Wednesday, June 27, 2012

ஒரு கோடி உங்களுக்கே - ஆரியாவும் சந்தானமும் (Part II)

சந்தானம்: சில மாதங்களுக்கு முன்னர்  நாம ஆர்யா கூட ஒரு கோடி உங்களுக்கே விளையாடிக்கிட்டு இருக்கோம். பய ஜெயிச்ச ஆயிரம் ரூபாவுல சரக்கடிச்சிட்டு மட்டயாகிட்டதனால நிகழ்ச்சியின் ரெண்டாம் பாகம் கொஞ்சம் லேட் ஆகிடிச்சு. இருந்தாலும் எல்லாரும் அண்ணனுக்கு ஜோரா ஒரு வாட்டி கைதட்டுங்க.


சந்தானம்: வணக்கம் பாசு, ஹாட் சீட்ல ஒக்காரு, போட்டிக்கு போறதுக்கு முதல்ல, நன் ஒன்கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன், நிதானமா யோசிச்சு பதில் சொல்லு,

ஆர்யா: ஓகே என்ன கேள்வி வேணும்னாலும் கேளு, சும்மா டான் டான்னு பதில் சொல்றேன்.

சந்தானம்: உனக்கே நல்லா தெரியும், இப்போ இந்த பொண்ணுங்க எல்லாரும் லோ நெக் ஆடைகள்தான் அணியறாங்க, சப்போஸ் ஒரு பொண்ணு, லோ நெக் ஆடையில, துப்பட்டா போடாம ஒன்கிட்ட வந்து, குனிஞ்சு, ஓன் கால தொட்டு கும்பிட்டா உனக்கு என்ன தெரியும்?

ஆர்யா: ராஸ்கல், இப்படி ஆபாசமாவா கேள்வி கேக்கறது, இதுக்கு நான் பதில் சொன்னா நாளைக்கு பத்திரிகைகள்ல என்னோட பெயர நாறடிச்சுட மாட்டாங்க?

சந்தானம்: யோவ், இதுல என்னயா ஆபாசம் இருக்கு? அந்த பொண்ணோட கலாசார உணர்வு தெரியும், பாரம்பரியம் தெரியும், மரியாதை தெரியும், இதுல எங்கிருந்து ஆபாசம் வந்தது?

ஆர்யா: ஒத்துக்கறேன், என்னைவிட நீ பெரிய ஆளுதான்.. போட்டியில இந்தமாதிரி அறிவாளித்தனமான கேள்வி கேக்காம நம்ம லெவலுக்கு கேள்வி கேளுப்பா,


சந்தானம்: உனக்கான ரெண்டாவது கேள்வி,

2011 இல் தமிழ்நாட்டை தாக்கிய புயலின் பெயர் என்ன?

ஆர்யா: என்னையா இப்புடி லூசுத்தனமான கேள்வி கேக்குற, ஆமலா பால் தான் சரியான பதில், ஆப்சன் நம்பர் என்னன்னு பார்த்து நீயே லாக் பண்ணிக்க.


சந்தானம்: நீ இன்னும் அந்த மேட்டர்ல இருந்து வெளிய வரலியா? சரி விடு, உனக்கு நான் ஆப்சன் சொல்றேன் இதுல ஒண்ண நீயே தெரிவு செய்துக்கோ.

A) பூனே                                                           B) தானே
C) மெட்ராஸ்                                                D) டெல்லி

ஆர்யா: ஓ, அப்போ அது அமலா பால் இல்லியா? மெட்ராஸ், டெல்லி, பூனே எல்லாம் ஊரு பெயரா இருக்கு, அப்போ சரியான பதில் தானேயாதான் இருக்கணும். ஆப்ஷன் B, தானே.

சந்தானம்: யோவ், நான் உன்கிட்ட கேள்வி கேட்டா, ஆப்ஷன் B தானேன்னு நீ என்கிட்டயே திருப்பி கேக்குறியா? சீக்கிரமா ஒரு பதில சொல்லுப்பா.

ஆர்யா: பதிலதான்யா சொன்னேன் , ஆப்ஷன் B, லாக் பண்ணிடு.

சந்தானம்: சரியான பதில், உங்க அக்கவுண்டுல இப்போ ரெண்டாயிரம் ரூபா இருக்கு. நீங்க எப்புடி பீல் பண்றீங்க?

ஆர்யா: என்னோட சந்தோசத்துக்கு அளவே இல்ல, இது எனக்கு ஒரு ஆஸ்கார் கெடச்ச சந்தோசத்துக்கு நிகரானது, கண்டிப்பா இதுக்கு நான் என்னோட ரசிகர்கர்களுக்குதான் நன்றி சொல்லணும்.

சந்தானம்: ஆடியன்ஸ் இல்லன்னா முதலாவது கேள்விலேயே அவுட் ஆகியிருப்பான், ஆஸ்கார் லெவலுக்கு பீல் பண்றானே, சரி, ஓகே, உங்களுக்கான மூணாவது கேள்வி, ரொம்ப கவனமா ஆடுங்க, இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொன்னா நாங்க உனக்கு மூவாயிரம் குடுப்போம், தப்பா பதில் சொன்னா குடுத்த ரெண்டாயிரத்த புடிங்கிக்கிருவோம், டீலா நோ டீலா?

