Thursday, July 5, 2012

கமல் ஹாசனும் உலக நாயகனும்


நான் சினிமா பார்க்க ஆரம்பித்ததில் இருந்து மிகத்தீவிர கமல் ரசிகன். எந்த அளவு கமல் ரசிகன் என்றால் ரஜினி படம் பார்ப்பது ஒரு மிகப்பெரிய குற்றம் என நினைக்கும் அளவு தீவிர கமல் ரசிகன். எனக்கும் எனது நண்பர்களுக்கும் இடையிலான கமல்-ரஜினி விவாதம் பெரும்பாலும் தமிழ் சினிமாவை ரட்சிக்க வந்த கடவுள் கமல் ஹாசன், அதனை கெடுத்து குட்டிச்சுவராக்கும் சாத்தான் ரஜினி என்கிற தொனியிலேயே அமைந்திருக்கும். கமல் படங்கள் எப்போதும் அவை வெளிவந்த காலத்தை விட முன்னோக்கியதாகவே எனக்கு படும். நடிப்பில் கமலை மிஞ்ச ஒரு நடிகன் இந்த உலகில் பிறந்துவிட கூட முடியாது என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.

கமல் ஹாசன் எனக்கு அறிமுகமானது எனது பதின் ஓராம் அல்லது பதின் இரண்டாம் வயதில். நான் பார்த்த முதல் கமல் படம் கல்யாண ராமன். பெரும்பாலும் நான் பார்த்த முதல் சினிமாவும் அதுவாகவே இருக்கும். இரண்டாவது படம் சிகப்பு ரோஜாக்கள். அந்த இளம் வயதில் இரண்டு படங்களிலும் தோன்றிய நடிகர் ஒருவரே என்பதை புரிந்து கொள்வதே எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அதன் பிற்பாடு, சிங்கார வேலன், அபூவ்ர்வ சகோதரர்கள், கலைஞன் என வரிசையாக பல கமல் பாடம் பார்த்ததாலோ என்னவோ நான் ஒரு கமல் ரசிகனாகவே மாறிவிட்டிருந்தேன். சிந்தித்து உணர ஆரம்பத்தபின், பதின்ம வயதின் இறுதியில் முதல் முதலாக நான் பார்த்த படம் இந்தியன். அப்போதுதான் நடிப்பு என்றால் என்ன, சினிமா எவ்வாறு எடுக்கபடுகிறது, என்பது போன்ற அடிப்படை விடயங்கள் புரிய ஆரம்பித்திருந்த காலம்.  அதுவே நான் கமல் ஹாசனை உன்னிப்பாக அவதானிக்க ஆரம்பித்த காலம்.

அப்போதுதான் பதினாறு வயதினிலே படத்தை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. கமல் அந்த இளம் வயதில் ஏற்று நடித்த கதாபாத்திரமும் அதனை அவர் திரையில் கொண்டுவந்திருந்த விதமும் இன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும். அன்றிலிருந்தே கமல் ஹாசனின் ஒவ்வொரு படங்களாக தேடி அலைந்து பார்க்க ஆரம்பித்தேன். சிகப்பு ரோஜாக்கள், குரு, வறுமையின் நிறம் சிகப்பு, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, ஒரு கைதியின் டைரி, புன்னகை மன்னன், நாயகன், சத்யா, குணா, தேவர் மகன், மகாநதி, நம்மவர், குருதிப்புனல் சமீபத்தில் அன்பே சிவம் என கமல் வெளிப்படுத்திய அத்தனை பரிமாணங்களும் என்னை வியப்பில் ஆழ்த்தின. ஒன்றுக்கு ஓன்று தொடர்பில்லாத கதா பாத்திரங்கள், வேறுபட்ட கதை களம், வேறுபட்ட நடிப்பு என்று கமலின் ஒவ்வொரு அசைவும் என்னை பரவசப்படுத்தியது. ரசிகனா இருந்தா இந்தாளு ரசிகன்தான் இருக்கணும்யான்னு என்னை நானே பெருமைப் படுத்திக்கொண்ட காலம் அது. 


