Labels

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, March 16, 2014

லட்சியங்கள்

ஒவ்வொரு மனுஷனுக்கும "லட்சியங்கள்" ரொம்ப தேவையானவை, ரொம்ப அத்தியாவசியமானவையும் கூட. நாம  யாரு, என்ன மாதிரி பேக்ரவுன்ட்ல  இருந்தோம், இப்போ என்ன பண்ணிட்டு  இருக்கோம், இனிமே என்ன பண்ண போறோம், எல்லாவற்றையும் கடந்து நம்ம ஒவ்வொருவருக்கும் ஒரு சில லட்சியங்கள் கண்டிப்பா இருக்கும், இருக்கனும். லட்சியங்களை நிர்ணயித்து கொள்வதும், அதை நோக்கிய பாதையில் சின்ன சின்ன வெற்றிகளை அடைவதும், எப்பவுமே நமக்கு "கெத்தை" தருபவன, அந்த  "கெத்து" வாழ்கைக்கு ரொம்ப முக்கியம். "வாழ்க்கைல லட்சியங்கள் மாறிக்கொண்டு கூட இருக்கலாம். ஆனா, லட்சியத்தை  அடையனும்ங்குற எண்ணம் மட்டும் மாறவே கூடாது"ன்னு ஒரு மாபெரும் மகான் சொல்லியிருக்காரு. அந்த மகான் யாருங்குறது நமக்கு தேவையில்லை. 



எனக்கு நினைவு தெரிந்த நாட்களில், நீ பெரியாளாகி என்னவாகுவ?ன்னு யாரவது கேட்டால். "அப்பாவை போல நானும் பிஸினெஸ் மேன் ஆவேன்"ன்னு  சொல்லிக்கிட்டு இருப்பேன். ஏன்னாஒவ்வொரு மகனுக்கும் தன்  தந்தையே முதல் இன்ஸ்பிரேஷன் என்பதால், அப்போ எனக்கு "பிசினெஸ் மேன்" ஆவது லட்சியம். அப்புறம் இந்த  படிப்ப படிச்சி, யுனிவர்சிட்டி போயி மேற்படிப்பு எல்லாம்   படிச்சு, அங்கேயே வேலை செஞ்சு, நமக்குன்னு ஒரு ப்ரொபஷனல் துறையை உருவாக்கி கொண்டு, இருந்த பொழுது, இடையிடையே  உலகம் அறிந்த ஒரு பெரிய புரொபசர் ஆவனும், மில்லியன்களில் சம்பாதிக்கும்  டேடா  சயன்டிஸ்ட்  ஆவனும்னு  இலட்சியங்கள் மாறி  கொண்டிருந்தன. அனால், லட்சியம் இல்லாமல் இருக்கவில்லைவேலைய விட்டு  வெளில வந்து, திரும்பவும்  வேறு  வேலை  தேடி "நான் படிச்ச படிப்புக்கு இல்லாத வேலை, எங்க அப்பா பேருக்கு இல்லாத வேலை" எதுவுமே கிடைக்காமல் இருக்கும்போது  கூட , "சிக்ஸ்-பேக்" உருவாக்குவதை லட்சியமாக வச்சிக்கிட்டேன். அதை அடைவதற்கான முயற்சிகளில்  ஈடுபட்டு  முன்னாடி "தல" போல இருந்த  நான்  "சூர்யாபோல ஆவனாலுமே "சிவகார்த்திகேயன்போலயாவது  ஆயிட்டேன் என்பது மகிழ்ச்சி. ஏன் நடிகர்களை பற்றி சொல்றேன்னா, எல்லா தமிழ் சினிமா ரசிகர்களை போலவும் பஸ் புடிச்சி கோடாம்பாக்கம் போயி, "ஸ்ட்ரெய்ட்டா  ஹீரோஆகிரனும் என்பது கூட எனது கடந்த கால இலட்சியங்களில் ஒன்று. அவ்வளவு ஏங்க, எல்லா வயசுக்கு வந்த பையனை போலவே "எனக்கு சூப்பர் ஃபிகர் செட் ஆவனும்" என்பது கூட எனது இன்னும்  நிறைவேறாத லட்சியமே.


