Sunday, March 9, 2014

கோச்சடையான் - பாடல்கள் ஒரு பார்வை.

இந்தவாரம் தமிழ் திரைப்பட, திரையிசை விரும்பிகளை அதிர வைக்கப் போவது இந்தக் கோச்சடையான் பாடல்கள் தான். கடந்தவருடம் எங்கே போகுதோ வானம் பாடல் ரிலீசானதுல இருந்து, தலைவர் வேற பாடியிருக்காருன்னு ஒரு புரளி கிளம்பினதுல இருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். சூப்பர் ஸ்டாரும்-இசை உலகின் அஸீம்-ஓ-ஷான்-ஷஹென்ஷாவும் இணையும் ஆறாவது படம், தமிழின் முதலாவது மோஷன் காப்ச்சர் அனிமேஷன் என பல சிறப்புகளைக் கொண்ட படம். அனைத்துக்கும் மேல் மூன்று வருடங்களுக்குப் பிறகு வெளிவர இருக்கும் தலைவர் படம் என்கின்ற ஒன்றே போதும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை பற்றிக் கூற. இந்தப் படம் கே எஸ் ரவிகுமார் இயக்கும் ரானா படத்திற்கு ஒரு ப்ரீகுவல் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்புக்கு இன்னுமொரு காரணம். இதன் பாடல்கள் எப்படி இருக்கின்றன?


 01. எங்கே போகுதோ வானம் - SPB, வைரமுத்து.

சென்ற வருடமே வெளியாகிவிட்ட இந்த பாடல் பிரம்மாண்டத்தின் உச்சக் கட்டம். எந்திரன் படத்தில் இடம்பெற்ற ஹரிகரன் பாடிய "அரிமா அரிமா" பாடல் பிரம்மாண்ட ஆர்கஸ்ற்றேஷனுக்கு முதல் படி என்றால் இது அதன் உச்சக் கட்டம். ஆரம்ப இசையிலேயே மனதை ஈர்க்கும் பாடல் SPB யின் குரலில் எங்கே போகுதோ வானம் ஒலிக்கும்போது குதிரை படைகள் போருக்குப் புறப்படும் உணர்ச்சியை கண்முன் விரியவைக்கிறது. ஒரு மன்னாதி மன்னனின் வீரத்தையும், வெற்றியையும், நன்றி உணர்ச்சியையும், களிப்பையும் என பல உணர்வுகளை வழங்கிச் செல்கிறது பாடல். "ஒருவன் ஒருவன் முதலாளி" பாடல் போன்று காலத்துக்கும் நிலைத்திருக்கும் இந்தப் பாடல். 

02. மெதுவாகத்தான் - SPB, சாதனா சர்கம், வாலி.

வாலியின் வரிகளில் வெளிவரும் கடைசிப் பாடல் இது. சாதனா சர்கத்தின் குரலில் மெலிதாக ஆரம்பிக்கும் பாடல் SPB யின் குரலில் வேகம் பிடிக்கிறது. வரிகளிலும் இசையிலும் ஒரு இனிமை, ஒரு பழமை, ஒரு எழிமை, இது நீண்ட நாட்களுக்கு இந்த பாடலை ப்ரெஷாக வைத்திருக்கும். இந்தப் பாடல் "ரானா" வுக்கானதாக இருக்கலாம். இந்த ஆல்பத்தின் கேட்டதும் பிடிக்கும் பாடல் இதுவாக இருக்கலாம். 

03. மாற்றம் ஒன்றுதான் மாறாதது - ரஜினிகாந்த், ஹரிசரண், வைரமுத்து.

"எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழி உண்டு, முதல் வழி மன்னிப்பு" தலைவரின் குரலில் அவரது பஞ்சுடன் ஆரம்பிக்கும் பாடல், பல தத்துவங்களை சொல்கிறது. தலைவர் அவரது படங்களில் எவ்வளவோ சொல்லியிருக்காரு, சிக்கல்கள் வரும்போது நானே எனக்கு அடிக்கடி சொல்லிக்கற ஒன்னு, "போடா... அந்த ஆண்டவனே நம்மபக்கம் இருக்கான்". இளைய சமூகத்துக்கு அவரது ஸ்டைல், வாழ்க்கைமுறை தவிர எத்தனையோ வழிகாட்டல்களும், தன்னம்பிக்கை வசனங்களும் அவரது படங்களில் பொதிந்திருக்கின்றன. அவற்றின் தொகுப்பாக இருக்கிறது இந்தப் பாடல். கோச்சடையான், ராணாவுக்கு வழங்கும் உபதேசமாக இருக்கலாம், அல்லது ராணா தலைமை ஏர்க்கும்போது தனது தந்தையை நினைவு கூர்வதாக வரலாம்.


