Monday, June 18, 2012

ஏ. ஆர். ரஹ்மான் - ஒரு ஆச்சர்யம் (பகுதி இரண்டு)


ஏ ஆர் ரஹ்மான் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என ஆரம்பித்து, அது எங்கோ சென்று அவரது பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல்களின் தொகுப்பாக அந்தக் கட்டுரை முடிந்து போனது. ஓர் இரு நாட்கள் கழித்து அந்த கட்டுரையை படித்தபோது எதற்கும் பயனற்ற ஒன்றாகவே அது தோன்றியது. எழுத ஆரம்பித்த நோக்கத்தை சரி செய்து கொள்ள மறுபடியும் அதன் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன். (முதல் பாகத்தை படிக்காதவர்கள் அதை படிக்கத்தேவயில்லை என ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்)

சமீபத்தில் ரஹ்மான் அவர்களது ஒரு பழைய செவ்வியை யூடியூபில் பார்க்க முடிந்தது. 1995 இல் திரு பி ஹெச் அப்துல் ஹமீதினால் எடுக்கப்பட்ட செவ்வி, என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இருபத்தி ஆறு அல்லது இருபத்தி எழு வயதே நிரம்பிய ரஹ்மானின் முதிர்ச்சியும் இசை, சமூகம் தொடர்பான அவரது பார்வையும் என்னை வெகுவாக பாதித்தது. தமிழ் திரையிசை ரசிகர்கள் மத்தியில் ரஹ்மான் மிகவும் பிரபலம் அடைந்த காலம் அது, அந்த இளம் வயதில் கிட்டிய அதிகப்படியான பிரபல்யத்தையும் நட்ச்சத்திர அந்தஸ்தையும் ரஹ்மான் கையாண்ட விதம் அவர் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியது. தமிழ் திரையிசையை புரட்டிப்போட்ட ஒரு இசை சக்கரவர்த்தியாக ரசிகர்கள் அவரை கொண்டாடியபோது அவரது அடக்கமும், அவரது இசை முன்னோடிகள் மீது அவர் கொண்டிருந்த மரியாதையும் வியக்கவைத்தது. இன்று ரஹ்மானின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிப்போன இந்த குணவியல்புகள் அவரது சிறு வயது முதல்கொண்டே அவரிடம் இருந்துவந்தது என்பது ஆச்சரியம் தந்தது.  

தனது பதின் மூன்றாம் வயதுமுதல் குடும்ப பாரத்தை சுமக்கத்தொடங்கிய ரஹ்மான், குழைந்தைப் பருவம் தனக்கு கிட்டவில்லை என்பதை சமித்திய செவ்வி ஒன்றில் கூறியிருந்தார். சிறு வயது முதல் பெரியவர்களுடன் பழகியதும் குடும்பப் பாரம், தொழில்சிந்தனை என்பனவும் தன்னை முதிர்ச்சிப்படுத்தியதாக கூறியிருந்தார். ஒரு சாதாரண சிறுவன் அனுபவிக்க நினைக்கும் எந்த கேளிக்கையும் இவரது வாழ்வில் இருந்ததில்லை, குழந்தை பருவத்தை முற்றிலும் தொலைத்துவிட்ட ஒரு வாழ்க்கை, அந்த ஏக்கத்தை முழுவதும் தனது இசையில் செலுத்தியிருக்கிறார் என்பதற்கு இவர் உருவாக்கிய இசையே சாட்சி. தாயார் மீது அதீத பாசம் கொண்டிருக்கும் ரஹ்மானின் தாலாட்டு இசையில் அந்த பாசம் மேலோங்கித் தெரியும். "என்னாத்தா பொன்னாத்தா", "அழகு நிலவே", "உயிரும் நீயே"  போன்ற பாடல்கள் அந்த பாசத்தின் வெளிப்பாடாகவே தோன்றும்.


