Wednesday, March 5, 2014

ஏ ஆர் ரஹ்மான் கோக் ஸ்டுடியோ - பாடல்கள் அறிமுகம்

எண்பதுகளின் கடைசியில் பிறந்து தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தமிழ் திரை இசை கேட்க ஆரம்பித்த பலரைப் போலவும் நானும் ஒரு ரஹ்மான் ரசிகன். திரை இசை என்பது எப்போதும் ஒரு இசைக் கலைஞரை இயக்குனர் போடும் ஒரு வட்டத்துக்குள் மாத்திரமே பயணிக்க அனுமதிக்கிறது, அவரின் முழு திறமையையும் வெளிக்கொணர தடையாக இருக்கிறது என்பதை நம்புபவன் நான். திரை இசையிலேயே எவ்வளவோ பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்ட ரஹ்மான், இயக்குனரின் கடிவாளம் இல்லாமல் சிந்திக்கும்போது எவ்வாறான இசை பிறக்கும் என்பதற்கு, வந்தே மாதரம், Pray for  me brother போன்ற பாடல்கள் உதாரணம். அந்த வரிசையில் இந்த கோக் ஸ்டுடியோ ஆல்பமும் வருகிறது. ஒவ்வொரு பாடலும் மனதை அள்ளுகிறது. ரஹ்மானின் இசைக் கோர்ப்பும் சிவமணி, கேபா ஜெரமியா, பிரசன்னா, மோகினி போன்ற சிறந்த இசைக்கலைஞர்களும், பாக்கிங் வோகல் பாடும் குரல்களும் இனைந்து நிகழ்த்தும் ஓர் இசை அனுபவம் இது. 

நான் ஏன் பிறந்தேன்: பிறப்பின் தாற்பரியத்தை அறிய முயற்சிக்கும் ஒருவரின் எண்ண ஓட்டமாய், ரஹ்மானது குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் மனதை எதோ செய்வதை தவிர்க்க முடியவில்லை.

 "இறையோன் படைப்பில் எதுவும் அழகு, உன் கண் அறியாதே"


Zariya: பாரம்பரிய பௌத்த இசையையும் ஜோர்டானிய இசையையும் கலந்து தாய்மையை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் இவ்வளவு பிரபலமாக காரணம் இல்லாமல் இல்லை.


Jagao Mere Des Ko: ரஹ்மானது தேசபக்திப் பாடல்கள் எப்போதும் ஒரு புது உத்வேகம் கொடுப்பவை. பெங்காளி மற்றும் இந்தியில் அமைந்த இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. கர்நாடக சங்கீதமும் மேற்கத்தைய கிட்டாரும் இனைந்து புரியும் அதிசயம் இந்த பாடல். 


என்னிலே மகா ஒளியோ: ரஹ்மானது இரு சகோதரிகளின் குரலில் ஒலிக்கும் குட்டி ரேவதியின் வரிகள் உங்கள் மனதை நிச்சயம் வருடிச் செல்லும். 


Soz O Salam, Aao Balma: ரஹ்மானது இசையில் ஹிந்துஸ்தானியும் கர்நாடக சங்கீதமும் சங்கமிக்கும் போது கிடைக்கும் இசை ஒரு அனுபவும். Soz O Salam பத்ம பூஷன் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் அவர்களது மூன்று தலைமுறையினரது குரலில் விந்தை செய்கிறது, Aao Balma பாடல் நமக்கு மிகவும் பரீட்சயமான ரஹ்மான் பாடல்களில் ஒலித்த இசைத்துனுக்குகளோடு ஆரம்பித்தாலும் செல்லச் செல்ல ஒரு புது அனுபவத்தை தோற்றுவிக்கிறது. 

Soz O Salam


Aao  Balma


முழு பாடல்களையும் behind the music உடன் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் : A. R. Rahman Coke Studio @ MTV Season 3: Episode 1 

பின்னிணைப்பு: ரஹ்மானது பாடல்களில் என்றும் என்னை கவர்ந்த ஒரு பாடல் Yeh Jo Des (உந்தன் தேசத்தின் குரல்). இந்தப் பாடலின் ஒரு புதிய ரெண்டிஷன் MTV Unplugged இல் சென்ற வருடம் ரஹ்மானால் வழக்கப்பட்டது. அந்த பாடல் இங்கே. வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் (தமிழனுக்கும்) இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளில் இந்த பாடலும் ஒன்று. எமது உறக்கத்தை கெடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது இந்த பாடல்.


டிஸ்கி: இந்த பாடல்கள் சென்ற வருடம் ஒளிபரப்பப் பட்டவை. ஏ. ஆர். ரஹ்மானது கடைசி ஆல்பம் Raunaq இலிருந்து ஸ்ரேயா கோஷல் பாடிய Kismat Se பாடல் அந்த ஆல்பம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டுகிறது. iTunes இல் வரும் வரை வெயிட்டிங்.

