Monday, February 11, 2013

விஸ்வரூபம், கமல், பி ஜே - சர்ச்சைகளும் சில கருத்துக்களும்

பதிவரானதுக்கு அப்புறம்தான் எத்தன எத்தன பிரச்சினை. முன்பெல்லாம் பதிவுகள படிக்கறப்போ ஒரு சந்தோஷம் இருக்கும், இப்போல்லாம் இந்த பக்கம் வந்தாலே ஒரே மன உளைச்சல், தலைவலி, வயிற்ருப் போக்கு, வாந்தி பேதிதான். ஏதாவது ஒரு சின்ன காரணம் கெடைச்சா போதும் அடிச்சிக்கறதுக்குன்னு ஒரு கூட்டமே இருக்கு, இதுக்கு நடுவுல எரியற நெருப்புல எண்ணைய ஊத்திவிட்டு குளிர் காயறதுக்குன்னு ஒரு கூட்டம், நமக்கு சம்பந்தமே இல்லையின்னாலும் ஒரு நாலு பதிவ போட்டு ஹிட்டு வாங்குறதுக்கும் சண்டைய மூட்டி விடுரதுக்கும்ன்னு. இதெயெல்லாம் படிக்கறப்போ இதுல எல்லாம் இருந்து ஒதுங்கியே இருக்கலாம்ன்னு நினைச்சா, நீயும் ஒரு பதிவர், உனக்கும் சில சமுதாய பொறுப்பு இருக்குன்னு நம்மளையும் இழுத்து விடுறதுக்குன்னு நாலு நண்பர்கள். இந்த சின்ன வயசுல இத்தன பிரச்சினைகளையும் நான் எப்படித்தான் சமாளிக்க போறேனோ? என்ன நடந்தாலும் நடக்கட்டும்ன்னு என்னோட கருத்துக்களையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன்.


கமல் எனும் கலைஞருக்கு ஆதரவாளர்களும் எதிரிகளும் ஏராளம். உண்மைய சொல்லப்போனா எதிரிகள்தான் ஏராளம், எதோ ஒரு காரணுத்துக்காக அவர எதிர்கறதுக்கு ஏதாவது ஒரு கூட்டம் எப்பவுமே இருக்கும். அந்த கூட்டத்த எதிர்கறவங்க எல்லாரும் உடனே கமல் ஆதரவாளர்களாக மாறிடுவாங்க. கமல் எதிர்ப்பு தனிப்பட்ட குழு அரசியல விட பெரிதாக இருக்கறப்போ எதிரிக்கு எதிரி நண்பன்னு சில பேர் அந்த கூட்டத்த ஆதரிக்கவும் செய்வாங்க, இன்னும் சிலபேர் சும்மா இருந்த எவனயாவது சீண்டி விட்டு எதிர்ப்ப கிளப்பிவிட்டு அதுல குளிர் காஞ்சிட்டு இருப்பாங்க. இது இன்னிக்கி நேத்து இல்ல கடந்த பத்து பதினச்சு வருசமா நடத்துக்கிட்டுத்தான் இருக்கு. இன்னிக்கி என்னன்னா குழு அரசியல்கள் கமல் எதிர்ப்பையும் தாண்டி வலுப்பெற்றிருக்கு. அதனால எப்பவுமே ஒரு கலைப் படைப்பை "கலை நேர்த்தி/நேர்மை" அடிப்படையில் வைத்து விமர்சிக்கக் கூடியவர்கள் கூட, இந்த குழு அரசியலை மையப்படுத்தியே விமர்சனத்த தொடுக்கறாங்க. இப்படியே போய்க்கிட்டு இருந்தா சீக்கிரமே தமிழ் சினிமா ஹாலிவூட் குப்பைகளை மிஞ்சிவிடும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்லை. இதுதான் நம் முன்னே இருக்கும் நீண்டகால பிரச்சினை. 

இத விட்டுட்டு குறுகிய கால பிரச்சினை என்னன்னு பார்த்தோம்னா விஸ்வரூபமும் அதை சூழ உள்ள சர்ச்சைகளும்.

முதலாவதா விஸ்வரூபம் படத்தை ஒரு சாதாரண வணிக சினிமாங்கற தரத்தை விட உயர்த்திப் பார்க்கவேண்டிய எந்த தேவையும் இல்லை. படம் ஒரு கருத்தையும் போதிக்கவும் இல்லை, எந்த நியாயமான விவாதத்தை கிளப்பவும் இல்லை. தீவிரவாதத்தையும், சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும், உலக அரசியல் குழப்பங்களையும் வணிகமாக்கும் சாதாரண மூன்றாம்தர ஹாலிவூட் உத்தி வணிக முயற்சிதான் இந்த சினிமா. படத்தில் போதிக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுப்புத்தியின் அடிப்படையில் உருவானதே அன்றி எங்கும் ஒரு ஆழமான பார்வை கிடையாது. விஸ்வரூபம் படம் பார்த்தவர்கள் யாரும் இதை மறுக்க முடியாதுங்கறது என்னோட கருத்து. கமல் ஒரு நேர்மையான கலைப் படைப்பை கொடுக்க மறுபடியும் தவறிவிட்டார். இன்னுமொரு வகையில் சொல்லப்போனால் ஆயுத எழுத்துங்கற படத்தை எடுத்து மணிரத்தினம் எப்படி மணிரத்தினம்கற மாயையை உடைத்தாரோ அதே போன்று விஸ்வரூபம் படம் மூலம் கமல் என்கிற மாயையை கமலும் உடைத்திருக்கிறார். இனியும் ஒரு பொறுப்பு வாய்ந்த கலைஞராக கமல் குறைந்தபட்ச கலை நேர்த்தியுடன் செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஒரு தீவிர கமல் ரசிகனான எனக்குக் கூட இல்லை. வணிக வெற்றிக்காக கமல் எதையும் செய்வார் என மீண்டும் அடித்துக் கூறியிருக்கிறார் கமல்.

