒரு முகம், ரொம்ப இறுக்கமான போரிங்கான ஒரு முகம், ரெண்டயுமே செமயா வெளிப்படுத்தியிருக்காரூ, (ரப் னே பனாதி ஜோடி படத்துல ரெண்டு பாத்திரமும் ரெண்டு எக்ஸ்ட்ரீமா இருக்கும், அதையே சூப்பரா பண்ணியிருப்பாரு, இதுல ரெண்டும் ரொம்ப சட்டிலா இருக்கும், இத ரொம்பவே அற்புதமா தூள் பண்ணியிருக்காரு)

கத்ரீனா கைப், முதல் முறையா முழு நீள ரொமாண்டிக் படத்துல நடிச்சிருக்காங்க, லண்டன்ல வாழ்ற, தம் அடிக்கற, எனக்கு இந்திய மாப்ள வேணாம், அவங்க எல்லாம் கருப்பா இருக்காங்கன்னு ஜீஸஸ் கிட்ட வேண்டிக்கற, ஆனா அதே நேரம் இந்திய பண்பாடு விட்டுப்போகாத பொண்ணா கன கச்சிதமா பொருந்தி இருக்காங்க, இது வரைக்கும் ஒரு கிளாமர் டோலா மட்டுமே படத்துல வந்திட்டு போனவங்க, முதல் முறையா தன்னாலும் நடிக்க முடியும்ன்னு காட்டி இருக்காங்க, அந்த வகையில சுப்பர்.

ராப் னே பனாதி ஜோடி படத்துல பார்த்த அனுஷ்காவுக்கும்,  இதுக்கும் நூறு வீத வித்தியாசம். அந்த பாத்திரத்துக்கு அப்படியே நேர் எதிரா, மேக் அப் - பிரேக் அப் கலாசார இன்ஸ்டன்ட் காதல் உலகத்துல வாழுற, அடிக்கடி இங்கிலீசுல கெட்ட வார்த்த பேசிக்கற நவ நாகரிக பொண்ணா ரொம்ப கான்வின்சிங்கா இருக்காங்க. ப்ரீதி-ராணி, கரீனா-பிரியங்கா வுக்கு அப்புறமா தீபிகா-அனுஷ்கா தான் அடுத்த பாலிவுட் கிளாமர் கம் அக்டிங் ஹீரோயின்ஸ் ஜோடின்னு அடிச்சு சொல்றாங்க.

ரஹ்மான் சாரோட பின்னணி இசை ஒரு ரொமாண்டிக் படத்துக்கு உரிய விதத்துல இருக்கு. திரையில தெரியற காட்சி கண்ணுல தெரியுதா, காதுல தெரியுதான்னு புரியாத அளவுக்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் போட்டி போட்டுக்கிட்டு இருக்கு படம் முழுவதும். பாடல்கள் கேட்டதும் பிடிக்கும் ரகம் கெடயாது. ஆனா படம் பார்த்ததுக்கு அப்புறம் இருந்து இந்த ஒரு வாரமா ஜப் தக் ஹேய் ஜான் பாடல்கள்தான் கேட்டுக்கிட்டே இருக்கேன். சல்லா, சான்ஸ், ஹீரு, இஷ்க் சாவா, ஜியாரே எல்லாமே அற்புதம்.

இயக்குனர் யாஷ் சோப்ரா, தனக்கே உரிய பாணியில, ஒரு காதல் கதைய, ஆனா இன்றைய இளைஞர்களையும் கவரும் வகையில இயக்கி இருப்பது, அதுவும் தனது என்பதாவது வயசுல இவ்வளவு இளமையா ஒரு படத்த இயக்கியிருப்பது வியந்து பார்க்க வைக்குது. சமீபத்திய இந்தி படங்கள் எல்லாமே கொஞ்சம் மேற்கத்தைய கலாசாரத்தையும், முறை தவறிய காதல்களையும் மையப்படுத்தி வரும்போது, 90 களின் அதே பழைய காதல் கதையா கொஞ்சமும் சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்திருப்பது யாஷ் சோப்ராவின் அனுபவத்தை சொல்கிறது. இனிமேல் "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்" பார்க்க முடியாமல் போகுமே என்கிற ஏக்கம் எழுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

ஜப் தக் ஹேய் ஜான் - A Yash Chopra Romance Dressed in Modern Outfits.

டிஸ்கி: என்னங்க இது? பதிவ எழுதி பப்ளிஷ் பண்ண பிறகு , திடீர் திடீர்ன்னு காணமா போகுது? "An error occurred while trying to save or publish your post. Please try again. Ignore warning"  ன்னு வருதே?