Wednesday, April 16, 2014

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், மான் கராத்தே #சும்மாஒருபதிவு

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளன. சென்ற வருட இறுதியில் நாங்க "சந்தானம் இனி அவ்வளவுதானா"ன்னு ஒரு பதிவிட்டிருந்தோம். சென்ற வருடம் தீ.வே.செ.கு, க.ல.தி.ஆ தவிர சந்தானத்துக்கு சொல்லி கொள்ளும் படி ஒரு படமும் அமையவில்லை எனும்  கவலையை வெளிபடுத்தி, இந்த 2014 வருட சந்தானம் படங்கள் வெற்றியடைய வாழ்த்து சொன்ன பதிவு அது.


அதே மாதிரி என்றென்றும் புன்னகை, வீரம் படங்களில் கலக்கியிருந்தார். இது கதிர்வேலன் காதல், பிரம்மன் என சில  படங்கள் மொக்கையா இருந்தாலும் சந்தானம் காமெடி ரசிக்கும் படியாகவே இருந்துச்சு. இப்போ சந்தானம் நடிக்கும்  வ.பு.ஆ  வெளிவரும் அதே கோடை விடுமுறையில் பழைய காமெடி நடிகர்கள் வடிவேலு, லெஜன்ட் கவுண்டமணியின் படங்களும் வெளிவர உள்ளன. மேட்டர் என்னன்னா, சில சமூக வலைதளங்களில் "வடிவேலு போன்றோரின் மீள் வருகையால் சந்தானத்தால் இனி காமெடியனாக தாக்கு பிடிப்பது கஷ்டம், இந்த வருஷமே சந்தானத்தின் 'காமெடி எரா' முடிவுக்கு வந்துடும்"ன்னு சிலர் கெளப்பி விடுறாங்க.

யெஸ் பாஸ். நமக்கும் அதேதான் தோணுது. சந்தானத்தால் இனி காமெடியனாக தாக்கு பிடிப்பது கஷ்டம்! சந்தானத்தின் 'காமெடி எரா' இந்த வருஷமே முடிவுக்கு வந்துடும்! ஏன்னா, நம்மாளு இப்போ ஹீரோ ஆகிட்டாருல்ல. நம்மாளின் ஹீரோ லுக்கை பாருங்க,  இன்னிக்கு உள்ள பல "சுமார் மூஞ்சி குமாரு"  ஹீரோக்களை விட செம்மையா, ஃபிட்டா இருக்காரு நம்மாளு.  இனி நம்மாளு ஸ்ட்ரெய்ட்டா ஹீரோதான். "மர்யாத ராமண்ணா" படத்தின் ரீமேக் என்பதால் ஜஸ்ட் காமெடியன் என்பதை தாண்டி ஒரு முழு ஹீரோவுக்கான எல்லா விஷயங்களும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்திலும் எதிர் பார்க்கலாம். டெபநீட்டா நம்மாளு கலக்கத்தான் போறாரு.


அப்புறம், "மான் கராத்தே" பார்த்தாச்சு. யாரு என்ன சொன்னாலும், படம் செம்மையா இருக்கு. தியேட்டரில் முழு கமெர்சியல் காமெடி என்டர்டயினர் படத்தை எதிர்பார்த்து போகும் சாதாரண  ரசிகர்களை ஏமாற்றாமல் படம் முழு திருப்தியை தருது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்தப்படம்  ரொம்ப புடிச்சிருக்காம். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள், குழந்தைகள் இந்த படத்துக்கு அழைத்து செல்லுமாறு நச்ச்சரிகின்றனறாம். ஆனாலும்,  அதி புத்திசாலிகளுக்கு(!) கண்டிப்பா இந்த படமும் ஓகே ஓகே போலவே  புடிக்காது, நமக்கென்ன, படம் ஆல்ரெடி சூப்பர் ஹிட்டு. சிவாகார்த்திகேயனின்  சுக்கிர திசை தொடர்கிறது.

 அப்புறம், சமூக வலைதள ரசிகர்கள்  நகைச்சுவையில் இனி  "சந்தானமா? வடிவேலுவா?", "சந்தானமா? சூரியா?"ன்னு வெட்டி அரட்டை அடிப்பதை தவிர்த்து கொள்வது நலம். சந்தானம் ஹீரோ மெட்டீரியல் ஆகிவிட்டதால், "சந்தானமா? சிவகார்த்திகேயனா?" என்னும் டாபிக்கில் சண்டை போடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்.

டிஸ்கி: சைக்கிளுக்கு டப்பிங் கொடுக்க போகும் ஹீரோ ஆர்யாவா, ஜீவாவா, இல்ல உதயநிதியா?. 
Blogger Tricks

Wednesday, March 26, 2014

நான் காண்டம் வாங்கிய கதைகள் 18+

"காண்டம்", அல்லது "ஆணுறை", அல்லது "அது". பதின்மவயதுகளில் "நமது  தேடி அறிந்து கற்கும் ஆற்றலை" மேம்படுத்திய விடயங்களில் அதுவும் ஒன்று. பெரும்பாலும் பள்ளிகூட உடலியல் சுகாதார பாட நேரங்களில் வாத்தியுடனும், அல்லது பாடம் முடிந்து க்ரூப் டிஸ்கஷனில் நண்பர்களுடனும் "அது" தொடர்பாக விவாதிக்கப்படும். எனினும் துரதிஷ்டவசமாக "பேசிகல்லி ஐ ஆம் எ ஷை டைப் போய்"  என்பதால் அவற்றில் ஆர்வமாக கலந்து கொள்ளாமலேயே  இருந்துவிட்டேன். 