Monday, March 3, 2014

அமெரிக்க மாப்பிள்ளை - இது பெண்களுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்குமான பதிவு

கல்யாணம் அண்ணன் நம்ம லௌ மேரேஜ் பதிவ படிச்சிட்டு செம டென்ஷன் ஆகிட்டாரு. ஏற்கனவே எனக்கு பொண்ணு கெடைக்கறது குதிரைக் கொம்பா இருக்கு, இதுல நீங்க வேற இப்படி ஒரு பதிவு போட்டா என் நிலைமை என்னவாகுறதுன்னு ஒரு கேள்வி கேட்டு நம்மள சிந்திக்க வச்சிட்டாரு. அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு பொண்ணு கெடைக்காததுக்கு ஒரே காரணம் தமிழ் சினிமா. வெளிநாட்டு வாழ் எலிஜிபில் பேட்சுலர்சை தமிழ் சினிமா "அமெரிக்க மாப்பிள்ளை" என்னும் பெயரில் அசிங்கப்படுத்தி பொண்ணு கிடைக்காம பண்ணிடுதுங்கறது அண்ணன் வைக்கிற குற்றச்சாட்டு. ஒரு சமூக ஆர்வலரா, இந்த அவல நிலையைப் போக்க நாமளும் ஏதாவது செய்யணுமே, அதுதான் இந்தப் பதிவு.


நம்ம பசங்கள நம்ம ஊரோட தொடர்ப்பு படுத்தற விஷயங்கள் மூணுங்க, ஒன்னு தமிழ் சினிமா, ரெண்டாவது விஜய் டிவி, மூணாவது சமூக வலைத் தளங்கள். நம்ம ஊருலயெல்லாம் பசங்க ஒண்ணா சேர்ந்தா தண்ணி அடிப்பாங்க, தம் அடிப்பாங்க, பொண்ணுங்கள பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்க, இங்கயெல்லாம் பசங்க ஒண்ணா சேர்ந்தா சந்தானம், சிவகார்த்திகேயன் காமெடில தொடங்கி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் ப்லூபெர்ஸ்ன்னு எதையாவது பார்த்து சிரிச்சிக்கிட்டே, ப்ரிட்ஜுல இருந்த பழைய சாதத்தையும் சாம்பாரையும் மைக்ரோ வேவுல சூடு பண்ணி சாப்பிட்டு மல்லாக்க படுத்து தூங்கிடுவாங்க. அந்தளவு அப்பிராணிகளான பசங்க. 

அமெரிக்க மாப்பிள்ளைன்னா அவ்வளவு இளக்காரமாங்க, அவுங்க திறமை, பெருமை என்னன்னு உங்களுக்கு தெரியுமா? புருஷ லட்சணம் மொத்தமா அமையப் பெற்ற ஆண் வர்க்கமுங்க நம்ம பசங்க. சாம்பிளுக்கு நாலு அஞ்சு எடுத்து விடுறேன் கேட்டுக்கங்க.

1. அமெரிக்க மாப்பிள்ளைகள் எல்லாருமே கண்டிப்பா சமையல் எக்ஸ்பேர்டா இருப்பாங்க. ஏன்னா தினமும் இட்லி தோசைக்காகவோ இல்ல ஒரு பிரியானிக்காகவோ நூறு இருநூறு மைல் தூரம் அலையை முடியாது, எது வேணும்னாலும் நாமளா சமைச்சாதான் உண்டு, சோ கண்டிப்பா சமையல் தெரிஞ்சிருக்கும். அதுலயும் வெரைட்டி வெரைட்டியா சமையல் பண்ணுவாங்க. இன்னும் முக்கியமா "நேத்து சமைச்சதுதான் இன்னிக்குமா?" ன்னு ஒருநாளும் சண்ட போட மாட்டாங்க, போன வாரம் சமச்சத இந்தவாரம் சூடு பண்ணிக் குடுத்தாக்கூட சப்புக் கொட்டி சாப்பிட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

2. நீங்க மணிக்கணக்கா ஷாப்பிங் பண்ணாலும் பொறுமையா உங்ககூட கம்பெனி குடுப்பாங்க. இந்த நாட்டுல பேங்க்ல ஒரு செக்கு டெபாசிட் பண்ணனும்னாலோ இல்ல முடி வெட்டிக்கனும்னாலோ கூட அபாயின்மென்ட் எடுத்து மூணு நாலு மணிநேரம் காத்திருந்துதான் பண்ணனும். சோ இந்த வரிசையில நிக்கறதோ இல்ல பார்கிங் லாட்ல மணிக்கணக்கா காத்திருக்கறதோ நம்ம பசங்களுக்கு சப்ப மேட்டர், அதனால ஷாப்பிங் போறீங்கன்னா உங்களுக்கு போர்ட்டரும் டிரைவரும் கன்பர்ம். 


