அப்பாடா, பல தடைகளையும் தாண்டி ஒரு பாடா படத்த பார்த்தாச்சு. நம்ம ராசு மாமா படம் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. நமக்கோ படம் பார்க்கணும்னா மூணு மணிநேரம் வண்டி ஓட்டனும், அதாவது கிட்டத்தட்ட இருநூறு மைல் தூரம் போகணும் தேட்டேருக்கு. அதுக்கு படம் ஒர்த்தா இல்லாயான்னு பார்க்கலாமேன்னு ராத்திரி பூரா ஒக்காந்து மாங்கு மாங்குன்னு பதிவுகள படிச்சா மிக்ஸ்ட் ரிவீவ். கொஞ்சம் பேரு ஆகா அற்புதம்ன்றாங்க, கொஞ்சம் பேரு ஒரு வாட்டி பார்க்கலாம்ங்குறாங்க, இன்னும் கொஞ்சம் பேரு மொக்கயின்னு சொல்றாங்க. எது உண்மையின்னு ஒண்ணுமே புரியல. எதுக்கு வம்பு படத்த பார்த்திடுவோமேன்னு முடிவெடுத்து ஒரு வழியா பார்த்தும் ஆச்சு. இதுவரைக்கும் உங்க எல்லோருக்கும் படத்தோட கதை என்னன்னு அக்குவேறு ஆணிவேரா தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் விமர்சன தர்மத்துக்காக மிகச்சுருக்கமா சொல்லிடறோம்.
ஒன் லைனெர்: "இந்தியாவுல, அதுவும் தமிழர்கிட்ட இருந்து போன மருத்துவமும், தற்காப்பு கலைகளும், நாம மொத்தமாக மறந்துவிட்ட நிலையில் நமக்கே எதிரியா திரும்பினா என்ன ஆகும்?"
பிளாட்: மருத்துவ ரீதியா இந்தியாவ அடிமைப்படுத்த சீனா பயோ-வார் ஆராம்பித்து, அதை செயல்படுத்த ஒரு மார்சியல் ஆர்ட்ஸ் அண்ட் நோக்கு வர்மம் எக்ஸ்பெர்ட இந்தியாவுக்கு அனுப்புது. கூடவே ஸ்ருதி ஹாசன கொல்லச்சொல்லியும் ஆர்டர். இது எதுக்குன்னா போதிதர்மன் பற்றிய அவரது மருத்துவ ஆராய்ச்சி. ஸ்ருதி மருத்துவ ஆராய்ச்சியில் வெற்றி பெற்றாரா? சீனாவின் திட்டம் தோற்கடிக்கப்பட்டதா என்பதை, தமிழர்களின் பாரம்பரியம், நமது அறிவியல் மகிமைகள் என்பவற்றின் பின்னணியில் கூறி முடிகிறது படம்.
ஜானர்: இந்த படம் "செமி ஹிஸ்டோரிகால் சயன்ஸ் பிக்ஷன். கூர்ந்து கவனிக்கவும் "பிக்ஷன்" இது "டிராமா" அல்ல. ஒரு அர்தண்டிக் (?) வரலாற கையில வச்சுக்கிட்டு நிகழ்காலத்த பிக்ஷன் ஆக்கி அதுல டிராமா கலந்து, சயன்ஸ் கலந்து ஒரு கலவையா ஆக்கியிருக்காங்க. இத வச்சுக்கிட்டு எப்புடி ஒரு கதைய பின்னியிருக்காங்க, அத எப்புடி காட்சிப்படுத்தி திரையில கொண்டுவந்திருக்காங்க, அதுல வெற்றி பெற்றிருக்காங்களா இல்லாயான்னு இனி பார்க்கலாம்.
போதிதர்மர் தான் கதையின் அடி நாதம். போதிதர்மன் தற்காப்பு கலை நிபுணர் மட்டுமல்லாமல் சிறந்த மருத்துவரும் கூட என்பது வரலாற்றுக் குறிப்பு. நம்ம யாருக்குமே இவர தெரியாது, எனவே இவர் யார்ன்னு சொல்லாம கதைக்குள்ள போக முடியாது, எனவே படம் ஆரம்பிக்க முதல்ல இருபது நிமிஷம் போதிதர்மர் எபிசோட். படத்தோட பெரிய ஹைலைட் இதுதான், நடிப்பாக இருக்கட்டும், காட்ச்சிப்படுத்தலாக இருக்கட்டும், கிராபிக்ஸாக இருக்கட்டும், சூப்பர். சூப்பர். சூப்பர். ஆனா இதுவேதான் படத்தோட மைனசும். அது எப்புடின்னு பிறகு பார்ப்போம்.