இடையே இந்த பதிவுலகத்துல(!) கண்ட கண்ட பதிவுகளை வாசித்து,  உலகத்தர சினிமாக்கள்ன்னு சொல்லபடுற திரைபடங்கள பார்த்து "நம்ம வாழ்கையின் நிதர்சனம் என்னன்னா" ரேஞ்ச்ல பேச தொடங்கிவிட்டேன்.  சமீபத்துல கூட ஒரு நண்பன் அவனோட லட்சியங்களையும் அவற்றை அவன் அடைய முற்படும்போது ஏற்படும் தோல்விகளையும்  பத்தி சொல்லிட்டு இருக்கும்போது, "'உங்க அப்பன எல்லாம் ஏமாத்திபுட்டாங்கடா'ன்னு ஆரண்யகாண்ட வாழ்ந்து கெட்ட ஜமீந்தார் மாதிரி என்புள்ளைக்கு எதிர்காலத்தில் சொல்லிட்டு இருப்பேனோன்னு பயமா இருக்கு மச்சி"ன்னு சொன்னான். நானும் பயந்துட்டேன். ரஜினியானப்புறம் "எல்லாம் கொஞ்ச காலம்தான் நண்பா"ன்னு சொல்றது இல்ல மேட்டர், ரஜினியாவது தான் மேட்டரே!




என்னை பொறுத்த வரைக்கும், திரும்பவும் ஆரம்ப புள்ளிக்கே வந்துட்டேன்.   மீண்டும் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து கொண்டேன். அதை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க உள்ளேன். சமீப காலமா "ஒன்னுமே இல்லாமல் ஆரம்பித்து மாபெரும் சாம்ராஜ்யம் உருவாக்கிய அண்ணாமலை சாதனையாளர்களின் பயோகிராபிகளை" வெறித்தனமா தேட தொடங்கியிருக்கேன், வாசிக்க. பொதுவா எல்லா வெற்றியாளர்களுமே தங்களுக்கு பின்னால் ஒரு டெம்ப்ளேட் பிளாஸ்பேக் வச்சிருப்பாங்க. உதாரணத்துக்கு "நா சின்ன வயசுல  வீடு வீடா பேப்பர் போட்டேன் " , " வீடியோ கேசட் வித்தேன் ", " பால் கறந்தேன் ", " ஒரே ஒரு சூட்கேசுடன் சிட்டிக்கு வந்தேன்" , "தூங்க  இடம் இல்லாமல், பப்ளிக் பார்க்ல  படுத்து இருந்தேன் " ன்னு எதாவது ஒன்னு இருக்கும். நானும் இப்போதுல இருந்தே, நாம அது போல இதுவரைக்கும் என்னென்ன பண்ணிருக்கோம்ன்னு ஒரு லிஸ்ட் எடுத்து  ரெக்கார்ட்ல வைக்க ஆரம்பிசிட்டேன். பை தி பை, இப்போ எதுக்கு இவ்வளவு வெளாவாரியா "லட்சியம்" என்னும் டாபிக்கில் லெக்சர் பண்றேன்னா, நாளைக்கு டிவி  பேட்டில நீங்க உங்க இளம் வயதில் என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு கேட்கும்போது, "வெட்டியா பிளாக் எழுதிகிட்டு இருந்தேன்"னு சொல்வது கூட எனது லட்சியமே!

Monday, March 3, 2014

அமெரிக்க மாப்பிள்ளை - இது பெண்களுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்குமான பதிவு

கல்யாணம் அண்ணன் நம்ம லௌ மேரேஜ் பதிவ படிச்சிட்டு செம டென்ஷன் ஆகிட்டாரு. ஏற்கனவே எனக்கு பொண்ணு கெடைக்கறது குதிரைக் கொம்பா இருக்கு, இதுல நீங்க வேற இப்படி ஒரு பதிவு போட்டா என் நிலைமை என்னவாகுறதுன்னு ஒரு கேள்வி கேட்டு நம்மள சிந்திக்க வச்சிட்டாரு. அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு பொண்ணு கெடைக்காததுக்கு ஒரே காரணம் தமிழ் சினிமா. வெளிநாட்டு வாழ் எலிஜிபில் பேட்சுலர்சை தமிழ் சினிமா "அமெரிக்க மாப்பிள்ளை" என்னும் பெயரில் அசிங்கப்படுத்தி பொண்ணு கிடைக்காம பண்ணிடுதுங்கறது அண்ணன் வைக்கிற குற்றச்சாட்டு. ஒரு சமூக ஆர்வலரா, இந்த அவல நிலையைப் போக்க நாமளும் ஏதாவது செய்யணுமே, அதுதான் இந்தப் பதிவு.