காலேஜ் வந்தப்புறம்தான் விவேக் நகைச்சுவைகள் எல்லாம் பார்த்து கொஞ்சம் தைரியமாக "அதை" பற்றி பேச தொடங்கினாலும் "அதை" முழுசா ஒருவாட்டியாவது பார்ப்பதற்கான சந்தர்பங்கள் பெரும்பாலும் அமையவே இல்லை. சில வருடங்களின் பின், "எட் எ டைம்ல நாலு பிகர்ஸ் மெயின்டெயின்" பண்ண சகா ஒருவனின் பர்சில் எப்போதுமே நாலைந்து "அது" ஸ்டாக் வைத்திருப்பதாக அறிந்தேன். இறுதி பரீட்சைகளுக்கு முந்தய நாட்களில் அவன் கெஞ்சி  கேட்டு கொண்டதற்கிணங்க அவனுக்கு சொல்லி கொடுப்பதற்காக அவன் ரூமில் தங்கி, அவனுக்கு சொல்லிகொடுத்து நன்றிகடனாக அவன் பர்சில் இருந்த "அதை" முதல்வாட்டி  பார்த்தேன். இதை எல்லாம் எப்புடி மெடிகல் ஷாப்பில் கேட்டு வாங்குவது என்பது ஆச்சர்யகுறியாகவே இருந்தது. 


நானும் ஒரு நாள் காண்டம் வாங்கினேன். அந்த நிகழ்ச்சி நடந்து ஒரு நாலைந்து வருடங்கள் இருக்கலாம். நான், காலேஜ் முடிஞ்சு டெம்பரரியா அங்கேயே வேலை பார்த்துகொண்டிருந்தேன், புட்டிபால் இன்னும் ஸ்டுடென்ட். நமது சீனியர் அண்ணன் ஒருவரின் திருமணதிற்கு எல்லோரையும் அழைத்திருந்தார். நான், புட்டிபால் இன்னபிற நண்பர்கள் எல்லோருமாக 300-400 கி.மீ டிரைவ் பண்ணி முதல்நாளே அண்ணனின் ஊருக்கு சென்று, அங்கு அவர் நமக்கென ஏற்பாடு செய்து வைத்திருந்த இடத்தில தங்கி, செமையா எஞ்சாய் பண்ணிட்டு இருந்தோம். அடுத்த நாள் ஞாயிறு காலை திருமணம். தூங்கி ஏந்திரிச்சப்புறம்தான் "அடடே, அண்ணனுக்கு கிஃப்ட் ஒன்னும் வாங்கலயே" என்பது ஞாபகம் வந்தது. தீவிர குழு-ஆலோசனையின் பின், ஒருமித்த முடிவாக அண்ணனுக்கு உபயோகமாக நம் சார்பில் "காண்டம்" வாங்கி கொடுப்பது என முடிவானது. "காண்டம்" மட்டுமே கிஃப்ட் , மத்த படி இருக்குற வேலைய செஞ்சிட்டு நல்லா சாப்ட்டு நடைய கட்டுறதுதான் நம்ம திட்டம். 


ஞாயிறு காலை சுமார் 8.00-8.30 மணி இருக்கும் "காண்டம்" தேடி நானும் புட்டிபாலும், இன்னும் இரண்டு நண்பர்களும் அலைய தொடங்கினோம். அது கொஞ்சம் கிராமம் என்பதால், தேடுவது கஷ்டமாகவே இருந்தது. பக்கத்தில் உள்ள டவுனுக்கும் போய் பார்த்தோம், காலை வேளை என்பதால் எல்லா  மெடிகல் ஷாப்களும் மூடியே இருந்தன. இன்னும் கொஞ்சம் தேடிய பின், தூரத்தில்  ஒரு  மெடிகல் ஷாப்கார் அப்போதான் கடையை திறந்து கொண்டிருந்தார். மிகுந்த ஆர்வத்துடன், கடையை நோக்கி, கடைவாசல் வரை சென்று விட்டோம். கிட்ட போனப்புறம்தான், "யாருடா, அதை வாங்குறது?" என்னும் கேள்வி எழுந்தது. மீண்டும் ஒரு  குழு-ஆலோசனை, கடைசியில்  புட்டிபால்தான் சொன்னாரு, "நம்ம க்ரூப்லையே தொழில் புரியுற ஒரே ஆளு  மொக்கராசுதான், அவருதான் நமக்கெல்லாம் பெரிய மனுஷன், சோ, அவரையே அனுப்புவோம்"ன்னு. பயபுள்ள கோர்த்துவிடுறது தெரிந்தாலுமே, "ச்சே, நம்மளையும் மதிச்சு(உசுப்பேத்தி) இந்த வேலைய எல்லாம் கொடுக்குறானுகளே, இன்னிக்கு எப்புடியாவது வாங்கிரனும்டா கைப்புள்ள"ன்னு கடைக்குள் சென்றேன். 


