Tuesday, July 31, 2012

THE DARK KNIGHT RISES : Nolen's BATMAN FRANCHISE - ஒரு பார்வை


சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட THE DARK KNIGHT RISES படம் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். Christopher Nolen னின் BATMAN பட வரிசையின் மூன்றாவது படம் இது. முதல் இரு படங்கள் தந்த எதிர்பார்ப்பும் இங்கு படத்துக்கு இருந்த அளவு கடந்த எதிர்பார்ப்பும் என்னுள்ளும் தொற்றிக்கொண்டிருந்தது. படம் வெளியாகிய முதல் நாள் நள்ளிரவுக் காட்ச்சிக்கு முதல் ஆளாக வரிசையில் நின்று படம் பார்த்த போதும் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவதா, இல்லையா, எழுதினால் எவ்வாறான விமர்சனம் எழுதுவது போன்ற பல குழப்பங்கள் காரணமாக கால தாமதமாகி இந்த பதிவு வருகிறது.

சூப்பர் ஹீரோ படங்கள் மீது எனக்கு அதிக நாட்டம் இருந்ததில்லை என்பதை முன்பே ஒரு பதிவில் கூறியிருந்தேன். அதற்க்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று 1997 இல் வெளியான BATMAN & ROBIN தந்த அனுபவம். George Clooney, Arnold Schwarzenegger போன்ற பெரிய ஸ்டார் காஸ்ட் இருந்தும் வழக்கமான மசாலா கதையினால் பெரும் தோல்வியை தழுவிய படம். அத்துடன் BATMAN Franchise முற்றிலுமாக கைவிடப்பட்டது. இந்த பின்னணியிலேயே 2005 ஆம் ஆண்டு BATMAN BEGINS வெளியானது, நோலெனின் திரைக்கதை காரணமாக மட்டுமில்லாமல், சூப்பர் ஹீரோ படங்கள் மீதான அவரது மிகவும் வேறுபட்ட ஒரு பார்வை காரணமாகவும் அதிக அளவில் பிரபலமானது அந்த படம். 2008 இல் வெளியான THE DARK KNIGHT படம் ஹீத் லெட்ஜெரின் அட்டகாசமான ஜோகர் கதபாத்திரத்தினாலும், படம் வெளிவர முன்னர் நிகழ்ந்த அவரது மரணத்தினாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்ப்பு பெற்று மூன்றாவதும் இறுதியுமான THE DARK NIGHT RISES படத்துக்கு வரலாறு காணாத ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 


இந்த மூன்று படங்களையும் பற்றி மிகச்சுருக்கமாக சொல்லப்போனால், சிறு வயதில் தன் கண்ணெதிரே தாய் தந்தையார் கொல்லப்படுவதை நேரில் பார்க்கும் பணக்கார சிறுவன் Bruce Wayne பிற்காலத்தில் குற்றங்களை எதிர்க்கும் BATMAN ஆக மாறுவது முதல் பாகமாகவும், ஜோகர் மற்றும் two-face எனும் இரு வில்லன்களிடம் இருந்து கோதம் சிட்டி மக்களை காப்பது இரண்டாம் பாகமாகவும்  அமைந்திருக்கும். இரண்டாம் பாக முடிவில் ஹாவி டென்ட் எனும் டிஸ்டிரிக்ட் அட்டர்னி யை கொன்ற பழியை ஏற்றுக்கொண்டு BATMAN காணாமல் போய் விடுகிறார். ஹாவி டென்ட் தான் two-face என்பது மக்களிடம் இருந்து மறைக்கப்படுகிறது. இந்த பின்னணியிலேயே மூன்றாம் பாகம் உருவாகிறது. DARK KNIGHT RISES படம் அமைதியான கோதம் சிட்டியில் ஆரம்பிக்கிறது. BANE எனும் கொடூர வில்லனிடம் இருந்து மறுபடியும் நகரத்தை காக்க வரும் BATMAN எவ்வாறு மக்களை காப்பாற்றினார் என்பதை சொல்வதே இந்த மூன்றாம் பாகம். BATMAN & ROBIN னுக்கான சிறிய லீடுடன் படம் முடிகிறது. இதற்க்கு மேல் நோலன் இந்த படத்தினை எடுக்கபோவதில்லை என்ற போதிலும் கண்டிப்பாக வேறு யாரையாவது வைத்து அதை எடுப்பார்கள் என்பதே என் கணிப்பு. ஒரு இறந்துவிட்ட franchise ஐ மறுபடியும் தொடங்கி அதை இவ்வளவு பெரிய மக்கள் வரவேற்ப்பு பெற்ற ஒன்றாக ஆக்கி முடித்து வைத்திருக்கிறார் நோலன். BATMAN பற்றிய நோலனின் பார்வை என்ன என்பதை இனி பார்ப்போம்.

குற்றங்களை எதிர்க்கும் ஒரு சாதாரண மனிதனாகாவே நோலன் BATMANஐ பார்க்கிறார். ஒழுங்கு படுத்தப்பட்ட குற்றங்களை எதிர்பதற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ளும் Bruce Wayne அதற்கான ஒரு கேடயமாக பயன்படுத்துவதே இந்த BATMAN வேஷம். BATMAN என்பது ஒரு சூப்பர் ஹீரோ அல்ல, குற்றங்களை எதிர்பதற்கான ஒரு சின்னம். அது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதே BATMAN னின் எண்ணம். BATMAN எனும் சுப்பர் ஹீரோவை விட தனது பணத்தினாலும், விஞ்ஞான அறிவினாலும், தான் கற்றுக்கொண்ட கலைகளினாலும் பல அற்புதங்களை நிகழ்த்தும் Bruce Wayen எனும் மனிதரின் வாழ்கையே நோலன் படம் எடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவரது வாழ்கையில் உள்ள தனிமை, ஏமாற்றம், தோல்வி, இழப்பு என்பவற்றை விவாதிப்பதாகவே படம் நகர்த்தப்பட்டிருக்கும். சிறுவயதில் தன் கண்ணெதிரே பெற்றோரை பலிகொடுக்கும் சிறுவன், தன் பெற்றோர் சாவுக்கு தானே காரணம் எனும் குற்ற உணர்விலும், தன் பெற்றோரை கொன்றவனை பழிவாங்கும் வெறியுடனும், சிறுவயதில் நடந்த ஒரு விபத்து காரணமாக வவ்வால்களில் உள்ள பயத்துடனும் வாழும் Bruce தன்னை தேடி ஆரம்பிக்கும் பயணமும், குற்றங்களை, குற்றவாளிகளின் மனநிலையை அறிய எடுக்கும் முயற்சிகளும் என முதல்பாகத்தில் Bruce Wayne இன் ஆரம்ப கால வாழ்க்கை படம் பிடிக்கப்பட்டிருக்கும். 