படத்தோட ஸ்கிரிப்ட் முழுசா எழுதி முடித்ததும் ஆப்ரூவலுக்காக அமேரிக்கா அனுப்பி வைத்ததாகவும், ஸ்கிரிப்ட்டில் எழுதிய பல சம்பவங்கள் அதன் பின்னர் நிஜத்தில் நடந்ததாகவும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் கமல் கூறுகிறார். ஒரு தமிழ் சினிமாவை எடுக்க அமெரிக்க அரசிடம் அனுமதி கோரும் கமல், தமிழ் நாட்டில் எத்தனையோ முஸ்லீம்கள் வாழும் போது, ஒரு முஸ்லீமிடம், தலிபான்கள் குரான் முன்னாடி கொல்றாங்களே இதத்தான் குரான் சொல்லுதான்னு ஒரு கேள்வி கூடவா கேட்க்க முடியாது? அது போகட்டும், இந்த படத்தின் தடையை அனுமத்தித்தால், ஒரு குழுவிடம் காட்டி அனுமதி பெற்றுவிட்டுத்தான் திரையிட வேண்டும்ன்னு எதிர்காலத்துல சட்டம் வரும்ன்னு பயப்படுபவவர்கள், விஸ்வரூபம் போன்ற முன்னுதாரணங்கள் வந்தால் ஒரு தமிழ் படம் எடுக்க கூட அமெரிக்க அரசிடம் அனுமதி கோரவேண்டி இருக்கும் அதனால் விஸ்வரூபம் போன்ற படங்களை எதிர்க்கிரோம்ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு கூட சொல்லாமல் இருப்பதும் இந்த எதிர்ப்பும் ஆதரவும் நேர்மையானதா இல்லை குழு அரசியலா என்கிற சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தவே செய்கிறது.


இப்போ இந்த படத்த எதிர்க்கலாமா? கருத்தியல் ரீதியாக இந்த படத்துக்கு விமர்சனம் முன்வைக்கலாம், அதுதான் நியாயம், ஆனால் படத்தை கண்மூடித்தனமாக எதிர்க்க முடியாது. இந்தப் படம் இஸ்லாத்தை கேலி செய்கிறது என்கிற வாதம் எந்தளவு அபத்தமோ, இந்த படம் தீவிர வாதத்தை எதிர்கிறது எனும் வாதமும் அதே அளவு அபத்தமாகவே எனக்கு படுகிறது. ஒரு கலைஞனுக்கு அவனது எண்ணத்தில் உதித்த ஒன்றை ஒரு படைப்பாக்கி மக்கள் முன் சமர்ப்பிக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. ஒரு படைப்பை உருவாக்கும் வரையில்தான் அது நமக்கு சொந்தம், அதன் பின் அது நுகர்வோன் சொத்து ஆகி விடுகிறது என்பதை படைப்பாளியும் மறக்கக் கூடாது. ஆப்கான் - அமெரிக்கப் போராட்டத்தை ஒரு தமிழ் படமா எடுக்கனுமாங்கறது தேவை அற்ற வாதம். அதை தமிழ் படமா எடுக்கும்போது எப்படி வேணும்னாலும் எடுப்பேன்ங்கறதும் ஒரு பொறுப்புள்ள படைப்பாளி முன்வைக்கக் கூடிய வாதம் அல்ல. முடிவா விஸ்வரூபம் மீது தடை கோரி நடத்தப் பட்ட போராட்டம் நியாம் அற்றது, வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது. அதேபோன்று, ஒரு குழு அந்தப் படத்தை தடை கோரி போராடியது என்கிற ஒரே காரணத்துக்காக, ஹாலிவூட் தரத்தில் ஒரு தமிழ் சினிமா, தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு அற்புதமான படம், இதை எல்லாரும் ஆதரிக்கனும், இதை எதிர்கறவன் எல்லாம் தீவிரவாதின்னு சொல்றதும் நேர்மை அற்ற வாதம்.

இதை நான் நேர்படவே கூறவேண்டும், திரு பீ. ஜே அவர்களின் ஒருமணிநேர விஸ்வரூப உரையை பார்க்கும் துர்பாக்கிய நிலைமை எனக்கும் ஏற்பட்டது. அந்த உரையை முற்றும் முழுதாக நான் கண்டிக்கறேன். மாற்றுக் கருத்தை நாகரீகமான முறையில் முன்வைக்க வேண்டும். மானுஷ்ய புத்திரனை வேறு பெயர் சொல்லி அழைப்பதையோ, பாரதிராஜாவை மோசமான முறையில் கேலி செய்வதையோ யாரும் அனுமத்திக்க முடியாது. எந்த ஒரு கருத்து மோதலிலும் தனி மனித தாக்குதல் இருக்கக் கூடாது. இஸ்லாத்தின் மீது சேறை வாரி இறப்பது விஸ்வரூபம் போன்ற படங்கள் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது மிகவும் தவறு, இது போன்ற உங்கள் நடவடிக்கைகளும் தான். இஸ்லாம் அதிகளவில் தவறாக புரிந்துகொள்ளப் பட்ட ஒரு மார்க்கம் என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லீம் நண்பர்களுடன் பழகிய எவரும் மறுக்க மாட்டார்கள். முஸ்லீம் அல்லாதவர்கள் மட்டும் அல்ல முஸ்லீம்களில் கூட பெரும் பகுதியானவர்கள் இஸ்லாத்தை தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது இது சம்பந்தமாக வெளிவந்த சில பதிவுகளையும் அதற்க்கான பின்னூட்டங்களும் படிக்கும் ஒருவருக்கு தெளிவாகத் தெரியும். திரு கமல் ஹாசன் அவர்களுக்கு ஒரு படைப்பாளியாக எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதைவிட நூறு மடங்கு அதிக பொறுப்பு பீ ஜே போன்ற தலைவர்களுக்கு இருக்கிறது. இஸ்லாத்தை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள். விஸ்வரூபம் படத்தை நேர்மையான முறையில் விமர்சிக்கும் பொறுப்பு ஒரு கலை விமர்சகருக்கு இருப்பது போல, பீ ஜே அவர்களின் செயல்களை கண்டிக்கும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இருக்கிறது. 