04. மணப்பெண்ணின் சத்தியம் - லதா ரஜினிகாந்த், வைரமுத்து.

ஒவ்வொரு திருமணத்திலும் ஒலிக்கக் கூடியதாய் ஒரு மணப்பெண்ணின் சத்தியம். ஒரு ரொமாண்டிக் மேலோடி, லதா ரஜினிகாந்தின் குரலில், ஒரு பெண் தனது கணவனுக்கு என்னவெல்லாமுமாக இருப்பாள் என்பதனை உணர்ச்சிகரமாக கூறுகிறது பாடல். மெல்லிய இசைக் கூறுகளுடன் ஒரு திருமணத்துக்கான பின்னணியினை நினைவூட்டுகிறது இசை. ஒரே ஏக்கம், தாமரையோ அல்லது இன்னுமொரு பெண் கவிஞரோ எழுதியிருந்தால் இன்றைய பெண்களுக்கும் பொருந்தும் வகையில் இருந்திருக்கும் பாடல், ஒரு ஆண் தன்னைப் பெண்ணாக பாவித்து எழுதுவதற்கும் ஒரு பெண்ணே எழுதுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

05. இதயம் - சின்மாயி, ஸ்ரீநிவாஸ், வைரமுத்து.

சின்மாயியின் குரலில் ஒரு பெண்ணினின் ஏக்கத்துடன் ஆரம்பிக்கும் பாடல் பிரிவினை மய்யப் படுத்தியதாக வருகிறது. ஸ்ரீனிவாசின் குரல் ஒலிக்க ஆரம்பித்ததும், ஏக்கத்தையும் தாண்டிய அன்பினையும் பிரிவிலும் பிரியாமையையும் நமக்குள் நுழைத்துச் செல்கிறது. பின்னணியில் இசைக்கும் தம்பூரா (?) இசை மெல்லிய சோக இழையை நமக்குள் ஊசலாடவிடுகிறது. ரானா சிறையில் அடைக்கப்படும்போது வரும் பாடலாக இருக்கலாம். மறுபடியும் பாடலில் இருக்கும் உணர்ச்சி ஓட்டமே நம்மை இப்பாடலுக்குள் ஒன்றிப்போகவைக்கிறது.

06. எங்கள் கோச்சடையான் - வைரமுத்து.

இது ஒரு கொண்டாட்டப் பாடல் போன்று ஆரம்பிக்கிறது. முன்பாதி மன்னனுக்கான வாழ்த்து அழைப்பும் பின்பாதி எதோ போருக்கான பின்னணி இசையும் போன்று இருக்கிறது பாடல். தனித்த பாடலாக இதற்கு எந்த இடம் என்பது புரியவில்லை. படத்துடன் சேர்த்துப் பார்க்க வேண்டும் போல். இலக்ட்ரானிக் இசையும், நமது பாரம்பரிய இசையும் கலந்து நடத்தும் ஓர் அற்புதம். கண்ணை மூடி இந்தப் பாடலை கேட்கும் போது பல கற்பனைகள் எழுவதையும், சிறு வயதில் நாம் ரசித்த கத்திச் சண்டைக் காட்ச்சிகள் மனதில் விரிவதையும் தவிர்க்க முடியவில்லை. 


07. மணமகனின் சத்தியம் - ஹரிசரண், வைரமுத்து 

மணப்பெண்ணின் சத்தியத்தின் ஆண் வடிவமாக இருக்கிறது பாடல். அதே டியூன், அனால் ஹரிச்சரனின் குரலும் பின்னணி இசைக்கோர்ப்பின் மாற்றங்களும் சற்று உற்சாக தொனியை கூட்டியிருக்கிறது. மணப்பெண்ணின் சத்தியம் போலல்லாமல், இங்கே வரிகள் கனகச்சிதமாக இருக்கின்றன. மணவாழ்கையின் அனைத்துப் பகுதிகளையும் தொட்டு பெண்மையை சிறப்பிப்பதாகவும், ஒரு கணவனின் அன்பை தெரிவிப்பதாகவும் இருக்கிறது பாடல்.