இரண்டாம் பாகமான DARK KNIGHT, BATMANனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும் அதே நேரம் ஜோகரின் நடிப்பு அந்த கதாபாத்திரத்தின் வலிமை காரணமாக அது ஒரு பிரமாண்டமான ஆக்ஷன் படமாக இருக்கும். குற்றங்கள் புரிபவர்கள் பணத்துக்காக மட்டுமே அதை செய்வதில்லை, சிலர் கிக்குக்காகவும் செய்கிறார்கள் என்பதே ஜோகர் பாத்திரத்தின் மூலம் சொல்லப்படுவது. எவ்வளவு பெரிய உத்தமராக இருந்த போதும் நேச உறவுகளின் இழப்பும் அதன் மூலம் ஏற்படும் பழிவாங்கும் உணர்வும் மிகைக்குமிடத்து எவர் வேண்டுமானாலும் மிருகமாய் மாறலாம், குற்றம் இழைக்கலாம் என்பதே Two-Face மூலம் சொல்லப்படுவது. ஒவ்வொரு கதாபாத்திரத்தினதும் பின்னணி, இயல்புகள், நடத்தை கோலங்கள் என அனைத்தும் ஒவ்வொரு காட்சி மூலமாக சிறப்பாக கூறப்பட்டிருக்கும். ஒரு ஆக்ஷன் படத்துக்கு இத்தனை பரிமாணங்கள்  குடுக்க முடியுமா என வாயடைத்துப்போன படம். ஜோகர் முன்னுக்கு பின் முரணாக ஒரே விடயத்துக்கு பல விளக்கங்கள் குடுப்பதும், BATMANக்கு பெரும் தலைவலி குடுப்பதும் எல்லாமுமாக சேர்ந்து அக்ஷன் படத்துக்கு ஒரு வரைவிலக்கணமாக இருக்கும் THE DARK KNIGHT. 


TDK படத்தைப் போன்ற எதிர்பார்ப்புடன் செல்லும் ஒரு ரசிகனுக்கு மூன்றாம் பாகமான THE DARK KNIGHT RISES சிறிது ஏமாற்றத்தை குடுக்கலாம். ஜோகருடன் ஒப்பிடும் பொது BANE சற்று சுவாரஷ்யம் குறைந்த பாத்திரமே. BANE கதாபாத்திரத்தின் அடிப்படை சற்று நாடகத்தன்மை அதிகமானது. VANOM எனும் ஒரு நச்சு பதார்த்தத்தை செலுத்தி நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியே BANEக்கு அதீத உடல் வலிமையை கொடுக்கும், ஆயினும் அந்த பதார்த்தம் தொடர்ந்தும் செலுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அதற்காகவே BANE ஒரு முகமூடி அணிந்திருப்பார். இந்த நாடகத்தன்மையான பகுதி TDKR படத்தில் இடம்பெறாது. ஆயினும் BANE இன் அடையாளமான அந்த முகமூடி இருக்கும். BANE ஒருவனே BATMAN உடன் சண்டையிட்டு BATMAN இன் முள்ளந்தண்டினை உடைத்தவன், உடல் பலத்தால் BATMAN க்கு சவாலாக இருந்த ஒரே வில்லன், எனவே இவனை விட இறுதிப் பாகத்துக்கு யார்தான் பொருத்தமான வில்லனாக இருக்க முடியும்?  TDKR படம் TDK படத்தையும் BATMAN ENDS எனும் பெயரில் வரவேண்டிய ஒருபடத்தயும்  சேர்த்த ஒரு கலவையாக இருக்கிறது. BRUCE WAYNE தனித்துவாழ ஆரம்பிக்கிறார், தன் வழியில் குற்றங்களை எதிர்க்க இன்னொருவரை தெரிவு செய்கிறார், தனது சொத்துக்கள் அனைத்தையும் அநாதை சிறுவர்களுக்கும் ஊர் நலனுக்கும் கொடுத்து விடுகிறார், BATMAN இறந்துவிட்டதாக மக்களை நம்ப வைக்கிறார். போகிற போக்கில் படம் பல விடயங்களையும் தொட்டு செல்கிறது. ஒரு சுப்பர் ஹீரோ படம் இப்படியும் எடுக்கலாம் என்பதை நோலன் செய்தது காட்டி இருக்கிறார். நோலனிடம் இருந்து வரும் ஒரு சுப்பர் ஹீரோ படம் இதை விட சிறப்பாக முடிந்திருக்க முடியாது என்பது எனது கருத்து. 

ஒரு பிரமாண்டமான முடிவு, ஆயினும் நோலனிடம் இன்னும் ஒரு BATMAN படம் எஞ்சியிருப்பதாகவே எனக்கு படுகிறது. சூப்பர் ஹீரோக்கள் செய்யும் சாகசங்களின் வரிசையில் இது சூப்பர் ஹீரோ வேசத்துக்கு பின்னால் இருக்கும் ஒரு சாதாரண மனிதனது கதை. DARK KNIGHT  series, a supper hero movie couldn't get better than this!

டிஸ்கி: எங்க எங்க இருந்து நோலன் இந்த படத்த சுட்டாரு, இந்த படத்த எங்க எங்க சுட்டாங்கன்னு இன்னொரு பதிவுல பார்க்கலாம்.

Monday, July 23, 2012

சூர்யா என்கிற சரவணன்: பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு

இன்னிக்கி தேதில ஒரே சமயத்தில அதிகம் பேருக்கு  அதிகம் பிடித்தவரும் அதிகம் பேருக்கு அறவே பிடிக்காதவருமான ஒரே தமிழ் சினிமா பிரபலம் சூர்யா. அண்ணன் பத்தி நமக்கு பிடிச்ச, பிடிக்காத, சில விடயங்களின் தொகுப்பே இந்த பதிவு. அண்ணனோட பிறந்தநாள் சிறப்பு பதிவா இன்னிக்கி போடுறோம்.



சூர்யா மேல நமக்கு எப்பவுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டு. அதுக்கு என்ன காரணம்ன்னா சூர்யாவ விட சரவணன் என்கிற தனிமனிதன் சாதித்து காட்டிய ஒரு விஷயம்தான். எல்லாரும் ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு திறமை ஒழிஞ்சிருக்கும், அது என்னன்னு கண்டுபிடிச்சு,வளர்த்து அதன் வழியே போறவன் ஜெயிப்பான்னு சொல்லுவாங்க. திறமை என்பது பிறப்பினால் வருவது என்பதே அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை. உழைப்பு அந்த திறமையை மெருகேற்றும் என்பதே அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். ஆனால் திறமை என்பது வளர்த்துக்கொள்ளக்கூடியது மட்டுமல்ல உழைப்பினால் உருவாக்கிக் கொள்ளக்கூடியதும் என்று சாதித்துக் காட்டியவர் சூர்யா என்னும் சரவணன்.

பெரும்பாலும் இந்த பதிவ படிக்கிற நீங்க எல்லோரும் சூர்யா நேருக்கு நேர் படத்துல அறிமுகமான நாள்ல இருந்து அவர வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கறவங்களாதான் இருக்கும். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் சிவகுமார் குடுத்த மூஞ்சிய தவிர சூர்யா நடிக்க வந்தப்போ அவருக்கிட்ட எதுவுமே இருக்கல.  சரவணன் என்கிற தனி மனிதன் ரஜினி, விஜய், அஜித் போன்ற Born as Super Star கெடயாது, கமல், விக்ரம் போன்ற பிறப்பிலேயே நடிகனும் கிடையாது. உண்மைல சொல்லப்போனா பிலிம் இண்டஸ்றிகின்னு பிறந்த ஒருத்தர் கிடையாது. இன்னும் சொல்லப்போனா தம்பி கார்த்திதான் அந்த Born Star. சரவணன் இயல்பிலேயே ஒரு ரிஸர்வ்ட் பேர்ஸனாலிட்டி. தோல்விகளை கண்டு துவண்டு போகக்கூடியவர். தோல்விகளுக்கு அஞ்சியே எதயும் தொடங்க பயப்படும் ஒருவர். வாழ்கையை பற்றி ஒரு சரியான புரிந்துணர்வோ திட்டமிடலோ இல்லாதவர். சுருக்கமா சொன்னா எந்த வகையிலும் சினிமா துறைக்கு லாயக்கே இல்லாத ஒருத்தர். இன்னிக்கி இருக்கற சூர்யா என்கிற நடிகர பார்க்குறவங்களுக்கு அந்த சரவணனா இதுன்னு ஒரு ஆச்சர்யம் வரும். இது எல்லாமே சரவணனின் உழைப்பினால் வந்தது, தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் தேடலினால் வந்தது.