எனது ஊரில் என்னோடு இருந்த நண்பர்கள் பலபேரும் ரஜினி அல்லது விஜயகாந்த் ரசிகர்களாகவே இருந்தார்கள், மிக சொற்பம் பேர் அர்ஜுன் ரசிகர்களாக இருந்தார்கள். அவர்களை எல்லாம் ஒரு இளக்காரத்தோடு பார்த்த நாட்கள் அவை. உங்க ஆளு நடிக்கறதெல்லாம் மசாலா குப்பைகள் கமல் ஹாசன் படம் ஒண்ணுதான் படம் என்கிற அறிவுச்செருக்கில் மிதந்த காலம் அது. கமல் ஹாசனால் ஜனரஞ்சக சினிமாவை வழங்கமுடியாது என்பதே பெரும்பாலும் எனது நண்பர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு. அப்போது நான் கூறியதெல்லாம் இந்த போர்முலா படங்களுக்கெல்லாம் அப்பன் கமல் நடித்த விக்ரம் படமே என்பதே. சகல கலா வல்லவன், வெற்றி விழா, இந்தியன் என பல படங்களில் தன்னை ஒரு கமெர்சியல் அக்ஷன் நாயகனாக கமல் பல தடவைகள் நிரூபித்திருக்கிறார். ஏன் வேட்டையாடு விளையாடு கூட கமலின் அக்ஷன் அவதாரத்திற்கு இன்னும் சாட்சி கூறும்.

கமல் ஹாசனின் கமெர்சியல் பயணம் பெரும்பாலும் நகைச்சுவை படங்களை மையப்படுத்தியதாகவே இருக்கும். நகைச்சுவை என்றால் அதற்க்கு இலக்கணம் கமல் ஹாசனே. கல்யாண ராமன், மைகல் மதன காம ராஜன், காதலா காதலா, அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா எப்போதும் எனது திரைப்பட சேகரிப்பில் முதல் இடம் பிடிப்பவை. தினமும் மூன்று அல்லது நான்கு தடவை ரிபீட் மோடில் வசூல் ராஜா பார்த்த நாட்களும் உண்டு. நகைச்சுவை சினிமாவின் உச்சம், ஒரு முடிசூடா மன்னன் கமல் ஹாசன். இது அனைத்தும் கமல் ஹாசன், கமல் ஹாசனாக இருந்த காலம். 

இரண்டாயிரத்துக்கு பிற்பட்ட காலத்தில், குறிப்பாக ஆளவந்தான் படம் வெளியானதில் இருந்து கமல் ஹாசன் தன்னை ஒரு சுப்பர் ஸ்டாராக காட்டவே எத்தனித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முகவரி, இந்திய சினிமாவின் உச்சம் என்கிற அந்தஸ்த்தை அடையவே முயற்ச்சித்திருக்கிறார். ரஜினியை மிஞ்சவேண்டும் என்கிற எண்ணமே கமல் ஹாசனின் பெரும்பாலான படத்துக்கும் அடிக்கோலாக அமைந்திருக்கிறது. அவ்வப்போது உள்ளே இருக்கும் கமல் ஹாசன் என்கிற படைப்பாளி தலை காட்டிய போதும் பெரும்பாலும் உலக நாயகன் கனவே அவரை ஆட்கொண்டிருக்கிறது. உலக நாயகனுக்கும் கமல் எனும் படைப்பாளிக்கும் இடையிலான போட்டியில் கமல் ஹாசன் தொடர்ந்தும் தோற்றுக்கொண்டே இருக்கிறார். சமீபத்திய கமல் படங்கள் ஒவ்வொன்றும் எனக்கு அதிகப்படியான ஏமாற்றத்தையே கொடுத்துக்கொண்டிருக்கின்றன. 


கமலின் சமீபத்திய படங்களான ............

விருமாண்டி: என்னை மிகவும் கவர்ந்த ஒரு கமல் படம் இது. அதற்க்கு முழுக் காரணமும் ஒரே விடயத்தை இரு வேறு கோணத்தில் அலசும் திரைக்கதையே. ஒரு நடிகனாக, ஒரு கதாசிரியனாக கமல் ஜெயித்த படம். ஒரு இயக்குனராக கமல் முழுத்தோல்வி அடைந்த படம். விருமாண்டியை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு விடயம் தெளிவாக புரியும், படத்தில் கொத்தாள தேவர் மோசமானவன் இல்லை. அவர் அவரது அறிவுக்கு எட்டிய விதத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை கொண்டு முடிவினை எடுக்கிறார், அவர் எடுக்கும் முடிவுகள் அவருக்கு இருக்கும் தரவுகள் சாட்சியங்கள் அடிப்படையில் நியாயமானதே. விருமாண்டித்தேவராக கமல் நடித்ததனாலும், கமல் என்கிற நாயக விம்பத்தை கட்டமைக்க கமல் என்கிற இயக்குனர் எடுத்த சிரத்தையினாலும், கொத்தாள தேவர் வில்லனாக கற்பிக்கப் பட்டிருப்பார். மோசமான காஸ்டிங் இனாலும் உலக நாயகனுக்கும் கமலுக்குமான போட்டியினாலும் அடி நாதமே சிதைக்கப்பட்டு குற்றுயிராக்கப்பட்டிருக்கும் அந்த படம். படம் முடிந்து வெளியே வந்தபோது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

