ஒரு ஜாலியான சினிமாவை உருவாக்க கதை அவசியமில்லை என்பதை மறுபடியும் நிரூபிக்கும் ஒரு படம் சென்னை எக்ஸ்பிரஸ். மீண்டும் ராகுலாக ஷாரூக் கான். தென்னிந்தியாவை கதைக்களமாக கொண்டு பெரும்பாலான தமிழ் நடிகர்களை வைத்து உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு வழக்கமான ரோஹித் ஷெட்டி இஷ்டைல் படம். முதல் நாள் கலக்சன் 33 கோடியாம். இனிமேல் படம் பற்றிய சிறு விமர்சனம் நம்ம பங்குக்கு.
படத்தின் கதை என்பதற்கு புதுசா ஒண்ணுமே இல்ல. 1980ல இருந்து நமக்கு தெரிஞ்ச அதே கில்லி/ரன்/பையா கதைதான் படம். திரைக்கதை சுவாரஷ்யமாக இருப்பதுதான் படத்தின் பலம். வழக்கமா கிளாஸ் கமெடியில பொளந்து கட்டும் ஷாரூக் இந்த படத்துல மாஸ் கமெடியில தூள் கெளப்புறாரு. கூடவே தீபிகா படுகோனே, கண்ணுக்கு இதமான இயற்க்கை காட்ச்சிகள், ஒளிப்பதிவு, மாஸ் மசாலா இசை அதுக்கு ஏற்ற நடனம் கொஞ்சூண்டு சண்டை காட்சி என சாதாரண சினிமா ரசிகனை முழுசா திருப்திப் படுத்தக் கூடிய படம். ஒரு சாதாரண 40 வயது பிரம்மச்சாரி, தானுண்டு தன் தாத்தா உண்டுன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கறவரு ஒரு ஆந்திரா அக்ஷன் மசாலா படத்துக்கு நடுவில மாட்டிக்கிட்டா எப்படியிருக்கும்கற அனுபவம்தான் படம். படத்தில் மருந்துக்கும் ரியலிசமோ லாஜிக்கோ கெடயாது. இந்த படத்துல நாம அதை எதிர்பார்க்கப் போறதும் கெடயாது, சோ நோ ப்ராப்ளம்.
படத்தில் ஷாரூக்கின் பெயர் ராகுல் என்பதிலேயே படத்தின் டோன் தெரிந்துவிடுகிறது (ஷாரூக் நடித்ததில் 80% கதாபாத்திரத்தின் பெயர் ராகுல் அல்லது ராஜ்). ஷாரூக் ரயில் ஏறும் வரை ஏனோ தானோ என போய்க்கொண்டிருக்கும் படம் தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே படத்தின் புகழ் பெற்ற ரயில் காட்ச்சியை ஸ்பூப் செய்வதுடன் கழை கட்ட ஆரம்பிக்கறது. அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு காட்ச்சிகளும் காமெடி விருந்து. போகிற போக்கில் மை நேம் இஸ் கான், மெயின் ஹூன் னா, தில் சே போன்ற ஷாருக் படங்கள் 3 இடியட்ஸ் மற்றுமல்லாது முத்து, கில்லி, அலெக்ஸ் பாண்டியன் என நிறையவே படங்களில் இருந்து பல பிரபலமான காட்ச்சிகளை உல்டா பண்ணியும் நேரடியாக பயன்படுத்தியும் திரை கதையின் சுவாரஷ்யத்தை கூட்டி இருக்கிறார்கள். பிரபலமான பல இந்திப் பாடல்களையும் விட்டு வைக்கவில்லை. இந்திய சினிமாவுக்கே உரித்தான மாஸ் மசாலா அக்ஷன் படங்களை கொண்டாடுவதுதான் இந்தப் படத்தின் முழு முக்கிய நோக்கம். அதில் பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதற்க்கு ஏற்றாற்போல் கோட் பாதர் ஒப் இந்தியன் மசாலா மூவி, நம்ம தலைவருக்கு கடைசியில் ஒரு ட்ற்றிபியூட் படத்துடன் கன கச்சிதமாக பொருந்திப் போகிறது. மொத்தத்தில் இந்திய சினிமா பிரியர்களுக்கான படம்.