நம்ம பசங்கள நம்ம ஊரோட தொடர்ப்பு படுத்தற விஷயங்கள் மூணுங்க, ஒன்னு தமிழ் சினிமா, ரெண்டாவது விஜய் டிவி, மூணாவது சமூக வலைத் தளங்கள். நம்ம ஊருலயெல்லாம் பசங்க ஒண்ணா சேர்ந்தா தண்ணி அடிப்பாங்க, தம் அடிப்பாங்க, பொண்ணுங்கள பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்க, இங்கயெல்லாம் பசங்க ஒண்ணா சேர்ந்தா சந்தானம், சிவகார்த்திகேயன் காமெடில தொடங்கி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் ப்லூபெர்ஸ்ன்னு எதையாவது பார்த்து சிரிச்சிக்கிட்டே, ப்ரிட்ஜுல இருந்த பழைய சாதத்தையும் சாம்பாரையும் மைக்ரோ வேவுல சூடு பண்ணி சாப்பிட்டு மல்லாக்க படுத்து தூங்கிடுவாங்க. அந்தளவு அப்பிராணிகளான பசங்க. 

அமெரிக்க மாப்பிள்ளைன்னா அவ்வளவு இளக்காரமாங்க, அவுங்க திறமை, பெருமை என்னன்னு உங்களுக்கு தெரியுமா? புருஷ லட்சணம் மொத்தமா அமையப் பெற்ற ஆண் வர்க்கமுங்க நம்ம பசங்க. சாம்பிளுக்கு நாலு அஞ்சு எடுத்து விடுறேன் கேட்டுக்கங்க.

1. அமெரிக்க மாப்பிள்ளைகள் எல்லாருமே கண்டிப்பா சமையல் எக்ஸ்பேர்டா இருப்பாங்க. ஏன்னா தினமும் இட்லி தோசைக்காகவோ இல்ல ஒரு பிரியானிக்காகவோ நூறு இருநூறு மைல் தூரம் அலையை முடியாது, எது வேணும்னாலும் நாமளா சமைச்சாதான் உண்டு, சோ கண்டிப்பா சமையல் தெரிஞ்சிருக்கும். அதுலயும் வெரைட்டி வெரைட்டியா சமையல் பண்ணுவாங்க. இன்னும் முக்கியமா "நேத்து சமைச்சதுதான் இன்னிக்குமா?" ன்னு ஒருநாளும் சண்ட போட மாட்டாங்க, போன வாரம் சமச்சத இந்தவாரம் சூடு பண்ணிக் குடுத்தாக்கூட சப்புக் கொட்டி சாப்பிட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

2. நீங்க மணிக்கணக்கா ஷாப்பிங் பண்ணாலும் பொறுமையா உங்ககூட கம்பெனி குடுப்பாங்க. இந்த நாட்டுல பேங்க்ல ஒரு செக்கு டெபாசிட் பண்ணனும்னாலோ இல்ல முடி வெட்டிக்கனும்னாலோ கூட அபாயின்மென்ட் எடுத்து மூணு நாலு மணிநேரம் காத்திருந்துதான் பண்ணனும். சோ இந்த வரிசையில நிக்கறதோ இல்ல பார்கிங் லாட்ல மணிக்கணக்கா காத்திருக்கறதோ நம்ம பசங்களுக்கு சப்ப மேட்டர், அதனால ஷாப்பிங் போறீங்கன்னா உங்களுக்கு போர்ட்டரும் டிரைவரும் கன்பர்ம். 