தாலிபான் என்பது ஒரே அமைப்பாக இருந்தபோதும், தாலிபான்களில் அடிப்படை நோக்கம் சம்பந்தமாக மூன்று பிரிவு இருக்கிறது. ஒன்று ஆப்கானிஸ்தானை முன்னேற்ற வேண்டும் என்கிற நோக்கில் ஆப்கான் மக்களால் உருவாக்கப் பட்டது, ரெண்டு ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியிலும் கல்வி, கலாசார ரீதியிலும் பாகிஸ்தானுக்கு அடிமையாக வைத்திருக்கவேண்டும் என்கிற நோக்கில் பாகிஸ்தானினால் உருவாக்கப் பட்டது, மூன்று இஸ்லாத்தை பயங்கரவாத மதமாகவும், உலகின் பொது எதிரியாகவும் சித்தரிக்க வேண்டும், அதன் மூலமாக தனது எண்ணை வழியை அமைத்துக்கொள்ள ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் அடிமைப்படுத்த அமெரிக்காவால் உருவாக்கப் பட்டது. இதில், இஸ்லாத்துக்கான போராட்டம், ஜிஹாத் இதர விதரங்கள் எங்கும் இல்லை. சுய நிர்ணய உரிமைக்காக போராடும் தலிபான்களை எதிர்க்க வேண்டிய எந்த அவசியமும் அமெரிக்க அடிவருடிகளை தவிர யாருக்கும் இல்லை, அதே போன்று இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த பெண்கள் உரிமையயை, சிறுவர் உரிமையை மறுக்கும் தலிபான் பிரிவினரதும், பொருளாதார ரீதியில் ஆப்கானை வீழ்த்த புத்தர் சிலையை தகர்த்த பிரிவினரையும் மதத்தின் பெயரால் ஆதரிக்கும் எந்த தேவையும் உலகில் எந்த மூலையில் உள்ள எந்த முஸ்லீமுக்கும் இல்லை. இதையும் மீறி ஆப்கான் போரும், அல்கயிதா, தலிபான் தரப்பும் இஸ்லாம் வளர்க்க ஜிஹாத் நடத்துவதாகவும், புனிதப் போராளிகளாகவும், அமேரிக்கா தீவிரவாதத்துக்க்கு எதிரான போர் நிகழ்த்துவதாகவும் இன்னும் யாரும் கற்பனை பண்ணிக்கிட்டு இருந்தா, விஸ்வரூபம் கூறும் "அமெரிக்கன் எண்ணைக்காக போராடுறான் (உண்மை), நாம அல்லாஹ்வுக்காக போராடுறோம் (சுத்தப் பொய்)" டயலாகை நம்பிக்கிட்டு இருந்தா அதைவிட முட்டாள் தனம் எதுவுமே இருக்காது. 

இனி விஸ்வரூபம் படத்தின் கருத்தியல் சம்பந்தமாக சில கருத்துக்கள். 

1. தமிழ் சினிமாவுல இஸ்லாமியர்களை சித்தரிக்கும் போது காலா காலமாக இருந்துவரும் டைப் காஸ்டிங் கமலுக்கு தெரியாது ஒன்றும் இல்லை, அதை உடைக்க நினைக்கும்போது மதத்தையும், மதத்தை பின்பற்றுவோரையும் பிரித்து நோக்கக்கூடிய நிலைக்கு பார்வையாளனை தயார் படுத்த கமல் தவறிவிட்டார். அதற்க்கான சந்தர்ப்பங்கள் திரைக் கதையில் இல்லாமலும் இல்லை எனும்போது சற்று கவலை ஏற்படவே செய்கிறது. எந்த ஒரு மதத்திலும் மதத்தை சரிவர புரிந்துகொள்ளாத ஒரு கூட்டம் இருக்கவே செய்யும், அது மதத்தின் பெயரால் செய்யும் பல காரியங்கள் மதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துவிடும். சரியான புரிதல் இல்லாதபோது, மூன்றாம் தரப்பு அந்த மக்களை இலகுவில் ஆட்டி வைக்க முடிகிறது. தலிபான்கள் எது செய்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஒரு கூட்டம் இருப்பதும் சரியான புரிந்து கொள்ளல் இல்லாததனாலேயே.


2. அமரிக்கர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள்ன்னு தீவிரவாதி வாயாலேயே வாறமாதிரி வசனம் அமைக்கும் போது (அடுத்த காட்சியிலேயே பெண்கள், சிறுவர்கள் தங்கியிருக்கும் இடத்தின் மீது அமெரிக்க வானூர்திகள் கூண்டு வீசுவதாக காட்சி அமைத்த போதும்), அமெரிக்க வீரன் சுட்ட குண்டு தவறுதலாக ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அவன் முகம் சுழிப்பதாக காட்சி அமைக்கும் போது , தீவிரவாதிகள் கொலைசெய்யும்போது பாவிக்கும் குரான் வாசகங்கள், அல்லாஹு அக்பர் கோஷங்கள் தீவிரவாதமும் ஜிஹாதும் ஒண்ணுன்னு சொல்லற ஒற்றைப்படை பார்வயத்தான் உறுதி செய்யுது. மனிதர்களை கொலை செய்வது எவ்வளவு பெரிய தவறுன்னு இஸ்லாம் சொல்லக்கூடிய எந்த ஒரு விடயமும் படத்தில் காட்டப்படாமல் விடுபட்டது கவலை தருவது. ஒரு பொறுப்புள்ள கலைஞராக, ஒன்று கமல் இந்த விடயங்களை தவிர்த்து இருக்கலாம், இல்லை அது தவறு என்பதை சொல்லி இருக்கலாம், தீவிரவாதத்திற்கு எதிரான குரான் வசனங்களை மேற்கோள் காட்டி இருக்கலாம். அல்லது நமது முஸ்லீம்சகோதரர்களாவது கமலையும் கலைஞர்களையும் ஒருமையில் திட்டாமல், குரானின் பெயரால் நடக்கும் கொலைகளை நியாயப் படுத்தாமல், குரான் போதிக்கும் அகிம்சையை எடுத்துக் காட்டியிருக்கலாம்.   

3.FBI அதிகாரியாக வரும் கறுப்பின பெண் முட்டாளாகவும், நாகரீகம் அற்றவளாகவும் சித்தரிக்கப்பட்டும் வெள்ளை அமெரிக்கர்கள் நாகரிக காவலர்களாக சித்தரிக்கப்பட்டும் இருப்பது. வெள்ளைக்கார FBI ஆபீசர் முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக காட்சி இருந்தாலும், அதற்க்கு காரணமாக கமலின் பையிலிருந்து அவர் கண்டெடுத்த துப்பாக்கியை காட்டி அவரது நடத்தையை நியாயப் படுத்தும்போது, இது கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. ஆப்மார்க் ஹாலிவூட் திரைப்பட கறுப்பின குண்டுப் பெண் தான் இவர். இந்த அளவு உலகத் தரத்துக்கு கமல் போயிருக்கத் தேவையில்லை. 