தசாவதாரம்: கமலின் உலகநாயகன் விம்பக் கட்டமைப்பின் உச்சம் தசாவதாரம். ஒரு ஹாலிவூட் தரத்திலான காமேர்சியல் கதை, விறுவிறுப்பான சேசிங், சில இடங்களில் மயிர்கூச்செறியும் தொழில்நுட்பம் எல்லாமே உலக நாயகன் விம்பத்தில் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டிருக்கும். கிறிஸ்டியன் ப்லேட்சரும், பால்ராம் நாயுடுவும் இன்றும் என்னை கவரும் கதாபாத்திரங்கள். ஏனைய கதாபாத்திரங்கள் எதுவும் கமல் நடித்திருக்க தேவையில்லை என்பது எனது கருத்து. இன்று தசாவதாரம் பார்க்கும் போது தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகன் தானே என ஆயுளுக்கும் எழுதிவைக்கவேண்டும் என்கிற வெறியில் கமல் எடுத்துக்கொண்ட சிரத்தையின் உச்ச வெளிப்பாடாகவே தசாவதாரம் தோன்றும்.

உன்னைப்போல் ஒருவன்: A Wednesday என்கிற இந்திப் படத்தின் உரிமை பெற்ற ரீமேக் இது. பலரும் அசலை விட நகல் ஒரு படி மிகைத்து விட்டதாக மார்தட்டிக் கொண்டபோதும் மூலக் கதையில் இருந்த எதோ ஒன்று நகலில் இல்லை. அது யார் தவறு என தெரியவில்லை. மூலக்கதையின் அடி நாதம் ஷா அனுபம் கேர்ருடன் இறுதியாக பேசும் இடம், அது தமிழில் மாற்றப்பட்டிருக்கும். முழு திரைப்படத்தையும் தூக்கி நிறுத்தும் இடம் அது, தமிழில் உயிரை எடுத்துவிட்ட ஜடமாக வசனங்கள் நிரப்பப்பட்டிருக்கும். நசுருதீன் ஷா நடித்த கதாபாத்திரத்தில் கமல் நடித்தபோது நாயக நடிப்பில் இருத்து கதாபாத்திர நடிப்பிக்கு வர கமலுக்கு இன்னும் நாட்கள் ஆகும் என்றே தோன்றியது. ஒரு சாதாரண மனிதனை தனது நடிப்பு மூலம் கண் முன்னே கொண்டுவந்திருப்பார் ஷா, கமல் சற்று அந்நியமாகவே தோன்றினார். உன்னைப் போல் ஒருவன் மூன்றாவது முறையாக கமல் ஏமாற்றிய படம்.மன்மதன் அம்பு: எப்போதும் கமல் ஒரு புது முயற்சியில் ஈடுபடும் போது எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் வணிக வெற்றிக்காக மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகளாகவே அவற்றை மன்னிக்கும் எனக்கு மன்மதன் அம்பு பேரதிர்ச்சி. விருமான்டியோ, தசவதாரமோ மார்க்கெட்டிங் எனும் கோட்பாட்டுக்குள் கமலின் தவறுகளை மன்னித்துவிட்ட போதும், உன்னைப் போல் ஒருவனில், நேட்டிவிட்டிக்காக கதை மாற்றப்பட்டது என்று சமாதானம் சொன்னபோதும் மன்மதன் அம்பு மன்னிக்கவே முடியாத ஏமாற்றம். அதுவும் ரவிக்குமார்-கமல்-ரொம் கொம் எனும்போது ஏமாற்றம் அளவு கடந்தது. கமல் ஐம்பதுக்கு பிற்பாடு கமலாகசனுக்கு வந்த உலக நாயக மிதப்பே அதற்க்கு காரணம் என படுகிறது. நான் எதை கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் பலர் இருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டாரா தெரியவில்லை. இனிமேல் கமல் படம் பார்ப்பதே இல்லை என நானும் மொக்கராசுவும் சூடம் ஏற்றி சத்தியம் பண்ணும் அளவுக்கு ஒரு அனுபவம் மன்மதன் அம்பு. 