ரஹ்மானிடம் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்த ஒரு விடயம், தனது இசைப் பயணத்தின் ஏற்ற இறக்கங்களை அவர் கையாண்ட விதம். ரோஜா என்ற இசையினை வழங்கி தனது முதல் திரைப்படத்திலேயே தேசியவிருத்தையும் பெற்ற ரஹ்மான், ரோஜாவின் பிற்பாடு தன்னிடம் எந்த இசையுமே எஞ்சியிருக்கவில்லை என நினைத்ததாக கூறுகிறார்.  தன்னால் ஒரு இசையமைப்பாளராக நிலைத்திருக்க முடியாது என எண்ணியதாக கூறுகிறார். அந்த ஒரு நிலைமை ஒவ்வொரு படைப்பாளியின் வாழ்விலும் ஏற்படக்கூடியது, படைப்பு வறட்சி ஏற்பட்ட பின்னர் அதிலிருந்து மீண்டு வருவதென்பது சாதாரண விடயமில்லை, ரஹ்மான் இதனை ஒருதடவயல்ல இரு தடவைகள் செய்தது காட்டியிருக்கிறார். ஒவ்வொரு தடவையும் முன்பை விட வீரியத்துடனும் வீச்சத்துடனும் இருக்கிறது அவரது எழுச்சி. ரோஜாவில் அனைவரது கவனத்தையும் கவர்ந்த ரஹ்மான், அதன் பின்னர் வந்த திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையிசையின் ஒட்டுமொத்த அடையாளமாக மாறினார். இரண்டாயிரத்திற்கு பிற்பட்ட காலத்தில் மறுபடியும் ஒரு வறட்சியை எதிர்கொண்ட ரஹ்மான், மீள வந்தபோது முழு இந்தியாவினதுமே திரையிசை அடையாளமாக இனம்காணப்பட்டார். 

ரஹ்மானின் வலக்கரமாக இருந்த சாஹுல் ஹமீதின் மரணத்தின் பின்னர் ரஹ்மான் இனி இல்லை என்றே பலரும் எண்ணினார்கள், அதையும் தகர்த்து ஹிந்தி திரையுலகத்தில் கால் பதித்தார் ரஹ்மான்.  தனது ஆஸ்தான சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர் அவர்களது மரணத்தின் பின்னர் ரஹ்மானது இசை எவ்வாறு ஒலிக்கப்போகிறது என பலரும் எதிர்பார்த்தபோது விண்ணைத்தாண்டி வருவாயா, எந்திரன் போன்ற ஹை டெக் இசையினை வழங்கினார். சிறு வயதிலிருந்தே இழப்புக்களை சந்தித்து வந்த ரஹ்மானுக்கு இழப்புக்களில் இருந்து மீண்டு வருவது எவ்வாறு என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. வாழ்க்கை மீது அவருக்கு இருந்த அலாதியான புரிதலே இதை சாத்தியமாக்கியது எனலாம். 

சமுதாயம் தொடர்பான ரஹ்மானது பார்வை மிகவும் ஆழமானது. இசை என்பதில் நல்ல இசை மோசமான இசை என இரு வகை இருப்பதாக ரஹ்மான் கூறுகிறார். ஒரு இசையினை கேட்டபின்னர் அது உங்களுக்கு மன அமைதியை அல்லது உற்சாகத்தை தருகிறது எனில் அது நல்ல இசை, அதுவே மனிதனது கறுப்புப் பக்கத்தை தூண்டிவிடும் எனில் அது மோசமான இசை என்பதே ரஹ்மான் கூறுவது. ரஹ்மான் எப்போதும் நல்ல இசையினை வழங்குவதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார் என்பது எனது ஆழமான நம்பிக்கை. அன்றாடம் வாழ்கையில் காணப்படும் அம்சங்கள் சமூக நலன் சார்ந்ததாக மாறவேண்டும் என்பது ரஹ்மானது கருத்து. பத்திரிகைகள் விறுவிறுப்பான செய்திகளுக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்துக்கள், கிசுகிசுக்கள் போன்ற சென்சேஷனல் விடயங்களுக்கும், அதிக முக்கியத்துவம் குடுப்பதை கடுமையாக கண்டிக்கிறார். 1950இல் இருந்ததிலிருந்து 2010இல் குற்றங்கள் அதிகளவில் அதிகரிக்கவில்லை என்பது ரஹ்மானது கருத்து. ஊடகங்களில் முன்னிறுத்தப்படும் செய்த்திகளின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு உலகம் கட்டமைக்கப் படுவதாக அவர் நினைக்கிறார்.