"சார், எனக்கொரு காண்டம் தாங்களேன்" பச்சையாவே கேட்டேன். என்னை முதல் முறை கேவலாமா பார்த்த கடைக்கார் சில பாக்கட்களை எடுத்து வைத்து "இம்புட்டு வெரைடிஸ், இம்புட்டு பிளேவர்ஸ் இருக்கு, இதுல எது வேணும்"ன்னார். கொஞ்சம் தயக்கத்துடனையே ஒவ்வொன்னா தொட்டு  பார்த்துட்டு இருக்கும் போது, "நம்ம சீனியர் அண்ணன் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவது" ஞாபகம் வந்தது. அண்ணனுக்கு பிடிக்குமேன்னு(!!), ஸ்ட்ராபெரி பிளேவர்லையே ஒன்னு வாங்கி விட்டேன். வெளியில் வந்து நண்பர்களிடம் காட்டினேன். அப்போ ஒருத்தன், "டேய், இதுல கிரிப் உள்ளது இருக்குடா, அதுதான்டா அண்ணனுக்கு வசதிப்படும்(!!), அத வாங்கியாடா"ன்னான். "டேய், இத மொதல்லையே சொல்ல வேண்டியதுதானே, நானே கொழப்பத்துல எத வாங்குறதுன்னு தெரியாம, இத வாங்கியாந்துருக்கேன், இப்போ ஒன்னும் பண்ண முடியாது"ன்னேன். ஏதோ மாப்பிளை அண்ணனுக்கு வாங்கிய "ஷர்ட் சரில்ல, மாத்திட்டு  வா"ங்குற மாதிரி "காண்டத்த மாத்தி, வேற வாங்கியற சொல்லி அடம் புடிசானுக. "சாதாரண அன்டர்வேரைய, இவை திரும்ப பெற்றுக்கொள்ளபட மாட்டாதுன்னு  கடைகள்ள போர்டு வச்சிருப்பானுக, இத எப்புடிடா மாத்திட்டு இன்னொன்னு கேக்குறது"ன்னு எதிர்வாதம் புரிந்தேன். இறுதியில் துணைக்கு இன்னொரு நண்பனையும் அனுப்பினார்கள். மீண்டும் கடைக்கு உள்ள போயி "சார், இது "வேணாமாம்", கிரிப் உள்ளதுதான்  "வேணுமாம்""ன்னு சொல்லி மாத்தி கேட்டேன். முதலை விட மிக கேவலமான பார்வையுடன், முதல் தடவை வாங்கி பத்து பதினஞ்சு நிமிஷம் கூட ஆகியில்லாததால் நம்பிக்கையுடனும்,  கடைக்கார் மாத்தி "கிரிப் உள்ளதை கொடுத்தார்"

மண்டபத்துக்கு வந்த பின்தான் அடுத்த பிரச்சினை தோன்றியது, "சரி, இத எப்புடிடா மாப்ளை அண்ணனுக்கு மணமேடையில் வச்சு குடுக்குறது?".  விடை கிடைக்காமல் குழப்பத்துடனே சாப்பிடுற வேலைய செஞ்சு முடிச்சோம். அப்போ, அந்த மாப்ளை அண்ணனே நம்மை அழைத்து "தம்பிகளா, அண்ணன் ஹனிமூன் போறதுக்கு துணிமணி(!)கள பெட்டில எடுத்து வச்சி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கடா"ன்னார். "ஆஹா, ஆடு அதுவாவே சிக்கிருச்சே" என்னும் சந்தோஷத்தில் ரொம்ப உற்சாகமாக அண்ணனின் சூட்கேசில் துணிமணிகளை அடுக்கி, பெட்டியை திறக்கும்போதே அண்ணி கண்ணில் பட்டு அண்ணன் அசடு வழிவதற்கு தோதாக, பாக்கட்டை உரித்து காண்டங்களை பெட்டியில் எல்லாத்துக்கும் மேலாக பரப்பி வைத்து, பெட்டியை அண்ணனிடம் கையளித்து வழியனுப்பி வைத்தோம்.  நாமும் திருப்தியுடன் ஊர் வந்தடைந்தோம். அடுத்த நாள் காலையிலேயே மாப்ளை அண்ணன் தொலைபேசியில் அழைத்து நமக்கு நன்றி சொன்னார். முக்கியாமான விஷயம், அண்ணனுக்கு திருமணமாகி எட்டே மாதங்களில் அழகிய மகன் பிறந்தான்.


ரெண்டாவது தடவை, ஆறு மாதங்களின் பின் நம்ம "கல்லூரி வகுப்பு தோழன்" ஒருவனின் திருமணம். ஏற்கனவே ராகிங் சீசனில் இருந்தே அவனுடன் பழகுவதால், "அவன் கை கால் எல்லாம் ரொம்ப சின்னதா இருக்குமேடா, இவன் சைஸ்க்கு எங்கடா வாங்குறது"ன்னு ஒரு குழப்பம் இருப்பினும், முன் அனுபவங்களின் மூலம் கடைக்காரிடம் இந்த முறை சரியாக கேட்டு வாங்கி பரிசளித்தோம். அவனுக்கும் ரெண்டே வருடங்களில் ரெண்டு குழந்தைகள். வாழ்த்துக்கள் நண்பா.

அதன் பின், அதுவே எனது வழமையான வெடிங் கிஃப்ட் ஆகிவிட்டது. அப்புடி பரிசளித்த நண்பர்கள் எல்லோருமே ஒரே வருடத்திற்குள் அப்பாவாகி, "டேய், அத வாங்கிட்டு போய் என்னத்தடா பண்ணுறீங்க?"ன்னு கேட்க வைத்தார்கள். சிலநண்பர்களின் திருமணங்களின் போது டைமிங் மிஸ் ஆகி கொடுக்க முடியாமல் போய், அவர்கள் அப்பாவாக ரெண்டு மூணு வருடங்களுக்கு மேலான அனுபவங்களும் உண்டு. நம்ம ராசி அப்புடி.