நடிக்க வந்ததப்புறம்  தனது வாழ்கையில் வந்த ஒவ்வொரு தோல்வியையும் ஒரு பாடமா எடுத்துக்கிட்டு மறுபடி மறுபடி பல படிகள் முன்னேறிக்கொண்டிருக்காரு சூர்யா. நீ தெரிவு செய்த துறையில் உன் முழு ஈடுபாடுட்டுடன் உழை, வெற்றி உன்னை தேடி வரும் என்பதே சரவணன் நமக்கு கற்றுத்தந்த பாடம். யார் வேணும்னாலும் எந்த துறையில் வேணும்னாலும் சரியான பயிற்சியுடன் முழு ஈடுபாட்டுடன் உழைத்தால் வெற்றி பெறலாம், தனெக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், ஆசையும் திறமையும் சேர்ந்து வரும்போதே வெற்றியும் வரும். கண்டிப்பாக வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் வருவதே. அந்த அதிர்ஷ்டத்தையும் உழைப்பால் உருவாக்கிக் கொள்ளலாம் என்பது சரவணனது வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம். இந்த காரணமே சூர்யா என்கிற நடிகர் மீது நமக்கு ஒரு சாப்ட் கார்னர் இருக்க ஒரே காரணம். 

சமீபத்துல முடிவுக்கு வந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, சூர்யாவோட இன்னுமொரு பக்கத்த காட்டிச்சு(இது தொடர்பான நமது பழைய பதிவு ஒன்று). கார்த்தியோ, இல்ல இன்னுமொரு நடிகரோ, ஏன் சிவகார்த்திகேயனோ கூட அந்த ப்ரோகிராம பண்ணியிருந்தா அந்த ப்ரோக்ராம் ஒருவேள இன்னும் ஜனரஞ்சகமா அமைஞ்சிருக்கும், ஆனா சூர்யா அந்த ப்ரோக்ராம் பண்ணிததாலதான் தமிழ் நாட்டுல எதோ ஒரு மூலையில வாழுற மனிதர்கள் பத்தி, அவங்க வாழ்கைய பத்தி நமக்கு ஈசியா தெரிஞ்சு கொள்ள கூடியதா இருந்தது. அந்த ஷோ ஒரு பெரிய ஸ்டார் நடத்திய ஷோவாக இருந்த போதும், ஒவ்வொரு எப்பிஸோடிலும் கலந்து கொண்ட ஹாட் சீட் கான்ட்டஸ்டன்ஸே உண்மையான ஸ்டார்ஸாக வெளியே தெரிஞ்சதுக்கு சூர்யாவே ஒரு பெரிய காரணம்ங்கறது எனது தனிப்பட்ட கருத்து. அதோட மட்டுமில்லாம செலிப்ரிட்டி எப்பிஸோட் முடிவுல ஜெயிச்ச பணத்த வழக்கம் போல முதியோர் இல்லத்துக்கோ, அநாதை ஆசிரமத்துக்கோ குடுக்காம கல்விக்கும், வைத்தியத்துக்கும் பயன்படச் செய்த்ததிலும் சூர்யா பங்கு அதிகம் இருக்கும் என்பது எனது கருத்து.  இனிமே சூர்யாக்கிட்ட நமக்கு பிடிக்காத விடயங்கள பார்க்கலாம். 



அண்ணனோட சினிமா வெற்றி முழுக்க முழுக்க அண்ணனோட உழைப்பினால வந்ததே ஆனாலும், luck favors the brave என்பதற்கமைவாக அண்ணனோட வெற்றிக்கு அண்ணனோட போட்டி நடிகர்கள் சறுக்கினதும் ஒரு காரணம். இது பத்தி முன்பே ஒரு பதிவுல விரிவாக அலசி இருக்கோம். இந்த மேட்டர கொஞ்ச நாளாவே  அண்ணன் சுத்தமா மறந்துட்டாரு. அது நமக்கு அறவே பிடிக்கல. சமீப காலமா ட்ரெண்டு மாறிக்கிட்டு இருக்கு அண்ணாத்தே. இப்போ நீங்க உஷாராகலன்னா நீங்க இவ்வளவு நாளும் பண்ணினது எல்லாமும் வீணா போயிடும். கமல்ஹாசனிற்கு நடந்தது கூட உங்களுக்கு நடக்கலாம். கொஞ்சம் பார்த்துக்கங்க.  அப்புறம் இப்பொல்லாம் நீங்க நானும் நடிச்சிருக்கேன், நானும் நடிச்சிருக்கேன்னு கொஞ்சம் ஓவராவேதான் அலட்டிக்கறீங்க. அத கொஞ்சம் குறைச்சிக்காங்க. இந்த வாட்டியும் மாற்றான் பட ப்ரோமோஷன் அது இதுன்னு டிவில வந்து, இந்த படத்துல நடிக்கறதுக்காகா வியட்நாம் போனேன், அந்தார்ட்டிக்கா போனேன், அந்த தாய்லாந்து ட்வின்சு என்னோட கனவுல வந்து கோச்சிங் குடுத்தாங்க, ,தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை இந்த படம் ஒசத்தும்ன்னு கத விட்டீங்க கொல வெறி ஆயிடுவேன். 

இன்னுமொரு மேட்டர், இது அண்ணாத்தே பத்தி கெடயாது, அவரோட விசிறிகள் பத்தி. நிஜமா அண்ணனூட விசிறிகள்ள பாதிப்பேருக்கு மேல முன்னொரு காலத்துல தல அல்லது தளபதி விசிறிகளா இருந்தவங்கதான், இவங்கதான் அடிக்கடி இந்த தல தளபதி விசிறிகள சீண்டிப் பாக்குறவங்க, நீங்க கொஞ்சம் பக்குவமா இருந்துக்கங்க, இல்லன்னா உங்களாலேயே இப்போ அதிகம் பேருக்கு அண்ணாத்தைய புடிக்காம போயிருச்சு, இது நீண்டுச்சுன்னா, இப்போ தல தளபதி இருக்கற பார்முக்கு சூர்யா ரொம்ப கஷ்டப்பட்டு போயிருவாரு, பார்த்துக்கங்க. அப்புறம் சூர்யாவ கேவலமாக கலாய்க்கிற தல தளபதி பான்ஸ், சூர்யா என்கிற தனி மனுஷன், நடிப்புல தல தளபதிக்கு போட்டியா இருந்தாலும், சினிமாவ தாண்டி அவருக்கிட்டையும் எடுத்துக்குறதுக்கு நாலு விஷயம் இருக்கு, அதுக்காகவது கொஞ்சம் மரியாத குடுங்க.


அப்புறம் அண்ணனுக்கு ஒரு சின்ன ரிகுவெஸ்ட், உங்க ஷக்தி(பிதாமகன்), சின்னா(பேரழகன்), பாலையா(மாயாவி) காரெக்டர்ஸ் இன்னும்  அப்புடியே மனசுல நிக்குது, சீக்கிரமா அது போல ஒரு ஜாலி கேரக்டர் பண்ணுங்க சார். ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கோம். 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா. மாற்றான் வெற்றிக்கும், தொடர்ச்சியான வெற்றிகளுக்கும் வாழ்த்துக்கள். 