3. மணிக்கணக்கா ஃபோன் கால் பேசுறது நம்ம பசங்களுக்கு ஜுஜுபி. ஏன்னா வீடோ, நட்போ பெரும்பாலும் சர்வதேச தொடர்பாத்தான் இருக்கும். சிக்கன் சமைக்கறதுக்கு தக்காளி போடனுமால தொடங்கி ஒன்னாம்புல கூடப் படிச்ச கோகிலா புருஷன் இப்ப யார வச்சிருக்கான் வரைக்கும், போன்ல தான் பேசியாகனும். நா எல்லாம் ராசு மாமாவுக்கு ஸ்கைப்புனேன்னா ஃபைவ், சிக்ஸ் ஹவர்ஸ் சும்மா பேசிக்கிட்டே இருப்பேன். நம்ம நண்பர் ஒருத்தர் சும்மா ஒரு நாளைக்கு பத்து பதினோரு மணிநேரம் அவரேஜா ஃபோன் பேசுவாருன்னா பார்த்துக்கங்களேன். சோ நீங்க ஃபோன் பேசினாலோ இல்ல பக்கத்துவீட்டு பொண்டுகளோட மணிக்கணக்கா ஊர் வம்பு பேசினாலோ நோ ப்ராப்ளம்.

4. ட்ராபிக் ரூல்சுக்கு கட்டுப்பட்டு எப்பவுமே கவனமா வண்டி ஓட்டுவாங்க, டூ வீலர்ன்னா கொஞ்சம் தள்ளியே நிப்பாங்க. போர் வீலர்ல எப்பவுமே ஓவர் ஸ்பீடுல போகமாட்டாங்க. என்ன காரணம்ணா இங்க ட்ராபிக் ரூல்ஸ் அப்புடி, மாட்டிக்கிட்டா கமிஷனர் எங்க சித்தப்பான்னு சொல்லி எஸ்கேப் ஆகவும் முடியாது, ஃபயின் போட்டான்னா அதுவேற பெரிய தொகையா இருக்கும், அதையும் தாண்டி, இன்சூரன்ஸ்ல இருந்து எல்லாமே ஜாஸ்தி ஆகி நம்ம பரம்பரையையே பாதிச்சுடும். சோ நம்ம பசங்க வண்டி ஓட்டரதுல எப்பவுமே அந்நியன் அம்பி தான்.  

5. இங்க உள்ள பசங்க எல்லாருமே அட்லீஸ்ட் ஒரு ரெண்டு சீரியல் கண்டிப்பா பார்பாங்க. விஜய் டிவில வாற தமிழ் சீரியல்ல தொடங்கி, பிக் பங்க் தியரி, பிரண்ட்ஸ், டூ அண்ட் அ ஹால்ப் மேன், ப்ரேகிங் பேட் ன்னு எல்லா சீரியலும் அத்துப் பொடியா இருக்கும். சோ நீங்க சீரியல் பார்கறத கண்டுக்கவே மாட்டாங்க. கூட சேர்ந்து பார்கலைனாலும், நீங்க சீரியல் கதை சொன்னா ரொம்ப இன்டரஸ்டா கேப்பாங்க. 


6.அமேரிக்கா மனுஷன டென்ஷன் பண்ணி டிப்ரஷன் சப்ரஷனுக்கு ஆளாக்கி மெண்டலாக்கி அலையை விடுறதுல நம்பர் ஒன்னு. அதனால இந்த ப்ராஷர ஹாண்டில் பண்றதுக்காகவே நம்ம பசங்க, பதிவு எழுதறது, ஃபோட்டோ கிராபி, ஜிம் ட்ரைனிங், சமையல் அது இதுன்னு பல எக்ஸ்ட்ரா காரிகியுலர் ஆக்டிவிடீஸ் கைவசம் வச்சிருப்பாங்க. அதோட இந்த நாட்டுல ஒரு ஆணி புடுங்கறதுக்கு ஆள் வச்சாக்கூட மணிக்கு அறுபது டாலர்ன்னு இருநூறு முன்னூறு டாலர் புடிங்கிக்குவாங்க, சோ இந்த வண்டி ரிப்பேர் பண்றது, ப்ளம்பிங், எலக்ரிகல் ரிபேர்னு எதுன்னாலும் நம்ம பசங்களே பாத்துடுவாங்க. இதனால ரெண்டு நன்மை இருக்கு, ஒன்னு எதிர்காலத்துல வீட்டுல எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் சூசயிட் பண்ணிக்கறதோ அல்லது மெண்டல் ஆகிறதோ நடக்காது, நீங்க எவ்வளவு டென்ஷன் படுத்தினாலும் எந்த பிரச்சினையும் இல்லாம தாங்கிக்குவாங்க, அம்புட்டு நல்ல பசங்க. ரெண்டாவது கைவசம் ஏகப்பட்ட தொழில் இருக்கும். ரிஷஷன் அது இதுன்னு வந்து வேல இல்லாம போச்சின்னா ஒரு ரெஸ்டூரன்டோ இல்ல மெக்கானிக்கல் ஷாப்போ வச்சு பொழச்சுக்குவாங்க.

7. முக்கியமா "எப்ப பாரு ரேடியோ பெட்டி மாதிரி தொண தொணன்னு பேசிக்கிட்டே இருக்கே" வகையறா குற்றச்சாட்டுக்கள் ஒரு போதும் உங்க மேல வராது. ஏன்னா தமிழ நேர்ல கேட்டு வருஷக்கணக்கா ஆகியிருக்கும், மொக்கையா நாலு வார்த்த தமிழ்ல பேசக்கூட யாருமே இல்லையான்னு ஏங்கிப் போயிருப்பாங்க, சமயத்துல இன்னொரு மனுஷன் பேசுறதக் கேட்டே, அது என்னங்க இன்னொரு மனுஷன் தன்னோட மயிண்டு வாயிச கேட்டே வாரக் கணக்கா ஆகியிருக்கும். இந்த நிலமையில நீங்க என்ன பேசினாலும்  எவ்வளவு மொக்கையா இருந்தாலும் ரசிச்சுக் கேப்பாங்க.