பைதிவே, தற்சமயம் எனது மிக நெருங்கிய நண்பர், பிரபல பதிவர் ஒருவருக்கு மிக  விரைவில் திருமணம் நடப்பதற்க்கான அறிகுறிகள் தென்படுது. ஏற்கனவே காலேஜ் ராகிங் அனுபவங்கள் இருப்பதால், அவருக்கு அமேஸனில் "எக்ஸ்ட்ரா லார்ஜ்" சைஸு காண்டம் வாங்கி அமெரிக்காவுக்கு டோர் டெலிவரி பண்ணும் ஆர்வத்தில் உள்ளேன்.
*****************************

பின்குறிப்பு: சொந்தமா எனக்குன்னு இதுவரைக்கும் நான் காண்டம் வாங்குனதே இல்லை.

Sunday, March 16, 2014

லட்சியங்கள்

ஒவ்வொரு மனுஷனுக்கும "லட்சியங்கள்" ரொம்ப தேவையானவை, ரொம்ப அத்தியாவசியமானவையும் கூட. நாம  யாரு, என்ன மாதிரி பேக்ரவுன்ட்ல  இருந்தோம், இப்போ என்ன பண்ணிட்டு  இருக்கோம், இனிமே என்ன பண்ண போறோம், எல்லாவற்றையும் கடந்து நம்ம ஒவ்வொருவருக்கும் ஒரு சில லட்சியங்கள் கண்டிப்பா இருக்கும், இருக்கனும். லட்சியங்களை நிர்ணயித்து கொள்வதும், அதை நோக்கிய பாதையில் சின்ன சின்ன வெற்றிகளை அடைவதும், எப்பவுமே நமக்கு "கெத்தை" தருபவன, அந்த  "கெத்து" வாழ்கைக்கு ரொம்ப முக்கியம். "வாழ்க்கைல லட்சியங்கள் மாறிக்கொண்டு கூட இருக்கலாம். ஆனா, லட்சியத்தை  அடையனும்ங்குற எண்ணம் மட்டும் மாறவே கூடாது"ன்னு ஒரு மாபெரும் மகான் சொல்லியிருக்காரு. அந்த மகான் யாருங்குறது நமக்கு தேவையில்லை. 



எனக்கு நினைவு தெரிந்த நாட்களில், நீ பெரியாளாகி என்னவாகுவ?ன்னு யாரவது கேட்டால். "அப்பாவை போல நானும் பிஸினெஸ் மேன் ஆவேன்"ன்னு  சொல்லிக்கிட்டு இருப்பேன். ஏன்னாஒவ்வொரு மகனுக்கும் தன்  தந்தையே முதல் இன்ஸ்பிரேஷன் என்பதால், அப்போ எனக்கு "பிசினெஸ் மேன்" ஆவது லட்சியம். அப்புறம் இந்த  படிப்ப படிச்சி, யுனிவர்சிட்டி போயி மேற்படிப்பு எல்லாம்   படிச்சு, அங்கேயே வேலை செஞ்சு, நமக்குன்னு ஒரு ப்ரொபஷனல் துறையை உருவாக்கி கொண்டு, இருந்த பொழுது, இடையிடையே  உலகம் அறிந்த ஒரு பெரிய புரொபசர் ஆவனும், மில்லியன்களில் சம்பாதிக்கும்  டேடா  சயன்டிஸ்ட்  ஆவனும்னு  இலட்சியங்கள் மாறி  கொண்டிருந்தன. அனால், லட்சியம் இல்லாமல் இருக்கவில்லைவேலைய விட்டு  வெளில வந்து, திரும்பவும்  வேறு  வேலை  தேடி "நான் படிச்ச படிப்புக்கு இல்லாத வேலை, எங்க அப்பா பேருக்கு இல்லாத வேலை" எதுவுமே கிடைக்காமல் இருக்கும்போது  கூட , "சிக்ஸ்-பேக்" உருவாக்குவதை லட்சியமாக வச்சிக்கிட்டேன். அதை அடைவதற்கான முயற்சிகளில்  ஈடுபட்டு  முன்னாடி "தல" போல இருந்த  நான்  "சூர்யாபோல ஆவனாலுமே "சிவகார்த்திகேயன்போலயாவது  ஆயிட்டேன் என்பது மகிழ்ச்சி. ஏன் நடிகர்களை பற்றி சொல்றேன்னா, எல்லா தமிழ் சினிமா ரசிகர்களை போலவும் பஸ் புடிச்சி கோடாம்பாக்கம் போயி, "ஸ்ட்ரெய்ட்டா  ஹீரோஆகிரனும் என்பது கூட எனது கடந்த கால இலட்சியங்களில் ஒன்று. அவ்வளவு ஏங்க, எல்லா வயசுக்கு வந்த பையனை போலவே "எனக்கு சூப்பர் ஃபிகர் செட் ஆவனும்" என்பது கூட எனது இன்னும்  நிறைவேறாத லட்சியமே.


இடையே இந்த பதிவுலகத்துல(!) கண்ட கண்ட பதிவுகளை வாசித்து,  உலகத்தர சினிமாக்கள்ன்னு சொல்லபடுற திரைபடங்கள பார்த்து "நம்ம வாழ்கையின் நிதர்சனம் என்னன்னா" ரேஞ்ச்ல பேச தொடங்கிவிட்டேன்.  சமீபத்துல கூட ஒரு நண்பன் அவனோட லட்சியங்களையும் அவற்றை அவன் அடைய முற்படும்போது ஏற்படும் தோல்விகளையும்  பத்தி சொல்லிட்டு இருக்கும்போது, "'உங்க அப்பன எல்லாம் ஏமாத்திபுட்டாங்கடா'ன்னு ஆரண்யகாண்ட வாழ்ந்து கெட்ட ஜமீந்தார் மாதிரி என்புள்ளைக்கு எதிர்காலத்தில் சொல்லிட்டு இருப்பேனோன்னு பயமா இருக்கு மச்சி"ன்னு சொன்னான். நானும் பயந்துட்டேன். ரஜினியானப்புறம் "எல்லாம் கொஞ்ச காலம்தான் நண்பா"ன்னு சொல்றது இல்ல மேட்டர், ரஜினியாவது தான் மேட்டரே!