ஆர்யா: கொஞ்சம் நம்ம லெவெலுக்கு எறங்கி வந்து கேள்வி கேளுங்க பாசு, நல்லதம்பி மனசு வச்சா முடியும்.

சந்தானம்: நல்லதம்பி மனசு என்ன LKG கொஸ்டீன் பேப்பரா, அத வச்சு உன்னோட லெவலுக்கு கேள்வி கேக்குறதுக்கு? காம்புட்டர் ஜி, நம்ம அண்ணனுக்கு மூணாவது கேள்விய எடுத்து விடுங்க. ஓகே உங்களுக்கான மூணாவது கேள்வி, "Pardon" என்னும் ஆங்கில வார்த்தையின், நல்லா கேளு,"Pardon" என்னும் ஆங்கில வார்த்தையின், தமிழ் அர்த்தம் என்ன? உங்களுக்கான ஆப்ஷன்ஸ்.

A) பாட்டு பாடு                                                                     B) டான்ஸ் ஆடு
C) ரொமான்ஸ் பண்ணு                                                  D) புரியல, திருப்பி சொல்லு

யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ் Mr.ஆர்யா.

ஆர்யா: (மனசுக்குள்ள:நமக்கு ஒண்ணாம் கிளாஸ் இங்கிலிசே வராது, இதுல இது வேறய!!!!!!) ............................................................

சந்தானம்: செக்கண்ட்ஸ் ஓடிகிட்டு இருக்கு Mr.ஆர்யா... இன்னும் பத்தே செக்கண்ட்ஸ்.

ஆர்யா: பிரதர், லைப் லைன் யூஸ் பண்ணிக்கிறேன் பிரதர்.

சந்தானம்: ஓகே. மணி அண்ணே. நில்லுங்க.. நீங்க ஏற்கனவே ஆடியன்ஸ் போல் யூஸ் பண்ணிடீங்க Mr.ஆர்யா.. மிச்சம் இருக்குற ரெண்டு லைப் லைன்ல எத யூஸ் பண்ண போறீங்க?

ஆர்யா: ம்ம்ம்.. கேர்ல் பிரண்டு..

சந்தானம்: ஹங்!!!..அடேய், அது போனோ பிரண்டுடா... நல்லா வருது வாயில... சரி இதோ உங்களுக்கு ஹெல்ப்பண்ண இருகுறவுங்க லிஸ்ட்.
             1. சென்னைல இருந்து உங்க பிரண்டு ஜீவா சௌத்ரி
             2. கும்பகோணத்துல இருந்து மாட்டு டாக்டர் சரவணன்.
             3. எக்ஸ் பிரபுதேவா வைப், எக்ஸ் எக்ஸ் சிம்பு லவ்வர், மிஸ்.நயன்தாரா

ஆர்யா: இதுல இங்கிலீஸ் தெரிஞ்சவுங்க, நயன்தாராதான், அவுங்களயே கூப்டுங்க..

சந்தானம்: ஓகே. டிரிங் டிரிங்.. மிஸ்/மிசஸ் நயன்தாரா நா ஒரு கோடி உங்களுக்கே நிகழ்ச்சில இருந்து சந்தானம் பேசுறேன், Mr.ஆர்யாகிட்ட கேட்ட கேள்விக்கு அவரு உங்க ஹெல்ப்ப எதிர்பார்குறாரு. இதோ அவரே அவர் வாயால கேள்வியையும் ஆப்ஷன்சையும் சொல்வாரு. உங்களுக்கான நேரம் முப்பது வினாடிகள்

ஆர்யா: ஹாய் நயன் சேச்சி. அப்புறம் எப்புடி இருக்க! பிரபு மாஸ்டர் கழட்டி வுட்டுட்டானாமே (நோ சில்லி பீலிங்).. நா அப்பவே ஷூட்டிங்ப்போ சொன்னேன், நீ தான் கேக்கல.. சரி இப்பதான் கிரீம்ஸ் ரோட்ல புது வீடு வாங்கிட்டேனே. நீ அங்கேயே வந்து செட்ல் ஆகிரு..

சந்தானம்: டேய், கேள்விய கேட்க சொன்னா, பிகர கரெக்ட் பண்ணுறியா.. அது ஏற்கனவே பல வாட்டி பஞ்சர் ஆகி, பேட்ச் போட்ட டயருடா.. ஒழுங்கு மரியாதையா கேள்விய கேளு..

ஆர்யா: ஓகே ஓகே.. நயன், நல்லா கேட்டுக்க, "பாடேன்"னா தமிழ்ல என்ன அர்த்தம்?

நயன்: என்னாது? "பாடேன்"னா?

ஆர்யா: ஆமா, பாடேன்...