ஸ்ருதியோட மருத்துவ ஆராய்ச்சி DNA சம்பந்தப்பட்டது. இதுதான் படத்தோட பிக்சன் பகுதி. மரபனுக்களுக்குள் ஒரு மெமரி இருக்கு. இதுல உடல் அமைப்பு, உடல் கோளாறுகள், உயரம், தலைமுடி அமைப்பு போன்றவை புதைந்திருக்கும், இது பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும். அவற்றில் ஆட்சியான இயல்புகள், பின்னடைவான இயல்புகள் என இரு வகை இருக்கும், ஆட்சியான இயல்புகள் வெளிப்படும், பின்னடைவான இயல்புகள் புதைந்து போகும். இதுவே உயரமான தந்தைக்கும், குட்டையான தாய்க்கும் பிறக்கும் குழந்தை உயரமானவரா குட்டயானவரா என்பதை தீர்மானிக்கும். இது அறிவியல். ஆனா ஒருவர் உருவாக்கிக்கொண்ட இயல்புகள், ஆற்றல்கள், திறமைகள் என்பனவும் DNAவில் பதியப்படும், என்பதும் பின்னடைவான நிலையில் இருக்கும் இந்த இயல்புகளை தூண்டுவதன் மூலம் அந்த ஆற்றல்களை திரும்பக்கொண்டுவரலாம் என்பதும் கற்பனை, இந்த ஆராய்ச்சி பற்றிய குறிப்புகள்தான் போதிதர்மர் நமக்கு வழங்கிச்சென்ற (நாம் தொலைத்து விட்ட) சுவடியில் இருந்து ஸ்ருதிக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. இதுவே நமது கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் உள்ள இணைப்பாக படத்தில் வருகிறது. போதிதர்மனின் DNA மாதிரி அவரது வழித்தோன்றலான அரவிந்தனது மாதிரியுடன் 80 சதவீதம் ஒத்துப்போகிறது எனவே அரவிந்தனின் DNA வை தூண்டுவதன் மூலம் போதிதர்மனின் ஆற்றல்களை, மருத்துவத்தை திரும்ப பெறலாம் என்பது ஸ்ருதியின் கணக்கு. அது நடைபெறும் இடத்தில் தனது திட்டம் தவிடு பொடியாகிவிடும் என்பது சீனாவின் கணக்கு. இதற்கிடையில் நடைபெறும் போராட்டமே ஏழாம் அறிவு.

ஆரம்ப இருபது நிமிடங்கள் படத்தின் மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. கதை நிகழ்காலத்துக்கு வரும் போது விரியும் காதல் காட்சிகள் அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதத்தில் இல்லை. இந்த இருபது நிமிட காட்சிகள் படத்தின் ஆரம்பத்தில் வராது, ஸ்ருதி சூர்யாவிடம் நமது பெருமைகளை விளக்கும் அந்த மியுசியம் காட்சியின் போது வந்திருக்குமானால் தொய்வு தவிர்க்கப்பட்டிருக்கும். திரைக்கதையில் இருக்கும் சொதப்பல் இதுவே. ஒரு பிரமாண்டமான மிகவும் கருத்து செறிவான ஒரு விடயத்தை ஆரம்பத்திலேயே காட்டி பார்வையாளனின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்று பின்பு சாதாரணமான காதல்காட்ச்சிகளையும் (ஒப்பிடும்போது) மிகவும் சாதரணமான பாடல்களையும் இட்டு நிரப்பும் போது படத்தில் ஸ்ருதி சொல்லும் "உன்னோட காதல குப்பையில போடு" டயலாக்தான் நமக்கும் வருது. ஒரு வேள அந்த எபக்ட தான் முருகதாஸ் நம்மக்கிட்ட இருந்து எதிர்பார்த்தாரான்னு தெரியல. அப்புடியிருந்தாலும் அந்த முயற்சி இந்த படத்துக்கு கை கொடுக்கல. செமி ஹிஸ்டோரிகள், சை பை மெடிகல் த்ரில்லர்ல டிராமா மிக்ஸ் பண்ணினது வொர்கவுட் ஆகல.
படத்துக்கு தேவையே இல்லாத வலிந்து திணிக்கப்பட்டது போன்ற (சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட) பாடல்கள், குறைந்தது ஒரு பாடலையாவது வெட்டியிருக்கலாம், இந்தமாதிரி ஒரு படத்துக்கு மூன்று நிமிடத்துக்கு மேல ஒலிக்கும் பாடல்களை கம்போஸ் பண்ணினது எந்த மடயன்னு கேக்க தோணுது, பாடல்களின் நீளம் மிகவும் அதிகம். (முதல் இருபது நிமிடம் தவிர்த்து) பின்னணி இசை படு சுமார். ஹாரிஸ் ஜெயராஜ் கவனிக்க வேண்டிய முக்கியமான இடம்.