இவ்வளவு புருஷ லட்சணமும் ஒருங்கே சேர்ந்து வரப்பெற்ற இந்தப் பசங்கள அமெரிக்க மாப்பிள்ளைன்னு அரைக்கால் டவுசரும் காதுல ஒரு செவுட்டு மிஷினுமா தமிழ் சினிமா அசிங்கப் படுத்தறத நான் எதிர்ப்பதோடு, கல்யாணம் அண்ணன் போன்ற எங்க பசங்கள நம் சமூகம் முப்பது நாற்பது தாண்டியும் பிரம்மச்சாரிகளாகவே வாழ வைக்கற கொடுமையையும் வன்மையா கண்டிக்கறேன்.

டிஸ்கி: காலத்தின் கட்டாயத்தினால் தேவை ஏற்பட்டால் இந்தப் பதிவினை மேலும் தொடர்வதர்க்கு இடமுண்டு. 

Sunday, February 23, 2014

இயக்குனர் ம.தி.சுதா வின் மிச்சக்காசு - ஒரு பின்நவீனத்துவ பார்வை.

தமிழில் பல குறும்படங்கள் வந்திருந்தபோதும், மிச்சக்காசு படம் பேசும் அளவு நுணுக்கமான சமூக கருத்துக்களையோ குறியீடுகளையோ உள்ளடக்கியதாய் சமீபத்தில் எந்த குறும் படமும் வந்ததாய் நினைவில்லை. இரண்டு அல்லது மூன்று வசனங்கள், நான்கே நான்கு கதாபாத்திரம், ஆர்ப்பாட்டமில்லாத மிகவும் அடக்கமான ஒரு இசை, ஒரே வரி கதை, இவை அனைத்தையும் தாண்டி திரைக்கதையோட்டத்தில் ஆங்காங்கே தூவிக் கிடக்கும் பின்நவீனத்துவக் குறியீடுகளே இந்தப் படைப்பை உயர்த்திப் பிடிக்கிறது. 


இந்தக் குறும் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது குரல் வழி மட்டுமே ஒலித்து முடிவுறும் அந்த தாயின் கதாபாத்திரம். அத்தோடு பையன் கடைக்குசென்று வாங்குவதாக காட்டப்படும் பொருட்கள். சமயலறையிலும், சலவை அறையிலும், பூஜை அறையிலும் மட்டுமே என அடக்கி ஒடுக்கப்பட்ட நம் சமூதாயப் பெண்களின் கண்ணீர் காவியத்தை இவ்வளவு தெளிவாக பக்கம் பக்கமாக வசனம் வைத்துக் கூட காட்டியிருக்க முடியாது. அவ்வளவு நுட்பமான ஒரு காட்ச்சியமைப்பு. அந்த நாய் கதாபாத்திரம் இந்த இடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. முச்சக்கர வண்டியில் விளையாடும் அந்த நாயினை நமக்கு காட்டும் இயக்குனர், அந்த தாய் கதாபாத்திரத்தை நமக்கு காட்டாமல் வீட்டுக்குள் எங்கோ இருந்து ஒலிக்கும் குரலினூடு மட்டுமே கையாண்டிருப்பது எமது சமூகப் பெண்களுக்கு, சமூகத்தில் நாய்களுக்கு இருக்கும் அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை என்பதை முகத்தில் அறைந்தால்போல் சொல்கிறது.

இந்த குறும் படத்தினை படத்தின் அடி நாதமாக இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை தவிர்த்துவிட்டு, வெறும் சிறுபிராயத்து அனுபவம் மட்டுமே என்றோ, சிறு கடை முதலாளிகளின் ஏமாற்று என்றோ மட்டுமே பார்த்துவிட முடியாது. இதை சிறுவர் துஷ்பிரயோகத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்க வேண்டி இருக்கிறது. சிறுவனுக்கு மிட்டாய் கொடுக்கும் அந்த கடைக்காரர் ஒரு வயது வந்தவருக்கு மிட்டாய் கொடுத்துவிடுவாரா என சிந்திக்க வேண்டி உள்ளது. ஒரு சிறுவனை ஒரு கடைக்காரர் மீதி காசு கொடுப்பதற்குப் பதில் மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை, பன்னாட்டு கார்பரேட் கம்பெனிகள் நம் பாமர மக்களை ஏமாற்றுவதுடன் தொடர்ப்பு படுத்திப் பார்க்கவேண்டியதாகவும் உள்ளது. "தள்ளுபடி", "தவணை முறைக் கட்டணங்கள்", "இலவச இணைப்பு" என நகர்புற மக்கள்கூட பல மிட்டாய்களை வாங்கிய வண்ணமே இருக்கிறார்கள். குறும் படத்தின் இறுதியில் நமது கதையின் நாயகன் பணத்திற்குப் பதில் மிட்டாய்களை கொடுப்பதாக காட்டுவதன் மூலம் சுதாகரித்துவிட்ட எமது சமூதாயத்தினை காட்டுகிறார் இயக்குனர். அத்துடன் கடை முதலாளி கொடுக்கும் அந்த கடைசி முக பாவனை, பன்னாட்டு வணிக முதலைகளின் கையறுநிலையை சுட்டிக்காட்டுகிறது.