3. மணிக்கணக்கா ஃபோன் கால் பேசுறது நம்ம பசங்களுக்கு ஜுஜுபி. ஏன்னா வீடோ, நட்போ பெரும்பாலும் சர்வதேச தொடர்பாத்தான் இருக்கும். சிக்கன் சமைக்கறதுக்கு தக்காளி போடனுமால தொடங்கி ஒன்னாம்புல கூடப் படிச்ச கோகிலா புருஷன் இப்ப யார வச்சிருக்கான் வரைக்கும், போன்ல தான் பேசியாகனும். நா எல்லாம் ராசு மாமாவுக்கு ஸ்கைப்புனேன்னா ஃபைவ், சிக்ஸ் ஹவர்ஸ் சும்மா பேசிக்கிட்டே இருப்பேன். நம்ம நண்பர் ஒருத்தர் சும்மா ஒரு நாளைக்கு பத்து பதினோரு மணிநேரம் அவரேஜா ஃபோன் பேசுவாருன்னா பார்த்துக்கங்களேன். சோ நீங்க ஃபோன் பேசினாலோ இல்ல பக்கத்துவீட்டு பொண்டுகளோட மணிக்கணக்கா ஊர் வம்பு பேசினாலோ நோ ப்ராப்ளம்.

4. ட்ராபிக் ரூல்சுக்கு கட்டுப்பட்டு எப்பவுமே கவனமா வண்டி ஓட்டுவாங்க, டூ வீலர்ன்னா கொஞ்சம் தள்ளியே நிப்பாங்க. போர் வீலர்ல எப்பவுமே ஓவர் ஸ்பீடுல போகமாட்டாங்க. என்ன காரணம்ணா இங்க ட்ராபிக் ரூல்ஸ் அப்புடி, மாட்டிக்கிட்டா கமிஷனர் எங்க சித்தப்பான்னு சொல்லி எஸ்கேப் ஆகவும் முடியாது, ஃபயின் போட்டான்னா அதுவேற பெரிய தொகையா இருக்கும், அதையும் தாண்டி, இன்சூரன்ஸ்ல இருந்து எல்லாமே ஜாஸ்தி ஆகி நம்ம பரம்பரையையே பாதிச்சுடும். சோ நம்ம பசங்க வண்டி ஓட்டரதுல எப்பவுமே அந்நியன் அம்பி தான்.  

5. இங்க உள்ள பசங்க எல்லாருமே அட்லீஸ்ட் ஒரு ரெண்டு சீரியல் கண்டிப்பா பார்பாங்க. விஜய் டிவில வாற தமிழ் சீரியல்ல தொடங்கி, பிக் பங்க் தியரி, பிரண்ட்ஸ், டூ அண்ட் அ ஹால்ப் மேன், ப்ரேகிங் பேட் ன்னு எல்லா சீரியலும் அத்துப் பொடியா இருக்கும். சோ நீங்க சீரியல் பார்கறத கண்டுக்கவே மாட்டாங்க. கூட சேர்ந்து பார்கலைனாலும், நீங்க சீரியல் கதை சொன்னா ரொம்ப இன்டரஸ்டா கேப்பாங்க. 


6.அமேரிக்கா மனுஷன டென்ஷன் பண்ணி டிப்ரஷன் சப்ரஷனுக்கு ஆளாக்கி மெண்டலாக்கி அலையை விடுறதுல நம்பர் ஒன்னு. அதனால இந்த ப்ராஷர ஹாண்டில் பண்றதுக்காகவே நம்ம பசங்க, பதிவு எழுதறது, ஃபோட்டோ கிராபி, ஜிம் ட்ரைனிங், சமையல் அது இதுன்னு பல எக்ஸ்ட்ரா காரிகியுலர் ஆக்டிவிடீஸ் கைவசம் வச்சிருப்பாங்க. அதோட இந்த நாட்டுல ஒரு ஆணி புடுங்கறதுக்கு ஆள் வச்சாக்கூட மணிக்கு அறுபது டாலர்ன்னு இருநூறு முன்னூறு டாலர் புடிங்கிக்குவாங்க, சோ இந்த வண்டி ரிப்பேர் பண்றது, ப்ளம்பிங், எலக்ரிகல் ரிபேர்னு எதுன்னாலும் நம்ம பசங்களே பாத்துடுவாங்க. இதனால ரெண்டு நன்மை இருக்கு, ஒன்னு எதிர்காலத்துல வீட்டுல எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் சூசயிட் பண்ணிக்கறதோ அல்லது மெண்டல் ஆகிறதோ நடக்காது, நீங்க எவ்வளவு டென்ஷன் படுத்தினாலும் எந்த பிரச்சினையும் இல்லாம தாங்கிக்குவாங்க, அம்புட்டு நல்ல பசங்க. ரெண்டாவது கைவசம் ஏகப்பட்ட தொழில் இருக்கும். ரிஷஷன் அது இதுன்னு வந்து வேல இல்லாம போச்சின்னா ஒரு ரெஸ்டூரன்டோ இல்ல மெக்கானிக்கல் ஷாப்போ வச்சு பொழச்சுக்குவாங்க.