டிஸ்கி: என்னோட வாழ்கையில நான் ஆசைப்பட்ட ஒரு துறைய தெரிவு செய்து ஒரு கட்டத்துல தவறான முடிவ எடுத்துட்டோமோ, நமக்கு இந்த துறையில திறமை இல்லையோன்னு யோசிக்கிட்டு இருந்தப்போ சூர்யாவோட வாழ்கதான் ஒரு பெரிய திருப்பு முனையா இருந்திச்சு, அதுக்கு என்றென்றும் கோடி நன்றிகள் சூர்யா. 

Monday, July 16, 2012

பில்லாவும் அஜித்தும் பின்னே ஞானும்...

ம்ம்ம்ம்ம், மேட்டருக்கு போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான மேட்டர்.. இப்பவும் எனக்குள்ளே ஒரு மிருகம், அதாவது "தல ரசிகன்"ங்குற மிருகம் உறங்கி கிடக்கு.. அதே மாதிரி ஒரு மிருகம் உங்களுக்குள்ளேயும் உறங்கி கிடக்குன்னா, நீங்க மேல வாசிக்கலாம்.. இல்லன்னாலும் வாசிக்கலாம்.. ஓகே? ஓகே ஓகே ... 

என்ன சொல்றது, முந்தி மாதிரி எல்லாம் இல்ல சார், ஏகன் படத்த கூட பர்ஸ்ட் டே பார்த்த பையன் சார் நான்... ஆனா பில்லா-பர்ஸ்ட் டே பார்க்கல!!  எதிர்பார்ப்பு இல்லன்னு சொல்ல முடியாது.. 95% எக்ஸ்பெக்டேஷன் Behindwoodsல கொடுத்து இருந்தாங்க , ஆனா அது ரொம்ப அதிகமோ? அப்புடின்னுதான் இருந்துச்சு!! 

எது எப்புடியோ!! ஒரு வழியா பில்லா-2 பார்த்தாச்சு.. படத்த பத்தி சொல்லனும்னா பல பேர் சொன்ன மாதிரி படம் ஒன்னும் அவ்வளவு மொக்க மொக்க இல்ல.. ஆனா கண்டிப்பா மங்காத்தா அளவுக்கு இல்ல பிரதர், அதுக்காக நீங்க,  ஏகன் மாதிரியா?ன்னு கேட்டீங்கன்னா, நிச்சயமா இல்ல இல்ல இல்ல , அவ்வளவு ஏன், அசல விடவும் பெட்டரா இருக்கு..ஆஞ்சநேயா?, ஜனா?, ஆழ்வார்? ஜி? ஐயய்யோ அது எல்லாத்த விடவும் பெட்டர்! அப்ப எந்த மாதிரி? பில்லா-1 மாதிரின்னு சொல்லலாமா? ஆன்சர் தெரியலயே!!  

சரி யாரோ இது அஜித்தின் ராஜபாட்டை!! ன்னு சொன்னாங்களாமே? ஐயோ சொன்னவரு  வாய் அழுகி போகனும், சாமி சத்தியமா அதவிட 1634 மடங்கு மேல இந்த பில்லா-2.. சகுனி? சந்தானம் இருந்ததுனால தப்பிச்சிச்சி, ஆனா பில்லா-2 க்கு சந்தானம் தேவையே இல்லயே! அது போக எதுக்கு நாங்க ஒரு நடிகரின் படத்த இன்னொரு நடிகர் படத்தோட கேவலமா கம்பேர் பண்ணிக்கிட்டு!!! 

ஸ்க்ரீன்பிளே மோசமா? இல்லையே!! இத விட பெட்டரா இந்த படத்துக்கு செய்ய முடியுமா? எல்லாம் சீனும் சீக்குவன்சா இருக்கு, ஒன்னு ரெண்டு டர்னிங் பாயிண்ட்ஸ் கூட இருக்கு!! கிட்டதட்ட சுவாரஷ்யமா இருக்கு!!  அப்ப எங்க பிழைச்சிச்சி? ஹ்ம்ம்!! ஆனா சக்ரி டோலாட்டி மேல கொஞ்சம் கோவமா இருக்கு!! சரி கடைசியா நீ என்னதான் சொல்ல வர்ற? ம்ம்ம்ம்ம்ம். இப்புடி வேணும்னா சொல்லலாம், தல ரசிகர்கள், தலக்காக இந்த படத்த ஒரு வாட்டி பார்க்கலாம், ஏன் தல ரசிகர்கள் ரெண்டு வாட்டி கூட பார்க்கலாம்!! அப்ப மத்தவங்க? அவுங்க தேவைபட்டா பார்க்கலாம், வேணும்னா பார்க்கமா கூட இருக்கலாம்!!

கடைசியா, தலக்கு ஒரு மேட்டர் (தல இத படிப்பாரா?ன்னு தெர்ல, எதுக்கும் சொல்லி வக்கிறேன்)... எப்பவுமே தல நல்லா பண்ணிருக்காரு, ஸ்டைலிஷா! இருக்காரு.. ஸ்மார்ட்டா இருக்காரு, கெத்தா இருக்காரு! ஆனா டைரக்டர் தான் சொதப்பிடாருன்னு சொல்ல வைக்காத தல, ரொம்ப கஷ்டமா இருக்கு.. இப்ப நீ இருக்குற ரேஞ்சுக்கு வாலி மாதிரி படம் பண்ண முடியாது, அது ஓகே.. ஆனா ஒரு வில்லன், வரலாறு மாதிரி பெர்போர்மன்ஸ் ஒரியண்டட் மாஸ் படம் ஒன்னு கொடு தல,உன்னால முடியும். கண்டிப்பா ப்ளாக்புஸ்ட்டர் ஆகும்.. ஒரு விஷயம் புரிஞ்சிக்கனும் நீ! எப்பவுமே தல வெறியன் ரசிகன் உன்கிட்ட எதிர்பார்குறதுக்கும் , சாதாரண நல்ல சினிமா ரசிகர்கள் உன்கிட்ட எதிர்பார்குறதுக்கும், ஒரு நூலிழை தான் வித்தியாசம் இருக்கு(தேங்க்ஸ் டு முருகதாஸ்). அந்த நூலிழைய விட்டு கொஞ்சம் இறங்கி வந்து சாதாரண சினிமா ரசிகர்கள்காக நீ படம் பண்ணாலும், நாங்க அவுங்கள விட அதிகமாவே ரசிப்போம்!!!! 

டிஸ்கி: தல ரசிகர்கள் இல்லாதவுங்க இத படிச்சி குழம்பி , என்ன திட்ட வந்தீங்கன்னா!! அது தான் மொத பெரக்ராப்லையே சொல்லிட்டேனே, அப்புறம்  தலய பார்த்தா உங்களுக்கு இப்புடி தெரியுதா? இல்ல என்ன பார்த்தா உங்களுக்கு அப்புடி தெரியுதா?