4. தலிபான்கள் பெண்களின் மீது அடக்குமுறையை கையாள்வதாகவும், சிறார்களின் குழந்தைப் பருவம் முற்றிலும் பறிக்கப்பட்டுவிடதாகவும் மிகவும் நுணுக்கமான காட்சிகள் அமைக்கப்பட்டபோதும், நாயகன் பாத்திரம் அதைக் கண்டு பச்சாதாப படுவதாக வந்தபோதும் இஸ்லாம் பெண்களின் உரிமையை, சிறுவர் உரிமையை எவ்வளவு காக்குறது என்பதை காட்ட மறுத்தது அமெரிக்கர்களின் பிரச்சாரத்தை வலிமைப் படுத்துவதாகே உள்ளது. ஒரு ஆப்கான் பெண் மருத்துவரை காட்டுகிறார், என்ஜினீரிங் படிக்க இங்கிலாந்து போக ஆசைப்படும் குழந்தையை காட்டுகிறார், வீட்டில் ஆங்கிலம் பேசும் பெண்ணை காட்டுகிறார், மனைவியின் ஆஸ்துமாவுக்கு வைத்தியம் செய்ய வரும் பெண்ணை வில்லன் கதாபாத்திரம் கேவலமாக திட்டுவதை காட்டுகிறார், அதற்க்கு அந்த பெண் அமெரிக்க கைதிகள் இருக்கும் இடத்தை அமெரிக்கர்களுக்கு தெரியப்படுத்திவிடக் கூடும் என காரண வசனம் வைக்கிறார், இருப்பினும் பெண்ணுரிமை, சிறார்கள் உரிமை மீறப்பட்டதாக மட்டுமே பார்வையாளன் எடுத்துக்கொள்ளக் கூடியாதாக அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. கமலின் நேர்மைக்கும் வணிகத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டமோ? 

5. தலிபான்கள் பாவிக்கும் தொப்பி, தாடி, அலங்காரங்கள், அமெரிக்க உலங்கு வாநூர்த்திகளின் நிறம் அமைப்பு போன்ற பல நுணுக்கமான விடயங்களில் கமலின் ஆராய்ச்சியும், கவனமும் மெய் சிலிர்க்க வைக்கும் அதே வேளை, ஆப்கான்-அமெரிக்க போர் சம்பந்தமான அரசியலில் கொஞ்சமும் அக்கறை அற்று பொதுப் புத்தியை மட்டுமே மையமாக கொண்டு கதையையும், கதைக்கான கழத்தையும் அமைத்திருப்பது ரொம்பவுமே வேதனை தருகிறது. படத்தில் பலவாறான காட்சிகளும் இருக்கின்றன, ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட விதம், கொஞ்சம் அமெரிக்க பக்கச்சார்ப்பு அதிகம் இருப்பதான, ஒரு வித சமநிலை பேணப்படாததான உணர்வை தருகிறது. ஒருத்தனுக்கு தீவிரவாதி இன்னொருத்தனுக்கு போராளின்னு சொல்வாங்க, அமெரிக்க ராணுவம் நடத்தும் கொடுமைகளையோ, குண்டு வீசி கொல்லப்பட்ட குழந்தைகள் பெண்களையோ, பொருளாதார ரீதியாக அந்த மக்கள் மீது தொடுக்கப்படும் யுத்தங்களையோ பற்றிப் பேசுவதை மிகக் கவனமாக தவிர்த்திருக்கிறார் கமல். தீவிரவாதி தலைவன் தனது குடும்பத்தை பறிகொடுத்துவிட்டு அழும் காட்சியும் அதற்க்கான அழுத்தமும், அவன் பெண் மருத்துவரை திட்டும் காட்சிக்கான அழுத்தத்தின் பாதி கூட இல்லை. விஜயகாந்த், அர்ஜுன் படங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல இந்த படம், என்ன ஒரு வித்தியாசம் அவை இந்திய தேசப்பற்றை வலியுறுத்தும், இது அமெரிக்க தேசப்பற்றை வலியுறுத்துகிறது.

6. படம் தொடுக்கும் கருத்தியல் அரசியலை தள்ளிவிட்டுப் பார்த்தல் ஒரு ரசிக்கக் கூடிய என்டேர்டைன்மென்ட் சினிமாதான் இது. ஆயினும் விஸ்வரூபம் படம் எடுப்பதற்கு கமல் ஹாசன் தேவையில்லை, முருகதாஸ் போதும். கமல் ஹாசன் எனும் படைப்பாளியால் எல்லா விதத்திலும் இதை விட சிறந்த சினிமாவை வழங்க முடியும். இனிவரும் காலங்களிலாவது செய்வாரா கமல்? (விஜய் ரசிகர்களுக்கு வரிசையாக குருவி, வில்லு, சுறா போன்ற படங்களை பார்த்துவிட்டு காவலன் பார்த்ததான அனுபவம், கமல் ரசிகர்களுக்கு விஸ்வரூபம். அழுறதா சிரிக்கறதான்னு தெரியல)


டிஸ்கி: இன்னும் படம் சம்பந்தமான பல கருத்துக்கள் இருப்பினும் பதிவின் நீளம் கருதி(யும், பார்த்து ரொம்ப நாள் அனதால மறந்துவிட்ட காரணத்தினாலும்), இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 

டிஸ்கி: இஸ்லாத்தின் மீது அமேரிக்கா நிகழ்த்தும் மீடியா பயங்கரவாதமும், முஸ்லீம்கள், முஸ்லீம் நாடுகள் என பெயர் போட்டுக்கொண்டு சிலர்/அல்லது பலர் செய்யும் கலாசார பயங்கரவாதங்களும், அதற்க்கு தெரிந்தோ தெரியாமலோ இலக்காகிவிட்ட தமிழ்நாட்டு முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நண்பர்களும் தங்கள் பக்க நியாங்களையும், உண்மைகளையும் பரிமாறிக் கொள்ளவும், ஆரோக்கியமான விவாதங்களை நிகழ்த்தவும் தெரிந்தோ தெரியாமலோ கமல் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறார். பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அறிவாளிகளின் கடமை. இதை விட்டு நம்ம குழாயடி சண்டைகளில்தான் நிலைத்திருக்க விரும்பினால் எந்த சுப்பனாலயும் நம்ம சமூகத்த காப்பாத்த முடியாது.

டிஸ்கி: நானும் எத்தன நாளைக்குத்தான் மொக்க பதிவாவே போட்டுக்கிட்டு இருக்கறது. சமுகப் பிரச்சினைகள்ள கருத்து சொல்லன்னும்கற ஆர்வம் எல்லாம் எனக்கும் வராதா? என்ன விடுங்கங்க, நான் எல்லாம் மொக்கப் பதிவர்ன்னு தெரிஞ்சே வாழ்ந்துக்கிட்டிருக்கேன், அவனவன் ஒளிவட்டப் பதிவர்ன்னு நெனச்சிக்கிட்டு மொக்க போட்டுக்கிட்டிருக்கான். 

