Saturday, August 6, 2011

தற்கால தமிழ் சினிமா பற்றிய ஒரு நேர்மையான புரிதல்!!

இந்திய சினிமா உலக சினிமாவில் இருந்து பல வகையில் வேறுபட்டது (உலக சினிமான்னா ஹாலிவூட் படங்கள் மட்டும்னு  நினச்சிக்காதீங்க, ஈரானிய சினிமா, கொரியன் சினிமா போன்றவையும் இருக்கு, அகிரா குரசோவா போன்றவர்களது படங்களும் இருக்கு, இது நிறைய பேருக்கு தெரிஞ்சி இருந்தாலும் நமக்கும் தெரியும்னு சொல்றோம்). சினிமா என்பது நாவல்கள், சிறுகதைகள் போன்ற ஒரு ஊடகம், இது கட்புலன் ஊடகம் அந்தவகையில் சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். படைப்பாளிகளிடம் சினிமா தொடர்பாக இரு வேறுபட்ட நியாயப்பாடு உள்ளது, ஒன்று சினிமாவை ஒரு ஜனரஞ்சக பொழுதுபோக்கு ஊடகமாகப்ப் பார்ப்பது, இரண்டாவது சினிமாவை ஒரு சக்திவாய்ந்த படைப்பு ஊடகமாக பார்ப்பது. தமிழ் சினிமாவில் உள்ள பெரிய இயக்குனர்கள் எப்பொழுதும் அதனை ஒரு பொழுதுபோக்கு ஊடகமாகவே பார்த்து வந்துள்ளனர். இதற்கு உதாரணமாக ஷங்கர், ரவிக்குமார் போன்ற இயக்குனர்களை கூறலாம். இன்னும் சிலர் படைப்பு முயற்சியில் இறங்கியும் உள்ளனர், பாலு மகேந்திரா, பாலா போன்றவர்களை இங்கு குறிப்பிடலாம். இவர்கள் தரமான சினிமாவின்பால் ஈர்ப்பு உடையவர்கள். எனினும் சினிமாவில் ஒரு முக்கியமான சிக்கல் உள்ளது, இது பல கோடி ரூபாய்கள் சம்பத்தப்பட்ட ஒரு விடயம், எந்த ஒரு மனிதனும் தான் போடும் பணத்தை மீட்டித்தரக்கூடிய சினிமாவையே எடுக்க முயற்சி செய்வான், எனவே சினிமாவில் சில விட்டுக்கொடுப்புகள் தேவைப்படுகிறது. இதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பணத்தினை திரும்பப் பெற நமது படைப்பாளிகள் சில விடயங்களை உருவாக்கி உள்ளார்கள்.  நட்சத்திர அந்தஸ்து, வளைய வரும் பெண்கள், சண்டைக்காட்சிகள், கவர்சிப்பாடல்கள், தனியான நகைச்சுவை பகுதி போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.  