மிச்சக்காசு என பெயர் போடும் இடத்தில் ஆரம்பிக்கிறது இயக்குனரின் குறியீட்டு வித்தைகள். மிசசககாசு என எழுதி, இரு புள்ளிகள் இட்டு மிச்சக்காசு என மாற்றுகிறார். இந்த உலகில் எதுவுமே அற்பமானதோ பயனற்றதோ அல்ல, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன் உள்ளது, சில தனித்தும் சில இணைந்தும் அப்பயனைத் தரும் எனும் ஆழ்ந்த குறியீடு அங்கு பொதிந்துள்ளது. மீன்தொட்டியில் மீன்கள் இரை உண்ணும் காட்ச்சிப் படிமத்துடன் படம் ஆரம்பிக்கிறது. இதே போன்று படம் முழுவதும் பல காட்ச்சிப் படிமங்கள். ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட இரு நாற்காலிகளில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்து ஓய்வு நேரத்தில் ஓவியம் வரைவதான ஆரம்ப காட்ச்சிப் படிமம், நமது கதையின் நாயகனின் மதி நுட்பத்தையும் அவனது சமூக அக்கறையையும் ஒருங்கே கோடிட்டு காட்டுகிறது. 

ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு குறியீட்டை புதைத்து வைத்திருக்கிறார் ம.தி. சுதா. எப்போதும் திறந்தே இருக்கும் வீட்டுக் கதவு மூலம் கதை மாந்தரின் அயலவருடன் நட்ப்பு பாராட்டும் குணத்தை உணர்த்துகிறார், சிறுவனின் பொறுப்புணர்ச்சியை அவன் செருப்பு அணிந்துகொள்ளும் காட்ச்சிமூலம் காட்டுகிறார். இப்படி எத்தனையோ சொல்லலாம். இதுக்கும் மேல நான் ஏதாவது சொன்னா கண்டிப்பா எனக்கு அடிக்க வருவீங்கன்னு தெரியும், அதனால இந்த பின்நவீனத்துவ பார்வையை இங்கயே முடிச்சுக்கலாம். 

சமீபத்தில் பார்த்த குறும் படங்களில் என்னை கவர்ந்த ஒரு படம் இது. படத்தின் நிறைகளை இதுவரை பல பதிவுகளில் பல நண்பர்கள் சொல்லியாச்சி. படத்தில் எனக்குப் பட்ட ஒரே குறை ஒலிச்சேர்ப்பு (sound mixing). மவுனத்துக்கும் இசைக்கும், மவுனத்துக்கும் வசனங்களுக்கும் இடையே வரும் அந்த மைக் ஆன் ஆவதுபோன்ற ஒரு ஒலி, அது தவிர்க்கப் பட்டிருந்தால் குறும் படம் இன்னும் ரொம்ப நேர்த்தியாக வந்திருக்கலாம்.

பட உதவி முகப்புத்தகம் : https://www.facebook.com/actormathisutha

டிஸ்கி: நீண்டநாளாக ஏதாச்சும் ஒரு படத்துக்கு இப்படி அறிவுஜீவித்தனமான ஒரு விமர்சனம் எழுதனும்னு ஒரு ஆசை இருந்திச்சு, அத நிறைவேத்திக்க இது ஒரு சந்தர்ப்பம், அம்புட்டுதான். மற்றும்படி இது எங்க மொக்கைப் பதிவு லிஸ்டுல பத்தோட பதினொன்னு.

டிஸ்கி:  AAA International Award நிகழ்வில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்ற குறும்படம் இது. படத்தில் பணியாற்றிய  அனைவருக்கும், இயக்குனர் ம.தி. சுதாவுக்கும் நமது வாழ்த்துக்கள்.

Thursday, February 20, 2014

முற்போக்கு வாதம் பேசுவது எப்படி?

சமீபத்தில் திருமணமான எனது நண்பர் ஒருவர் முகப் புத்தகத்தில் ஒரு ஸ்டில் பகிர்ந்திருந்தார். ஒரு குழந்தையின் கிறுக்கல் போன்ற ஒரு ஓவியம் அது. அது தவிர வேறு எந்த குறிப்புக்களோ, விளக்கங்களோ இல்லை. அந்த பகிர்வு உணர்த்தும் பின்நவீனத்துவ குறியீடு என்ன என தீவிர ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது எனக்கு உதித்த சில சிந்தனைகளின் தொகுப்பே இது. 