29 comments:

  1. கமல் எனும் படைப்பாளியின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த அனைவருக்குமே, கருத்தியல்ரீதியாக இந்தப்படத்தை கண்டிக்கும் கடமை உள்ளது. அதை உங்கள் பதிவு செம்மையாகச் செய்கிறது. அதற்கு முதலில் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. //படத்தோட ஸ்கிரிப்ட் முழுசா எழுதி முடித்ததும் ஆப்ரூவலுக்காக அமேரிக்கா அனுப்பி வைத்ததாகவும், ஸ்கிரிப்ட்டில் எழுதிய பல சம்பவங்கள் அதன் பின்னர் நிஜத்தில் நடந்ததாகவும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் கமல் கூறுகிறார்.//

    தம்பி, ஒரு பாஃரினர் வெளிநாட்டில் ஷூட்டிங் செய்ய வேண்டும் என்றால், படத்தின் முழு ஸ்க்ரிப்ட்டையும் கொடுத்து அனுமதி வாங்க வேண்டும் என்பது பலநாடுகள் பாஃலோ செய்யும் விதி.(ஆச்சரியம் ,ஆனால் உண்மை: நம்ம இந்தியாவும் அப்படியே:http://indiafilm.org/permissions/).

    அதைத் தான் கமல் செய்திருக்கிறார். எனவே அதில் எந்தத் தவறும் இல்லை.

    மேலும், அமெரிக்க சினிமாக்களில் அமெரிக்க ஜனாதிபதியே விமரிசனத்துள்ளாக்கப்படும் படங்கள் அனுமதிக்கப்படும் சூழ்நிலையில், இந்த விஸ்வரூபம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதனால்தான் ஜார்ஜ் புஷ் கண்ணைச் சுடும் காட்சி இருந்தும், அனுமதித்துள்ளார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ம்பி, ஒரு பாஃரினர் வெளிநாட்டில் ஷூட்டிங் செய்ய வேண்டும் என்றால், படத்தின் முழு ஸ்க்ரிப்ட்டையும் கொடுத்து அனுமதி வாங்க வேண்டும் என்பது பலநாடுகள் பாஃலோ செய்யும் விதி.(ஆச்சரியம் ,ஆனால் உண்மை: நம்ம இந்தியாவும் அப்படியே:http://indiafilm.org/permissions/).

      உண்மை, நீங்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். கமல் பேசும் தொனியில் அதை விளங்கிக்கொள்ளாமல் விட்டது என்தவறு. நம்ம ராசு மாமாவும் இதையேதான் சொன்னாரு.

      Delete
  3. //ஒரு தமிழ் சினிமாவை எடுக்க அமெரிக்க அரசிடம் அனுமதி கோரும் கமல், தமிழ் நாட்டில் எத்தனையோ முஸ்லீம்கள் வாழும் போது, ஒரு முஸ்லீமிடம், தலிபான்கள் குரான் முன்னாடி கொல்றாங்களே இதத்தான் குரான் சொல்லுதான்னு ஒரு கேள்வி கூடவா கேட்க்க முடியாது?//

    இந்தப்படத்தையே ஒரு இஸ்லாமியரும் பார்த்துத்தான் தணிக்கைச்சான்றிதழ் வழங்கினார். இந்த அமைப்புகளிடமும் 'நீங்கள் எதிர்க்கும் அளவிற்கு ஒன்றும் இல்லை, வந்து படத்தைப் பாருங்கள்' என்று அழைத்தார்.(ஆதாரம்:புதிய தலைமுறை கலந்துரையாடல்). பின்னர் இந்த அமைப்புகள் மொத்தமாக மிரட்டலில் இறங்கவும், அது என் தனிப்பட்ட முடிவல்ல என்று அறிக்கை விட்டார்.

    இது தான் யதார்த்தம்!

    எனவே நீங்கள் சொல்வது போல் செய்தாலும், மிதவாதிகள்/நியாயவாதிகளின் குரல் வெளிவராது. படம் எதிர்ப்பைச் சந்திக்கவே செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. //இந்தப்படத்தையே ஒரு இஸ்லாமியரும் பார்த்துத்தான் தணிக்கைச்சான்றிதழ் வழங்கினார். இந்த அமைப்புகளிடமும் 'நீங்கள் எதிர்க்கும் அளவிற்கு ஒன்றும் இல்லை, வந்து படத்தைப் பாருங்கள்' என்று அழைத்தார்.(ஆதாரம்:புதிய தலைமுறை கலந்துரையாடல்). பின்னர் இந்த அமைப்புகள் மொத்தமாக மிரட்டலில் இறங்கவும், அது என் தனிப்பட்ட முடிவல்ல என்று அறிக்கை விட்டார்.

      இது தான் யதார்த்தம்!//

      ரெண்டயுமே பார்த்தேண்ணே, அதை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது. படத்தை எதிர்த்தவர்களுக்கு படத்தை எதிர்க்கவேண்டும் என்கிற நோக்கம் இருந்ததே தவிர ஏன் என்கிற புரிதல் சரியாக இருந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தப் படம் எந்த கதையில், எந்த பின்னணியில் வந்திருந்தாலும் இந்த பிரச்சினை வந்தே இருக்கும்.

      கமல் என்கிற கலைஞன் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக இருந்திருக்காலம் என்கின்ற ஆதங்கமே அந்த வசனம். "தலிபான் குரான் முன்னாடி கொல்றாங்க" ன்னு மட்டுமே படத்துல சொல்லாம, அது தவறுன்னு சொல்லி இருக்கலாம் இல்லை அது சரியான்னு கேள்வி எழுப்பியிருக்கலாம், இல்ல அந்த காட்ச்சியை தவிர்த்திருக்கலாம். அவ்வளவே.

      Delete
  4. கமல் ஒரு கலைஞனாக இல்லாமல் இந்தப் படத்தை ஹாலிவுட்டிற்கான விசிட்டிங் கார்டாக உருவாக்கியுள்ளார் என்று படம் பார்த்தோர் சொல்லும் கருத்திலிருந்து தெரிகிறது. எனவே கருத்தியல்ரீதியாக கண்டிக்கும் பதிவின் ஏனைய கருத்துகளோடு ஒத்துப்போகிறேன்.

    ReplyDelete
  5. பீஜே பற்றி நாம் பேசுவது, நம் தரத்தை கீழிறக்கும். அந்தப் பேச்சும் பேசியவரும் கண்டிக்கபட வேண்டியவை மட்டுமல்ல, புறக்கணிக்கப்பட வேண்டியவையே.

    ReplyDelete
  6. இந்த அடிப்படைவாத மத அமைப்புகள், சொந்த மக்களுக்கே அதிக கெடுதலைச் செய்கிறார்கள். பேஃஸ்புக்கில் மனுஷ்யபுத்திரன் ஸ்டேட்டஸில் நான் போட்ட கமென்ட் இது:

    //செங் கோவி நீங்கள் சன்டிவியில் கலந்துகொண்ட விவாதத்தில் இதே அமைப்பைச் சேர்ந்த அன்பர், சிங்கம்-2 படத்தை எதிர்ப்பதற்குக் காரணம் அதே யூனிட்டில் இருந்த நண்பர் கொடுத்த தகவல் தான் என்றார். இவர்கள் யார் தகவல் கொடுக்கிறார்களோ, அவர்களையே யோசிக்காமல் காட்டியும் கொடுக்கிறார்கள்.