Friday, July 13, 2012

சூர்யாவின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: ஒரு பார்வை

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி இறுதியாக நேற்றுடன்  (12/7/2012) ஒரு முடிவுக்கு வந்துவிட்டது!!. இரண்டரை மணி நேரம் நிகழ்ச்சியின் நெகிழ்ச்சியான தருணங்கள், காமெடி தருணங்கள், சிவகுமார் பிரவேசம், வெற்றி பெற்றோரின் வெற்றியின் பின்னான அனுபவங்கள் என ஒரு இழு இழுத்து 11.30க்கே முடித்தார்கள். ஹிந்தியில் சக்க போடு போட்ட Kaun Banega Crorepati (KBC) நிகழ்ச்சி தமிழில் வரபோகிறது என்று அறிவித்த நாள் முதல் இந்த நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு தமிழ் தொலைகாட்சி ரசிகர்களிடம் ஓரளவுக்கு இருந்து கொண்டே வந்தது (ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் சன் டிவியில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி வந்திருந்தாலும் கூட). பிரகாஷ்ராஜில் ஆரம்பித்து, விஜய், விக்ரம் என தொடர்ந்து இறுதியாக சூர்யா தான் இந்நிகழ்ச்சியை நடத்த போகிறார் என தெரிந்தவுடன், சூர்யா இந்த நிகழ்ச்சிக்கு சரி வருவாரா? அவர் எப்படி இந்நிகழ்ச்சிக்கு? இது ஹிட்டாகுமா? பல நேர் மறை கமெண்ட்கள் இருந்து கொண்டே வந்தது. நிகழ்ச்சி ஆர்மபித்த நாள் முதல் எபிசோட் தொடர்ந்து ஒரு சில எபிசோட்ஸ் தவிர இறுதிநாள் எபிசோட் வரையிலும் ஓரளவுக்கு பார்த்தவன் என்னும் முறையில் இந்நிகழ்ச்சியை பற்றிய என்னுடைய பார்வை இது:




                                    

நிகழ்ச்சியை ஆரம்பிபதற்க்கு முன்னாடியே தொடர்ச்சியான விஜய் டிவி விளம்பரங்கள், நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கான கேள்விகள் அதற்கான பதிலை sms பண்ணுவதன் மூலம் விஜய் டிவியும் தொலைபேசி நிறுவனங்களும் அடிக்கும் கூட்டு கொள்ளைகள் என ஒரளவுக்கு மக்கள் இந்நிகழ்ச்சியை பற்றி பேசிக்கொண்டு தான் இருந்தனர். பெப்ரவரி 27, 2012 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் ஒரளவுக்கு எதிர்பார்ப்புடன் பலரும் இந்நிகழ்ச்சியை பார்த்தார்கள். ஆனால் முதல் எட்டு அல்லது பனிரெண்டு எபிசோட்களை தொடர்ந்து பார்த்தபோது "அடச்சே இந்த மொக்கைக்கா இவ்வளவு பில்டப் குடுத்தாங்க"ன்னு கேட்க தோன்றியது, அது போக அவர்களால் கேட்கப்பட்ட மகா புத்திசாலிதனமான கேள்விகள்:


இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்? 
நாய் அடிச்சான் காப்பி,   கொசு அடிச்சான் காப்பி,    ஈயடிச்சான் காப்பி,   பேய் அடிச்சான் காப்பி. 

ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது? 
ஏகாதசி,    பொங்கல்,    விநாயகர் சதுர்த்தி,    மெதுவடை.


இது இன்னொரு லொள்ளுசபா.., நம்ம சந்தானம், மனோகர வச்சிகிட்டு ஒரு காமெடி பண்ணாரே அது மாதிரின்னு ஒரு விதமான சலிப்பு வந்து, வேறு சில வேலைகளின் காரணமாகவும் பிறகு பார்க்காமலே இருந்து நடுவில் ஒன்னு ரெண்டு செலிபிரிட்டி எபிசோட்ஸ் மட்டும் பார்த்தேன். பிறகு மே மாதம் இருந்து சரி இப்ப பார்ப்போமே? மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்லி என்னென்ன மாற்றங்கள் செஞ்சிருக்காங்கன்னு பார்த்தால், சூர்யாவின் உச்சரிப்பு, போட்டியாளர்களை கையாளும் விதம், அவர்களுடனான சம்பாஷனைகள், முதல் ஐந்து கேள்விகளின் தரம் எல்லாமே ஓரளவுக்கு முன்னேறி இருந்தது. அப்புடியே தொடர்ந்து பார்த்தால் இந்நிகழ்ச்சியின் மூலம் பல நல்ல விசயங்களும் நடப்பது தெரிந்தது.


பெஸ்ட் என்டர்டைனர் ரமீலா பேகம்.! இவரின் எபிசோட் யூட்யூப் ஹிட்டு!
இந்நிகழ்ச்சியை பற்றிய சில பொதுவான கருத்துகளும் என் எண்ணங்களும்: 

நிகழ்ச்சி ஹோஸ்ட்? அமிதாப் அளவுக்கு ஆளுமை உள்ள ஆள் என்றால் ரஜினி அல்லது கமலை தான் கொண்டுவரணும், ஆனா ரஜினி என்னிக்குமே வரமாட்டார், கமல் இப்போதைக்கு வரமாட்டார். அதுக்கு அடுத்த லெவல்ல ஹிந்தியில் ஒரு சீசன் செய்த ஷாருக்கான் ரேஞ்ச்சுக்கு பார்த்தீங்கன்னா, அதுக்கு விஜய், அஜித், விக்ரம், சூர்யா நாலு பேர்ல ஒருத்தரதான் புடிக்கனும். முதலில் சொல்லப்பட்ட விஜய், திரையில் தெரிவதற்கு அப்புடியே எதிர்மாறாகதான் டிவியிலோ அல்லது பொது நிகழ்ச்சிகளிளோ இருப்பாரு, அவரது உம்மனாம் மூஞ்சி இந்த நிகழ்ச்சிக்கு எப்புடியுமே சரி படாது. அஜித்தை பொறுத்தவரையிலும் அவரு விஜய்டிவி குடுக்குற அவார்ட் பன்க்ஷனுக்கே வரமாட்டாரு! இந்த மாதிரி நிகழ்ச்சிக்கா வர போறாரு? அப்புடியே வந்தாலும் "நா பேஷ் மாட்ன்"ங்குறத தொடர்ந்து கேட்க முடியாது. விக்ரம் சமீபத்துல கூட ஒரு பேட்டில இந்த நிகழ்சிக்கு முதலில் என்னை கேட்டார்கள், ஆனா நம்ம மூஞ்சிய தொடர்ந்து டிவில பார்த்துகிட்டு இருந்தா, யாருமே தியேட்டர்க்கு வந்து நம்ம படத்த பார்க்க மாட்டாங்க. டிமான்ட் குறைஞ்சிரும்ன்னு எதோ சொல்லி இருந்தாரு. மேலும் விக்ரமின் ஒரு விதமான குழந்தைத்தனமான அணுகுமுறைகளும்! இந்த நிகழ்ச்சிக்கு எப்புடியுமே ஒத்து வராது!! ஆகவே ஆரம்பத்தில் குறைகள் இருந்தாலும் அவற்றை திருத்திக்கொண்டு திரையில் சாதித்த சூர்யா, இங்கும் தன்னை சமாளித்து கொள்வார் என்னும் அளவில் அந்த நாலு பேரில் சூர்யாதான் பெஸ்ட் சாய்ஸ். இந்நிகழ்ச்சியிலும் சூர்யா திரையில் போன்றே தவறுகளை திருத்திக்கொண்டு பிந்திய எபிசொட்களில் ஆட்டம், பாட்டு, காமெடி , சென்டிமென்ட்ன்னு கலக்கி இருந்தாரு. விக்ரம் சொன்னதுபோல் , இந்நிகழ்ச்சியின் பின் சூர்யாவின் டிமான்ட் குறையவில்லை, மாறாக, கொஞ்சம் கூடிருச்சுன்னே சொல்லலாம். குறிப்பாக சூர்யா டி.ஆர்.பி ஏற்றுவதற்காக அழுது புரண்டு சென்டிமென்ட் செய்த எபிசோட்களின் மூலம், வீடுகளில் வசிக்கும் தாய்க்குலங்களின் ஆதரவு ரொம்பவே கூடிருச்சுன்னு சொல்லலாம். அடுத்து சூர்யா படம் என்ன? ரிலீஸ் ஆனவுடன் தியேட்டர் போய் பார்ப்போமா?ன்னு இப்பவே வீட்டு ஆண்களை பெண்கள் நச்சரிக்க தொடங்கிட்டாங்ன்னு வேற கேள்வி. இது சூர்யாவின் கேரியரில் நிச்சயம் ஒரு பிளஸ்சே. சூர்யாவும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பிளஸ்சே.