என்னை பொறுத்த வரைக்கும், திரும்பவும் ஆரம்ப புள்ளிக்கே வந்துட்டேன்.   மீண்டும் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து கொண்டேன். அதை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க உள்ளேன். சமீப காலமா "ஒன்னுமே இல்லாமல் ஆரம்பித்து மாபெரும் சாம்ராஜ்யம் உருவாக்கிய அண்ணாமலை சாதனையாளர்களின் பயோகிராபிகளை" வெறித்தனமா தேட தொடங்கியிருக்கேன், வாசிக்க. பொதுவா எல்லா வெற்றியாளர்களுமே தங்களுக்கு பின்னால் ஒரு டெம்ப்ளேட் பிளாஸ்பேக் வச்சிருப்பாங்க. உதாரணத்துக்கு "நா சின்ன வயசுல  வீடு வீடா பேப்பர் போட்டேன் " , " வீடியோ கேசட் வித்தேன் ", " பால் கறந்தேன் ", " ஒரே ஒரு சூட்கேசுடன் சிட்டிக்கு வந்தேன்" , "தூங்க  இடம் இல்லாமல், பப்ளிக் பார்க்ல  படுத்து இருந்தேன் " ன்னு எதாவது ஒன்னு இருக்கும். நானும் இப்போதுல இருந்தே, நாம அது போல இதுவரைக்கும் என்னென்ன பண்ணிருக்கோம்ன்னு ஒரு லிஸ்ட் எடுத்து  ரெக்கார்ட்ல வைக்க ஆரம்பிசிட்டேன். பை தி பை, இப்போ எதுக்கு இவ்வளவு வெளாவாரியா "லட்சியம்" என்னும் டாபிக்கில் லெக்சர் பண்றேன்னா, நாளைக்கு டிவி  பேட்டில நீங்க உங்க இளம் வயதில் என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு கேட்கும்போது, "வெட்டியா பிளாக் எழுதிகிட்டு இருந்தேன்"னு சொல்வது கூட எனது லட்சியமே!

Wednesday, March 12, 2014

ஒருவேள நிஜமாவே எனக்கு வயசாயிடிச்சா? 28+

சமீபத்துல, ராசு மாமா அவரோட "கும்பளிங் கும்பளிங்" பதிவுல தனக்கு வயசாயிடிச்சின்னு ரொம்பவே வருத்தப்பட்டு எழுதியிருந்தாரு. மாம்ஸ் இதற்கு முதலும் கூட இப்படி அடிக்கடி கவலப்பட்டிருக்காரு, அப்போவெல்லாம் நான் அவருக்கு சின்னவன்ங்கர திமிருலையே அவர கேலி செஞ்சிக்கிட்டு திரிவேன். ஏன்னா எனக்கு அவரைவிட ரெண்டு மாசம் வயசு கம்மி (சாரி பாஸ், ஒரு மாசம் ஒன்பது நாள் : மொக்க ராசு போஸ்ட்ட டபுள் செக் பண்ணும்போது கமென்ட்). ஆனா இந்தவாட்டி மாம்ஸ் நம்மள ரொம்பவே யோசிக்க வச்சிட்டாரு, அதன் விளைவு என்னன்னு நீங்களே கேளுங்களேன், சார், நீங்க கேளுங்களேன், அட நீங்களாச்சி கேளுங்க சார்.


அது என்னமோ தெரியல சார், திரிஷான்னா சின்ன வயசுல இருந்தே நமக்கு ஒரு பிரியம். அந்த வீடியோ ரிலீஸ் ஆனப்போவேல்லாம் பெரிய துப்பறியும் நிபுணர் மாதிரி ஆராய்ச்சியெல்லாம் செஞ்சி அது அந்த பொண்ணே இல்லையின்னு என்னோட நண்பர்கள் கூடவெல்லாம் சண்டயே போட்டுருக்கேன். ஆனாலும் என்னன்னு தெரியல இடையில சில காலம் எல்லாரும் சொல்றாப்ள நிஜமாவே இது ஒரு மொக்க பிகரோன்னு ஒரு டவுட்டு. சரி வேற யாராவது ஹீரோயின் நமக்கு புடிக்குதான்னு பார்க்கலாமேன்னு பார்த்தா அனுஷ்கா ஷெட்டி, ஸ்ரேயா சரண் எல்லாம் செம்ம பிகரா இருக்காங்களேன்னு தோணிச்சு, இங்க நீங்க கவனிக்க வேண்டியது என்னன்னா ஸ்ரேயாவுக்கு த்ரிஷாவ விட ஒரு வயசு ஜாஸ்தி, அனுஷ்காவுக்கு இரண்டு. எப்பவுமே மொக்க பிகருன்னு நெனச்சிட்டு இருந்த நயன் தாரா கூட, பாஸ் (எ) பாஸ்கரனுக்கு அப்புறமா சூப்பரா தெரிஞ்சாங்க. மறுபடியும் தம்மு, சமர், என்றென்றும் புன்னகை எல்லாம் பார்க்கறப்போ திரிஷா அப்போ இருந்தத விட இப்போ செம்ம பிகரா தோணுது. இந்த ஹன்சிகா, சமந்தா, ஸ்ருதின்னு எத்தனையோ பேரு வந்தாக்கூட எல்லாமே நம்ம வயசுக்கு ரொம்ப சின்னப் பொண்ணுகளாவே இருக்கேன்னு ஒரு பீலிங். இப்போ இந்த ஸ்ரீ திவ்யா பொண்ணு கூட மகேஷ் பாபு படத்துல குழந்தை நட்சத்திரமா நடிச்சதுதான். நம்ம கண்ணுமுன்னாடி கொழந்தையா இருந்த பொண்ணுங்கதான் இன்னிக்கி, ச்சே ச்சே, அதெல்லாம் சொல்லகூடாது.