    இப்படி பொதுவெளியில் பேசினால், சினிமாக்காரர்கள் இவர்களின் 'நண்பர்களை' பயத்தின் காரணமாய் தங்கள் யூனிட்டிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டிவரும் அல்லவா? //

    ReplyDelete
  7. //விஸ்வரூபம், கமல், பி ஜே - சர்ச்சைகளும் சில கருத்துக்களும்////

    இவன் ஒருத்தன் எப்ப பார்த்தாலும் சிரிப்பு காமிச்சிகின்னு...

    ReplyDelete
    Replies
    1. அதுதானே மச்சான், நான் டிஸ்கியிலேயே சொல்லிட்டேனே, நான்லாம் மொக்கப் பதிவர்தான்னு தெரிஞ்சே வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.

      Delete
  8. பதிவ அப்புறம் படிக்கிறேன், முதல்ல கமெண்ட்ஸ் பார்போம்...
    //செங்கோவி SAID: சிங்கம்-2 படத்தை எதிர்ப்பதற்குக் காரணம்///
    அந்த சிங்கம் 2 படத்துல கடல் கொள்ளையர்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களின் பெயர்களாக இருப்பதால் பிரச்சினை வருமாமாம்..எனக்கு என்ன டவுட்டுன்னா இப்புடியே போனா, அப்புறம் எப்புடித்தான் வில்லன்களுக்கு பெயர் வைப்பது?
    ஆண்டனின்னா அந்த கிறிஸ்தவ சகோதர்கள் கோவிச்சிகிவாங்க
    அப்துல்லான்னா அந்த இஸ்லாம் சகோதர்கள் கோவிச்சிகிவாங்க
    அய்யாதுரைன்ன அந்த ஹிந்து சகோதர்கள் கோவிச்சிகிவாங்க..
    கருணாநிதி, ராமதாஸ்ன்னு வைக்கலாம்ன்னா அந்த கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கோவிச்சிகிவாங்க...
    இவங்க சொல்றத பார்த்தா இனிமேல் படத்துல வில்லன்களை காட்டரப்போ ""கமல் படம் 2014 வில்லன் இல 5" , "சூர்யா படம் 2013 வில்லன் குழு 1" ,இப்படித்தான் சொல்லன்னும். எத சொன்னாலும் பிரச்சினைய கிளப்பறதுக்கு யாராவது இருக்காங்களே.

    ReplyDelete
    Replies
    1. அதுதானே பிரதர், எத பண்ணினாலும் எவனாவது எதிர்ப்புன்னா வேற என்னத்த பண்றது.

      Delete
  9. ரசித்த பதிவு :-)

    ReplyDelete
  10. ஓர் அமெரிக்க கைக்கூலியின்
    அப்பட்டமான அடிமை சாசனத்துக்கான
    விமர்சனம் சரிதான்..!
    பாராட்டுக்கள்..!

    அப்புறம்,

    //திரு கமல் ஹாசன் அவர்களுக்கு ஒரு படைப்பாளியாக எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதைவிட நூறு மடங்கு அதிக பொறுப்பு பீ ஜே போன்ற தலைவர்களுக்கு இருக்கிறது. இஸ்லாத்தை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள். விஸ்வரூபம் படத்தை நேர்மையான முறையில் விமர்சிக்கும் பொறுப்பு ஒரு கலை விமர்சகருக்கு இருப்பது போல, பீ ஜே அவர்களின் செயல்களை கண்டிக்கும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இருக்கிறது. //

    இது மிக நல்லதொரு நேர்மையான விமர்சனம். மீண்டும் பாராட்டுக்கள்.

    நான் அப்போதே எனது முகநூலில் கண்டனம் பதிவு பண்ணி இருந்தேன். அவரை ஆதரித்த அவரின் இயக்க சகோதரர்களிடம் முடிந்த அளவுக்கு தவறை விளக்கினேன்.

    சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அவரின் சிறப்பான அறிவார்ந்த ஆய்வு அடிப்படையில் அமைந்த சொற்பொழிவினை கேட்டு ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் பற்பல புது விஷயங்கள் கற்றவன் நான். அப்போதேல்லாம் அவரின் உரை அந்த அளவு போற்றத்தக்கதாகத்தான் இருக்கும். அப்போது அது போன்ற கூட்டத்துக்கு வருவோர் இன்றைய கூட்டத்தோடு ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும் அத்ததகைய பேச்சைத்தான் விரும்புவார்கள். இப்போது, அலைமோதி நிரம்பி வழியும் கூட்டம் எதை விரும்புகிறதோ அதற்கொப்ப பேசும் ஓட்டரசியல் கழக தலைவர்கள் போல பேச ஆரம்பித்து விட்டார் சகோ.பிஜே என்பது போலத்தான் எனக்கு இது தெரிகிறது..! இது மிகவும் வருத்தம் தரும் விஷயம்தான்..!

    //பீஜே பற்றி நாம் பேசுவது, நம் தரத்தை கீழிறக்கும். அந்தப் பேச்சும் பேசியவரும் கண்டிக்கபட வேண்டியவை மட்டுமல்ல, புறக்கணிக்கப்பட வேண்டியவையே.//

    ------தமிழக வரலாற்றில் மக்கள் மத்தியில் தனி மனிதனாக பிறரின் தனி மனித வாழ்வில் தாக்கம் ஏற்படுத்திய தன்னிகரற்ற மனிதர்களில் சகோ.பிஜே மிக முக்கியமான சாதனையாளர். அந்த ஒரு அநாகரிக பேச்சினால், அந்த ஒரு அநாகரிக எழுத்தினால்... அவர் ஒன்றும் தரம் இறங்கி புறக்கணிக்கப்பட வேண்டியவர் ஆகி விட மாட்டார்..! கோபத்தில் நிதானம் தவறுவது மனித இயல்புதான்..! சாந்தமான பின்னர் மனம் வருந்த நேரும். இதை முதலில் அவரும் பின்னர் நாமும் விளங்கிக்கொள்ள வேண்டும். அவரிடம் தமிழகம் நற்பயன்கள் பெற அவருள் ஏராளமாக இருக்கின்றன..!

    ReplyDelete
    Replies
    1. //ஓர் அமெரிக்க கைக்கூலியின்
      அப்பட்டமான அடிமை சாசனத்துக்கான
      விமர்சனம் சரிதான்..!
      பாராட்டுக்கள்..!//

      ஓ, நீங்களும் படம் பார்த்தாச்சா? பார்த்திருக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்.