 

இந்நிகழ்ச்சியை பற்றிய இன்னொரு முக்கியமான குறை. யாராலையுமே 25 லட்சத்துக்கு மேல ஜெயிக்க முடியல. இது குறையா இல்லையானு தெரியல. ஏன்னா ஒரு கோடிய அப்புடியே அள்ளி குடுக்க முடியாது. 25 லட்சத்தின் பின் நிகழ்ச்சியை நிறுத்தவும் இல்லை. கேட்கப்பட்ட கேள்விகள் ரொம்பவே கடினமாக இருந்தது. ஆனாலும் முதல் 25 லட்ச வெற்றியாளர் மணிகண்டன், ஐ.ஏ.எஸ் கனவுள்ள மாற்று திறனாளி ராஜ்குமார், பாடசாலைய நிர்வகிக்கும் அந்த பாட்டி எல்லாருமே இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ஜெயித்திருக்க வேண்டியவர்கள். மேலும் நிகழ்ச்சியில் பங்குகொண்ட சுமார் 100 போட்டியாளர்களில் சுமார் 30 க்கும் அதிகமானவர்கள் 320,000 க்கு அதிகமாகவே ஜெயித்தார்கள். ஜெயித்தவர்களில் பலர் வறுமையின் பிடியில் அல்லது கல்வி, மருத்துவம், வீடு என எதாவது தேவை உள்ளவர்களாகவே இருந்தனர். பலர் திருப்தியடைந்தனர். நிகழ்ச்சியில் வெறுமனே வெற்றியடைந்தால் உலகம் சுத்துவேன், நீச்சல் குளத்துடன் வீடு கட்டுவேன்னு பீலா விட்டுக்கொண்டு வந்தவர்களை மிக சாமர்த்தியமாக வெளியேற்றிய வகையிலும் தேவை உள்ளவர்களுக்கு முடிந்தவரையில் உதவிய வகையிலும் ஜீனியஸ் சரியாகவே செய்தார் என சொல்லலாம். என்ன ஒன்னு உண்மையான தேவை உள்ளவர்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துருக்கலாம். மற்றொரு விமர்சனம் என்ன என்றால் வந்த எல்லா செலிபிரிட்டியும் பெரிய தொகை வின் பண்ணார்கள். ஆமாம் , சிவகார்த்திகேயன்( 10,000), கலகலப்பு டீம் ( 80,000 ) தவிர எல்லாருமே பெரிய தொகை ஜெயித்தார்கள். ஆனால் அவர்களில் யாருமே, ஜெயிச்ச காசை வீட்டுக்கு கொண்டு போக விளையாட வில்லை. எதாவது ஒரு சமுக நல தொண்டிற்க்காகவே விளையாடினார்கள். அவர்களை இன்னும் கொஞ்சம் ஜெயிக்க விட்டு நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உதவிகள் செய்திருக்கலாம். 

நிகழ்ச்சியின் முடிவு? சில இணையத்தளங்களிலும், பிரபல டிவிட்டர்களின் ட்வீட்களிளும் நிகழ்ச்சி முடிக்கபட்டதற்கு ஒரு காரணம் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு கொண்டு வருகிறது. அதாவது நிகழ்ச்சியின் டி.ஆர்.பி குறைந்துவிட்டது. ஆரம்பத்தில் இருந்த ஹைப் இல்லை. ப்ரோக்ராம் பெயிலியர். அதுதான் நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப்பட்டது என்று திரும்ப திரும்ப சொல்கிறார்கள். இந்த டி.ஆர்.பி மற்றும் அது எவ்வாறு கணிக்கபடுகிறது என்பதில் ஆரம்பத்தில் இருந்தே பல குளறுபடிகள் உள்ளன. ஆனா நான் வாசித்தவரையிலும் சில ஆங்கில இதழ்களில்(அது உண்மையா பொய்யான்னு தெரியல) நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி முதல் வாரங்களில் இருந்ததை விட பிந்திய வாரங்களில் மற்ற எல்லா சம நேர சீரியல்களை முந்திக்கொண்டு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதல் இடத்துக்கு வந்துவிட்டது என்றே இருந்தது (இதை நம்பலாம இல்லையானு தெரியல, எங்கயாவது டி.ஆர்.பி பார்க்க கூடிய சோர்ஸ் இருந்தால் கமென்ட ப்ளீஸ்).ஆனால் நிச்சயமாக நிகழ்ச்சி முடிக்கப்பட்டதற்கு டி.ஆர்.பி ஒரு காரணம் இல்லை. ஹிந்தியில் கூட KBC நிகழ்ச்சி இந்த பனிரெண்டு வருடங்களில் வெறும் ஐந்து சீசன்கள் மட்டுமே வந்துள்ளது. ஒவ்வொரு சீசனும் மூன்றில் இருந்து ஐந்து மாதங்களுக்குள் முடிக்கப்பட்டது. இது போன்ற நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக வருவதை விட இவ்வாறு இடைவெளி விட்டு விட்டு வரும்போது தான் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை எகிரவைத்து தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிக்கலாம் என்பது தெளிவான உண்மை. அதுபோக ஆரம்பத்திலேயே ஒரு எபிசோட்க்கு 50 லட்சம் படி 40 எபிசோட்ஸ் ப்ளான் பண்ணப்பட்டு சூர்யாவிற்கு 20 கோடி சம்பளம் கொடுத்துதான் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்ன்னு அப்போதைய செய்திகள்ள வந்துச்சு. ஆகவே 40 எபிசோட்ஸ் ப்ளான் பண்ணப்பட்ட ஒரு நிகழ்ச்சி சுமார் 80 எபிசோட்ஸ் கண்டுள்ளது என்பதே உண்மை. இது நிகழ்ச்சி வெற்றி பாதையில் சென்ற ஒரே காரணத்தினால் மட்டுமே இருக்கலாம். 