சவுத் நிலைமைதான் இப்படியிருக்குன்னு நார்த் பக்கம் போனா அங்க இன்னும் மோசம். ப்ரீதி ஜிந்தா, ராணி முகர்ஜின்னு நம்ம காலத்து ஹீரோயினிகள எல்லாம் இப்போ யாரும் கண்டுக்கறதே இல்ல, கரீனா, பிரியங்கா மட்டும்தான் நம்ம வயசுக்கு ஓரளவு ஓக்கேன்னு தோணினாலும் அவுங்க கூட இப்போ 30+. புதுசா வந்த ஹீரோயினிக எல்லாருமே நமக்கு குழந்த சைஸ்லதான் இருக்காங்க, இந்த ஆலியா பட் இப்போதான் பத்தாம்பு படிக்கற பொண்ணு, நாம பத்தாம்பு படிச்சபள்ளிக்கூடமே இந்த உலக வரைபடத்துல இருந்து இன்னும் கொஞ்சம் நாள்ல அழிஞ்சிடப்போற நிலைமை. இந்த அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர் போல அங்கங்க ஏதாவது நம்ம வயசுக்கு தக்கதா ஒன்னு ரெண்டு இருந்தாலும் அவுங்களுக்கும் பெரிய அளவுல எந்த படம் வாறதுமில்ல. இது என்ன நமக்கு வந்த சோதனைன்னு தெரியல.

இன்னும் கொஞ்சம் மேல ஹாலிவூட் பக்கம் போனா நிலைமை இன்னும் படு மோசம். நமக்கு புடிச்ச ஹீரோயினிகன்னு சல்மா ஹயேக், கேட் பெகின்சேல் எல்லாருக்கும் 40 தாண்டிரிச்சி, ஏஞ்சலினா ஜூலி, சந்திரா பல்லொக், ஜெனிபர் அனிஸ்டன், கேட் வின்ஸ்லெட்னு நம்ம பதின்ம வயசுல உலகத்த கலக்கின எல்லா ஹீரோயினிகளும் இப்போ 45+. அடுத்த கட்டமா இருக்கற மீலா கூனிஸ், நடாலி போர்ட்மேன், ரோஸ் பார்ன், அன்னா ஹதாவே எல்லாருமே 30+லதான் இருக்காங்க. சரி இந்த சிங்கர்ஸ் பக்கம் போகலாம்னா ஜென்னிபர் லோபேஸ், ஷகீரா.... அத ஏங்க கேக்குறீங்க. சரி புதுசா யாரு வந்திருக்கான்னு பார்த்தோம்னா இந்த ஜெனிபர் லாரென்ஸ், எம்மா வாட்சன், கிறிஸ்டீன் ஸ்டீவர்ட், மில்லா சைரஸ் எல்லாம் சின்னப் பொண்ணுங்க கட்டேகேரி, அதுங்கள கொஞ்சம் லுக்கு விட்டுட்டாலே எதோ நாம சிறுவர் துஷ்பிரயோகத்துல ஈடுபட்டுட்ட மாதிரியே உள்மனசு குறுகுறுக்குது. இத விட்டுட்டு நம்ம வயசுல செம்மையா ஒரு பிகருன்னு சொல்ல ஏதாவது ஒன்னு ரெண்டு எங்கவாது இருந்தா, அதுக கூட தேவையே இல்லாம ஏதாவது பிட்டு சீன்ல நடிக்குதுக, இல்லையின்னா "ஒபாமாவே என்னோட "அத" பார்த்திருக்காருன்னு" ட்வீட் போட்டு நம்மள சாகடிக்குதுக.



இதைவிடவும் கேவலம் என்னனா சின்னவயசுல மீனா ஆண்டின்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச நான் இப்போவெல்லாம் மீனா வரவர செம்மையா இருக்காங்கல்லன்னு மனசுக்குள்ள நெனைச்சிக்கறேன். மீனா மட்டுமில்லைங்க, காஜல் கூட தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்துல இருந்தத விட மை நேம் இஸ் கான்லதான் சுப்பரா இருக்கறதா ஒரு பீலிங். அதையும் தாண்டி ஏதாவது ஒரு ஹாலிவூட் படம் பார்கறப்போ இந்த பிகரு செம்மையா இருக்கே, யாருன்னு பார்ப்போமேன்னு தேடினா கண்டிப்பா அவுக வயசு 32-43 தான். என்ன கொடும சார் இது? பொண்ணுங்க 28-40 அழகாயிடுறாங்களா,  நம்ம ரசனை இம்புட்டு மட்டமா இருக்கா, இல்ல ஒருவேள நிஜமாவே எனக்கு வயசாயிடிச்சா?


Sunday, March 9, 2014

கோச்சடையான் - பாடல்கள் ஒரு பார்வை.