      //இது மிக நல்லதொரு நேர்மையான விமர்சனம். மீண்டும் பாராட்டுக்கள்.

      நான் அப்போதே எனது முகநூலில் கண்டனம் பதிவு பண்ணி இருந்தேன். அவரை ஆதரித்த அவரின் இயக்க சகோதரர்களிடம் முடிந்த அளவுக்கு தவறை விளக்கினேன்.

      சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அவரின் சிறப்பான அறிவார்ந்த ஆய்வு அடிப்படையில் அமைந்த சொற்பொழிவினை கேட்டு ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் பற்பல புது விஷயங்கள் கற்றவன் நான். அப்போதேல்லாம் அவரின் உரை அந்த அளவு போற்றத்தக்கதாகத்தான் இருக்கும். அப்போது அது போன்ற கூட்டத்துக்கு வருவோர் இன்றைய கூட்டத்தோடு ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும் அத்ததகைய பேச்சைத்தான் விரும்புவார்கள். இப்போது, அலைமோதி நிரம்பி வழியும் கூட்டம் எதை விரும்புகிறதோ அதற்கொப்ப பேசும் ஓட்டரசியல் கழக தலைவர்கள் போல பேச ஆரம்பித்து விட்டார் சகோ.பிஜே என்பது போலத்தான் எனக்கு இது தெரிகிறது..! இது மிகவும் வருத்தம் தரும் விஷயம்தான்..! //

      நன்றிங்க, ஒரு தலைவர் என தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளகூடிய ஒருவர் இதைவிட நாகரீகமாக நடந்திருக்க வேண்டும். பார்க்கலாம்.

      //------தமிழக வரலாற்றில் மக்கள் மத்தியில் தனி மனிதனாக பிறரின் தனி மனித வாழ்வில் தாக்கம் ஏற்படுத்திய தன்னிகரற்ற மனிதர்களில் சகோ.பிஜே மிக முக்கியமான சாதனையாளர். அந்த ஒரு அநாகரிக பேச்சினால், அந்த ஒரு அநாகரிக எழுத்தினால்... அவர் ஒன்றும் தரம் இறங்கி புறக்கணிக்கப்பட வேண்டியவர் ஆகி விட மாட்டார்..! கோபத்தில் நிதானம் தவறுவது மனித இயல்புதான்..! சாந்தமான பின்னர் மனம் வருந்த நேரும். இதை முதலில் அவரும் பின்னர் நாமும் விளங்கிக்கொள்ள வேண்டும். அவரிடம் தமிழகம் நற்பயன்கள் பெற அவருள் ஏராளமாக இருக்கின்றன..!//

      நீங்கள் சொல்லும் அதே வாதம் கமலுக்கும் பொருந்தும். விஸ்வரூபம் எனும் ஒரே படத்துக்காக கமலுக்கு அமெரிக்க கைக்கூலி பட்டம், அருவருக்கத்தக்க பேச்சை பேசிய ஒருவருக்கு தனி மனித பலகீனமா? வருந்தினால், தனது சமூகத்திடம் மன்னிப்புக் கேட்டால் பார்க்கலாம், அதுவரை புறக்கணிக்கப் பட வேண்டியவர் என்கிற கருத்தில் எனக்கும் எந்த மாற்றமும் இல்லை.

      Delete
    2. நான் படம் பார்க்கவில்லை. உங்கள் மற்றும் சிலரின் விமர்சனத்தில் இருந்து புரிந்து கொண்டவை அவை..! மேலும், ஓர் இந்திய ரா ஊழியரை அமெரிக்க நலனுக்காக உயிரை பணயம் வைக்கும் அமெரிக்க கைக்கூலியாக காட்டி இருப்பது மிகவும் கண்டிக்கத்தத்தக்கது.

      ஆனால், பிஜே பற்றி உங்களை விட அதிகம் எனக்கு தெரியும்(என்று நம்புகிறேன்). ஆகவே,

      //நீங்கள் சொல்லும் அதே வாதம் கமலுக்கும் பொருந்தும்.//------இல்லை சகோ. பொருந்தவே பொருந்தாது.

      காரணம், அது அதற்கு முந்திய... மரண தண்டனைக்கு எதிரான ஒரு கொள்கையில் விருமாண்டி எடுத்து விட்டு, முஸ்லிம்கள் என்றவுடன் கோர்ட்டும் கேசும் வழக்கும் விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற உன்னைப்போல ஒருவன் எனும் கொள்கை கொலையின் அடுத்த மோசமான விஸ்வரூபம்தான் தான் இந்த படம்.

      குருதிப்புனலில் சொந்த நாட்டு அரசுக்கு எதிரான ஆயுத போராளி நக்சலைட்டுகளின் போருக்கு அவர்கள் தரப்பு வாதங்களை வைக்க கொடுத்த வாய்ப்பு கூட அமெரிக்காவின் ஊடுருவலை தன் நாட்டில் எதிர்க்கும் தாலிபானுக்கு தாராத மோசடி நாயகன்தான் கமல்.

      நா காக்கும் ஒழுக்கத்தில் பிஜே வுக்கு இதுதான் முதல் படி சறுக்கல். கொள்கை சம நீதி கொலையில் கமலுக்கு இது பல படிகள் சறுக்கிய விஷயம்.

      மேலும், சமூகத்துக்காக தமது வாழ்வை அர்ப்பணிக்கும் பொதுநல விஷயத்தில் இருவரும் ஒன்றல்ல.

      கமல் எவனை பற்றியும் கவலைப்படாத, தனது படத்தின் வசூலே குறியான, அதாகாக... எக்கொள்கையையும் விற்கும் / ஏற்கும் சுயநல, ஆபாச வியாபாரி..! அவர் செய்யும் எதுவும் பணத்துக்காக..!

      பிஜே பொதுவாழ்வில் தம் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கும் ஒழுக்கமான கொள்கை சமசரசம் செய்யாத சமூக பேச்சாளர். அவரின் நோக்கம் பணம் பண்ணுவதில்லை.

      எனவே,

      பிஜெயின் நாவடக்கத்தில் இது முதல் சறுக்கல் என்பதை மட்டும் ஏற்கிறேன். இவருக்கான அதே விமர்சனம் கமலுக்கும் பொருந்தும் என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன் சகோ.. ஸாரி..!

      Delete
  11. Rombha nadulaiyaana pathivu... I didn't expect this from u..
    Palarin muttal thanamana vaathangalukku mathiyila ippadi nadunilaiyana pathiva potta ungalukku nanri..
    Practice make perfect man...lol

    ReplyDelete
    Replies
    1. //Rombha nadulaiyaana pathivu... I didn't expect this from u..//

      என்னங்க நீங்க, இப்படியா பொது இடத்துல ஒருத்தர அவமானப் படுத்தறது?