விஸ்வரூபம் ட்ரெயிலர் படம் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை, இருப்பினும் வேட்டையாடு விளையாடு போன்ற ஒரு முழு கமெர்சியல் என்டேர்டைனராக அமைந்தால் பெரு மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் கமல் உலகநாயன் விம்பத்தை கலைந்து கமல் ஹாசன் எனும் நடிகனாக, கமல் ஹாசன் எனும் இயக்குனராக மாறவேண்டும் என்பதே ஒரே ஆசை. உலக நாயக விம்பத்துள் மூழ்கி கமல் எனும் மகா கலைஞனை தொலைத்துவிட்ட பாவம் கமலுக்கு வேண்டாம்.

டிஸ்கி: ஹாலிவூட் பிரவேசம் கமலுக்கு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

31 comments:

 1. கமலை பற்றிய நல்ல அலசல்! அருமை!

  ReplyDelete
 2. நாம என்றுமே சூப்பர் ஸ்டாரின் அடிமைகள் தான். என்னைப் பொறுத்தவரையில் உலகநாயகன் இரண்டாம் இடமே.

  //கமல் ஹாசன் தன்னை ஒரு சுப்பர் ஸ்டாராக காட்டவே எத்தனித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முகவரி, இந்திய சினிமாவின் உச்சம் என்கிற அந்தஸ்த்தை அடையவே முயற்ச்சித்திருக்கிறார். ரஜினியை மிஞ்சவேண்டும் என்கிற எண்ணமே கமல் ஹாசனின் பெரும்பாலான படத்துக்கும் அடிக்கோலாக அமைந்திருக்கிறது.//

  உண்மை தான். மன்மதன் அம்பில் கூட சிவாஜி ஸ்டைலில் மொபைல் போன் எல்லாம் மேலே போட்டு பாக்கெட்டில் பிடித்து வித்தை காட்டுவார். இது எனக்கு இவரில் பிடிக்காத ஒரு குணமும் கூட.

  ReplyDelete
 3. நம்மில் எத்தனை பேருக்கு ஆங்கிலப் படங்களைப் புரிந்து கொள்ள முடியும்? அவர்கள் எல்லாம் ஆங்கிலப் படங்களை ரசிக்க வேண்டாமா, அந்த வாய்ப்பை மறுக்கலாமா? அந்தக் குறையை நீக்க உலகப் படங்களை எல்லாம் அவ்வப்போது காப்பியடித்து கதைகளை உருவி தமிழ் படமெடுத்து தமிழ் நெஞ்சங்களை குளிச்சிப் படுத்தி அதற்காக உலக [படங்களின் கதையைச் சுட்ட] நாயகன் என்ற பட்டப் பெயரையும் பெற்று, ஆஸ்கார் வாங்கிய ரஹ்மானைப் பார்த்து உள்ளுக்குள் கருவிக் கொண்து தமிழ் ரசிகர்களுக்கு ரெண்டு ஆஸ்கார் எந்த அண்ணாச்சிக் கடையில் கிடைக்கும், வாங்கி கொடுத்து திருப்தி படுத்தலாம் எனத் துடிக்கும் உலக்கை .......... சாரி உலக நாயகனைப் பற்றி அற்புதமான பதிவு போட்டதற்கு நன்றி.

  http://www.karundhel.com/2010/09/blog-post.html

  http://www.karundhel.com/2010/10/blog-post_28.html

  ReplyDelete
 4. s suresh said...
  //கமலை பற்றிய நல்ல அலசல்! அருமை!//

  நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 5. ஹாலிவுட்ரசிகன் said...
  நாம என்றுமே சூப்பர் ஸ்டாரின் அடிமைகள் தான். என்னைப் பொறுத்தவரையில் உலகநாயகன் இரண்டாம் இடமே.///

  சுப்பர் ஸ்டார் இடத்தை யாராலும் நெருங்க முடியாது. தமிழ் சினிமாவுக்கு அவரும் தேவை, இவரும் தேவை.

  ReplyDelete
 6. சென்னை பித்தன் said...

  //பாரபட்சமற்ற அலசல்//

  நம்றி அய்யா!

  ReplyDelete
 7. Jayadev Das said...
  நம்மில் எத்தனை பேருக்கு ஆங்கிலப் படங்களைப் புரிந்து கொள்ள முடியும்? அவர்கள் எல்லாம் ஆங்கிலப் படங்களை ரசிக்க வேண்டாமா, அந்த வாய்ப்பை மறுக்கலாமா? அந்தக் குறையை நீக்க உலகப் படங்களை எல்லாம் அவ்வப்போது காப்பியடித்து கதைகளை உருவி தமிழ் படமெடுத்து தமிழ் நெஞ்சங்களை குளிச்சிப் படுத்தி அதற்காக உலக [படங்களின் கதையைச் சுட்ட] நாயகன் என்ற பட்டப் பெயரையும் பெற்று, ஆஸ்கார் வாங்கிய ரஹ்மானைப் பார்த்து உள்ளுக்குள் கருவிக் கொண்து தமிழ் ரசிகர்களுக்கு ரெண்டு ஆஸ்கார் எந்த அண்ணாச்சிக் கடையில் கிடைக்கும், வாங்கி கொடுத்து திருப்தி படுத்தலாம் எனத் துடிக்கும் உலக்கை .......... சாரி உலக நாயகனைப் பற்றி அற்புதமான பதிவு போட்டதற்கு நன்றி.