இன்றைய தேதியில் தமிழில் மூன்று வகையான திரைப்படங்கள் வருகின்றன, முதலாவது  வகை தூய பொழுதுபோக்கு திரைப்படம். இரண்டு விதமான பொழுதுபோக்கு திரைப்படங்கள் வருகின்றன. ஒன்று மசாலா திரைப்படம் என பரவாலக அறியப்படும் வகை. சிங்கம், ஆறு, சிறுத்தை, குருவி போன்ற திரைப்படங்கள். இவை பார்முலா படங்கள் எனவும் அறியபடுபவை. ஆறு பாட்டு, ஐந்து சண்டைக்காட்சி, ஒரு ஹீரோ ஒரு வில்லன், இறுதியில் வில்லனை ஹீரோ ஜெயிப்பது, இந்த அம்சங்களை முக்கியத்துவப்படுத்தியே இவற்றின் கதையம்சம் பின்னப்படுகிறது, இதில் வரும் பெண் கதாபத்திரத்துக்கு ஹீரோவின் காதலி என்ற அந்தஸ்தே இருக்கும், பெரும்பாலும்  கவர்ச்சி பொம்மையாகவே பாவிக்கப்பட்டிருப்பார். ஹரி, லிங்குசாமி போன்றவர்கள் இதில் கை தேர்ந்தவர்கள். படம் பார்க்கவரும் ரசிகன் தேட்டருக்குள் வர முதலே, இந்த படத்தில் என்ன இருக்கும் என்ன இருக்காது என்பதை கணித்து விடக்கூடிய படங்கள். இரண்டாவது  வகை பொழுதுபோக்கு படங்கள் சென்சிபிள் என்டேர்டைனர்ஸ்(sensible entertainers  எனப்படுபவை. கவுதம் மேனன், கே. வீ ஆனந்த், முருகதாஸ் போன்றவர்கள் இதில் கைதேர்ந்தவர்கள். காக்க காக்க, அயன் (பெரும்பாலான சூர்யா படங்கள்), சந்தோஷ் சுப்பிரமணியம், சுப்ரமணியபுரம், சரோஜா போன்ற படங்களை குறிப்பிடலாம். இவை பொழுதுபோக்கு படங்களாக இருப்பினும் இதில் ஒரு நேர்மை இருக்கும். யதார்த்தை மீறாமல் படம் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றின் கதை அல்லது கரு பார்வையாளனின் விமர்சனத்தை தூண்டுபவையாக இருக்கும், ஆயினும் இப்படங்களின் USP பெரும்பாலும் படைப்பு நேர்த்திக்கு அப்பால் பட்ட ஒரு விடயமாகவே இருக்கும்.  இந்த இரண்டு விதமான பொழுதுபோக்கு படங்களையும்  சம விகிதத்தில் கலந்த படங்களும் வருவதுண்டு, உதாரணமாக ரவிகுமார், ஷங்கர், நம்ம ராஜேஷ்.எம் போன்றவர்களின் படங்களை குறிப்பிடலாம். 



இரண்டாவது வகை, இன்று மாற்று சினிமா என பரவலாக அறியப்படுவது. இந்த வகை சினிமாவில் வியாபாரம் சார்ந்த சில காம்ப்ரமைஸ் இருந்தாலும், தீவிர அல்லது படைப்பு சினிமாவினை நோக்கிய பயணமாக இருக்கும்.  (இது பாலா படம் அல்ல அப்பிடின்னு அவரே பல இடங்கள்ள சொல்லிட்டதால அவன் இவன் தவிர்த்து மற்றைய) பாலாவின் படங்களை இங்கு குறிப்பிட்டு கூறலாம், இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவுக்கான ஒரு தேடல் மேலோங்கி உள்ளதாகவே படுகிறது. புதிதாக களம் இறங்கிய இயக்குனர்கள் இதனை கையில் எடுத்துள்ளனர், பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், சேரன், வசந்தபாலன், எஸ். பி ஜனநாதன் போன்றவர்களை குறிப்பிடலாம். இவ்வகையான சினிமாவில் உள்ள பொதுவான போக்கு என்னவென்றால், விவாதத்துக்கு எடுக்கப்பட்ட கரு தெளிவாகவும் நேர்த்தியாகவும் முன்மொழியப்பட்டிருக்கும் அல்லது கதாபாத்திரங்களும் அவற்றை சுற்றிய வாழ்வும் மிகைப்படுத்தல்கள்  இல்லாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும். வியாபாரம் கருதிய விட்டுக்கொடுப்புக்களால் இவை பெரும்பாலும் தீர்வு சொல்ல முயற்சிக்கும்,
அவ்வகையான தீர்வு ஜனரஞ்சக சினிமாவினை போன்றதாக இருக்கும். நட்சத்திர அந்தஸ்த்து, ஹீரோ வேர்ஷிப் போன்ற விடயங்களை துச்சமாக தூக்கி ஏறியக்கூடியவையாக இருக்கும். பெண் கதாபாத்திரம் கவர்ச்சியாக அல்லது சுப்பர் மாடல் போன்று அழகாக இருக்கவேண்டுமென்கிற கட்டுப்பாடு கிடையாது, கதாபாத்திரங்கள் அவற்றுக்கே உரிய இலட்சணங்களோடு இருக்கும்.  யதார்த்தம் மேலோங்கி இருக்கும். மாற்று சினிமாவுக்கும் சென்சிபெல் என்டேர்டைனர்ஸ் வகைக்கும் இடைப்பட்ட படைப்புக்களும் உண்டு.  சசிகுமார், ராதா மோகன், சுஷீன்தரன் போன்றவர்களை இங்கு குறிப்பிடலாம். மாற்று சினிமா மேலோங்கியுள்ளதற்கான காரணங்களை இன்னொரு பதிவில் பார்க்கலாம். 