      //Palarin muttal thanamana vaathangalukku mathiyila ippadi nadunilaiyana pathiva potta ungalukku nanri..//

      நன்றிங்க, பேச வேண்டியவர்கள் பேசுவதை விட்டுவிட்டு சண்டித்தனம் பண்ணும்போது நாமாவது பேசலாம்ன்னுதான்

      Delete
    2. Sorry boss,
      ithan piraghu public place la ungala vittu 2step thalliyea nikkurean..

      Delete
  12. எவ்வளவு விசயங்களை உள்ளடக்கி ஒரு பதிவைக் கொடுத்திருக்கிறீர்க்ள்....
    உங்களது கருத்துடன் உடன்படுகிறேன்.. பிஜெ அவர்கள் மீதான விமர்சனத்தையும் சேர்த்தே! எனது கண்டனத்தையும் நான் அதே காலத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
    Replies
    1. //எவ்வளவு விசயங்களை உள்ளடக்கி ஒரு பதிவைக் கொடுத்திருக்கிறீர்க்ள்....
      உங்களது கருத்துடன் உடன்படுகிறேன்.. பிஜெ அவர்கள் மீதான விமர்சனத்தையும் சேர்த்தே! எனது கண்டனத்தையும் நான் அதே காலத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்...

      அன்புடன்
      ரஜின்//

      நன்றிங்க, நம்ம கடமையை செஞ்சாச்சி, இனி பெரிய மனுஷங்க பார்த்துக்குவாங்க.

      Delete
  13. உங்களிடம் இருந்து கொஞ்சம் சீரியஸான இந்த பதிவு வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள். முதல் பத்தியில் நீங்கள் சொல்லி இருப்பதே என்னுடைய உணர்வுகளும். பதிவுலகமே ஏதோ மத வெறியில் உளன்று கொண்டிருப்பது போல உணர்வு ஏற்படுகிறது. பீஜே அவர்கள் ஏதோ ஆத்திரத்தில் அப்படி கூறி விட்டதாக சொல்கிறார்கள். ஒரு தலைவன் அதுவும் தான் சொன்னபடியெல்லாம் கேட்கும் ஒரு கூட்டத்தின் தலைவன் நிதானம் தவருவது என்பது எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை கூட உணர முடியாதா?

    ReplyDelete
    Replies
    1. ///உங்களிடம் இருந்து கொஞ்சம் சீரியஸான இந்த பதிவு வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள்/////
      நாங்களும் எத்தன நாளைக்குத்தான் மொக்க பதிவாவே போட்டுக்கிட்டு இருக்கறது. சமுகப் பிரச்சினைகள்ள கருத்து சொல்லன்னும்கற ஆர்வம் எல்லாம் எங்களுக்கும் வராதா? எங்கள விடுங்கங்க, நாங்க எல்லாம் மொக்கப் பதிவர்கள்ன்னு தெரிஞ்சே வாழ்ந்துக்கிட்டிருக்கோம், அவனவன் ஒளிவட்டப் பதிவர்ன்னு நெனச்சிக்கிட்டு மொக்க போட்டுக்கிட்டிருக்கான்னுகளே....
      நன்றி பாஸ்!

      Delete
    2. நன்றி பாலா. எனக்கும் அப்படியே. அந்தப் பேச்சு கண்டிப்பாக பொறுப்பற்ற செயல். செங்கோவி அண்ணன் சொன்னதுபோல அதைப் பற்றி பேசி நம்மையும் நாம் தாழ்த்திக்கொள்ளத் தேவையில்லை. பேசுவதால் பயனும் இல்லை.

      Delete
  14. ஒரு படத்தை எதிர்த்த விதம் தவறான அணுகுமுறையையே காட்டுகிறது. அறியாமையின் உச்சக்கட்டத்தில் எடுத்த செயலோ என எண்ணத் தோன்றுகிறது.மதத் தலைவர்கள் என்னும் போர்வையில் கீழ்த்தரமான வித்துக்களை விதைத்திருக்கிறார்கள். இதனால் சமூகங்களின் இடைவெளி மேலும் விரிசல் அடையும்.இதற்கு யார் பொறுப்பேற்பது? மதத் தலைவர்கள் பொறுப்பேற்பார்களா?

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரி! "மதத் தலைவர்கள்" என பெயர் சூட்டிக்கொள்ளும் போது, ஏனைய சமூகம் தங்களைத்தான் மதத்தின் அடையாளமாக பார்க்கிறது என்கிற சின்ன விஷயத்தை கூட உணராமல் "ஆத்திரத்தில் பேசுபவர்களை" எல்லாம் மதத் தலைவர்களாக பார்க்க வேண்டியதில்லை.

      Delete
  15. நண்பரே!

    அருமையான நடுநிலையான பதிவு. Well Done!!!

    இப்படி பட்ட நடுநிலையான பதிவர்கள் இருப்பதால்தான் பெரும்பாலும் நடுநிலயட்ட்ற பத்திரிகைகளைத் தவிர்த்து பதிவு உலகின் மீது விருப்பம் கொள்ள வைக்கிறது.

    முஸ்லிம்களுக்கு உள்ள நியாயத்தையும் ஒரு நடுநிலையாகனாய் நின்று சமூக பொறுப்போடும், மனசாட்சியோடும் கூறி உள்ளீர்கள். பாராட்டுக்கள்!!

    படம் பார்த்த பல பதிவர்களும் இதை உணர வேண்டும்.

    // திரு கமல் ஹாசன் அவர்களுக்கு ஒரு படைப்பாளியாக எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதைவிட நூறு மடங்கு அதிக பொறுப்பு பீ ஜே போன்ற தலைவர்களுக்கு இருக்கிறது. இஸ்லாத்தை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள். விஸ்வரூபம் படத்தை நேர்மையான முறையில் விமர்சிக்கும் பொறுப்பு ஒரு கலை விமர்சகருக்கு இருப்பது போல, பீ ஜே அவர்களின் செயல்களை கண்டிக்கும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இருக்கிறது. //


    நூற்றுக்கு நூறு உண்மை. அந்த பேச்சில் உள்ள சில கருத்துகளையும் வார்த்தைகளையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். பல இஸ்லாமியர்கள் தங்கள் பேஸ்புக் சுவரில் அதனைக் கண்டித்ததும் மன்னிப்பு கேட்க சொல்லியும் அறிவித்தும் இருந்தார்கள். நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. ஒன்று நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்ற நபிமொழியே இங்கு நாம் நினைவுகூரத்தக்கது.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!