  http://www.karundhel.com/2010/09/blog-post.html

  http://www.karundhel.com/2010/10/blog-post_28.html ////

  பதிவ முழுசா படிக்கலியோ, உலக நாயகன் மீது கடுமையான விமர்சனம் எமக்கும் உண்டு (பார்க்க: http://realsanthanamfanz.blogspot.com/2011/08/blog-post_848.html), ஒரு நடிகனாக கமல் ஹாசனின் திறமையை யாராலும் மறுத்துவிட முடியாது. இந்த பதிவு எழுதப்பட்டதும் அதன் அடிப்படையிலேயே.

  ReplyDelete
 8. வணக்கம்,டாக்டர்!நல்லாயிருக்கீங்களா?கமல் பற்றிய உங்கள் பார்வை அருமை!உலக நாயகன் கனவு..............................!

  ReplyDelete
 9. \\ஒரு நடிகனாக கமல் ஹாசனின் திறமையை யாராலும் மறுத்துவிட முடியாது.\\ 1978 -ல் இருந்து [அதற்கும் முன்பாகக் கூட இருக்கலாமோ என்னவோ] every now and then படமெடுத்துவிட்டு கதையை திருடி இவரே கதையை எழுதுபவர் என்று மக்களிடம்மோசடி செய்தவர் என்ற இமேஜ் மனதில் எழுந்த ம்பின்னர் இந்த முகரையை லைட் பாயாகக் கூட ஏற்க மனம் மறுக்கிறது.

  I read your post you told above but found nothing condemning this aspect of the actor, sorry.

  ReplyDelete
 10. Yoga.S. said...
  //வணக்கம்,டாக்டர்!நல்லாயிருக்கீங்களா?கமல் பற்றிய உங்கள் பார்வை அருமை!உலக நாயகன் கனவு..............................!//

  வணக்கம் அய்யா, எப்புடி இருக்கீங்க? உலக நாயகன் பற்றிய நமது பார்வை இன்னும் கடினமா இருக்கும். இருந்தாலும் இப்போதைக்கு இது போதும்.

  ReplyDelete
 11. Jayadev Das said...
  \\ஒரு நடிகனாக கமல் ஹாசனின் திறமையை யாராலும் மறுத்துவிட முடியாது.\\ 1978 -ல் இருந்து [அதற்கும் முன்பாகக் கூட இருக்கலாமோ என்னவோ] every now and then படமெடுத்துவிட்டு கதையை திருடி இவரே கதையை எழுதுபவர் என்று மக்களிடம்மோசடி செய்தவர் என்ற இமேஜ் மனதில் எழுந்த ம்பின்னர் இந்த முகரையை லைட் பாயாகக் கூட ஏற்க மனம் மறுக்கிறது.

  I read your post you told above but found nothing condemning this aspect of the actor, sorry.//

  சாரி பிரதர். தமிழ் சினிமாவின் திருட்டு கலாசாரம் பற்றி ஒரு தொடர் பதிவு ஆரம்பிச்சு, சில பல காரணகளால அத அப்புடியே பாதியில விட்டுட்டோம். ஒரு வேளை அத தொடர்ந்திருந்தா உங்க மனசுக்கு ஆறுதல் தரக்கூடிய சில விடயங்கள் வெளி வந்திருக்குமோ என்னவோ. நமக்கு இவனுக படம் புடிக்கலின்னா நமக்கு புடிச்ச படமா பார்த்திட்டு போறதுதான் நமக்கு நல்லது.

  ReplyDelete
 12. பருத்தி வீரன் கேரக்டரும் விருமாண்டி கேரக்டரும் ஒன்று தான். ஆனால் இரண்டுக்குமான கேஸ்டிங்கில் தான் எத்தனை வித்தியாசம்!!!!

  நல்ல பதிவு டாக்டர்!