நவீன வீடியோ கேம்களில் விபத்து ஏற்படுத்துவதும் ரத்தக்காயம் ஏற்பட வைப்பதும் ஒரு சென்சேஷன் ஆக மாறி விட்டிருப்பதையும் கண்டிக்கிறார். என் குழந்தைகளுக்கு அவ்வாறான கேம்களை விளையாட அனுமதிக்க மாட்டேன் என ரஹ்மான் கூறுகிறார். (இந்த கூற்று இன்சைட் மேன் படத்தில் ஒரு காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும், அந்த படத்தில் ஆரம்ப மற்றும் இறுதி இசையாக ரஹ்மானது தைய தையா இடம்பெற்றிருக்கும் என்பதும் கூடுதல் தகவல்). ரஹ்மான் ஒருபோதும் தனது அடையாளத்தை விட்டுக்கொடுத்ததில்லை. எங்கே சென்றாலும் தான் தமிழன் என்பதிலும் இந்தியன் என்பதிளிலும் அலாதி பெருமை கொண்டிருக்கக்கூடியவர். அவரை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியக்கூடிய ஒரு விடயம், உடலலங்காரங்களிலோ சிகை அலங்காரத்திலோ அதிக கவனம் செலுத்தாத ரஹ்மான் சமீபத்தில் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு இருக்கிறார். இது பற்றி ஒரு செவ்வியில் என்னை ஒரு இந்தியனாக உலகம் பார்க்கும்போது நான் இவற்றில் கவனம் செலுத்தவேண்டி இருக்கிறது என கூறுகிறார்.

மனித உறவுகள் பற்றி ரஹ்மானின் முகநூலில் பதியப்பட்ட ஒரு செய்தி பின்வருமாறு விரிகிறது "ஒருபோதும் அவசராட்டு முடிவுகளை எடுக்காதீர்கள், குறிப்பாக மனிதர்களை பற்றி. எப்போதும் ஒருவிடயத்திற்கு இன்னொரு பக்கமும் இருக்கும், ஒரு நல்ல பக்கம். நாம் எப்போதும் ஒரு மனிதரையோ, இடத்தையோ, கலை வடிவத்தையோ அல்லது ஒருநிறுவனத்தையோ அதன் அழகையும் பெறுமதியையும் பார்பதற்கான வழிமுறையை தேடிக்கொள்ளவேண்டும். நாம் ஒவ்வொருவரதும் பிரச்சினையில் பாதியாவது நாம் இன்னொருவர்வர் பற்றி அவசர முடிவுகளை எடுக்கதிருப்பதனால் தீர்த்துக்கொள்ளலாம்" கேளிக்கை வணிகத்தில் இருக்கும் எவரிடமும் ரஹ்மானிடம் இருக்கும் நுண்ணியமான சமுதாய பார்வையினை நான் பார்த்ததில்லை.

ரஹ்மான் அவர்கள் நேரத்தை எவ்வாறு திட்டமிட்டு செலவழிக்கிறார் என்பது தொடர்பான ஒரு செவ்வியை கட்டுரை வடிவில் மிகச் சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. இருபது நிமிடங்களுக்கு மேல் அவர் எந்த ஒரு விடயத்திலும் தேங்கி இருப்பதில்லை என ரஹ்மான் கூறுகிறார். படைப்பாளியாக ஒரு விடயம் சரியாக அமையாதபோது நாள் கணக்கில் அதில் தேங்கியிருக்கும் மனிதர்கள் பலரை பார்த்திருக்கிறோம், அவ்வாறு தேங்கி இருப்பது ஒரு வகையான வலிந்து திணிக்கப்பட்ட படைப்பினையே தரும் எனவும் அழகியலுக்கு ஒத்துவராது எனவும் அவர் கூறுகிறார். இருபது நிமிட வேலை பின்னர் சிறிதாக ஒரு இடைவேளை என்பது அவரது பாணி. ஒரு பரபரப்பான இசையமைப்பாளராக ரஹ்மான் குடும்பத்துக்காக எவ்வாறு நேரம் ஒதுக்குகிறார் என்கிற ஒரு கேள்விக்கு ரஹ்மான் அளித்த பதிலே என்னை மிகவும் ஆச்சரியப் பட வைத்தது. 


