Showing posts with label micchkaasu. Show all posts
Showing posts with label micchkaasu. Show all posts

Sunday, February 23, 2014

இயக்குனர் ம.தி.சுதா வின் மிச்சக்காசு - ஒரு பின்நவீனத்துவ பார்வை.

தமிழில் பல குறும்படங்கள் வந்திருந்தபோதும், மிச்சக்காசு படம் பேசும் அளவு நுணுக்கமான சமூக கருத்துக்களையோ குறியீடுகளையோ உள்ளடக்கியதாய் சமீபத்தில் எந்த குறும் படமும் வந்ததாய் நினைவில்லை. இரண்டு அல்லது மூன்று வசனங்கள், நான்கே நான்கு கதாபாத்திரம், ஆர்ப்பாட்டமில்லாத மிகவும் அடக்கமான ஒரு இசை, ஒரே வரி கதை, இவை அனைத்தையும் தாண்டி திரைக்கதையோட்டத்தில் ஆங்காங்கே தூவிக் கிடக்கும் பின்நவீனத்துவக் குறியீடுகளே இந்தப் படைப்பை உயர்த்திப் பிடிக்கிறது. 


இந்தக் குறும் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது குரல் வழி மட்டுமே ஒலித்து முடிவுறும் அந்த தாயின் கதாபாத்திரம். அத்தோடு பையன் கடைக்குசென்று வாங்குவதாக காட்டப்படும் பொருட்கள். சமயலறையிலும், சலவை அறையிலும், பூஜை அறையிலும் மட்டுமே என அடக்கி ஒடுக்கப்பட்ட நம் சமூதாயப் பெண்களின் கண்ணீர் காவியத்தை இவ்வளவு தெளிவாக பக்கம் பக்கமாக வசனம் வைத்துக் கூட காட்டியிருக்க முடியாது. அவ்வளவு நுட்பமான ஒரு காட்ச்சியமைப்பு. அந்த நாய் கதாபாத்திரம் இந்த இடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. முச்சக்கர வண்டியில் விளையாடும் அந்த நாயினை நமக்கு காட்டும் இயக்குனர், அந்த தாய் கதாபாத்திரத்தை நமக்கு காட்டாமல் வீட்டுக்குள் எங்கோ இருந்து ஒலிக்கும் குரலினூடு மட்டுமே கையாண்டிருப்பது எமது சமூகப் பெண்களுக்கு, சமூகத்தில் நாய்களுக்கு இருக்கும் அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை என்பதை முகத்தில் அறைந்தால்போல் சொல்கிறது.

இந்த குறும் படத்தினை படத்தின் அடி நாதமாக இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை தவிர்த்துவிட்டு, வெறும் சிறுபிராயத்து அனுபவம் மட்டுமே என்றோ, சிறு கடை முதலாளிகளின் ஏமாற்று என்றோ மட்டுமே பார்த்துவிட முடியாது. இதை சிறுவர் துஷ்பிரயோகத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்க வேண்டி இருக்கிறது. சிறுவனுக்கு மிட்டாய் கொடுக்கும் அந்த கடைக்காரர் ஒரு வயது வந்தவருக்கு மிட்டாய் கொடுத்துவிடுவாரா என சிந்திக்க வேண்டி உள்ளது. ஒரு சிறுவனை ஒரு கடைக்காரர் மீதி காசு கொடுப்பதற்குப் பதில் மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை, பன்னாட்டு கார்பரேட் கம்பெனிகள் நம் பாமர மக்களை ஏமாற்றுவதுடன் தொடர்ப்பு படுத்திப் பார்க்கவேண்டியதாகவும் உள்ளது. "தள்ளுபடி", "தவணை முறைக் கட்டணங்கள்", "இலவச இணைப்பு" என நகர்புற மக்கள்கூட பல மிட்டாய்களை வாங்கிய வண்ணமே இருக்கிறார்கள். குறும் படத்தின் இறுதியில் நமது கதையின் நாயகன் பணத்திற்குப் பதில் மிட்டாய்களை கொடுப்பதாக காட்டுவதன் மூலம் சுதாகரித்துவிட்ட எமது சமூதாயத்தினை காட்டுகிறார் இயக்குனர். அத்துடன் கடை முதலாளி கொடுக்கும் அந்த கடைசி முக பாவனை, பன்னாட்டு வணிக முதலைகளின் கையறுநிலையை சுட்டிக்காட்டுகிறது.