  ReplyDelete
 13. Dr. Butti Paul said...
  வணக்கம் அய்யா, எப்புடி இருக்கீங்க? உலக நாயகன் பற்றிய நமது பார்வை இன்னும் கடினமா இருக்கும். இருந்தாலும் இப்போதைக்கு இது போதும்!////நான் நல்லாருக்கேன்,கொஞ்சம் அங்க இங்கைன்னு அலையிறதால ஒழுங்கா வர முடியிறதில்ல.முன்னை,பின்னை தான் வர முடியுது!

  ReplyDelete
 14. கமல் சினிமா உலகிற்கு மிகப்பெரிய பெரிய வரம்.

  ReplyDelete
 15. /////உன்னைப் போல் ஒருவன் மூன்றாவது முறையாக கமல் ஏமாற்றிய படம்.////

  தீவிர ரசிகனென்று சொல்லிக் கொண்டாலும் தாங்கள் பக்கச்சார்பற்ற ரசிகன் என்பதை புரிந்து கொண்டேன்..

  ReplyDelete
 16. உங்கள் பதிவு நேர்மையாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றது வாழ்த்துகள். உங்கள் கருத்துக்களை முற்று முழுதாக ஏற்றுக்கொள்கிறேன். உண்மையாகவே நீங்கள் சொன்ன குறைகளை திருத்திக்கொண்டால் நமக்கு இன்னும் சிறந்த படங்கள் கிடைக்கும். கமல் என்ற கலைஞன் ரஜினியை தொடர வேண்டிய அவசியமில்லை காரணம் அது போன்ற வெற்றிகளை சகலகலா வள்ளவன் காலத்திலேயே செய்துவிட்டார். ஆனாலும் ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரால் கமல் என்ற மகா நடிகனை நெருங்க முடியாது. சலங்கை ஒலி கமல் போல் ஒரு கலைஞன் உலகத்தில் இதுவரை பிறக்கவில்லை. ஒரு தமிழனாக கமலை நினைத்து பெறுமைபடுகின்றேன். விஸ்வரூபம் ட்ரெய்லர் எனக்கும் கூட் பயமாகத்தான் இருக்கின்றது.

  ReplyDelete
 17. பாஸ்,
  அருமையான அலசல்..உங்கள் எண்ணம் தான் எனக்கும். கமல் தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத சக்தி.
  நானும் இதே போல் ஒரு பதிவு கொஞ்சம் நாட்கள் முன்பு எழுதி இருந்தேன்..நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்.
  http://hollywoodraj.blogspot.in/2012/06/blog-post.html

  ReplyDelete
 18. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_12.html) சென்று பார்க்கவும். நன்றி !

  ReplyDelete
 19. மொக்கராசு மாமா...

  கமலின் பிரம்மாண்டம், பட்ஜெட்டில் மட்டுமல்ல, அதிமுக்கியமாக கதையில் தான் இருக்கும்.

  கமலின் "விக்ரம்" தான் தென்னிந்தியாவின் முதல் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் படம். இதை பார்த்து தான் ரஜினி மாவீரன் படம் எடுத்தார்,பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று.

  நீங்கள் கூறுவது போல் ரஜினியை மிஞ்ச வேண்டும் என்று கமல் படம் எடுப்பதில்லை...

  ஏனெனில் கமலின் பாதையே வேறு என்பது சாதாரண சினிமா ரசிகர்களுக்கே புரியும், ஆனால் கமலின் தீவிர ரசிகன் என்று கூறும் உங்களுக்கு புரிய வில்லை என்பது கமலின் குற்றமல்ல...

  கமல் கமர்சியலில் இறங்கினால் பல நடிகர்கள் காணாமல் போய்விடுவார்கள் ரஜினி உள்பட.... அப்படி இறங்காமலே வசூலில் கமல் முதன்மையாயிருப்பது பலருக்கும் வயிற்றெரிச்சல் தான்....உங்களுக்குமா????

  ReplyDelete
  Replies
  1. கமல் ஹாசன் ஒரு போதும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கலைஞர் அல்ல. அது ஒரு புறம் இருக்க, யங் சூபர்-ஸ்டார் தொடங்கி ஒரிஜினல் சூபர் ஸ்டார் வரைக்கும் யாருமே "உனக்கு தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம்" என்கிற ரேஞ்சுக்கோ அல்லது " உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு?" என்கிற ரேஞ்சுக்கோ பாடல்கள் வைப்பதில்லை அவர்கள் படத்தில், உலக நாயகனையும் அகில உலக சூப்பர் ஸ்டாரையும் தவிர. ஒரு கமல் படத்தில் இயக்குனர் என்பவர் யார் என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கும் எந்த "சாதாரண சினிமா" ரசிகனும் இது கமலின் அறிவுக்கு அப்பால் பட்டு மற்றவர்கள் எடுத்த முடிவு என வாதிட மாட்டார்கள்.