08.  ரானா'ஸ் ட்ரீம் - வாத்தியம் 

எங்கே போகுதோ வானம் பாடலின் சோகமான இசை வடிவம். கோச்சடையானுக்கு பின் ராணாவின் கனவாக வரும் போலிருக்கு. இதன் தாற்பரியம் புரியவும் படம் வெளிவரவேண்டும். 

09. கர்ம வீரன் - ஏ. ஆர் ரஹ்மான், ஏ ஆர் ரைஹானா, வைரமுத்து.

ரஹ்மான் பாடும் பாடல்களுக்கு என்றைக்கும் ஒரு தனி இடம் உண்டு. இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. எந்த ஒரு சக்கரவர்த்தியாக இருந்தாலும் அவர்களுக்கும் தோல்விகளும், சந்தேகங்களும் எழும், அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்துக்கான ஒரு தன்னம்பிக்கைப் பாடல் இது. பாடலில் தோல்வியும், நம்பிக்கையும் ஒன்றாக எட்டிப் பார்க்கிறது. வரிகள் நம்பிக்கையை ஊட்டுகிறது, இசை ஒரு அரசனுக்கே உரிய பிரம்மாண்டத்துடன் கூடிய, மனதில் எழும் ஏற்ற இறக்கங்களை, கண்முன் கொண்டு வருகிறது. ரைஹானாவின் குரல் ஒலிக்கும்போது ஒருவித தோல்வியும், அதே சமயம் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிக்காக புறப்படும் ஒரு உற்சாகமும் பிறக்கிறது. இந்தப் பாடல் ஒரு உணர்ச்சிக் குவியல்.


என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார்-ரஹ்மான் கூட்டணியின் உச்ச கட்டம் இந்த கோச்சடையான். தனி தனி பாடல்களாக பார்த்தால் முத்து, இதைவிட ஒரு படி மேலாக தோன்றினாலும், ஒரு படத்துக்கான முழு பாடல்களாக ஒவ்வொரு சந்தர்பத்துக்கும் வரக்கூடிய ஏற்ற இறக்கங்கள், உணர்வுகள் என பார்க்கும் போது இது முதலிடம் பெறுகிறது. தனிப் பாடல்களாக சார்ட் பாஸ்டர்களாக எந்த பாடல்கள் நிலைக்கும் என தெரியவில்லை, ஆனால், ஒவ்வொரு பாடலும் படத்துக்கான பல எதிர்பார்ப்புக்களையும் கற்பனைகளையும் விதைக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களுக்கு எனது காதுகளில் ஒலிக்கப் போவது கோச்சடையான் பாடல்களே. 

டிஸ்கி: கோச்சடையான் ட்ரைலர் இதோ


வாய்ப்புக்கள் அமைவதில்லை, நாம்தான் அமைத்துக்கொள்ளவேண்டும்.


10 comments:

  1. ஒன்பது பாடல்களா?சரி கேட்டுப் பார்ப்போம்,பகிர்வுக்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
    Replies
    1. கேட்டுப் பாருங்கள் ஐயா, நிச்சயம் பிடிக்கும்.

      Delete
  2. நானும் எல்லா பாடல்களையும் ஒருமுறை கேட்டேன்.. மீண்டும் மீண்டும் கேட்டால் தான் வரிகள் மனதில் பதியும் என்று தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் கேட்டுப் பாருங்கள். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு சுவை தரும்.

      Delete
  3. கோச்சடையான் பாடல்கள் வந்து விட்டது .மிகப்பெரிய ஏமாற்றம் .

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு, இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும், ஏமாற்றம் ஆச்சர்யமாகவும் மாறலாம்.

      Delete
  4. சிவாஜி படப் பாடல்கள் கேட்டபோது இருந்த ஏமாற்றம் இல்லை.. "மாற்றம் ஒன்றே மாறாதது" மற்றும் "எங்கோ போகுதோ வானம்.. பாடல்கள் நன்று.

    ReplyDelete
  5. அந்த ட்ரெய்லர்க்கு "மாஸ்" அப்பீலயும் பிரமாண்டத்தையும் தருவதும் ரஹ்மானின் பின்னணி இசையும் தலைவரின் குரலுமே! இல்லைனா, கார்ட்டுன் போல ஆயிருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. "ஹஹ்ஹா... பார்த்தாயா, எங்கள் நாட்டின் ரத கஜ துரக பதாதிகளை"... தலைவர் வாய்ஸ்ல இந்த டயலாகே செம்ம மாஸ் அப்பீல்.

      Delete

உங்கள் கருத்துக்கள்!!