நயன்தாரா: ஓகே. "எக்ஸ் மச்சி, வை மச்சி, எப் எம் மச்சி.. "

ஆர்யா: ஐயோ, அது ஆப்சன்ஸ்ல இல்லையே.. இல்ல சேச்சி, "ப்பாடேன்"..

நயன்தாரா: லூசா இருப்பானோ!!ஓகே. இத கேளு. "கோடம்பாக்கம் ஏரியா, குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா?"

ஆர்யா: ஐயோ, இல்லீங்க, பா.....டே.....ன்....(சத்தமா கத்துறாரு)

சந்தானம்: டைம்ஸ்அப் .. உங்க முப்பது வினாடிகள் முடிஞ்சிருச்சி ஆர்யா. பதில சொல்லுங்க.

ஆர்யா: என்னாது பதிலா? அவுங்க ஒன்னுமே சொல்லலியே.. குருவே சந்தானம்.. கேள்வி புரியல திருப்பி சொல்லு...

சந்தானம்: கன்பார்மா?
ஆர்யா: ஆமா. புரியல, திருப்பி சொல்லு.

சந்தானம்: ஓகே. ஜீனியஸ். அதையே லாக் பண்ணுங்க.

ஆர்யா: நான் இன்னும் பதிலையே சொல்லலியே. கொஸ்டின ரிப்பீட் பண்ண சொன்னா, இவன் லாக் பண்றானே..சரியான மாங்கா மடையனா இருப்பான் போல இருக்கு.

சந்தானம்: கங்ராட்ஸ்.. Mr.ஆர்யா. நீங்க பத்தாயிரம் ரூவா ஜெயிச்சிட்டீங்க. ஆனா மூணு கேள்வியிலேயே ரெண்டு லைப் லைன் யூஸ் பண்ணின முதல் ஆளும் நீங்கதான். அதனால நாம போட்டிய இதோட முடிச்சிட்டு கெளம்பலாமா?

ஆர்யா: ஆமா ஆமா, இதுக்கு மேல விளையாடினா அப்புறம் என்னோட இமேஜ் பணால் தான் நான் இதோட விடைபெற்றுக்கிறேன்.



டிஸ்கி: ரொம்பநாளுக்கு முதல்லேயே எழுதி ட்ராப்டுல வச்சிருந்த பதிவு. இன்னிக்கிதான் ஞாபகம் வந்துச்சி, அதுனாலதான் ரொம்ப லேட் ஆனாலும் பப்ளிஷ் பண்றோம். 

Monday, June 18, 2012

ஏ. ஆர். ரஹ்மான் - ஒரு ஆச்சர்யம் (பகுதி இரண்டு)


ஏ ஆர் ரஹ்மான் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என ஆரம்பித்து, அது எங்கோ சென்று அவரது பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல்களின் தொகுப்பாக அந்தக் கட்டுரை முடிந்து போனது. ஓர் இரு நாட்கள் கழித்து அந்த கட்டுரையை படித்தபோது எதற்கும் பயனற்ற ஒன்றாகவே அது தோன்றியது. எழுத ஆரம்பித்த நோக்கத்தை சரி செய்து கொள்ள மறுபடியும் அதன் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன். (முதல் பாகத்தை படிக்காதவர்கள் அதை படிக்கத்தேவயில்லை என ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்)

சமீபத்தில் ரஹ்மான் அவர்களது ஒரு பழைய செவ்வியை யூடியூபில் பார்க்க முடிந்தது. 1995 இல் திரு பி ஹெச் அப்துல் ஹமீதினால் எடுக்கப்பட்ட செவ்வி, என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இருபத்தி ஆறு அல்லது இருபத்தி எழு வயதே நிரம்பிய ரஹ்மானின் முதிர்ச்சியும் இசை, சமூகம் தொடர்பான அவரது பார்வையும் என்னை வெகுவாக பாதித்தது. தமிழ் திரையிசை ரசிகர்கள் மத்தியில் ரஹ்மான் மிகவும் பிரபலம் அடைந்த காலம் அது, அந்த இளம் வயதில் கிட்டிய அதிகப்படியான பிரபல்யத்தையும் நட்ச்சத்திர அந்தஸ்தையும் ரஹ்மான் கையாண்ட விதம் அவர் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியது. தமிழ் திரையிசையை புரட்டிப்போட்ட ஒரு இசை சக்கரவர்த்தியாக ரசிகர்கள் அவரை கொண்டாடியபோது அவரது அடக்கமும், அவரது இசை முன்னோடிகள் மீது அவர் கொண்டிருந்த மரியாதையும் வியக்கவைத்தது. இன்று ரஹ்மானின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிப்போன இந்த குணவியல்புகள் அவரது சிறு வயது முதல்கொண்டே அவரிடம் இருந்துவந்தது என்பது ஆச்சரியம் தந்தது.  