   //கமலின் "விக்ரம்" தான் தென்னிந்தியாவின் முதல் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் படம். இதை பார்த்து தான் ரஜினி மாவீரன் படம் எடுத்தார்,பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று.//

   அப்போது நான் கூறியதெல்லாம் இந்த போர்முலா படங்களுக்கெல்லாம் அப்பன் கமல் நடித்த விக்ரம் படமே என்பதே. - பதிவில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது

   //ஏனெனில் கமலின் பாதையே வேறு என்பது சாதாரண சினிமா ரசிகர்களுக்கே புரியும், ஆனால் கமலின் தீவிர ரசிகன் என்று கூறும் உங்களுக்கு புரிய வில்லை என்பது கமலின் குற்றமல்ல...

   கமல் கமர்சியலில் இறங்கினால் பல நடிகர்கள் காணாமல் போய்விடுவார்கள் ரஜினி உள்பட.... அப்படி இறங்காமலே வசூலில் கமல் முதன்மையாயிருப்பது பலருக்கும் வயிற்றெரிச்சல் தான்....உங்களுக்குமா????//

   சகல கலா வல்லவன், வெற்றி விழா, இந்தியன் என பல படங்களில் தன்னை ஒரு கமெர்சியல் அக்ஷன் நாயகனாக கமல் பல தடவைகள் நிரூபித்திருக்கிறார். ஏன் வேட்டையாடு விளையாடு கூட கமலின் அக்ஷன் அவதாரத்திற்கு இன்னும் சாட்சி கூறும். - - பதிவில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது   Delete
 20. Same Blood.

  ஆனால் எனக்கு தோன்றிய சில (கமல் நோக்கில்) நியாயங்கள். ரஜினியின் விஷயம் வேறு. அவர் பாதையும் படங்களின் நோக்கமும் தெளிவானது. அதனால் அவருடைய வர்த்தக சூத்திரங்கள் தெளிவானது. அது எம் ஜி ஆர் காலம் தொட்டு வரும் guaranteed formula. ஆனால் கமல் படங்கள் வேறு ரகம். இந்த வர்த்தக வித்தையில் தன்னுடைய படங்களை வெற்றி பெறச் செய்ய, ரஜினியை விட கமல் கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. இன்னொரு விஷயத்தையும் யோசித்துப் பாருங்கள். இந்திய திரை உலகில் கமலை தவிர வேறு எந்த நடிகராலும் இப்படி ஒரு balance ஐ செய்ய முடியாது - ரஜினி உட்பட. கமலை ஒரு ஜனரஞ்சக நடிகராக, காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக என எப்படிப்பட்ட பரிமாணத்திலும் ஏற்றுக்கொள்ள முடியும். ரஜினி உட்பட மற்றவர்க்கு ஒரு பிம்பம் தான்.

  கமல் சூப்பர் ஹீரோ பிம்பத்தை உண்டாக்குவது படங்களின் Reach க்கும் வியாபாரத்திற்கும் தான். தசாவதாரத்தின் உலகளாவிய Reach அவருடைய பிந்தைய படங்களின் வியாபாரத்திற்கு உதவியது. கமல் பழைய கமலாகவே இருந்து இருந்தால் இந்த வியாபார சந்தையில் மறக்கப்பட்டு இருப்பார். அல்லது தமிழ் கதாநாயகர்கள் வரிசையில் வியாபாரத்தில் கடைசியில் இருந்து இருப்பார். நஷ்டம் அவருக்கு என்றாலும், தமிழ் சினிமாவிற்கு இன்னும் பெரிய நஷ்டமாகி இருக்கும்.

  இன்னொரு விஷயம். ஒரு ரஜினி படம் என்றால் அதற்க்கு ரஜினியை தவிர இன்னும் பெரிய ஜாம்பவான்களின் கூட்டணி அமைக்கப் படுகிறது. உ.ம்., ஷங்கர், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், சன் பிக்சர்ஸ் ...இப்படி. இது ரஜினி படங்களின் உலகளாவிய வியாபாரத்திற்கு இன்னும் வலு சேர்க்கிறது. ஆனால் பெரும்பாலான கமல் படங்களில் அவர் மட்டும் தான் பெரிய பெயராக இருக்கும். உ.ம்., விஸ்வரூபம். ஆனால் அதை வைத்தே பெரிய வியாபாரம், எதிர்பார்ப்பு இவை எல்லாம் ஏற்படுத்தும் கமல் ரஜினியை விட சாதனையாளராக தான் எனக்கு தெரிகிறார்.