மிச்சக்காசு என பெயர் போடும் இடத்தில் ஆரம்பிக்கிறது இயக்குனரின் குறியீட்டு வித்தைகள். மிசசககாசு என எழுதி, இரு புள்ளிகள் இட்டு மிச்சக்காசு என மாற்றுகிறார். இந்த உலகில் எதுவுமே அற்பமானதோ பயனற்றதோ அல்ல, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன் உள்ளது, சில தனித்தும் சில இணைந்தும் அப்பயனைத் தரும் எனும் ஆழ்ந்த குறியீடு அங்கு பொதிந்துள்ளது. மீன்தொட்டியில் மீன்கள் இரை உண்ணும் காட்ச்சிப் படிமத்துடன் படம் ஆரம்பிக்கிறது. இதே போன்று படம் முழுவதும் பல காட்ச்சிப் படிமங்கள். ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட இரு நாற்காலிகளில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்து ஓய்வு நேரத்தில் ஓவியம் வரைவதான ஆரம்ப காட்ச்சிப் படிமம், நமது கதையின் நாயகனின் மதி நுட்பத்தையும் அவனது சமூக அக்கறையையும் ஒருங்கே கோடிட்டு காட்டுகிறது. 

ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு குறியீட்டை புதைத்து வைத்திருக்கிறார் ம.தி. சுதா. எப்போதும் திறந்தே இருக்கும் வீட்டுக் கதவு மூலம் கதை மாந்தரின் அயலவருடன் நட்ப்பு பாராட்டும் குணத்தை உணர்த்துகிறார், சிறுவனின் பொறுப்புணர்ச்சியை அவன் செருப்பு அணிந்துகொள்ளும் காட்ச்சிமூலம் காட்டுகிறார். இப்படி எத்தனையோ சொல்லலாம். இதுக்கும் மேல நான் ஏதாவது சொன்னா கண்டிப்பா எனக்கு அடிக்க வருவீங்கன்னு தெரியும், அதனால இந்த பின்நவீனத்துவ பார்வையை இங்கயே முடிச்சுக்கலாம். 

சமீபத்தில் பார்த்த குறும் படங்களில் என்னை கவர்ந்த ஒரு படம் இது. படத்தின் நிறைகளை இதுவரை பல பதிவுகளில் பல நண்பர்கள் சொல்லியாச்சி. படத்தில் எனக்குப் பட்ட ஒரே குறை ஒலிச்சேர்ப்பு (sound mixing). மவுனத்துக்கும் இசைக்கும், மவுனத்துக்கும் வசனங்களுக்கும் இடையே வரும் அந்த மைக் ஆன் ஆவதுபோன்ற ஒரு ஒலி, அது தவிர்க்கப் பட்டிருந்தால் குறும் படம் இன்னும் ரொம்ப நேர்த்தியாக வந்திருக்கலாம்.

பட உதவி முகப்புத்தகம் : https://www.facebook.com/actormathisutha

டிஸ்கி: நீண்டநாளாக ஏதாச்சும் ஒரு படத்துக்கு இப்படி அறிவுஜீவித்தனமான ஒரு விமர்சனம் எழுதனும்னு ஒரு ஆசை இருந்திச்சு, அத நிறைவேத்திக்க இது ஒரு சந்தர்ப்பம், அம்புட்டுதான். மற்றும்படி இது எங்க மொக்கைப் பதிவு லிஸ்டுல பத்தோட பதினொன்னு.

டிஸ்கி:  AAA International Award நிகழ்வில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்ற குறும்படம் இது. படத்தில் பணியாற்றிய  அனைவருக்கும், இயக்குனர் ம.தி. சுதாவுக்கும் நமது வாழ்த்துக்கள்.