தனது பதின் மூன்றாம் வயதுமுதல் குடும்ப பாரத்தை சுமக்கத்தொடங்கிய ரஹ்மான், குழைந்தைப் பருவம் தனக்கு கிட்டவில்லை என்பதை சமித்திய செவ்வி ஒன்றில் கூறியிருந்தார். சிறு வயது முதல் பெரியவர்களுடன் பழகியதும் குடும்பப் பாரம், தொழில்சிந்தனை என்பனவும் தன்னை முதிர்ச்சிப்படுத்தியதாக கூறியிருந்தார். ஒரு சாதாரண சிறுவன் அனுபவிக்க நினைக்கும் எந்த கேளிக்கையும் இவரது வாழ்வில் இருந்ததில்லை, குழந்தை பருவத்தை முற்றிலும் தொலைத்துவிட்ட ஒரு வாழ்க்கை, அந்த ஏக்கத்தை முழுவதும் தனது இசையில் செலுத்தியிருக்கிறார் என்பதற்கு இவர் உருவாக்கிய இசையே சாட்சி. தாயார் மீது அதீத பாசம் கொண்டிருக்கும் ரஹ்மானின் தாலாட்டு இசையில் அந்த பாசம் மேலோங்கித் தெரியும். "என்னாத்தா பொன்னாத்தா", "அழகு நிலவே", "உயிரும் நீயே"  போன்ற பாடல்கள் அந்த பாசத்தின் வெளிப்பாடாகவே தோன்றும்.


ரஹ்மானிடம் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்த ஒரு விடயம், தனது இசைப் பயணத்தின் ஏற்ற இறக்கங்களை அவர் கையாண்ட விதம். ரோஜா என்ற இசையினை வழங்கி தனது முதல் திரைப்படத்திலேயே தேசியவிருத்தையும் பெற்ற ரஹ்மான், ரோஜாவின் பிற்பாடு தன்னிடம் எந்த இசையுமே எஞ்சியிருக்கவில்லை என நினைத்ததாக கூறுகிறார்.  தன்னால் ஒரு இசையமைப்பாளராக நிலைத்திருக்க முடியாது என எண்ணியதாக கூறுகிறார். அந்த ஒரு நிலைமை ஒவ்வொரு படைப்பாளியின் வாழ்விலும் ஏற்படக்கூடியது, படைப்பு வறட்சி ஏற்பட்ட பின்னர் அதிலிருந்து மீண்டு வருவதென்பது சாதாரண விடயமில்லை, ரஹ்மான் இதனை ஒருதடவயல்ல இரு தடவைகள் செய்தது காட்டியிருக்கிறார். ஒவ்வொரு தடவையும் முன்பை விட வீரியத்துடனும் வீச்சத்துடனும் இருக்கிறது அவரது எழுச்சி. ரோஜாவில் அனைவரது கவனத்தையும் கவர்ந்த ரஹ்மான், அதன் பின்னர் வந்த திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையிசையின் ஒட்டுமொத்த அடையாளமாக மாறினார். இரண்டாயிரத்திற்கு பிற்பட்ட காலத்தில் மறுபடியும் ஒரு வறட்சியை எதிர்கொண்ட ரஹ்மான், மீள வந்தபோது முழு இந்தியாவினதுமே திரையிசை அடையாளமாக இனம்காணப்பட்டார். 

ரஹ்மானின் வலக்கரமாக இருந்த சாஹுல் ஹமீதின் மரணத்தின் பின்னர் ரஹ்மான் இனி இல்லை என்றே பலரும் எண்ணினார்கள், அதையும் தகர்த்து ஹிந்தி திரையுலகத்தில் கால் பதித்தார் ரஹ்மான்.  தனது ஆஸ்தான சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர் அவர்களது மரணத்தின் பின்னர் ரஹ்மானது இசை எவ்வாறு ஒலிக்கப்போகிறது என பலரும் எதிர்பார்த்தபோது விண்ணைத்தாண்டி வருவாயா, எந்திரன் போன்ற ஹை டெக் இசையினை வழங்கினார். சிறு வயதிலிருந்தே இழப்புக்களை சந்தித்து வந்த ரஹ்மானுக்கு இழப்புக்களில் இருந்து மீண்டு வருவது எவ்வாறு என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. வாழ்க்கை மீது அவருக்கு இருந்த அலாதியான புரிதலே இதை சாத்தியமாக்கியது எனலாம். 

சமுதாயம் தொடர்பான ரஹ்மானது பார்வை மிகவும் ஆழமானது. இசை என்பதில் நல்ல இசை மோசமான இசை என இரு வகை இருப்பதாக ரஹ்மான் கூறுகிறார். ஒரு இசையினை கேட்டபின்னர் அது உங்களுக்கு மன அமைதியை அல்லது உற்சாகத்தை தருகிறது எனில் அது நல்ல இசை, அதுவே மனிதனது கறுப்புப் பக்கத்தை தூண்டிவிடும் எனில் அது மோசமான இசை என்பதே ரஹ்மான் கூறுவது. ரஹ்மான் எப்போதும் நல்ல இசையினை வழங்குவதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார் என்பது எனது ஆழமான நம்பிக்கை. அன்றாடம் வாழ்கையில் காணப்படும் அம்சங்கள் சமூக நலன் சார்ந்ததாக மாறவேண்டும் என்பது ரஹ்மானது கருத்து. பத்திரிகைகள் விறுவிறுப்பான செய்திகளுக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்துக்கள், கிசுகிசுக்கள் போன்ற சென்சேஷனல் விடயங்களுக்கும், அதிக முக்கியத்துவம் குடுப்பதை கடுமையாக கண்டிக்கிறார். 1950இல் இருந்ததிலிருந்து 2010இல் குற்றங்கள் அதிகளவில் அதிகரிக்கவில்லை என்பது ரஹ்மானது கருத்து. ஊடகங்களில் முன்னிறுத்தப்படும் செய்த்திகளின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு உலகம் கட்டமைக்கப் படுவதாக அவர் நினைக்கிறார்.