இந்தவாரம் தமிழ் திரைப்பட, திரையிசை விரும்பிகளை அதிர வைக்கப் போவது இந்தக் கோச்சடையான் பாடல்கள் தான். கடந்தவருடம் எங்கே போகுதோ வானம் பாடல் ரிலீசானதுல இருந்து, தலைவர் வேற பாடியிருக்காருன்னு ஒரு புரளி கிளம்பினதுல இருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். சூப்பர் ஸ்டாரும்-இசை உலகின் அஸீம்-ஓ-ஷான்-ஷஹென்ஷாவும் இணையும் ஆறாவது படம், தமிழின் முதலாவது மோஷன் காப்ச்சர் அனிமேஷன் என பல சிறப்புகளைக் கொண்ட படம். அனைத்துக்கும் மேல் மூன்று வருடங்களுக்குப் பிறகு வெளிவர இருக்கும் தலைவர் படம் என்கின்ற ஒன்றே போதும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை பற்றிக் கூற. இந்தப் படம் கே எஸ் ரவிகுமார் இயக்கும் ரானா படத்திற்கு ஒரு ப்ரீகுவல் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்புக்கு இன்னுமொரு காரணம். இதன் பாடல்கள் எப்படி இருக்கின்றன?


 01. எங்கே போகுதோ வானம் - SPB, வைரமுத்து.

சென்ற வருடமே வெளியாகிவிட்ட இந்த பாடல் பிரம்மாண்டத்தின் உச்சக் கட்டம். எந்திரன் படத்தில் இடம்பெற்ற ஹரிகரன் பாடிய "அரிமா அரிமா" பாடல் பிரம்மாண்ட ஆர்கஸ்ற்றேஷனுக்கு முதல் படி என்றால் இது அதன் உச்சக் கட்டம். ஆரம்ப இசையிலேயே மனதை ஈர்க்கும் பாடல் SPB யின் குரலில் எங்கே போகுதோ வானம் ஒலிக்கும்போது குதிரை படைகள் போருக்குப் புறப்படும் உணர்ச்சியை கண்முன் விரியவைக்கிறது. ஒரு மன்னாதி மன்னனின் வீரத்தையும், வெற்றியையும், நன்றி உணர்ச்சியையும், களிப்பையும் என பல உணர்வுகளை வழங்கிச் செல்கிறது பாடல். "ஒருவன் ஒருவன் முதலாளி" பாடல் போன்று காலத்துக்கும் நிலைத்திருக்கும் இந்தப் பாடல். 

02. மெதுவாகத்தான் - SPB, சாதனா சர்கம், வாலி.

வாலியின் வரிகளில் வெளிவரும் கடைசிப் பாடல் இது. சாதனா சர்கத்தின் குரலில் மெலிதாக ஆரம்பிக்கும் பாடல் SPB யின் குரலில் வேகம் பிடிக்கிறது. வரிகளிலும் இசையிலும் ஒரு இனிமை, ஒரு பழமை, ஒரு எழிமை, இது நீண்ட நாட்களுக்கு இந்த பாடலை ப்ரெஷாக வைத்திருக்கும். இந்தப் பாடல் "ரானா" வுக்கானதாக இருக்கலாம். இந்த ஆல்பத்தின் கேட்டதும் பிடிக்கும் பாடல் இதுவாக இருக்கலாம். 

03. மாற்றம் ஒன்றுதான் மாறாதது - ரஜினிகாந்த், ஹரிசரண், வைரமுத்து.

"எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழி உண்டு, முதல் வழி மன்னிப்பு" தலைவரின் குரலில் அவரது பஞ்சுடன் ஆரம்பிக்கும் பாடல், பல தத்துவங்களை சொல்கிறது. தலைவர் அவரது படங்களில் எவ்வளவோ சொல்லியிருக்காரு, சிக்கல்கள் வரும்போது நானே எனக்கு அடிக்கடி சொல்லிக்கற ஒன்னு, "போடா... அந்த ஆண்டவனே நம்மபக்கம் இருக்கான்". இளைய சமூகத்துக்கு அவரது ஸ்டைல், வாழ்க்கைமுறை தவிர எத்தனையோ வழிகாட்டல்களும், தன்னம்பிக்கை வசனங்களும் அவரது படங்களில் பொதிந்திருக்கின்றன. அவற்றின் தொகுப்பாக இருக்கிறது இந்தப் பாடல். கோச்சடையான், ராணாவுக்கு வழங்கும் உபதேசமாக இருக்கலாம், அல்லது ராணா தலைமை ஏர்க்கும்போது தனது தந்தையை நினைவு கூர்வதாக வரலாம்.


04. மணப்பெண்ணின் சத்தியம் - லதா ரஜினிகாந்த், வைரமுத்து.

ஒவ்வொரு திருமணத்திலும் ஒலிக்கக் கூடியதாய் ஒரு மணப்பெண்ணின் சத்தியம். ஒரு ரொமாண்டிக் மேலோடி, லதா ரஜினிகாந்தின் குரலில், ஒரு பெண் தனது கணவனுக்கு என்னவெல்லாமுமாக இருப்பாள் என்பதனை உணர்ச்சிகரமாக கூறுகிறது பாடல். மெல்லிய இசைக் கூறுகளுடன் ஒரு திருமணத்துக்கான பின்னணியினை நினைவூட்டுகிறது இசை. ஒரே ஏக்கம், தாமரையோ அல்லது இன்னுமொரு பெண் கவிஞரோ எழுதியிருந்தால் இன்றைய பெண்களுக்கும் பொருந்தும் வகையில் இருந்திருக்கும் பாடல், ஒரு ஆண் தன்னைப் பெண்ணாக பாவித்து எழுதுவதற்கும் ஒரு பெண்ணே எழுதுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

05. இதயம் - சின்மாயி, ஸ்ரீநிவாஸ், வைரமுத்து.