ஷாரூக் கான் பற்றி சொல்லத் தேவையில்லை. மனிதருக்கென்றே உருவாக்கப்பட்ட பாத்திரம், தூக்கி சாப்பிட்டு போய் விடுகிறார். 40 வயசுன்னு சொல்லும் போதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது, ஷாரூக்கா அல்லது பாத்திர படைப்பான்னு தெரியல, 30 வயசுக்கு மேல சொல்ல முடியல. இடுப்பு வலி, தோள்பட்டை முறிவு எல்லாத்தும் பிறகு தீபிக்காவ தூக்கிட்டு 300 படி ஏறுவதற்கும் (குறைந்தது 50 படியாவது நிஜமாக ஏறி இருப்பார்), அக்ஷன் பண்ணுவதற்கும் ஒரு தனி தைரியம் வேண்டும். தீபிகா தமிழ் பேசும்போது சற்று சிரத்தை எடுத்திருப்பது தெரிகிறது. 80% உச்சரிப்பு ஓகே. பார்க்கவும் அழகாக இருக்கிறார், ஓம் ஷாந்தி ஓம் படத்து அப்புறமாக அம்மணி ஆடை அணிந்து நடிச்ச படம் இதுதான்னு நினைக்கிறேன். கீப் இட் அப். சத்யராஜ் ட்ரேட் மார்க் என்னம்மா கண்ணுவுடன் வருகிறார். டெல்லிகணேஷில் இருந்து பல தமிழ் முகங்கள், பாதி நேரம் தமிழ் படம் பார்ப்பது போன்ற பீலிங். மசாலா படம் என்றதுமே கருத்து சொல்ல வேண்டுமே, பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கவேண்டும் என்பதும், ஒரு பிரச்சினையை சமாளிக்க இலகுவான வழி பிரச்சினையில் இருந்து ஓடுவது அல்ல, அதை எதிர்கொள்வது என்றும் மிக மிக சட்டிலாகவும் அழகாவும் பொருத்தமாகவும் கருத்து சொல்லியும் இருக்கிறார்கள்.
மொத்தத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் ஒரு செம ஜாலி ரைடு.
***************************************
இனி சீரியஸாக சில கருத்துக்கள்.
திரைப்படங்கள் பற்றி எப்போதுமே இரு வேறுப்பட்ட பார்வை இருக்கிறது. சினிமா என்பதை சக்தி வாய்ந்த ஒரு கட்புல ஊடகமாக கொண்டு கதைகள் சொல்வதும் அதன் மூலமாக ஆக்கபூர்வமான பல விடயங்கள் செய்ய முற்படுவதும் ஒரு வகை. சினிமாவை ஒரு பொழுது போக்கு ஊடகமாக மட்டுமே கொண்டு அன்றாட வாழ்கையில் பிரச்சனைகளை மறந்து இரண்டு அல்லது இரண்டரை மணிநேரம் ஜாலியாக டைம் பாஸ் பண்ண வருபவர்களுக்கு குறைவில்லாத பொழுது போக்கை கொடுப்பது இரண்டாவது வகை. இந்த சினிமா இரண்டாவது வகை. எனவே இங்கே தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் கேவலப் படுத்துகிறார்கள் அது இதுன்னு வம்பு பண்ணத் தேவையில்லை. தமிழரின் விருந்தோம்பலையும், வீரத்தையும், நம் பெண்களின் தைரியத்தையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். நமக்கு வட இந்தியா என்பது எப்படி ஒற்றையாக தெரிகிறதோ அப்படியே அவர்களுக்கு தென் இந்தியா என்பது, மொழியாக தமிழ் மாத்திரமே இருந்தபோதும் சகல தென்னிந்திய கலாசாரங்களையும் ஒன்றாக போட்டு குழப்பியிருப்பதில் தெரிகிறது. இந்த படத்தை பொறுத்தவரை அது அவர்களது குற்றமும் இல்லை, அதை பெரிது படுத்த தேவையும் இல்லை. அதையும் தாண்டி பழிவாங்கியே தீரவேண்டும் என்று யாராவது நினைத்தால் கீழே உள்ள வீடியோ பார்க்கவும்
படத்தின் வியாபாரத்துக்காக ஷாரூக் தலைவரை பயன்படுத்திகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஷாரூக்கின் பேட்டிகளை நேரில் பார்த்தவர்களுக்கு தெரியும் தலைவர் மீது அவருக்கு இருக்கும் மரியாதை. ரா.ஒன் படத்தில் ஏற்பட்ட குறையை இந்த படத்தில் சரி செய்து இருக்கிறார். இங்கே எங்களுடன் இருக்கும் இலங்கை சிங்கள நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தலைவரை சக் நோரிசுடன் ஒப்பிட்டு சில ரஜினி ஜோக்குகள் சொல்லி கிண்டல் செய்தார். அதே நண்பர், நேற்று சென்னை எக்ஸ்பிரஸ் "லுங்கி டான்ஸ்" பார்த்தன் பின்னர் "I really didn't know rajni is such a big phenomenon in india, I'm really sorry for what I said before" ன்னு சொன்னாரு. அதைக் கேட்டதற்கு பிறகு ஷாரூக் மீது இருந்த மத்திப்பு இன்னும் கூடிவிட்டது.