நவீன வீடியோ கேம்களில் விபத்து ஏற்படுத்துவதும் ரத்தக்காயம் ஏற்பட வைப்பதும் ஒரு சென்சேஷன் ஆக மாறி விட்டிருப்பதையும் கண்டிக்கிறார். என் குழந்தைகளுக்கு அவ்வாறான கேம்களை விளையாட அனுமதிக்க மாட்டேன் என ரஹ்மான் கூறுகிறார். (இந்த கூற்று இன்சைட் மேன் படத்தில் ஒரு காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும், அந்த படத்தில் ஆரம்ப மற்றும் இறுதி இசையாக ரஹ்மானது தைய தையா இடம்பெற்றிருக்கும் என்பதும் கூடுதல் தகவல்). ரஹ்மான் ஒருபோதும் தனது அடையாளத்தை விட்டுக்கொடுத்ததில்லை. எங்கே சென்றாலும் தான் தமிழன் என்பதிலும் இந்தியன் என்பதிளிலும் அலாதி பெருமை கொண்டிருக்கக்கூடியவர். அவரை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியக்கூடிய ஒரு விடயம், உடலலங்காரங்களிலோ சிகை அலங்காரத்திலோ அதிக கவனம் செலுத்தாத ரஹ்மான் சமீபத்தில் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு இருக்கிறார். இது பற்றி ஒரு செவ்வியில் என்னை ஒரு இந்தியனாக உலகம் பார்க்கும்போது நான் இவற்றில் கவனம் செலுத்தவேண்டி இருக்கிறது என கூறுகிறார்.

மனித உறவுகள் பற்றி ரஹ்மானின் முகநூலில் பதியப்பட்ட ஒரு செய்தி பின்வருமாறு விரிகிறது "ஒருபோதும் அவசராட்டு முடிவுகளை எடுக்காதீர்கள், குறிப்பாக மனிதர்களை பற்றி. எப்போதும் ஒருவிடயத்திற்கு இன்னொரு பக்கமும் இருக்கும், ஒரு நல்ல பக்கம். நாம் எப்போதும் ஒரு மனிதரையோ, இடத்தையோ, கலை வடிவத்தையோ அல்லது ஒருநிறுவனத்தையோ அதன் அழகையும் பெறுமதியையும் பார்பதற்கான வழிமுறையை தேடிக்கொள்ளவேண்டும். நாம் ஒவ்வொருவரதும் பிரச்சினையில் பாதியாவது நாம் இன்னொருவர்வர் பற்றி அவசர முடிவுகளை எடுக்கதிருப்பதனால் தீர்த்துக்கொள்ளலாம்" கேளிக்கை வணிகத்தில் இருக்கும் எவரிடமும் ரஹ்மானிடம் இருக்கும் நுண்ணியமான சமுதாய பார்வையினை நான் பார்த்ததில்லை.

ரஹ்மான் அவர்கள் நேரத்தை எவ்வாறு திட்டமிட்டு செலவழிக்கிறார் என்பது தொடர்பான ஒரு செவ்வியை கட்டுரை வடிவில் மிகச் சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. இருபது நிமிடங்களுக்கு மேல் அவர் எந்த ஒரு விடயத்திலும் தேங்கி இருப்பதில்லை என ரஹ்மான் கூறுகிறார். படைப்பாளியாக ஒரு விடயம் சரியாக அமையாதபோது நாள் கணக்கில் அதில் தேங்கியிருக்கும் மனிதர்கள் பலரை பார்த்திருக்கிறோம், அவ்வாறு தேங்கி இருப்பது ஒரு வகையான வலிந்து திணிக்கப்பட்ட படைப்பினையே தரும் எனவும் அழகியலுக்கு ஒத்துவராது எனவும் அவர் கூறுகிறார். இருபது நிமிட வேலை பின்னர் சிறிதாக ஒரு இடைவேளை என்பது அவரது பாணி. ஒரு பரபரப்பான இசையமைப்பாளராக ரஹ்மான் குடும்பத்துக்காக எவ்வாறு நேரம் ஒதுக்குகிறார் என்கிற ஒரு கேள்விக்கு ரஹ்மான் அளித்த பதிலே என்னை மிகவும் ஆச்சரியப் பட வைத்தது. 