7. முக்கியமா "எப்ப பாரு ரேடியோ பெட்டி மாதிரி தொண தொணன்னு பேசிக்கிட்டே இருக்கே" வகையறா குற்றச்சாட்டுக்கள் ஒரு போதும் உங்க மேல வராது. ஏன்னா தமிழ நேர்ல கேட்டு வருஷக்கணக்கா ஆகியிருக்கும், மொக்கையா நாலு வார்த்த தமிழ்ல பேசக்கூட யாருமே இல்லையான்னு ஏங்கிப் போயிருப்பாங்க, சமயத்துல இன்னொரு மனுஷன் பேசுறதக் கேட்டே, அது என்னங்க இன்னொரு மனுஷன் தன்னோட மயிண்டு வாயிச கேட்டே வாரக் கணக்கா ஆகியிருக்கும். இந்த நிலமையில நீங்க என்ன பேசினாலும்  எவ்வளவு மொக்கையா இருந்தாலும் ரசிச்சுக் கேப்பாங்க.

இவ்வளவு புருஷ லட்சணமும் ஒருங்கே சேர்ந்து வரப்பெற்ற இந்தப் பசங்கள அமெரிக்க மாப்பிள்ளைன்னு அரைக்கால் டவுசரும் காதுல ஒரு செவுட்டு மிஷினுமா தமிழ் சினிமா அசிங்கப் படுத்தறத நான் எதிர்ப்பதோடு, கல்யாணம் அண்ணன் போன்ற எங்க பசங்கள நம் சமூகம் முப்பது நாற்பது தாண்டியும் பிரம்மச்சாரிகளாகவே வாழ வைக்கற கொடுமையையும் வன்மையா கண்டிக்கறேன்.

டிஸ்கி: காலத்தின் கட்டாயத்தினால் தேவை ஏற்பட்டால் இந்தப் பதிவினை மேலும் தொடர்வதர்க்கு இடமுண்டு. 

Thursday, February 20, 2014

முற்போக்கு வாதம் பேசுவது எப்படி?

சமீபத்தில் திருமணமான எனது நண்பர் ஒருவர் முகப் புத்தகத்தில் ஒரு ஸ்டில் பகிர்ந்திருந்தார். ஒரு குழந்தையின் கிறுக்கல் போன்ற ஒரு ஓவியம் அது. அது தவிர வேறு எந்த குறிப்புக்களோ, விளக்கங்களோ இல்லை. அந்த பகிர்வு உணர்த்தும் பின்நவீனத்துவ குறியீடு என்ன என தீவிர ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது எனக்கு உதித்த சில சிந்தனைகளின் தொகுப்பே இது. 


சித்தாத்தங்கள் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக அடையாளம் காட்டிக் கொள்வது எப்படி? இன்று ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் இரு பெரும் இடதுசாரி முற்போக்கு சித்தாந்தங்களாக மார்க்ஸியமும், பின்நவீனத்துவமும் இருக்கின்றன. நம்ம நோக்கத்துக்கு இது பத்தின டீடையில் அலசல் எதுவும் அவசியமில்லை. பின்னவீனத்துவமாகட்டும் மார்க்ஸியம் ஆகட்டும் எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பு என்கின்ற புரிதலே போதுமானது. அத்துடன் சில கலைச் சொற்களும் அவசியம். இவை இருந்தால் இலகுவில் தன்னை ஒரு சித்தாந்த வாதியாக காட்டிக் கொள்ளலாம்.