  ReplyDelete
  Replies
  1. மிக தெளிவாக உங்கள் கருத்தை முன் வைத்துள்ளீர்கள்..

   Delete
  2. கமல் ஹாசன் ஒவ்வொரு தடவையும் ஏமாற்றம் தரும் போதும் நாங்களும் எங்களுக்கு சமாதானமாக இதையே சொல்லிக்கொள்வதுண்டு. மன்மதன் அம்பு படத்திற்குப் பின்னரும் இதே கருத்தையே சொல்லிக்கொள்வதானால் நாங்கள் கமல் ரசிகர்களாக இருப்பதில் என்ன பிரயோசனம்?

   Delete
  3. உலகம் தட்டை என்றபோது பைதகரஸ் கோளவடிவம் என்று விளக்கினார்.

   இதனை விளங்காமல் சூழ்நிலை தெரியாமல்

   பூமியின் துருவப்பகுதில் உள்ள 43 கிலோ மீற்றர் விட்டத்தில் உள்ள குறைவைக் காட்டி பைதகரசைக் குறைப்படுத்துவது போன்ற விமர்சனம்

   மகாநதியை தோற்கடிக்கும் பார்வையாளர்கள் உள்ள இடத்தில் அப்படி தொடர்ந்து எடுத்து அழிந்துபோனால் நல்லா இருக்கும் என்று காத்துக்கொண்டு ஏக்கத்தில் இருக்கும்
   ஆசைப்படும் விமர்சகர்கள் மத்தியில் அவர் தொடர்ந்து போட்டியில் இருப்பது யாருக்குத்தான் பிடிக்கும்

   குறைபடுபவர்கள் மொக்கைப்படம் மன்மதன் அம்பைக் கூட திரைக்கதையை மாற்றி எவ்வாறு வந்திருக்க வேண்டும் என்று எழுதலாமே

   எல்லாவற்றையூம் கமல் செய்யவேண்டும் என்ற தலைவிதி அவருக்கில்லை

   இனி வரும் நடிகனுக்கும் வேலை உண்டு அப்படி ஒரு படம் வந்த பிறகு கமலை விமர்சிப்போம்.

   கமலை மட்டந்தட்டப் போடும் பதிவிலேயே கமலை புகழுவதுபோல் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் உள்ளபோது ஏன் கமல் வர்த்தக ரீதியா சமரசம் செய்தால் தாங்குது இல்ல

   Delete
 21. ungha blog ... cleaned paetthal...

  ReplyDelete
 22. kamal birth day anniku ipdi oru blog pottu neengha oru nallla manasu kaaran nu proof panniteengha...good keep it up..
  anbae sivam...

  ReplyDelete
 23. Kamal naamam vazhaga

  ReplyDelete
 24. கமலின் பதினாறு வயதினிலே நடிப்பு அருமை.வாழ்வே மாயம் வசந்த மாளிகயைப்போல் சிவாஜியின் படமாக அமையாதது அன்று பெரிய செய்தியாக இருந்திருக்கலாம்.இன்றும் பெரிய சாதனை அதுவென நினைக்கிறேன்.(பிரேம் நகர்,பிரேமபிஷேகம் இரண்டிலும் நாகேஸ்வர ராவ் தான் நடித்திருந்தார்.)சலங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து நல்ல நடிகனின் முழுமை.உங்கள் கருத்தோடு முழுதும் உடன்படுகிறேன்.இடையில் மும்பை எக்ஸ்பிரஸ் நல்ல படமாக படுகிறது.விஸ்வரூபம் முழு மோசம்.பாலிவுட் ஆசையில் இருந்து விடுபட்ட கமல் ஹாலிவுட் கனவிலிருந்தும் விடுபட்டு இந்தியாவிற்கு உகந்த படங்களை தர வேண்டும்.அவரை இந்தியர்கள் தான்,சொல்லப்போனால் தமிழர்கள் தான் முதன்மையாகக் கொண்டாடுவர்.

  ReplyDelete
  Replies
  1. மகாநதியை தோற்கடிக்கும் பார்வையாளர்கள் உள்ள இடத்தில் அப்படி தொடர்ந்து எடுத்து அழிந்துபோனால் நல்லா இருக்கும் என்று காத்துக்கொண்டு ஏக்கத்தில் இருக்கும்
   ஆசைப்படும் விமர்சகர்கள் மத்தியில் அவர் தொடர்ந்து போட்டியில் இருப்பது யாருக்குத்தான் பிடிக்கும்

   Delete

உங்கள் கருத்துக்கள்!!