ஒரே சமயத்தில் இசையிலும் குடும்பத்திலும் ஒரே அளவான கவனம் செலுத்துவது தனக்கு சாத்தியமானதல்ல என்கிறார். 2011 இல் தனது ஓய்வுக்கான காரணமும் அதுதான் என்கிறார் ரஹ்மான். தனது மகளுக்கு இருதய சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாகவும் மகளுக்காக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காகவுமே இசையினை தள்ளி வைத்ததாக ரஹ்மான் கூறுகிறார். இன்றைய நிலையில் தொட்டதெல்லாம் பொன்னாகும் அளவு போர்மில் இருக்கும் ரஹ்மான் குழந்தைக்காக தனது இசையை ஒத்திவைத்தது சாதாரணமாக தோன்றினாலும் அந்த நிலையை அடைய எவ்வளவு பக்குவம் வேண்டும் என்பது பணத்துக்கும் புகழுக்குமாக வாழ்கையை தொலைத்துவிட்ட மனிதர்களை அண்றாடம் சந்திக்கும் பலருக்கு தெரிந்திருக்கும். 

நல்ல கணவராக, நல்ல தந்தையாக, நல்ல மகனாக, நல்ல குடிமகனாக ரஹ்மானின் அனைத்து பரிணாமங்களும் எப்போதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்திக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எப்பொழுதும் அவருடன் ஒன்றியிருக்கும் அந்த வசீகர புன்னகையும்.

Yes, you have all the talent but the most important equipment that you need to have in order to begin the long climb is a very simple device called a ‘Smile’. Just wear it and you will see how smiles get converted to miles! - A.R Rahman

டிஸ்கி: ரஹ்மானை பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்க்கு ஒரு முடிவு கிட்டாது போலும். எனவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். நேரம் கிட்டினால் கண்டிப்பாக ரஹ்மானின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட மயாமி பல்கலைக்கழக டாக்டர் பட்ட ஏற்புரையை இங்கு கிளிக்கி படிக்கவும்

Tuesday, June 12, 2012

ஏ ஆர் ரஹ்மான் - ஒரு ஆச்சரியம்


நீண்ட நாட்களாகவே இசைப்புயல் என அறியப்படும் ஏ ஆர் ரஹ்மான் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்கிற ஒரு ஆவல் எனக்குள் இருந்தது. இசை பற்றி எனக்கு உள்ள அறிவும் சில பல காரணங்களால் ஏற்படும் நேரப் பற்றாக்குறையும் அவ்வப்போது "இதெல்லாம் உனக்கு தேவையா?" என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பி அந்த ஆர்வத்தை வந்த வேகத்திலேயே மழுங்கடித்துவிடும். அதனால் இன்றுவரை இதை எழுத முடியாது போனது ஒரு வருத்தமே. தொண்ணூறுகளின் பின்னர் இசை (அதுவும் திரை இசை) கேட்க்க ஆரம்பித்தவர்கள் பலரை போலவும் எனக்குள் ரஹ்மானும் அவரது இசையும் ஏற்படுத்திய தாக்கங்கள் பல. சமீபத்தில் திரு ரஹ்மான் அவர்களது பழைய பேட்டி ஒன்று காணக்கிடைத்தது அந்த ஆர்வத்தை என்னுள் தூண்டியதன் விளைவே இந்த கட்டுரை. 

ஏ. ஆர் ரஹ்மானின் இசை பலநேரங்களில் எனக்கு ஒரு போதயாகவே இருந்திருக்கிறது. ஒரே பாடலை நூறு தடவை கேட்டபின்னரும் நூற்றி ஓராவது தடவை அந்த பாடலில் அதுவரை நான் கேட்டிராத ஒரு புதிய ஒலியினை அல்லது இசையினை முதல்தடவையாக கேட்பதும் அதனால் ஏற்படும் பரவச நிலையும் ஏ ஆர் ரஹ்மான் ஒருவரின் பாடலுக்கு மட்டுமே உள்ள சிறப்பியல்பு. ரஹ்மானது ஆரம்ப கால பாடல்களில் இருந்து தற்கால பாடல்கள் வரை இடைவிடாது தொடர்ந்து கேட்டு வருவதில் ரஹ்மானது திரையிசை பயணத்தை நான்கு அல்லது ஐந்து கட்டங்களாக பிரித்து நோக்கலாம்.