ஒரே சமயத்தில் இசையிலும் குடும்பத்திலும் ஒரே அளவான கவனம் செலுத்துவது தனக்கு சாத்தியமானதல்ல என்கிறார். 2011 இல் தனது ஓய்வுக்கான காரணமும் அதுதான் என்கிறார் ரஹ்மான். தனது மகளுக்கு இருதய சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாகவும் மகளுக்காக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காகவுமே இசையினை தள்ளி வைத்ததாக ரஹ்மான் கூறுகிறார். இன்றைய நிலையில் தொட்டதெல்லாம் பொன்னாகும் அளவு போர்மில் இருக்கும் ரஹ்மான் குழந்தைக்காக தனது இசையை ஒத்திவைத்தது சாதாரணமாக தோன்றினாலும் அந்த நிலையை அடைய எவ்வளவு பக்குவம் வேண்டும் என்பது பணத்துக்கும் புகழுக்குமாக வாழ்கையை தொலைத்துவிட்ட மனிதர்களை அண்றாடம் சந்திக்கும் பலருக்கு தெரிந்திருக்கும். 

நல்ல கணவராக, நல்ல தந்தையாக, நல்ல மகனாக, நல்ல குடிமகனாக ரஹ்மானின் அனைத்து பரிணாமங்களும் எப்போதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்திக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எப்பொழுதும் அவருடன் ஒன்றியிருக்கும் அந்த வசீகர புன்னகையும்.

Yes, you have all the talent but the most important equipment that you need to have in order to begin the long climb is a very simple device called a ‘Smile’. Just wear it and you will see how smiles get converted to miles! - A.R Rahman

டிஸ்கி: ரஹ்மானை பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்க்கு ஒரு முடிவு கிட்டாது போலும். எனவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். நேரம் கிட்டினால் கண்டிப்பாக ரஹ்மானின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட மயாமி பல்கலைக்கழக டாக்டர் பட்ட ஏற்புரையை இங்கு கிளிக்கி படிக்கவும்

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ரஹ்மானைப்பத்தி நல்லா சிலாகித்து எழுதி இருக்கீங்க. அருமையான நேரேசன். குட் போஸ்ட்!

    ReplyDelete
  3. //இருபது வினாடிகளுக்கு மேல் அவர் எந்த ஒரு விடயத்திலும் தேங்கி இருப்பதில்லை என ரஹ்மான் கூறுகிறார். /

    இருபது நிமிடங்கள் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  4. Bruno-Mascarenhas JMA20 June 2012 5:45 PM
    //இருபது வினாடிகளுக்கு மேல் அவர் எந்த ஒரு விடயத்திலும் தேங்கி இருப்பதில்லை என ரஹ்மான் கூறுகிறார். /

    இருபது நிமிடங்கள் என்று நினைக்கிறேன்//

    நன்றி, இப்போ திருத்திட்டேன்.

    ReplyDelete
  5. பன்னிக்குட்டி ராம்சாமி18 June 2012 5:27 PM

    //ரஹ்மானைப்பத்தி நல்லா சிலாகித்து எழுதி இருக்கீங்க. அருமையான நேரேசன். குட் போஸ்ட்!//

    நன்றிண்ணே, ஓவராத்தான் சிலாகிச்சிட்டோமோ?

    ReplyDelete
  6. எனக்கு ரொம்ப பிடித்தவரை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி தலைவா.

    ReplyDelete
  7. அட்டகாசமான பதிவு..

    ஆஸ்கார் வாங்கியபின் அவர் கொடுத்த பேட்டியும் முக்கியமானது. ’என் முன் இரு வழிகள் இருந்தன..ஒன்று அன்பின் வழி. மற்றது வெறுப்பின் வழி..நான் அன்பின் வழியை தேர்ந்தெடுத்தேன்.’ என்றார்..எவ்வளவு பெரிய விஷயம் அது!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!