சித்தாத்தங்கள் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக அடையாளம் காட்டிக் கொள்வது எப்படி? இன்று ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் இரு பெரும் இடதுசாரி முற்போக்கு சித்தாந்தங்களாக மார்க்ஸியமும், பின்நவீனத்துவமும் இருக்கின்றன. நம்ம நோக்கத்துக்கு இது பத்தின டீடையில் அலசல் எதுவும் அவசியமில்லை. பின்னவீனத்துவமாகட்டும் மார்க்ஸியம் ஆகட்டும் எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பு என்கின்ற புரிதலே போதுமானது. அத்துடன் சில கலைச் சொற்களும் அவசியம். இவை இருந்தால் இலகுவில் தன்னை ஒரு சித்தாந்த வாதியாக காட்டிக் கொள்ளலாம்.

கலைச் சொற்கள்: விளிம்புநிலை, மரபு, தனித்தன்மை, பொதுப் புத்தி, அறிவியக்கவாதி, முன்னகர்வு, பண்பாட்டரசியல், முரணியக்கம், பொருள்முதல் வாதம்.

தற்காப்பு: எப்போதுமே எதைப் பேசும்போதும் நான் அதுவல்ல என அறிவிப்புப் போட்டுக்கொள்ள வேண்டும். உதாரணமாக மார்க்ஸியம் பேசும் போது நான் மார்க்ஸிய வாதி அல்ல என பலமாக சொல்லிக்கொள்ள வேண்டும், இது முரண்பாடுகளில் இருந்து உங்களைக் காக்க உதவும்.

விதிமுறைகள்:

01. எந்த விஷயமா இருந்தாலும் மிகைப் படுத்தல் என்பது மிக அவசியம். உதாரணமா சிறுநீர் கழித்தல் என்பதை அவ்வாறு சொல்லாமல் "உயிரியலின் அடிப்படையான திரவ கழிவு சுத்திகரிப்பு" என்று சொல்லவேண்டும், ஆணுறுப்பு/பெண் துவாரம் போன்ற வார்த்தைகளை கோர்க்கும் வெளிப்படை பிரயோக லாவகங்கள் வரவேற்கப்படுகின்றன.

02. பொதுமைப் படுத்தல், உதாரணமாக ஒரு ஊழியரை தனி மனிதனாக பார்க்காது ஒரு நிறுவன அமைப்பாக அலது வர்க்கமாக பார்க்க வேண்டும். காற்றுப் பிரித்தல் போன்ற சப்ப மேட்டரா இருந்தா கூட "அடிப்படை உரிமை", "தனி மனித சுதந்திரம்" என்று வகைப் படுத்த வேண்டும்.

03. எப்போதும் கடுமையான வார்த்தைகளை அல்லது இழிவான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும். உதாரணமாக அராஜகம், அடக்குமுறை, அரைகுறை, உமிழ்தல். எதையும் எளிமையான மொழியில் சொல்லாமல் சற்று கடினமான, முரணான நடையில் சொல்ல வேண்டும். உதாரணமாக, ஒரு பிகரு கொஞ்சம் கலரா இருந்திட கூடாதே, உடனே பார்த்திடுவீங்களேன்னு சொல்வதற்குப் பதில் "வெண் தோல் ஏந்திய மகளிரை நோக்கும் சராசரி ஆணாதிக்க மனப்பான்மை" அப்பிடின்னு சொல்லணும்.

04. அடிக்கடி ஏதாவது ஒரு பெயர் புரியாத எழுத்தாளரையோ, சிந்தனையாளரையோ மேற்கோள் காட்டவேண்டும். அல்லது ஏதாவது ஒரு கவிதை வரி, செய்யுளை எடுத்துரைக்க வேண்டும். பெயர் புரியாத எழுத்தாளர்களின் பெயர்கள் எதுவும் உங்களுக்கு தெரியாது எனில் குறைந்த பட்சம் "உனக்கு புரியற மாதிரி சொல்லனும்ன்னா.... ஹ்ம்ம், பாரதி கூட ....." அப்பிடின்னு கொஞ்சம் பிரபலமான பெயர்களை எதோ அவர்கள் நீங்கள் படிக்கும் எழுத்தாளர்களில் இரண்டாம் தர எழுத்தாளர்கள் போன்ற தொனியில் உச்சரிக்க வேண்டும். 


05. மிக முக்கியமானது, உலகத்தில் பரவலாக ஏற்கப்பட்ட விடயமாக எது இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும், சற்று நலிவடைந்த சிந்தனையாக எது இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும். உதாரணமாக திருமணம் குடும்பம் என்பது தனிமனித சுதந்திரத்தை மறுக்கும் பழமை வாய்ந்த சமூக அமைப்பு கட்டுமானங்கள், விஞ்ஞான ரீதியான மனித உணர்வுகளை, இச்சைகளை கட்டுப் படுத்த நினைக்கும் முரண் விதிகள் என கூற வேண்டும். மருத்துவ கருக்கலைப்பு என்பது பெண்ணின் அவளது உடல் மீதான தனிமனித உரிமை மட்டுமே, அதில் கருவுக்கு காரணமான ஆணுக்கோ, அல்லாது உயிராக துடிக்கும் அந்த சிசுவுக்கோ எந்த உரிமையும் இல்லை என எவ்வித சந்தேகமும் இன்றி வாதிக்க வேண்டும். கடவுள் மறுப்பு என்பது மிகவும் அடிப்படை.