சின்மாயியின் குரலில் ஒரு பெண்ணினின் ஏக்கத்துடன் ஆரம்பிக்கும் பாடல் பிரிவினை மய்யப் படுத்தியதாக வருகிறது. ஸ்ரீனிவாசின் குரல் ஒலிக்க ஆரம்பித்ததும், ஏக்கத்தையும் தாண்டிய அன்பினையும் பிரிவிலும் பிரியாமையையும் நமக்குள் நுழைத்துச் செல்கிறது. பின்னணியில் இசைக்கும் தம்பூரா (?) இசை மெல்லிய சோக இழையை நமக்குள் ஊசலாடவிடுகிறது. ரானா சிறையில் அடைக்கப்படும்போது வரும் பாடலாக இருக்கலாம். மறுபடியும் பாடலில் இருக்கும் உணர்ச்சி ஓட்டமே நம்மை இப்பாடலுக்குள் ஒன்றிப்போகவைக்கிறது.

06. எங்கள் கோச்சடையான் - வைரமுத்து.

இது ஒரு கொண்டாட்டப் பாடல் போன்று ஆரம்பிக்கிறது. முன்பாதி மன்னனுக்கான வாழ்த்து அழைப்பும் பின்பாதி எதோ போருக்கான பின்னணி இசையும் போன்று இருக்கிறது பாடல். தனித்த பாடலாக இதற்கு எந்த இடம் என்பது புரியவில்லை. படத்துடன் சேர்த்துப் பார்க்க வேண்டும் போல். இலக்ட்ரானிக் இசையும், நமது பாரம்பரிய இசையும் கலந்து நடத்தும் ஓர் அற்புதம். கண்ணை மூடி இந்தப் பாடலை கேட்கும் போது பல கற்பனைகள் எழுவதையும், சிறு வயதில் நாம் ரசித்த கத்திச் சண்டைக் காட்ச்சிகள் மனதில் விரிவதையும் தவிர்க்க முடியவில்லை. 


07. மணமகனின் சத்தியம் - ஹரிசரண், வைரமுத்து 

மணப்பெண்ணின் சத்தியத்தின் ஆண் வடிவமாக இருக்கிறது பாடல். அதே டியூன், அனால் ஹரிச்சரனின் குரலும் பின்னணி இசைக்கோர்ப்பின் மாற்றங்களும் சற்று உற்சாக தொனியை கூட்டியிருக்கிறது. மணப்பெண்ணின் சத்தியம் போலல்லாமல், இங்கே வரிகள் கனகச்சிதமாக இருக்கின்றன. மணவாழ்கையின் அனைத்துப் பகுதிகளையும் தொட்டு பெண்மையை சிறப்பிப்பதாகவும், ஒரு கணவனின் அன்பை தெரிவிப்பதாகவும் இருக்கிறது பாடல்.

08.  ரானா'ஸ் ட்ரீம் - வாத்தியம் 

எங்கே போகுதோ வானம் பாடலின் சோகமான இசை வடிவம். கோச்சடையானுக்கு பின் ராணாவின் கனவாக வரும் போலிருக்கு. இதன் தாற்பரியம் புரியவும் படம் வெளிவரவேண்டும். 

09. கர்ம வீரன் - ஏ. ஆர் ரஹ்மான், ஏ ஆர் ரைஹானா, வைரமுத்து.

ரஹ்மான் பாடும் பாடல்களுக்கு என்றைக்கும் ஒரு தனி இடம் உண்டு. இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. எந்த ஒரு சக்கரவர்த்தியாக இருந்தாலும் அவர்களுக்கும் தோல்விகளும், சந்தேகங்களும் எழும், அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்துக்கான ஒரு தன்னம்பிக்கைப் பாடல் இது. பாடலில் தோல்வியும், நம்பிக்கையும் ஒன்றாக எட்டிப் பார்க்கிறது. வரிகள் நம்பிக்கையை ஊட்டுகிறது, இசை ஒரு அரசனுக்கே உரிய பிரம்மாண்டத்துடன் கூடிய, மனதில் எழும் ஏற்ற இறக்கங்களை, கண்முன் கொண்டு வருகிறது. ரைஹானாவின் குரல் ஒலிக்கும்போது ஒருவித தோல்வியும், அதே சமயம் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிக்காக புறப்படும் ஒரு உற்சாகமும் பிறக்கிறது. இந்தப் பாடல் ஒரு உணர்ச்சிக் குவியல்.


என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார்-ரஹ்மான் கூட்டணியின் உச்ச கட்டம் இந்த கோச்சடையான். தனி தனி பாடல்களாக பார்த்தால் முத்து, இதைவிட ஒரு படி மேலாக தோன்றினாலும், ஒரு படத்துக்கான முழு பாடல்களாக ஒவ்வொரு சந்தர்பத்துக்கும் வரக்கூடிய ஏற்ற இறக்கங்கள், உணர்வுகள் என பார்க்கும் போது இது முதலிடம் பெறுகிறது. தனிப் பாடல்களாக சார்ட் பாஸ்டர்களாக எந்த பாடல்கள் நிலைக்கும் என தெரியவில்லை, ஆனால், ஒவ்வொரு பாடலும் படத்துக்கான பல எதிர்பார்ப்புக்களையும் கற்பனைகளையும் விதைக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களுக்கு எனது காதுகளில் ஒலிக்கப் போவது கோச்சடையான் பாடல்களே. 

டிஸ்கி: கோச்சடையான் ட்ரைலர் இதோ


வாய்ப்புக்கள் அமைவதில்லை, நாம்தான் அமைத்துக்கொள்ளவேண்டும்.