மூன்றாவது மேல்கூறப்பட்ட இரண்டிலும் அடைக்க முடியாதது, ஆபத்தானது. இன்டலக்சுவல் சீட்டிங் வகையை சார்ந்தது. தமிழ் சினிமாவின் தரத்தினை உயர்த்தவும் முயற்சிக்கிறது  (அப்படி நம்புவோமாக), அதே நேரத்தில் பொழுது போக்கு சினிமாவாகவும் இருக்கவேண்டுமென நினைக்கிறது, இது ஒரு சிறந்த போக்கு அல்ல, உதாரணமாக தசாவதாரம், ரோஜா போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம். இந்த வடிவத்தை கையில் எடுத்த சில இளம் தலைமுறையினரும் இருக்கிறார்கள், இந்த திரைப்படங்களில் உள்ள பொதுவான போக்கு என்னவென்றால் ஒரு கரு விவாதத்துக்கு எடுக்கப்பட்டிரும், ஆயினும் படங்கள் அது பற்றி பேசாது அல்லது விவாதக்கரு நேர்த்தியாக வெளிப்படாது.  காஷ்மீர் பிரச்சினை (ரோஜா), மனவளர்ச்சி குன்றிய தந்தைக்கும் மகளுக்குமான உறவு (தெய்வத்திருமகள்) போன்றவற்றை உதாரணாமாக குறிப்பிடலாம். இவ்வகையான படங்களில் படம் எடுத்த நான் அறிவாளி, பார்க்கிற நீ முட்டாள் என்கிற ஒரு போக்கு இருக்கும். இவ்வகையான சினிமா பார்வையாளனை முட்டாளக்குவதில் தீவிர கவனம் செலுத்துகிறது. போர்முலா படங்களை பார்வையாளன் ரசிக்கிறான், நம்புவதில்லை, அவை அவனது ரசனை மட்டத்தை கேலி செய்கிறது, ஆயினும் அவனது அறிவோடு விளையாடுவதில்லை. இந்த வகையான படங்கள், பார்வையாளனின் அறிவு மட்டத்தை கேலி செய்கிறது. பார்வையாளனின் அறிவை பாவிக்காது தடுப்பதற்காகவென்றே சில உத்திகள் கையாளப்பட்டிருக்கும், இதற்க்கு உதாரணமாக தசாவதாரம் பேசும் கயாஸ் கோட்பாடு அல்லது கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன் கூறும் ஈழத்து கவிதை போன்றவற்றை குறிப்பிடலாம்.  இந்த மாதிரியான படங்களில் கருவானது ஒரு மாயையை உருவாக்கும், இந்த மாயையை தவிர்த்து விட்டு பார்த்தல் இவற்றுள் பெரும்பாலானவை போர்முலா படங்களாகவே இருக்கும், சில சென்சிபிள் என்டேர்டைனர்ஸ் (தெய்வத் திருமகள்) அல்லது இரண்டையும் கலந்து கட்டியவயாக (தசாவதாரம்) இருக்கும். கமல்ஹாசன், மணிரத்தினம்  இருவரும்  தமது திறமைகளை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்கள் அதில் மறு பேச்சுக்கே இடம் இல்லை, மாற்று சினிமாவுக்கான தேடலை தூண்டியதில் இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. ஆயினும் இந்த வகை படங்களை எடுப்பவர்களிடம் இன்னும் கொஞ்சம் நேர்த்தி தேவை என்பதே எமது கருத்து.

 டிஸ்கி: தற்கால தமிழ் சினிமா கதாநாயகர்கள் பற்றிய ஒரு நேர்மையான  புரிதல்!! எனும் பதிவு விரைவில் பதிவிடப்படும். அதுவரை இதற்க்கு ஆதரவு தருக.