ரோஜா முதல் இந்திரா வரையில் 

இந்த காலப்பகுதியில் ரஹ்மானது இசையில் வெஸ்டேர்ன் க்லாசிகளை விட கிராமிய இசையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும், ரஹ்மான் பெரிதும் பிரபலமில்லாத காலத்தில் வழங்கிய இசை, இன்றுவரை இந்த காலகட்ட பாடல்களுக்கு தனி சிறப்பியல்பு உண்டு. இன்னுமொரு வகையில் ரஹ்மானின் பொற்காலம் இதுவென்றே நான் சொல்வேன்.  இந்த காலகட்ட இசையில் பெரிதும் பேசப்பட்ட பாடல்கள் ரோஜா, திருடா திருடா, டூயெட், கருத்தம்மா, காதலன் மற்றும் பாம்பே ஆக இருந்தாலும் என்னை கவர்ந்த பாடல்கள்  "நேற்று இல்லாத மாற்றம்", "கண்ணுக்கு மை அழகு" (புதிய முகம்),  என்னாத்தா பொன்னாத்தா, கண்களில் என்ன ஈரமோ (உழவன்), ராசாத்தி (திருடா திருடா), சித்திரை நிலவு (வண்டி சோலை சின்னராசு), என்மேல் விழுந்த மழைத்துளியே (மே மாதம்), அழகு நிலவே, உயிரும் நீயே (பவித்திரா),  நீ கட்டும் சேலை (புதிய மன்னர்கள்), தொட தொட மலர்ந்ததென்ன (இந்திரா), போன்ற பாடல்கள் அதிகம் பிரபலமாகதபோதும் அல்லது பலருக்கு மறந்துவிட்ட போதும் என்னை மிகவும் கவர்ந்த பாடல்கள். என்னை மிகவும் கவர்ந்த ஆல்பம் திருடா திருடா.

சிறு குறிப்பு: காதலன் திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒலிக்கும் ஒரு சிறு இசை துணுக்கே பின்னாளில் மிகப்பிரபல்யம் அடைந்த கண்மூடித்திறக்கும் போது (சச்சின் - தேவி ஸ்ரீ பிரசாத்) பாடலுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என நினைக்கிறேன்.



ரங்கீலா முதல் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் வரை.

ரஹ்மானின் இந்திப் பிரவேசம் ரன்கீலாவில் ஆரம்பித்ததில் இருந்து அவரது இசை வடிவமும் மேற்கத்திய பாணியையும், சூபி இசை, வட இந்திய இசை, கவாலியை நோக்கி நகர ஆரம்பித்த காலம் இது. ரஹ்மான் தமிழில் புகளின் உச்சியை அடைந்த காலமும் இதுவே. இந்த கால கட்டத்தில் இவரது இசையில் வந்த முத்து, இந்தியன், காதல் தேசம், மின்சார கனவு, ரட்சகன், ஜீன்ஸ், உயிரே, என்சுவாச காற்றே, படையப்பா, காதலர் தினம், தாளம், சங்கமம், முதல்வன், தாஜ்மகால், அலைபாயுதே, கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் போன்ற திரைப்பட பாடல்கள் பலராலும் கவனிக்கப்பட்ட மிகப்பிரபல்யமான பாடல்கள்தான். தமிழ் சினிமாவில் முதல் முறையாக திரைப்படத்தின் பிரமாண்ட பட்ஜெட்தடில் ஒரு பங்கு ஆடியோ விற்பனையை நம்பியே எடுக்கப்பட்ட காலம். இவற்றிலும் பலரும் மறந்துவிட்ட என்னை கவர்ந்த பாடல்களாக காதலே நீ என்ன செய்வாயோ (ரங்கீலா),  விடுகதையா இந்த வாழ்க்கை (முத்து), மலர்களே, நாளை உலகம் (லவ் பேர்ட்ஸ்), கப்பலேறி போயாச்சு (இந்தியன்), ரோமியோ ஆட்டம் போட்டால், தண்ணீரை காதலிக்கும், மெல்லிசையே (மிஸ்டர் ரோமியோ),  கனவா இல்லை காற்றா (ரட்சகன்), எங்கே என் புன்னகை, மன்னவா (தாளம்), செந்தேனே, என்னுயிரே (உயிரே) போன்ற பாடல்கள் இருக்கின்றன.

தனி அல்பமாக என்னை மிகவும் கவர்ந்தது இருவர், இன்றும் இருவர் திரைப்படத்தின் எந்த ஒரு பாடலை கேட்க்கும் போதும் என்னையறியாமல் ஒரு பரவச நிலையை அடைய நேரிடுகிறது. அதிலும் குறிப்பாக உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் கவிதையும் அதற்கான இசையும் அதே போல் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு கவிதையும்.


ரிதம் முதல் ரங்கதே பசந்தி வரை 

தமிழை பொறுத்தவரை ரிதம், பாய்ஸ், ஆயுத எழுத்து, நியூ போன்ற படங்கள் வந்தாலும் இது ரஹ்மானுக்கு பேறாத காலம். ஹாரிஸ் ஜெயராஜின் வருகையுடன் பலரும் ரஹ்மானின் தசாப்த்தம் முடிந்துவிட்டதாகவே கருதினார்கள். ஆனால் இந்தியில் ரஹ்மான் ஆட்சி ஆரம்பித்தது இந்த காலத்தில்தான். மேலும் ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்ததுடன் ஹாலிவூடின் கவனம் இவர் பக்கம் திரும்பியதும் இந்த காலத்தில்தான். ரோஜா ஆல் டைம் சிறந்த பத்து திரயிசைத்தொகுப்புக்களுள் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டது, ரஹ்மானின் பாடல்கள் சிறந்த ஆரிஜினால் பாடலுக்கான ஆஸ்கரில் லாங் லிஸ்ட் செய்யப்பட்டது, ஒட்டகத்தை கட்டிக்கோ பாடல் பிரெஞ்சு இசை குளுவினர்களினால் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பின்னாளில் பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில் இடம்பெற்றது,   பாம்பே ட்ரீம்ஸ் தைய தையா பாடல் இன்சயிட் மேனில் இடம்பெற்றது என இவர் புகழ் ஹாலிவூட் வரையில் பரவ ஆரம்பித்தது. வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் ஏர்த் படம் வெளியாகியதும் இந்த காலகட்டத்தில் தான். லகான், சுபிதா, ஸ்வதேஸ், போன்ற படங்கள் வெளியானதும் இந்த காலகட்டத்தில்தான்.