06. சற்று கண்மூடித்தனமான விஞ்ஞானம் பேச வேண்டும். உதாரணமாக தன்னினச் சேர்கையினை ஆதரிக்கிறேன் பேர்வழி என கூறிக்கொண்டு, homosexuality என்பதும் Gender Identity Dissorder என்பதும் ஒன்றே என்பது போன்ற மருத்துவ விளக்கங்கள் கூறவேண்டும். பௌதீகவியல் கூறும் தத்துவங்களை அவை என்ன என்பதையே விட்டு விட்டு சித்தாந்தமாக பார்க்க வேண்டும். பெரு வெடிப்புக் கொள்கை, சார்புத் தத்துவத்தை தாண்டி ஸ்ட்ரிங் தியரி,  குவாண்டம் கிராவிட்டி என நகர்வது சிறந்தது. சில பௌதீகவியல், உயரியல் அறிஞர்களை தெரிந்து வைத்திருப்பதும், கடவுள், மதங்கள் போன்றவற்றை விஞ்ஞான ஒளியில் ஆராய்வதும் கூடுதல் சிறப்பு. 

இப்போ ஒரு சிட்சுவேசனயும், சித்தாந்தம் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக எப்படி நம்மை அங்கு அடையாளம் காட்டிக் கொள்வது எனவும் பார்ப்போம்.   

சிட்சுவேசன்: பசங்ககூட ஒண்ணா தலைவர் படத்துக்கு போக முடியாம மேனேஜெர் முட்டுக்கட்டை போடுதல்

சராசரி: மச்சான் மங்கூஸ் மண்டையன் படத்துக்கு ஆப்பு வச்சிட்டாண்டா, 

பின்நவீனத்துவம்: கார்பரேட் அமைப்புக்கள் தனிமனித சுதந்திரத்தை சூறையாடுகின்றன.

மார்க்ஸியம்: அதிகாரவர்கம் அடித்தட்டு ஊழியனின் அபிலாஷைகளை அனுமதிப்பதில்லை.


இப்போ முற்போக்குவாதம் பேசுவது எப்படி என தெரிந்து கொண்டீர்களா? இனி பயப்படாமல் அடித்து நொறுக்குங்கள். முக்கியமாக கவனிக்க வேண்டியது, உங்கள் சொந்த நிலைப்பாடு என்ன என்ற புரிதலை நோக்கி கடைசிவரை நீங்கள் பயணிக்கவே கூடாது, அது உங்களை ஒரு பிற்போக்கு வாதியாக மாற்றிவிடலாம். முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், கவலையே படாமல் சமூக அமைப்பில் குற்றம் காண்பதையும், அடுத்தவர் கருத்தை எதிர்பதயும் மட்டுமே குறியாகக் கொண்டிருந்தால் நீங்களும் ஒரு முற்போக்கு வாதியே, "சராசரி" மறுப்பு என்பதே முற்போக்கு வதம் ஆகும்.

டிஸ்கி: "மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என்றால் என்ன என்றே தெரியாது முற்போக்கு வாதிகள் மீது வெறுப்பை உமிழ்ந்திருப்பது, ஆசிரியரின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றது", "கட்டுரையாளர், பல வேறுபட்ட சித்தாந்தங்களை போட்டு குழப்பியிருப்பது தெரிகிறது, எங்குமே ஒரு அடிப்படை தெளிவு, நேர்த்தி இல்லை" போன்ற விமர்சனங்கள் வரவேர்க்கப் படுகின்றன. 

டிஸ்கி: ஒருவேள முதல் பத்தியில் சொன்ன நம்ம நண்பர் அப்பாவாகப் போறாரோ? அந்த குறியீட்டுக்கு அர்த்தம் அதுவாக இருக்குமோ? அப்படி இருந்தால் வாழ்த்துக்கள்.

Wednesday, February 12, 2014

இசையும் நானும் எனது நண்பனும்......

சின்ன வயசு முதலே இசையின்னா எனக்கு ரொம்ப ஆர்வம். ரேடியோ பெட்டியில இருந்து, சோனி வாக்மேன், சீ டி பிளேயர், MP3 பிளேயர் என பல பரிமாணங்களை(!) கண்ட இசை உலகில், எம் எஸ் வி, இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான்,  மைக்கல் ஜாக்சன், ஷகீரா என கிராமியம் முதல் மேற்கத்தியம் வரையும் இசை கேட்கவும் அதன் நுணுக்கங்களை தெளிவாக அறியவும் என நான் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். அதையும் தாண்டி, இசை கருவிகளின் மீது எனக்கு இருந்த நாட்டமும் அவற்றை கற்றுக்கொள்ள நான் செய்த முயற்சிகளும் ஏராளம். எனது இசை ஆர்வத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.