கலைச் சொற்கள்: விளிம்புநிலை, மரபு, தனித்தன்மை, பொதுப் புத்தி, அறிவியக்கவாதி, முன்னகர்வு, பண்பாட்டரசியல், முரணியக்கம், பொருள்முதல் வாதம்.

தற்காப்பு: எப்போதுமே எதைப் பேசும்போதும் நான் அதுவல்ல என அறிவிப்புப் போட்டுக்கொள்ள வேண்டும். உதாரணமாக மார்க்ஸியம் பேசும் போது நான் மார்க்ஸிய வாதி அல்ல என பலமாக சொல்லிக்கொள்ள வேண்டும், இது முரண்பாடுகளில் இருந்து உங்களைக் காக்க உதவும்.

விதிமுறைகள்:

01. எந்த விஷயமா இருந்தாலும் மிகைப் படுத்தல் என்பது மிக அவசியம். உதாரணமா சிறுநீர் கழித்தல் என்பதை அவ்வாறு சொல்லாமல் "உயிரியலின் அடிப்படையான திரவ கழிவு சுத்திகரிப்பு" என்று சொல்லவேண்டும், ஆணுறுப்பு/பெண் துவாரம் போன்ற வார்த்தைகளை கோர்க்கும் வெளிப்படை பிரயோக லாவகங்கள் வரவேற்கப்படுகின்றன.

02. பொதுமைப் படுத்தல், உதாரணமாக ஒரு ஊழியரை தனி மனிதனாக பார்க்காது ஒரு நிறுவன அமைப்பாக அலது வர்க்கமாக பார்க்க வேண்டும். காற்றுப் பிரித்தல் போன்ற சப்ப மேட்டரா இருந்தா கூட "அடிப்படை உரிமை", "தனி மனித சுதந்திரம்" என்று வகைப் படுத்த வேண்டும்.

03. எப்போதும் கடுமையான வார்த்தைகளை அல்லது இழிவான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும். உதாரணமாக அராஜகம், அடக்குமுறை, அரைகுறை, உமிழ்தல். எதையும் எளிமையான மொழியில் சொல்லாமல் சற்று கடினமான, முரணான நடையில் சொல்ல வேண்டும். உதாரணமாக, ஒரு பிகரு கொஞ்சம் கலரா இருந்திட கூடாதே, உடனே பார்த்திடுவீங்களேன்னு சொல்வதற்குப் பதில் "வெண் தோல் ஏந்திய மகளிரை நோக்கும் சராசரி ஆணாதிக்க மனப்பான்மை" அப்பிடின்னு சொல்லணும்.

04. அடிக்கடி ஏதாவது ஒரு பெயர் புரியாத எழுத்தாளரையோ, சிந்தனையாளரையோ மேற்கோள் காட்டவேண்டும். அல்லது ஏதாவது ஒரு கவிதை வரி, செய்யுளை எடுத்துரைக்க வேண்டும். பெயர் புரியாத எழுத்தாளர்களின் பெயர்கள் எதுவும் உங்களுக்கு தெரியாது எனில் குறைந்த பட்சம் "உனக்கு புரியற மாதிரி சொல்லனும்ன்னா.... ஹ்ம்ம், பாரதி கூட ....." அப்பிடின்னு கொஞ்சம் பிரபலமான பெயர்களை எதோ அவர்கள் நீங்கள் படிக்கும் எழுத்தாளர்களில் இரண்டாம் தர எழுத்தாளர்கள் போன்ற தொனியில் உச்சரிக்க வேண்டும். 


05. மிக முக்கியமானது, உலகத்தில் பரவலாக ஏற்கப்பட்ட விடயமாக எது இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும், சற்று நலிவடைந்த சிந்தனையாக எது இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும். உதாரணமாக திருமணம் குடும்பம் என்பது தனிமனித சுதந்திரத்தை மறுக்கும் பழமை வாய்ந்த சமூக அமைப்பு கட்டுமானங்கள், விஞ்ஞான ரீதியான மனித உணர்வுகளை, இச்சைகளை கட்டுப் படுத்த நினைக்கும் முரண் விதிகள் என கூற வேண்டும். மருத்துவ கருக்கலைப்பு என்பது பெண்ணின் அவளது உடல் மீதான தனிமனித உரிமை மட்டுமே, அதில் கருவுக்கு காரணமான ஆணுக்கோ, அல்லாது உயிராக துடிக்கும் அந்த சிசுவுக்கோ எந்த உரிமையும் இல்லை என எவ்வித சந்தேகமும் இன்றி வாதிக்க வேண்டும். கடவுள் மறுப்பு என்பது மிகவும் அடிப்படை.