போர்க்களம் அங்கே (தெனாலி), தோம் கருவில் (ஸ்டார் - அலைபாயுதே ஆல்பத்தில் இடம்பெற்ற ஒரு இசைத்தொகுப்பு பின்னர் பாடல் வடிவம் பெற்றது), வெள்ளைப் பூக்கள், விடைகொடு எங்கள் நாடே (கன்னத்தில் முத்தமிட்டால்), அழகிய சின்ரெல்லா, அனார்கலி, என்னுயிர் தோழியே (கண்களால் கைது செய்), ஸ்பைடர்மேன், நியூ (நியூ), மயிலிறகே (அன்பே ஆருயிரே) போன்ற பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். தனி ஆல்பமாக மிகவும் பிடித்தது ஸ்வதேஸ் (தேசம்). எந்தன் தேசத்தின் குரல், தாய் சொன்ன தாலாட்டு, கேட்டேனா, காவிரியா, மலை மேக வண்ணா தமிழிலும், யே தாரா, யூ ஹீன் சலா இந்தியிலும் பிடித்த பாடல்கள். எந்தன் தேசத்தின் குரல் இன்றும் கிறக்கம் தரும் ஒரு பாடல்.


சில்லின்னு ஒரு காதல் முதல் ராக்ஸ்டார் வரை 

ரஹ்மான் புகழின் உச்சத்துக்கு சென்ற காலம் இதுதான். கோல்டன் க்ளோப், ஆஸ்கர் என விருதுகள் தேடி வந்த காலம். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என கலந்து கட்டி அடித்த காலம். தமிழை பொறுத்தவரை ஒரு சிறிய தோயவிளிருந்து மீண்டு வந்து சில்லின்னு ஒரு காதல், வரலாறு, குரு, சிவாஜி, அழகிய தமிழ் மகன், சக்கரகட்டி, விண்ணை தாண்டி வருவாயா, ராவணன், எந்திரன் எனவும், ஹிந்தியில் ஜோதா அக்பர், ஜானே து யா ஜானே நா, யுவராஜ், கஜினி, டெல்லி 6, ப்ளூ, ராக்ஸ்டார் எனவும், ஆங்கிலத்தில் ஸ்லம்டாக், கப்பில் ரெட்ரீட், 127 அவர்ஸ் எனவும் பல வெற்றி திரை இசை பாடல்களை குடுத்த காலம். ஆங்கில பாடல்களில் சஜ்னா, குறு குறு (இது ஒரு தமிழ் பாடல்), நா நா (கப்பிள்ஸ் ரெட்ரீட்), இப் ஐ ரைஸ் (127 அவர்ஸ்) போன்ற பாடல்கள் எனை மிகவும் கவர்ந்தவை. தனி ஆல்பமாக அனைத்து தமிழ் ஆல்பங்களுடன், டெல்லி 6 உம மிகப்பிடித்தது.

சமீபத்தில் பீபில் லைக் அஸ் படத்தின் ட்ரைலரை தேட்டரில் பார்த்தபோது அங்கு அமர்ந்திருந்த சிலருக்கு அது ரஹ்மான் இசை அமைக்கும் படம் என்பது தெரிந்திருந்தது. ரஹ்மானின் ஐந்தாவது காலகட்டம் இனிமேல்தான் ஆரம்பமாகிறது. அதன் வீரியத்தை காண காத்தரிக்கும் ஒரு ரஹ்மான் ரசிகன் நான்.


டிஸ்கி: ஒரு சில இந்தியர்கள் மட்டுமே எட்டிய ஒரு மிகப்பெரிய உயரத்தை எட்டிய இந்த மனிதரிடம் அவரது இசையை விடவும் என்னை கவர்ந்த விடயங்கள் பற்றிய ஒரு கட்டுரையாகவே இதை எழுத ஆரம்பித்தேன், அவரின் இசையும் அதன் மீதான ஈடுபாடும் கட்டுரையின் நோக்கத்தினையே திசை திருப்பி விட்டது என நினைக்கிறேன். மீண்டும் ஒரு நேரம் கிடைத்தால் தொடர்கிறேன்.

அப்டேட்: ஏ. ஆர். ரஹ்மான் - ஒரு ஆச்சர்யம் (பகுதி இரண்டு)