அறிவியல் பகுதிகளை ரொம்பவே எளிமைப்படுத்தறதா நினைச்சு கன்பியுஸ் பண்ணாம இருந்திருக்கலாம். DNA வில் புதைந்திருக்கும் இயல்புகளை தூண்டுறதுன்னு கான்செப்ட் சொல்லிட்டு, போதிதர்மரோட ஆவிய புகுத்துறது போல உணர்வு தரக்கூடிய, போதிதர்மரையே திரும்ப கொண்டு வருவதான வசனங்களை தவிர்த்து, போதிதர்மரின் இயல்புகளை பெறலாம் என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கலாம். (அறிவாளிகள் கவனத்திற்கு: ஸ்ருதியின் கையில் போதிதர்மர் DNA இல்லை, அவர் இணையத்தில் கிடைத்த DNA மாதிரியின் கட்டமைப்பு விளக்கப்படத்துடன் ஒப்பிட்டே எத்தனை சதவீதம் பொருந்துகிறது என்பதை அறிந்து கொள்கிறார். நம்மாளு சேம்பிள அவுங்க டேட்டா பேசுக்கு அனுப்பி ஒப்பிட்டு கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எனவே போதிதர்மரின் DNA வை "புகுத்தி" என படத்தில் வரவில்லை என்பதனை கவனத்தில் கொள்க). ப்ரீ க்ளைமாக்ஸ் சண்டைக்காட்ச்சியில் வாகனங்கள் பறக்கும் கிராபிக்ஸ்ஸில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
கதையா தேர்வு செய்து நடித்த சூர்யாவுக்கு பாராட்டுக்கள். கதை முழுக்க முழுக்க வில்லனையும், ஸ்ருதியையும் சுற்றி பின்னப்பட்டது. சூரியா ஒரு கருவி, இந்த மாதிரி ஒரு படத்த அதுவும் ஹீரோவ விட அறிவான ஹீரோயின்னும் பலசாலியான வில்லனும் உள்ள கதையில் ஒரு நடிகனாக மட்டுமே நடித்தது பாராட்டுக்குரியது. அதற்க்கான உழைப்பும் மிக அபாரம். போதிதர்மன் வரலாற்று பதிவு, கிளைமாக்ஸ் சண்டை, போஸ்ட் க்ளைமாக்ஸ் டிவி இண்டர்வியு மட்டுமே சூர்யாவுக்கு ஹீரோயிசம் காட்ட சந்தர்ப்பங்கள், மனிதன் பின்னுராறு. அரவிந்தன் கதாபாத்திரம், பாரம்பரியத்தை தொலைத்துவிட்ட சாதாரண நவீன தமிழ் இளைஞன், அதுக்கு என்ன தேவையோ அதையே பண்ணியிருக்காரு, அளவான நடிப்பு. நடனத்துல ராபர்டிக்ஸ் மூமென்ட் இன்னும் கொஞ்சம் குறைச்சுக்கனும். ஜோ தவிர மத்த ஹீரோயின்கள் கூட கூச்சப்பட்டு ஒதுங்காம இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாம்.

ஸ்ருதி, சமீபத்துல சூரியாவுக்கு ஹீரோயின்னா நடிச்சவங்க லிஸ்டிலேயே அழகா தெரிஞ்சது, கதாபாத்திரமா நிலைச்சது இவங்க மட்டுமே, அதுவே முதல் வெற்றி. கொடுக்கப்பட்ட வேலை பெரியது, அதை சொதப்பாம கஷ்டப்பட்டு கேரி பண்ணியிருக்காங்க. தமிழ்ல அறிமுகப்படத்துக்கு இந்த பெர்போமான்ஸ் ஓகே. ஆனா வாயிஸ் மடுலேசன், எக்ஸ்பிரசன் இன்னும் வரணும். அழகா இருக்காங்க, கமல் பொண்ணுன்னு பாக்காம, ஸ்ருதின்னு பாருங்க ரசிக்கலாம்.
முருகதாஸ், ஒரு நல்ல படம் கொடுக்க முழு முயற்சியாக ஈடுபட்டமைக்கு பாராட்டுக்கள். ஒரு பரீட்சார்த்த முயற்சி, காண்டேன்ட் வைஸ் படம் அபாரம், எக்ஸிகியுசன் கொஞ்சம் சறுக்கல். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், இயக்கம் பெரும்பகுதியான இடங்களில் அபாரம், சில இடங்களில் கோட்டை. போதிதர்மர் பற்றிய வரலாறினை எதிர்பார்ப்பு இல்லாமல் திரையரங்குக்கு வரும் சாதாரண ரசிகனுக்கு சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்.