06. சற்று கண்மூடித்தனமான விஞ்ஞானம் பேச வேண்டும். உதாரணமாக தன்னினச் சேர்கையினை ஆதரிக்கிறேன் பேர்வழி என கூறிக்கொண்டு, homosexuality என்பதும் Gender Identity Dissorder என்பதும் ஒன்றே என்பது போன்ற மருத்துவ விளக்கங்கள் கூறவேண்டும். பௌதீகவியல் கூறும் தத்துவங்களை அவை என்ன என்பதையே விட்டு விட்டு சித்தாந்தமாக பார்க்க வேண்டும். பெரு வெடிப்புக் கொள்கை, சார்புத் தத்துவத்தை தாண்டி ஸ்ட்ரிங் தியரி,  குவாண்டம் கிராவிட்டி என நகர்வது சிறந்தது. சில பௌதீகவியல், உயரியல் அறிஞர்களை தெரிந்து வைத்திருப்பதும், கடவுள், மதங்கள் போன்றவற்றை விஞ்ஞான ஒளியில் ஆராய்வதும் கூடுதல் சிறப்பு. 

இப்போ ஒரு சிட்சுவேசனயும், சித்தாந்தம் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக எப்படி நம்மை அங்கு அடையாளம் காட்டிக் கொள்வது எனவும் பார்ப்போம்.   

சிட்சுவேசன்: பசங்ககூட ஒண்ணா தலைவர் படத்துக்கு போக முடியாம மேனேஜெர் முட்டுக்கட்டை போடுதல்

சராசரி: மச்சான் மங்கூஸ் மண்டையன் படத்துக்கு ஆப்பு வச்சிட்டாண்டா, 

பின்நவீனத்துவம்: கார்பரேட் அமைப்புக்கள் தனிமனித சுதந்திரத்தை சூறையாடுகின்றன.

மார்க்ஸியம்: அதிகாரவர்கம் அடித்தட்டு ஊழியனின் அபிலாஷைகளை அனுமதிப்பதில்லை.


இப்போ முற்போக்குவாதம் பேசுவது எப்படி என தெரிந்து கொண்டீர்களா? இனி பயப்படாமல் அடித்து நொறுக்குங்கள். முக்கியமாக கவனிக்க வேண்டியது, உங்கள் சொந்த நிலைப்பாடு என்ன என்ற புரிதலை நோக்கி கடைசிவரை நீங்கள் பயணிக்கவே கூடாது, அது உங்களை ஒரு பிற்போக்கு வாதியாக மாற்றிவிடலாம். முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், கவலையே படாமல் சமூக அமைப்பில் குற்றம் காண்பதையும், அடுத்தவர் கருத்தை எதிர்பதயும் மட்டுமே குறியாகக் கொண்டிருந்தால் நீங்களும் ஒரு முற்போக்கு வாதியே, "சராசரி" மறுப்பு என்பதே முற்போக்கு வதம் ஆகும்.

டிஸ்கி: "மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என்றால் என்ன என்றே தெரியாது முற்போக்கு வாதிகள் மீது வெறுப்பை உமிழ்ந்திருப்பது, ஆசிரியரின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றது", "கட்டுரையாளர், பல வேறுபட்ட சித்தாந்தங்களை போட்டு குழப்பியிருப்பது தெரிகிறது, எங்குமே ஒரு அடிப்படை தெளிவு, நேர்த்தி இல்லை" போன்ற விமர்சனங்கள் வரவேர்க்கப் படுகின்றன. 

டிஸ்கி: ஒருவேள முதல் பத்தியில் சொன்ன நம்ம நண்பர் அப்பாவாகப் போறாரோ? அந்த குறியீட்டுக்கு அர்த்தம் அதுவாக இருக்குமோ? அப்படி இருந்தால் வாழ்த்துக்கள்.