இறுதியாக என்ன தோணுதுன்னா விஜய் டிவி கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை அடுத்த வருடம், அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியின் பின் தொடர்வார்கள். அதில் அநேகமாக சூர்யாவே ஹோஸ்டாக இருப்பார்(இப்போதைக்கு மாற்று இல்லை) ,ஆனால் இன்னும் கொஞ்சம் பெட்டரா செய்வார். திரும்பவும் டிவில மொக்க கேள்வி கேட்டு பதிலை sms பண்ண சொல்லுவாங்க. அதுக்கு திட்டி ட்வீட் போட்ட பிரபல ட்வீட்டர்கள், பதிவர்கள், நீங்க, நானு, எல்லாருமே sms அனுப்புவோம். நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், விஜய் டிவி, சூர்யா, மற்றும் இது சம்பந்தபட்டவுங்க எல்லாரும் நல்லா சம்பாதிப்பாங்க. சம்பாதிச்சதில் சிறு தொகையை போட்டியாளர்களுக்கும் சமூக நல பணிகளுக்கும் குடுப்பாங்க. என்டர்டய்மன்ட்க்காக நீங்களும் நானும் டிவி முன்னாடி உட்காந்து போட்டியாளர் சொன்ன ஆப்ஷன் சரியா பிழையான்னு சூர்யா மூஞ்ச பார்த்துகிட்டு இருப்போம்!!!

டிஸ்கி: ஆத்தா சத்தியமா நா சூர்யாவின் தீவிர ரசிகன் இல்ல.

Thursday, July 5, 2012

கமல் ஹாசனும் உலக நாயகனும்


நான் சினிமா பார்க்க ஆரம்பித்ததில் இருந்து மிகத்தீவிர கமல் ரசிகன். எந்த அளவு கமல் ரசிகன் என்றால் ரஜினி படம் பார்ப்பது ஒரு மிகப்பெரிய குற்றம் என நினைக்கும் அளவு தீவிர கமல் ரசிகன். எனக்கும் எனது நண்பர்களுக்கும் இடையிலான கமல்-ரஜினி விவாதம் பெரும்பாலும் தமிழ் சினிமாவை ரட்சிக்க வந்த கடவுள் கமல் ஹாசன், அதனை கெடுத்து குட்டிச்சுவராக்கும் சாத்தான் ரஜினி என்கிற தொனியிலேயே அமைந்திருக்கும். கமல் படங்கள் எப்போதும் அவை வெளிவந்த காலத்தை விட முன்னோக்கியதாகவே எனக்கு படும். நடிப்பில் கமலை மிஞ்ச ஒரு நடிகன் இந்த உலகில் பிறந்துவிட கூட முடியாது என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.

கமல் ஹாசன் எனக்கு அறிமுகமானது எனது பதின் ஓராம் அல்லது பதின் இரண்டாம் வயதில். நான் பார்த்த முதல் கமல் படம் கல்யாண ராமன். பெரும்பாலும் நான் பார்த்த முதல் சினிமாவும் அதுவாகவே இருக்கும். இரண்டாவது படம் சிகப்பு ரோஜாக்கள். அந்த இளம் வயதில் இரண்டு படங்களிலும் தோன்றிய நடிகர் ஒருவரே என்பதை புரிந்து கொள்வதே எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அதன் பிற்பாடு, சிங்கார வேலன், அபூவ்ர்வ சகோதரர்கள், கலைஞன் என வரிசையாக பல கமல் பாடம் பார்த்ததாலோ என்னவோ நான் ஒரு கமல் ரசிகனாகவே மாறிவிட்டிருந்தேன். சிந்தித்து உணர ஆரம்பத்தபின், பதின்ம வயதின் இறுதியில் முதல் முதலாக நான் பார்த்த படம் இந்தியன். அப்போதுதான் நடிப்பு என்றால் என்ன, சினிமா எவ்வாறு எடுக்கபடுகிறது, என்பது போன்ற அடிப்படை விடயங்கள் புரிய ஆரம்பித்திருந்த காலம்.  அதுவே நான் கமல் ஹாசனை உன்னிப்பாக அவதானிக்க ஆரம்பித்த காலம்.

அப்போதுதான் பதினாறு வயதினிலே படத்தை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. கமல் அந்த இளம் வயதில் ஏற்று நடித்த கதாபாத்திரமும் அதனை அவர் திரையில் கொண்டுவந்திருந்த விதமும் இன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும். அன்றிலிருந்தே கமல் ஹாசனின் ஒவ்வொரு படங்களாக தேடி அலைந்து பார்க்க ஆரம்பித்தேன். சிகப்பு ரோஜாக்கள், குரு, வறுமையின் நிறம் சிகப்பு, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, ஒரு கைதியின் டைரி, புன்னகை மன்னன், நாயகன், சத்யா, குணா, தேவர் மகன், மகாநதி, நம்மவர், குருதிப்புனல் சமீபத்தில் அன்பே சிவம் என கமல் வெளிப்படுத்திய அத்தனை பரிமாணங்களும் என்னை வியப்பில் ஆழ்த்தின. ஒன்றுக்கு ஓன்று தொடர்பில்லாத கதா பாத்திரங்கள், வேறுபட்ட கதை களம், வேறுபட்ட நடிப்பு என்று கமலின் ஒவ்வொரு அசைவும் என்னை பரவசப்படுத்தியது. ரசிகனா இருந்தா இந்தாளு ரசிகன்தான் இருக்கணும்யான்னு என்னை நானே பெருமைப் படுத்திக்கொண்ட காலம் அது. 


எனது ஊரில் என்னோடு இருந்த நண்பர்கள் பலபேரும் ரஜினி அல்லது விஜயகாந்த் ரசிகர்களாகவே இருந்தார்கள், மிக சொற்பம் பேர் அர்ஜுன் ரசிகர்களாக இருந்தார்கள். அவர்களை எல்லாம் ஒரு இளக்காரத்தோடு பார்த்த நாட்கள் அவை. உங்க ஆளு நடிக்கறதெல்லாம் மசாலா குப்பைகள் கமல் ஹாசன் படம் ஒண்ணுதான் படம் என்கிற அறிவுச்செருக்கில் மிதந்த காலம் அது. கமல் ஹாசனால் ஜனரஞ்சக சினிமாவை வழங்கமுடியாது என்பதே பெரும்பாலும் எனது நண்பர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு. அப்போது நான் கூறியதெல்லாம் இந்த போர்முலா படங்களுக்கெல்லாம் அப்பன் கமல் நடித்த விக்ரம் படமே என்பதே. சகல கலா வல்லவன், வெற்றி விழா, இந்தியன் என பல படங்களில் தன்னை ஒரு கமெர்சியல் அக்ஷன் நாயகனாக கமல் பல தடவைகள் நிரூபித்திருக்கிறார். ஏன் வேட்டையாடு விளையாடு கூட கமலின் அக்ஷன் அவதாரத்திற்கு இன்னும் சாட்சி கூறும்.

கமல் ஹாசனின் கமெர்சியல் பயணம் பெரும்பாலும் நகைச்சுவை படங்களை மையப்படுத்தியதாகவே இருக்கும். நகைச்சுவை என்றால் அதற்க்கு இலக்கணம் கமல் ஹாசனே. கல்யாண ராமன், மைகல் மதன காம ராஜன், காதலா காதலா, அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா எப்போதும் எனது திரைப்பட சேகரிப்பில் முதல் இடம் பிடிப்பவை. தினமும் மூன்று அல்லது நான்கு தடவை ரிபீட் மோடில் வசூல் ராஜா பார்த்த நாட்களும் உண்டு. நகைச்சுவை சினிமாவின் உச்சம், ஒரு முடிசூடா மன்னன் கமல் ஹாசன். இது அனைத்தும் கமல் ஹாசன், கமல் ஹாசனாக இருந்த காலம். 