எனது இசை அறிவு, ஞானம் பற்றி சொல்ல முன், எனது நண்பனது இசை ஞானம் பற்றி சொல்கிறேன். ஏன் என்றால் ஒருவரது நண்பர்கள் என்பவர்கள் அவரது விம்பமே. "எவனோ ஒருவன் வாசிக்கிறான்..." பாடல் கேட்ட நாளில் இருந்து எனது நண்பன் ஒருவனுக்கு புல்லாங்குழல் இசை மீது தீராக் காதல். சாலை ஓரத்தில் யாராவது புல்லாங்குழல் வாசித்தால் கூட மணிக்கணக்கில் அவர்கள் அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பான். அந்த இசைக் கருவியை கற்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஆர்வம். எப்பப் பார்த்தாலும் "என்னைக்காவது ஒரு நாள், ஒரு புல்லாங்குழல் வாங்கிடனும் மச்சான், அதுதான் என் வாழ்க்கை லட்சியம்" ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். இவ்வாறாக பல நாட்களாக தீராத முயற்சி எடுத்து கற்றுக் கொண்ட அவன் ஒருநாள் திடீர் என என்னிடம் வந்து, "மச்சான், இப்போ நான் செம்மையா புல்லாங்குழல் வாசிப்பேன், இனிமேல் அடுத்த கட்டத்துக்கு போகவேண்டியதுதான், நீ எனக்கு ஒரு புல்லாங்குழல் வாங்கித்தா" ன்னான்.


நானும் அவனுமா சேர்ந்து புல்லாங்குழல் வாங்கறதுக்காக டவுனுக்கு கடைக்குப் போனேம். நாங்க போன தெருவுல வரிசையா பல இசைக் கருவிகள் விற்கும் கடைகள் இருந்தாலும் நம்மாளு குறிப்பா ஒரு கடைக்குத்தான் போகணும்ன்னு விடாப் பிடியா இருந்தான். அந்த கடை, சிவாஜி படத்துல வார்ர கடை செட்டப்ன்னு வச்சுக்கங்களேன், அங்கேயும் தமிழ் செல்வி மாதிரி ஒரு செம பிகரு இருந்திச்சி. நம்மாளு அந்த பிகருக்கிட்ட போயி புல்லாங்குழல் குடுங்கன்னு கேட்டான், அந்த பிகரும் என்னன்ன பெயர் எல்லாமோ சொல்லி அது வேணுமா, இது வேணுமான்னு ஏராளமா கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே இருந்திச்சு, நம்மாளும் சலிக்காம என்னெல்லாமோ பேசினான், அவனோட ஞானத்த கண்டு நான் மெய் சிலிர்க்க நின்னிட்டு இருந்தேன். கடைசியா அந்த பொண்ணும் போயி எதோ ஒரு புல்லாங்குழல் கொண்டு வந்திச்சு, நம்ம மாப்ள அத கையில வாங்கிட்டு, அப்படியே எங்கிட்ட வந்தான், கிட்ட வந்தவன் புல்லங்குழல ஒரு வாட்டி உத்துப் பார்த்தான், அப்புறம் என்னப் பார்த்து "என்ன மச்சான் இந்த குழல்ல இத்தன ஓட்டை இருக்கு, இதுல நான் எதுல வாய் வச்சு ஊதுரது" ன்னு கேட்டான், நான் செம டென்ஷன் ஆகிட்டேன், காண்டுல அவன்கிட்ட கேட்டேன், மச்சான் நெசமா சொல்லு, உன்னோட ஆர்வம் புல்லங்குழல் மேலயா இல்ல அந்த தமிழ் செல்வி மேலயான்னு, அதுக்கு நம்ம நண்பன் என்னைப் பார்த்து திமிராக் கேட்டானே ஒரு கேள்வி,

"இன்னுமாடா உனக்கு இது புரியல?"


இதற்கும் எனது இசை ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்கிறீங்களா? சொல்றேன், கொஞ்ச நாளாவே இந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிய பார்த்துக்கிட்டு இருக்கேன், அதுல யாராவது "ரெண்டாவது சரணத்துல மூணாவது வரியில அந்த "ச ரி த ம, க த ப நி" ல ஸ்ருதி கொஞ்சம் விலகிறிச்சின்னு சொல்றப்போ எனக்கு மேல உள்ள படம்தான் ஞாபகம் வரும். ஏன்னா நம்ம இசை ஞானம் அப்படி. 

படிப்பினை: ஆர்வத்துக்கும் அறிவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும், ஆர்வம் எதனால வேணும்னாலும் வரலாம், அறிவு வரணும்னா ஆர்வம் மட்டும் இருந்து பத்தாது, தேடல், புரிதல், முயற்சி, கற்றல் என பல விடயமும் இருக்கணும், இல்லையின்னா எப்பவும் என்னையும் என் நண்பனைப் போலவும் ஆர்வக் கோளாறுதான்.

டிஸ்கி: இந்த பதிவு எழுதினதே, கொஞ்ச நாளாவே மனசக் கொடஞ்சிக்கிட்டு இருக்கற ஒரு விஷயத்த உங்க கூட பகிர்ந்துக்கத்தான். அது என்னன்னு கேக்கறீங்களா, கீழே பாருங்க. எதுவுமே புரியலன்னா பெருசு படுத்தி பாருங்கய்யா, நான் படத்தைச் சொன்னேன்.

குழந்தைகள், இருதய நோயாளிகளுக்கு உகந்ததல்ல.