ஜானி, மனுஷன் குடுத்த காசுக்கு மேலையே வேலை செஞ்சிருக்காரு, தமிழ் சினிமாவின் முதலாவது பலம் வாய்ந்த, இடைவேளைக்கு அப்புறம் ஹீரோக்கு அடங்கிப்போகாத வில்லன். இவர சமாளிக்க முடியாம ஹீரோவே திணறிப்போறது அழகான யதார்த்தம், அவரது கலைகளே ஹீரோவோட மூதாதையர் கத்துக்குடுத்ததுதான்னு தெரியும் போது அதுவே வலியுடன் கூடிய எதார்த்தமும்.
ரவி கே சந்திரனின் கமெரா அற்புதம், விழலுக்கு இறைத்த நீராக பாடல்கள் கொடுமை. எடிட்டிங், இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். ராஜீவனின் கலை ததுரூபம். குறிப்பாக முதல் இருபது நிமிடமும் யம்மா யம்மா பாடல் காட்ச்சியில் வரும் ரயில்வே ஸ்டேசனும்.
ஒப்பீடு: தமிழில் சில நாட்களுக்கு முன் வந்த இரண்டு பிக்சன் கதைகள், தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன். இரண்டையும் விட ஒப்பீட்டளவில் இதன் பலங்கள் அதிகம், பலவீனகள் குறைவு. தமிழ் சினிமா முன்னோக்கி போகிறது.
பாட்டம் லைன்: நல்ல முயற்சி, ஒரு மிகச்சிறந்த படமாக அமைய சகல தகுதிகளையும் கொண்டுள்ள படம், சிறு சிறு ஓட்டைகளால் மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது நிலையில் இருக்கு. ஆறு மணி நேர வண்டி ஓட்டத்துக்கும், குடுத்த காசுக்கும் படம் வஞ்சனை இல்லை.
நம்ம ரேடிங்: 7 /10 (பரீட்ச்சார்த்த முயற்சி என்பதால் சில குறைகள் மன்னிக்கப்படுகிறது)
**********************************
பதிவுக் குறிப்பு: நீங்கள் சூர்யா எதிரி இல்லையாயின், ஹாலிவூட் படங்களே உலகப்படங்கள் எனக்கூறும் மொத்த படித்த மேதாவி இல்லையாயின், ஒரு தமிழ் படத்த நல்லம்ன்னு சொன்னா நாம கட்டிக்காத்த இமேஜ் கெட்டுப்போகும்னு அடம்பிடிக்காதவராயின், அதிகப்படியான விளம்பரங்களை சகித்துக்கொள்ளும் பக்குவம் இருப்பின் ஏழாம் அறிவு உங்களுக்கும் பிடிக்கும். கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். ஒரு முறையா பலமுறையா என்பது உங்களை பொறுத்தது.
டிஸ்கி: படத்தின் லாஜிக் மீறல்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. காரணம், ஒன்று, படம் பிக்ஷன் ஜோனர், இரண்டாவது, ஒரு திரைப்படத்தில் எல்லா விடயங்களையும் காட்ட வேண்டும் என்றில்லை. உதாதரனமாக சிஸ்டம் பற்றி விவாதிக்க விருப்பமில்லையாயின், நூறு போலிஸ கொண்னப்புரம் ஏன் போலீஸ் ஒன்னும் செய்யலன்னு கேள்வி கேக்க தேவையில்லை. போலீஸ் எதுவும் செய்ததாக காட்டவும் இல்லை, செய்யாததாக காட்டவும் இல்லை. இது சினிமா விதிகளில் ஒன்று. படத்தின் பிளாஸ் பற்றியும் அதிகம் குறிப்பிடவில்லை. (இன்னொரு பதிவு தேத்தனும்ல).
டிஸ்கி: ஒரு நல்ல முயற்சி தவறான விமர்சனங்களால் வீண் போய் விடக்கூடாது என்பதற்காக சற்று ஆணிகளை ஒதுக்கிவிட்டு விரிவான ஒரு பதிவு. நீண்ட நாள்களுக்கு பின் தமிழர் பாரம்பரியம், போதிதர்மன் வரலாறு, அழிந்துபோன அல்லது அளிக்கப்பட கலைகள் போன்ற பல விடயங்களை விவாதிக்கக் கூடிய ஒரு படம். படம் பார்த்தவர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. சம்பந்தமே இல்லாது அரசியலை இழுப்பதையும், படமே பார்க்காது இது நொட்ட அது நோசக்கு என சொல்வதையும் தவிர்த்தால் கூடுதல் மகிழ்ச்சி.