இரண்டாயிரத்துக்கு பிற்பட்ட காலத்தில், குறிப்பாக ஆளவந்தான் படம் வெளியானதில் இருந்து கமல் ஹாசன் தன்னை ஒரு சுப்பர் ஸ்டாராக காட்டவே எத்தனித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முகவரி, இந்திய சினிமாவின் உச்சம் என்கிற அந்தஸ்த்தை அடையவே முயற்ச்சித்திருக்கிறார். ரஜினியை மிஞ்சவேண்டும் என்கிற எண்ணமே கமல் ஹாசனின் பெரும்பாலான படத்துக்கும் அடிக்கோலாக அமைந்திருக்கிறது. அவ்வப்போது உள்ளே இருக்கும் கமல் ஹாசன் என்கிற படைப்பாளி தலை காட்டிய போதும் பெரும்பாலும் உலக நாயகன் கனவே அவரை ஆட்கொண்டிருக்கிறது. உலக நாயகனுக்கும் கமல் எனும் படைப்பாளிக்கும் இடையிலான போட்டியில் கமல் ஹாசன் தொடர்ந்தும் தோற்றுக்கொண்டே இருக்கிறார். சமீபத்திய கமல் படங்கள் ஒவ்வொன்றும் எனக்கு அதிகப்படியான ஏமாற்றத்தையே கொடுத்துக்கொண்டிருக்கின்றன. 


கமலின் சமீபத்திய படங்களான ............

விருமாண்டி: என்னை மிகவும் கவர்ந்த ஒரு கமல் படம் இது. அதற்க்கு முழுக் காரணமும் ஒரே விடயத்தை இரு வேறு கோணத்தில் அலசும் திரைக்கதையே. ஒரு நடிகனாக, ஒரு கதாசிரியனாக கமல் ஜெயித்த படம். ஒரு இயக்குனராக கமல் முழுத்தோல்வி அடைந்த படம். விருமாண்டியை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு விடயம் தெளிவாக புரியும், படத்தில் கொத்தாள தேவர் மோசமானவன் இல்லை. அவர் அவரது அறிவுக்கு எட்டிய விதத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை கொண்டு முடிவினை எடுக்கிறார், அவர் எடுக்கும் முடிவுகள் அவருக்கு இருக்கும் தரவுகள் சாட்சியங்கள் அடிப்படையில் நியாயமானதே. விருமாண்டித்தேவராக கமல் நடித்ததனாலும், கமல் என்கிற நாயக விம்பத்தை கட்டமைக்க கமல் என்கிற இயக்குனர் எடுத்த சிரத்தையினாலும், கொத்தாள தேவர் வில்லனாக கற்பிக்கப் பட்டிருப்பார். மோசமான காஸ்டிங் இனாலும் உலக நாயகனுக்கும் கமலுக்குமான போட்டியினாலும் அடி நாதமே சிதைக்கப்பட்டு குற்றுயிராக்கப்பட்டிருக்கும் அந்த படம். படம் முடிந்து வெளியே வந்தபோது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

தசாவதாரம்: கமலின் உலகநாயகன் விம்பக் கட்டமைப்பின் உச்சம் தசாவதாரம். ஒரு ஹாலிவூட் தரத்திலான காமேர்சியல் கதை, விறுவிறுப்பான சேசிங், சில இடங்களில் மயிர்கூச்செறியும் தொழில்நுட்பம் எல்லாமே உலக நாயகன் விம்பத்தில் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டிருக்கும். கிறிஸ்டியன் ப்லேட்சரும், பால்ராம் நாயுடுவும் இன்றும் என்னை கவரும் கதாபாத்திரங்கள். ஏனைய கதாபாத்திரங்கள் எதுவும் கமல் நடித்திருக்க தேவையில்லை என்பது எனது கருத்து. இன்று தசாவதாரம் பார்க்கும் போது தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகன் தானே என ஆயுளுக்கும் எழுதிவைக்கவேண்டும் என்கிற வெறியில் கமல் எடுத்துக்கொண்ட சிரத்தையின் உச்ச வெளிப்பாடாகவே தசாவதாரம் தோன்றும்.

உன்னைப்போல் ஒருவன்: A Wednesday என்கிற இந்திப் படத்தின் உரிமை பெற்ற ரீமேக் இது. பலரும் அசலை விட நகல் ஒரு படி மிகைத்து விட்டதாக மார்தட்டிக் கொண்டபோதும் மூலக் கதையில் இருந்த எதோ ஒன்று நகலில் இல்லை. அது யார் தவறு என தெரியவில்லை. மூலக்கதையின் அடி நாதம் ஷா அனுபம் கேர்ருடன் இறுதியாக பேசும் இடம், அது தமிழில் மாற்றப்பட்டிருக்கும். முழு திரைப்படத்தையும் தூக்கி நிறுத்தும் இடம் அது, தமிழில் உயிரை எடுத்துவிட்ட ஜடமாக வசனங்கள் நிரப்பப்பட்டிருக்கும். நசுருதீன் ஷா நடித்த கதாபாத்திரத்தில் கமல் நடித்தபோது நாயக நடிப்பில் இருத்து கதாபாத்திர நடிப்பிக்கு வர கமலுக்கு இன்னும் நாட்கள் ஆகும் என்றே தோன்றியது. ஒரு சாதாரண மனிதனை தனது நடிப்பு மூலம் கண் முன்னே கொண்டுவந்திருப்பார் ஷா, கமல் சற்று அந்நியமாகவே தோன்றினார். உன்னைப் போல் ஒருவன் மூன்றாவது முறையாக கமல் ஏமாற்றிய படம்.



மன்மதன் அம்பு: எப்போதும் கமல் ஒரு புது முயற்சியில் ஈடுபடும் போது எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் வணிக வெற்றிக்காக மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகளாகவே அவற்றை மன்னிக்கும் எனக்கு மன்மதன் அம்பு பேரதிர்ச்சி. விருமான்டியோ, தசவதாரமோ மார்க்கெட்டிங் எனும் கோட்பாட்டுக்குள் கமலின் தவறுகளை மன்னித்துவிட்ட போதும், உன்னைப் போல் ஒருவனில், நேட்டிவிட்டிக்காக கதை மாற்றப்பட்டது என்று சமாதானம் சொன்னபோதும் மன்மதன் அம்பு மன்னிக்கவே முடியாத ஏமாற்றம். அதுவும் ரவிக்குமார்-கமல்-ரொம் கொம் எனும்போது ஏமாற்றம் அளவு கடந்தது. கமல் ஐம்பதுக்கு பிற்பாடு கமலாகசனுக்கு வந்த உலக நாயக மிதப்பே அதற்க்கு காரணம் என படுகிறது. நான் எதை கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் பலர் இருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டாரா தெரியவில்லை. இனிமேல் கமல் படம் பார்ப்பதே இல்லை என நானும் மொக்கராசுவும் சூடம் ஏற்றி சத்தியம் பண்ணும் அளவுக்கு ஒரு அனுபவம் மன்மதன் அம்பு. 

விஸ்வரூபம் ட்ரெயிலர் படம் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை, இருப்பினும் வேட்டையாடு விளையாடு போன்ற ஒரு முழு கமெர்சியல் என்டேர்டைனராக அமைந்தால் பெரு மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் கமல் உலகநாயன் விம்பத்தை கலைந்து கமல் ஹாசன் எனும் நடிகனாக, கமல் ஹாசன் எனும் இயக்குனராக மாறவேண்டும் என்பதே ஒரே ஆசை. உலக நாயக விம்பத்துள் மூழ்கி கமல் எனும் மகா கலைஞனை தொலைத்துவிட்ட பாவம் கமலுக்கு வேண்டாம்.

டிஸ்கி: ஹாலிவூட் பிரவேசம் கமலுக்கு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.