3 comments:

  1. நண்பரே நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.நான் கூற வந்த விடயம் என்னவெனில் ஒரு உலகபடத்தில் ஈடுபாடு கொண்டு படம் எடுப்பது தப்பில்லை.ஆனால் அதே உலக படகதையை திருடிஅதே ஸ்டைலில் எடுப்பது, மசாலா தடவி படம் எடுப்பது இதைத்தான் எதிர்க்கிறோம்.inspire ஆன படத்தை அதே ஸ்டைலில் ஏன் எடுக்கவேண்டும். அப்படியென்றால் நான் ஒரிஜினல் படத்தையே பார்த்துவிட்டு போவவேனே.
    கமல்,மனிரத்னம்,கௌதம் படங்கள் இப்படித்தான் இருக்கும்.இதை தவிர நீங்கள் குறிப்பிட்டது போல படம் எடுத்த நான் அறிவாளி, பார்க்கிற நீ முட்டாள் என்கிற ஒரு போக்கும் இருக்கும்.
    என்னைப் பொறுத்தவரை கமல்,மனிரத்னத்தை விட மாற்று சினிமாவின் முன்னோடி என நான் நினைப்பது பாரதிராஜா ,மகேந்திரன்,பாலுமகேந்திரா போன்றவர்கள்தான்.

    ReplyDelete
  2. @v.vinoth

    நன்றி நண்பரே, உங்கள் கருத்து நியாயமானது. inspiration னுக்கும் ரீமேக்குக்கும் போதியளவு வித்தியாசம் இருக்க வேண்டும். ஒரு படத்தை பார்த்து இன்ஸ்பைர் ஆகி படம் எடுப்பது தப்பில்லை. உரிய உரிமைகளைப் பெற்று ரீமேக் பண்ணுவதும் தப்பில்லை. ஆனால் deliberate plagerism மற்றும் உரிமை கோராமல் காப்ய்யடிப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் (எங்களால் முடிந்தவரை இதை எதிர்த்துக்கொண்டே இருப்போம்). கவுதம் மீது நமக்கு ஒரு மரியாதை இருக்கிறது, அதற்கு காரணம் மணிரத்னத்தின் பிடியிலிருந்து தமிழ் சினிமாவை மீட்டெடுத்ததில் அவருக்கு ஒரு முக்கிய பங்குண்டு என்பதே (அது வெறும் பொழுதுபோக்கு படங்களை பூசி மெழுகி உலகத்தரம் வாய்ந்த சினிமா என பறைசாற்றியதை அடையாளப் படுத்தியதே). பிசாசு பிடியிலிருந்து மீட்டு சாத்தானின் பிடியில் விட்டதான கதையாகிவிடக்கூடாது என்கிற அச்சம் எமக்கும் உண்டு. ஆயினும் இதுவரை அவரது படங்கள் என்டேர்டைனர் வகையை தாண்டி deliberate cheating வகையில் சேரவில்லை என்பது ஒரு நிம்மதி. (யோகன் வரட்டும் பார்க்கலாம்). இந்திய சினிமாவில் நல்ல இயக்குனர்கள் நல்ல டெக்னீசியன்கள் இருக்கிறார்கள், ஆனால் நல்ல ஸ்கிரிப்ட் ரைடர்ஸ் போதுமான அளவு இல்லை. இன்னம் மேகிங்கை நம்பியே நமது இயக்குனர்கள் படம் எடுக்கிறார்கள் என்பது ஒரு குறையே. மற்று சினிமா முயற்சியில் ஈடுபட்டுள்ள இளம் படைப்பாளிகளில் பெரும்பாலானோர் பாலு மகேந்திராவின் சீடர்கள் என்ற ஒன்றே போதும் யார் முன்னோடி என்பதை தெரிந்து கொள்வதற்கு.

    நேரமிருந்தா அடிக்கடி நம்ம கடைக்கும் வாங்க, டீ காப்பி எல்லாம் சூடா இருக்கும்.

    ReplyDelete
  3. உலக்கை நாய்கன் கதையை உருவுவதைப் பற்றி நீங்கள் எதையும் குறிப்பிடவில்லை. ரோஜா படமே சுட்டதுதான். மணிரத்னத்தின் ஒன்றிரண்டு படங்களைத் தவிர எல்லாமே திருடிய கதைதான்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!